Tuesday, April 2, 2013

கோடை விடுமுறை


    பள்ளி நாட்களில் எனக்கு மிகவும் பிடித்த நாட்கள்.சுட்டெறிக்கும் இந்தப் பங்குனி வெயிலும் வரவிருக்கும் அக்கினி நட்சத்திரமும் தீயாய் எரித்தாலும் உள்ளுக்குள் குளிர்விக்கிற ஈரமான நினைவுகள் இந்த கோடை விடுமுறைக்குண்டு.அம்மாச்சி, தாத்தாவுடனான அற்புதத் தருணங்கள். விடுமுறைக்கெனக் காத்திருக்கும் கொடிய பள்ளி நாட்கள்.இரண்டு மாத விடுமுறை.அதிலும் பரீட்சைகளின் தலைவலியிலிருந்து விடுபட்ட அந்தத் தருணத்தில் அயர்வைக் களையும் புத்துணர்வு. விடுமுறை எத்தனை தினங்கள் என்பதைக்காட்டிலும் ஆச்சி தாத்தாவை எப்போது பார்ப்போமென்றிருக்கும் அந்தப் பரபரப்பு.அவர்களும் எங்கள் பள்ளி விடுமுறைக்காகவே  காத்துக் கிடப்பார்கள். அத்தனை பாசம், ஏக்கம், தனிமை. அதைப் போக்க அவர்கள் எங்கள் வரவை எதிர்பார்த்திருப்பார்கள். இவர்களைப் போல் ஒரு தாத்தாவோ, அம்மாச்சியோ,அப்பத்தாவோ,அய்யாவோ நிச்சயம் எல்லா கிராமத்திலும் இப்படி வயதான ஜீவன்கள் கோடைக்காய் காத்துக்கிடக்கும். பேரன் பேத்திகளின் பாசமழையில் நனைவதற்கு. எத்தனை பேரின் காத்திருத்தல் நிறைவேறுகிறது?
   
    சுற்றிலும் வயல்கள். நடுவில் மிகப் பெரியதொரு வட்டக்கிணறு.கிணற்று மேட்டில் போடப்பட்டிருக்கும் குடிசை வீட்டில் தங்கி இளநீர்,நுங்கு,ஆற்று மீன் குழம்பு,தட்டைப்பயறு அவியல், தும்பைப்பூவோடு பச்சைகடலை சேர்த்தவித்து கருப்பட்டிக் காப்பியோடு மாலைப் போதுகளென அந்தச் சூழலை அந்த வாழ்வை அப்படியே அச்சுப் பிசகாமல் மனதுக்குள் பொதிந்து வைத்திருக்கிறேன்.பம்பு செட் மூலம் விவசாயம். அத்தனை பெரிய கிணறு, எனக்கு எப்போதும் அது அதிசயம் தான்.பருத்தி,நெல்,தென்னை,எள்  போன்றவை முக்கியமாகப் பயிரிடப்படும். உபபயிர்களாக உளுந்து போன்றவற்றைச் சுழற்சி முறையிலும் விவசாயம் செய்வார் அம்மாச்சி. பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த தாத்தாவுக்கு வயல் என்றால் உயிர். தனது ஓய்வுக்குப் பின் சொந்த ஊரில் நிலம் வாங்கி, அதன் பிடிமானத்தில் தன் வயோதிகத்தைக் கழித்திட நினைக்கும் பெரும்பான்மை அரசு ஊழியர்களில் அவர் கனவு ஒரளவேனும் நிறைவேறியதெனலாம். மூத்தவளாக பிறந்த காரணத்தால் பெரும்பாலும் நான் மட்டும் தான் அவர்கள் அன்பில் முழுதுமாய் ஊறித் திளைத்திருக்கிறேன். அழும் போது கூட அம்மாவுக்குப் பதில் ஆச்சி என்று அரற்றுவேனாம். அத்தனை பிடிக்கும் ஆச்சி தாத்தா,அய்யா, அப்பத்தா என்று என் கண் முன்னே வாழ்ந்த/வாழும் தெய்வங்களை.

    அம்மாச்சி தவிர யாரும் உயிருடன் இப்போது இல்லை. அவரும் குடும்ப அரசியலில் என்னிடமிருந்து பிரிக்கப்பட்டார் என்பது வருத்தம் கலந்த சேதி. இருந்துவிட்டுப் போகட்டும் இதோ பாசம் கசியும் என் நினைவுகளை என்ன செய்ய முடியும் அவர்களால்? தன்மானத்தை விடாத குற்றத்துக்குப் பதிலாய் பாசமிகு உறவுகளிடமிருந்து வலுவில் பிரிக்கப்பட்டேன். காழ்ப்பில் தனிமைப்படுத்தினாலென்ன என் நினைவுகள் உயிர்வாழும். வன்மம் மிதக்கும் ஆணாதிக்கவாதிகளும் பொய்மை பரப்பித்திரியும் சில குயுக்தி மனப்பான்மையுள்ளோரும் நடத்தும் குடும்ப அரசியலில் ஒண்டிப் பிழைப்பதில்லையாதலால் நினைவுகளில் மட்டும் ஆராதித்துக் கொள்கிறேன் தாத்தாவின் மறைவுக்குப் பின் தனித்து வாழும் அம்மாச்சியையும். .இதோ இந்தத் திருவிழாவுக்கும் அந்த ஜீவன் என்னை எதிர்பார்த்து எவருமறியாமல் கண்ணீர் சிந்தியிருக்கும்.மாநகரத்தின் கான்கிரீட் காட்டுக்குள், மரம் வளர்க்கும் ஆசையில் போன்சாய் வளர்க்கும் நான் அதே கிராமத்து மனுசி தான். ஈரத்துக்குக் குறைவில்லை ஆனாலும் பாறையென பிதற்றித் திரிகிறேன். எழுத்துக்களை மனதுக்கு நெருக்கமாய் வைப்பதனால் எதையும் மறைத்து விட முடிவதில்லை.போலியாய் எழுதி, அதைச் சிலாகித்துப் பேசி, எழுதுவதில் கிடைக்கும் மன நிறைவை இழக்க விரும்பவில்லையாதலால் எப்போதும் போல் இப்போதும்...கவனிக்க நான் யாரையும் குறிப்பிடவில்லை.

    விடுமுறை தினங்களென்றாலே நினைவுக்கு வருபவள், வாசுகி, என் வயதுத் தோழி. பல்லாங்குழி, தாயம்,கிளித்தட்டு இதோடு நில்லாமல் நீச்சலும் கற்றுத் தந்தவள்.
’ஏட்டி உனக்கு நீச்சத் தெரியுமா?’
‘தெரியாதுப்பா’
‘எனக்கு எல்லா நீச்சலும் தெரியும்டி’
‘நெசமாலுமா?’
‘வீரகாளி சத்தியமா! கத்துக்கணுமா?’
‘ஓ! ஆனா பயமாயிருக்கு’
பேசிக்கொண்டே கிணற்றைச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். கூடவே என்னோடு நடந்து வந்தவள் திடுமெனக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டாள். 12-15 அடி மேலிருந்து கிணற்றுக்குள் விழுந்தேன். திகிலோடு பயமும் சேரவே அலற ஆரம்பித்தேன். வயலில் நிறையப் பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். செத்துவிடமாட்டேன் என்கிற நம்பிக்கை இருந்தது. என் சத்தம் கேட்கணுமே.முடிந்தவரை சத்தமாய் கத்தினேன். ஒரு முகம் கூட எட்டிப் பார்க்கவில்லை. முழுதாய் தரைதொட்டு மேலெழும்பினேன். வட்டக்கிணற்றில் படிக்கல்லுக்கு மறுகோடியிலிருந்தேன். அதிலிருந்து சரியாய் பத்து எட்டில் படிகள் இருந்தன. தெளியுமுன், இரண்டாம் முறை நீருக்குள் மூழ்கினேன். தரை தொட இன்னும் சில அடிகள் என்றிருக்கையில் கையால் துழாவி நீரை விலக்க ஆரம்பித்தேன். வசப்பட்டது நீச்சல்.படிகளைத்  தொடும் நேரத்தில் மேல்ச்சட்டையில் முடிந்து வைத்திருந்த பச்சைக்கடலைகளை மென்றவாறு, ‘தட்சணை குடுக்கணும்ட்டி’ என்று சொல்லிச் சிரித்தாள் தெத்துப் பல்லழகி. பாதிப் படிக்கட்டு ஏறி வந்ததும் கையைக் கோர்த்துக் கொண்டு கிணற்றில் குதித்தோம். பயத்தைக்  களைந்திருந்தேன். தாத்தாவும் ஆச்சியும் தான் பதறிப் போய்விட்டார்கள்.
’தனியா தண்ணில வுழுந்தா நீச்சலடிச்சு கரையேறிடுவேல்லட்டி?’
மூன்று நாள் பயிற்சிக்குப்பின் அவள் கேட்ட கேள்விக்கு, இப்போது வாழ்க்கையில் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீந்துகின்ற இடம் தான் கிணத்துக்குப் பதில் கடலாய் இருக்கிறது.
   
    அந்த விடுமுறையில் பதிமூன்று நாட்கள் வயலில் இருந்தோம். இரவில் தாத்தாவிடம் கேள்விகள் கேட்டபடி பதிலுக்குக் காத்திராமல் தூங்கிப் போவேன். காலையில் அவர் முந்தின நாள் கேள்வியையும் பதிலையும் தயாராய் வைத்திருப்பார். அவரிடம் இருந்ததெல்லாம் அனுபவக் கதைகள் தாம். தான் பட்ட வடுக்கள்,அவமானங்கள்,வெற்றிகள்,சாதனை மனிதர்கள் இப்படி சொல்லிக்கொண்டே போவார். புரிந்ததா அந்த வயதில் தெரியவில்லை இருந்தும் என்னிடம் சொல்லித் தீர நிறைய கதைகள் இருந்தன அவரிடம்.பதியவைத்துச் செல்லவேண்டுமென்ற தாகமாய் இருக்கலாம். தலைகோதியபடி கதைசொல்லி தூங்க வைக்கும் ஆச்சியும் அப்படியே. ஏழு கழுதை வயசுக்கும் நான் அவளின் குழந்தையாகவே பாவிக்கப்படுவேன். கிட்டத் தட்ட பத்தாம் வகுப்புக்கு முன் எல்லா கோடைவிடுமுறையும் ஆச்சி வீட்டில் கழித்திருக்கிறேன்.
    
    இரண்டாம் வருடம் கல்லூரி படிக்கும் போது வாசுகி இறந்து போனாள். கால் தடுக்கி கிணற்றில் விழுந்ததாய் சொன்னார்கள். தற்கொலை என்றார்கள் சிலர். கொலை செய்து கிணற்றில் போடப்பட்டாள் என்றனர் சிலர். அவளே இல்லை என்கிற போது அவள் இறப்பினை ஆராய வலிக்கிறது. உயிரோடிருந்து கிணற்றில் விழுந்திருதால் நிச்சயம் அவள் நீந்தி வந்திருப்பாள் என்று அவள் நினைவு வரும் போது சொல்லிக் கொள்வேன். அப்பா இல்லாமல் மேல்சாதி கனவான்களின் வீட்டின் மாட்டுக் கொட்டிலில் வேலை செய்யும் சாவித்திரியக்காவும்(அவள் அம்மா) அவள் இறப்புக்கு நியாயம் கேட்டு வழக்கேதும் தொடுக்கவில்லை. புதைந்து போனது ஒரு ஏழையின் மரணம். உண்மை உறகாதென்பவர்களைச்  செவிட்டில் அறைவேன். உறங்கும் உண்மைக்கும் உலவும் பொய்மைக்கும் காவல் புரிபவர்கள் பணமும் சாதியும் வைத்துக் கொண்டு கொளுத்துத் தான் திரிகிறார்கள். இதை இங்கேயே
விட்டு விடுவோம். இல்லையெனில் திசைமாறிப் பயணிக்கத் துவங்குவேன்.
      
    பள்ளிக்குச் செல்ல இப்போதும் ஆசையாய் தான் இருக்கிறது இந்த விடுமுறைக்காகவேணும். கிறங்கடிக்கும் வெயிலில் கிளித்தட்டு சுற்றவும், கல்லாங்காய் ஆடவும், கிணற்றுக் கயிறெடுத்து புது ஊஞ்சல் கட்டவும் இந்தக் கோடை விடுமுறை முழுதும் ஆச்சியோடிருக்கவும், பஞ்சதந்திரக் கதை கேட்கவும், சங்கே முழங்கென பாடியாடவும்...
கனவுக்கென்ன எல்லைகளற்று விரிகிறது.

    சடுதியில் மீண்டெழும் என் ஆறாம் அறிவு உறங்கிப் போகட்டும் நான் ஓரறிவோடே காலத்தின் அந்தப் பக்கத்திலேயே மரமாய் நின்று போக ஆசைப்படுகிறேன். எப்போதும் பதில் சொல்லாது சிலையாய்/படமாய் சிரிக்கின்ற கடவுளை  நானும் சிரித்தபடிக் கடக்கிறேன். என்னைப் போல் சாத்தான்களுக்கு கடவுள் பதில் சொல்வதில்லையாம். நேர்மையானவர்களுக்கு அவர் எப்போதும் பதில் சொல்வதில்லை பதிலாய் இந்தப் பெயரோடு உலவும் தைரியத்தைப் பரிசளிக்கிறார்.

6 comments:

கவியாழி said...

அந்த நாட்கள் எப்போதுமே துணிவானவை மறக்க முடியாதவை

சுந்தர செல்வகுமரன் said...

அருமை.

சுந்தர செல்வகுமரன் said...

அருமை.

சுந்தர செல்வகுமரன் said...

அருமை.

Anu said...

அருமையான பதிவு கயல் :). நானும் இதைப் போல பள்ளிப்பருவத்தை அடிக்கடி நினைவு கூர்ந்து மகிழ்கிறேன். தங்களைப் போல நானும் தென்பென்னை ஆற்றில் குதித்து ஆடி இருக்கிறேன். ஆனால் அந்த நாட்கள் மீண்டும் வராதே? நன்றி பகிர்ந்தமைக்கு.

ரிஷபன் said...

மூன்று நாள் பயிற்சிக்குப்பின் அவள் கேட்ட கேள்விக்கு, இப்போது வாழ்க்கையில் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீந்துகின்ற இடம் தான் கிணத்துக்குப் பதில் கடலாய் இருக்கிறது.


இன்னமும் வரிகளின் நீச்சலில்..

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!