Friday, April 19, 2013

ஏப்ரல் பத்தொன்பதாம் திகதி

என் டைரி முழுவதும் அடையாளங்களோடு குறிக்கப்பட்ட நாட்கள் தான் நிரம்பி வழிகிறது ஒவ்வொன்றையும் நினைவுக்கு அழைத்துச் செல்கையில், சில நாட்கள் சந்தோசமாகவும்..சில நாட்களைக் கொண்டாடவும்.. சில நாட்களில் யாருக்கோ ஆறுதல் சொல்லவும்..சில நாட்களில் எதற்கோ யாரிடமும் பேசாமல் அழுது மருகவும்... ஏங்கிச் சாகவும்...

ஏப்ரல் பிறந்ததுமே படபடப்போடு அந்த நாளுக்கான காத்திருப்பா எதிர்கொள்ளத் துணியா பயமா...இம்சிக்கும் வேதனையா.. இல்லாத பதிலோடு நகரத்துவங்கும் நாட்கள் காலத்தால் ரணங்களைக் கீறிப் பார்த்தபடி...

வாழ்க்கையில் மறதி என்பது வரமென உணரும் தருணங்களுமுண்டு. வாய்த்ததேயில்லை.

துயரங்களை மூடி மறைத்து சிரித்து மழுப்பிக் கொண்டே வாழ்கிறோம். ஏதோவொரு இழப்பிற்கு வருந்துவது இல்லையெனில் இழந்து விட்ட அந்த உறவை எண்ணி வருந்துவது எல்லாருக்கும் உண்டு. அதிலும் தன்னைமீறி துக்கச் சுமை வெளிப்பட்டு விடக்கூடாதெனும் சுயக்கட்டுகளில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது மனசு பண்பாட்டின் பேரில்... எல்லாப் பிரிவுக்கும் உயிர்வலிக்கும்.

மறக்கப்பட்டதை நினைப்பதற்கும் மறக்கமுடியாததை மறைப்பதற்கும்  தான் நாட்கள் போலும்... எத்தனை தான் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை. நிதர்சனம். பாழும் மனதெப்போதும் நிதர்சனங்களை ஏற்பதில்லை.

1998 வருடத்தின் கறுப்பு நாள் Apr 19. என் பெரிய தம்பியின் நினைவுநாள். அதிலும் எப்படியான நினைவு அவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கடைசிநேரத் தருணங்களை அருகிருந்து பார்த்து அனுபவித்த நாள். அவனுக்கென்ன அன்றோடு முடிந்தேவிட்டது. நினைவுக்குள் அவன் புகும் எல்லாக் கணங்களும் அவஸ்தை தான். வலியில்லா அவஸ்தை. கண்ணீர் மட்டும் தளும்பி வழியும் அனிச்சையாய். என் கூடவே வளர்ந்து வறுமையை பங்கிட்டுக் களித்தவன். நான் வாங்கும் எல்லா பரிசுகளும் அவனுக்கென உரிமை கொண்டாடுபவன். பரிசென்றால் சோப்பு டப்பாக்களும் எவர்சிலவர் தட்டுகளும் அத்தனை பெருமையாயிருக்கும் அவனுக்கு. அந்தச் சிறிய வயதிலும் எனக்கென கனவுகள் வளர்த்துக் கொண்டவன். சுயநலமில்லா அவன் என் முதல் குழந்தை.  தொடங்கும் எல்லா நாளிலும் ஏதாவதொரு சந்தர்பத்தில் பலவீனமாய் துரத்தியும் பாசமாய் அமர்ந்து கொள்ளும் அவன் பற்றிய நினைவுகள் என்னைத் தவிர யாரோடும் பரிச்சயமில்லாத நாய்க்குட்டியைப் போல. வசதிகள் அத்தனையும் உழைத்து பெற்றிருக்கிறேன். உரிமையோடு வாழத்தான் அவனுக்கு கொடுப்பினையில்லை. அதே கற்றையான ரூபாய் நோட்டுகள் கைதொடும் போதெல்லாம் இது அப்போதே கிடைத்திருக்கலாமே என்கிற வருத்தம் பணத்தை வெறுக்கச் செய்கிறது. மொத்தமாய் தந்துவிடுகிறேன் திருப்பித் தரச் சொல்லுங்கள் வறுமைக்கு நான் இழந்தயென் தம்பியை.

உன்னை நினைக்காதே நாளேயில்லை. இந்த நாளில் உன்னைத் தவிர யாரையும் நினைப்பதில்லை.

இளமையில் மரித்தவர்கள் எப்போதும் மூப்பெய்வதில்லை.

எப்போதும் மனதுக்குள் சொல்வது தான்...

துண்டுகளாய் வெட்டப்பட்டும்
காற்றில் உயிர்பெறும்
அதிசய ஜீவியென - உன் பிரிவினில்
உருக்குலைந்த உள்ளத்துக்கு
ஒன்று மட்டும் உறுதியாய்
சொல்லி வைத்திருக்கிறேன்

உன்னை மகவெனச் சுமக்கும்
வரம் கைவரும் வரை
’பகிரத்துடித்த பாசத்தையெல்லாம்
பத்திரமாய் வைத்திரு!
என் சகோதரனின் ஆன்மா
இப்போதும் என்னைத் தான்
சுற்றிக் கொண்டிருக்கும்!’

3 comments:

கவியாழி said...

பிரிவே கொடுமையானது .அதுவும் தம்பியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.வருத்துகிறேன்

நிலாமகள் said...

எல்லாப் பிரிவுக்கும் உயிர்வலிக்கும். //

மொத்தமாய் தந்துவிடுகிறேன் திருப்பித் தரச் சொல்லுங்கள் வறுமைக்கு நான் இழந்தயென் தம்பியை. //

ஐயோ கயல்... மனசைப் பிசைகிறது மரணக் கயவனின் நிஷ்டூரம்.

உங்க நம்பிக்கை பலிக்கும். தம்பியும் காத்திருக்கிறான்.

'பரிவை' சே.குமார் said...

மொத்தமாய் தந்துவிடுகிறேன் திருப்பித் தரச் சொல்லுங்கள் வறுமைக்கு நான் இழந்தயென் தம்பியை.

இந்த ஒற்றைவரி சொல்கிறது பிரிவின் வலியை...

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!