உச்சிவெயில் பொழுதொன்றில்
மெல்ல நடந்து கொண்டிருந்தேன்
மூளை தொட்டச் சூட்டிற்கு
முக்காடிட்ட மரநிழல்கள்
வலப்புறம் அகன்ற வயல்வெளி
இடப்புறமொரு நீரோடும் வாய்க்கால்
சலசலத்தோடும் நீர்பரப்பெங்கும்
செழிப்பாய்ப் பசுங்கீரைகளும்
சிலவகைக் கோரைகளும்
மீன்களோடு வாத்துகளும்
தத்தம் திசையில் பயணித்தவாறு....
மத்தியான பவனியது
தூரத்தே தியான மண்டபம்
சுற்றிலும் பசுஞ்சோலை
விழிசுட்டும் வழியெல்லாம்
பச்சைப் பசேல் பசுங்காட்சி
சிலர் மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்
சிலர் மத்தளம் தட்டிக் கொண்டிருந்தார்கள்
நான் அவர்களை வாசித்துக் கொண்டிருந்தேன்
மேய்ப்பவர்கள் எவருமில்லை
வாய்க்கால் மடை வரை
தாமே நீந்தி தாமே திரும்பிக் கொண்டிருந்தன
வாத்துக்கூட்டங்கள்
இயக்கியின் சூட்சுமத்தில் நகரும்
கைப்பாவை போன்றதானதொரு லயத்தில்....
மத்தளங்கள் அடங்கின
மடத்தலைவர் பிரசங்கம் செய்தார்
மனிதர்கள் வாத்துக்களானார்கள்
தண்ணீர் விட்டேறிச் சிறகுவிரித்து
சிறு பிள்ளைகள் பின்னோடி
தட்டைக் கால்த்தடம் பதித்து
வயல் பார்த்து
அவைதம் குலவிக் கூடி
அதிர்வுகளில்லாத மோனத்தில்
வாத்துக்கள் மனிதர்களாயின
படம் : நன்றி கூகுள்
1 comment:
Its very nice... keep it up... :)
Post a Comment