Saturday, October 13, 2012

முயல் வேட்டை


ஒற்றைத் தீபத்தின் வழிகாட்டுதலோடு
பயணிக்கிறார்கள் அவர்கள்
எண்ணிக்கையில் நால்வராய் இருக்கலாம்
பெரும் மலைக்காடு
இருட்டுத் திரையிலிட்ட புள்ளிகளை
அழித்தபடி நகர்கிறது வெளிச்சம்
மிகவேகமாய்...
இரைதேடிகளும்
கூடடைந்தவர்களும்
தலைதூக்கிப் பின் தத்தம் பணிதொடர்கிறார்கள்
மனித வாடையில் பரபரத்த
தாய்ப்பறவையொன்று
இறக்கைப் போர்த்தித் தற்காத்துக் கொள்கிறது
ஆர்வந்தாழாமல் போர்வையெங்கும் முளைக்கின்றன
சின்னஞ் சிறு குருவிகள்!

நட்டநடுக் காடு
தீபம் தீப்பந்தமானது
கொலையாயுதங்கள் பரப்பி
நடுவில் மூட்டிய நெருப்போடு
வந்த வேலை ஆரம்பமாகியது
கண்ணி விரித்து
அமைதிகிழித்து
வேட்டையாடி
உயிர்பிரித்து
பத்தொன்பது சொச்சம் முயல்கள்
இருபதாக்குமுன் இரவு பிரியவே
திரும்பி நடக்கத் தொடங்கினார்கள்
பிரிந்தது
இணையோ
தாயோ
குட்டியோ
தேடிச்சலித்துப் பரிதவிக்கக்கூடும்
மிச்சமிருப்பவை
அவர்கள் கடந்து போனார்கள்
வனத்தின் பரிதவிப்பைப் புறக்கணித்து
செழுமையை மெச்சியபடி
மனிதப்பிரவேசத்தை முறியடிக்க
முயற்சியில் இறங்கியது
எரிச்சலடைந்த காடு

3 comments:

பழமைபேசி said...

முயல் வசமும் வாழ்த்தும்!!

மதி said...

குருவிக்குஞ்சுகள் பற்றிய வரிகளும் முடிவு வரிகளும் அருமை.. மிக நல்ல கவிதை.. உங்கள் கவிதைகளின் ரசிகனாகிக் கொண்டிருக்கிறேன் :-)

இராஜராஜேஸ்வரி said...

முயல் பற்றி கயல் எழுதிய கவிதை !!

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_18.html

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!