Thursday, July 7, 2016

இன்று முதல்....
என்று முன்னெடுக்கப்படுபவை யாவும்
கணநேர பரிமளிப்பாக மட்டுமே.
அடர்கனம் தீர்ந்து வீழ்கிற நிழலில் 
நம்பிக்கை சாய்ந்துவிடுகிறது
நாட்டின்
பண்
விலங்கு
சின்னம்
பறவை
எல்லாமும் நினைவிருக்கிறது
அனைவரும் சமமென்பது மட்டும்
நித்தம்
மறந்து தொலைக்கிறது
வேற்றுமையில் ஒற்றுமையென்பது யாதெனில்
அடக்குமுறைகளோடு
அடங்கிப் போவதாக
சமரசப்பட்டுக் கொள்வது
எங்கேனும் ஆளும் நிலையில்
நீங்களிலிருந்தால்
அடங்கிப் போவதற்கென
வர்க்கம் தேடுகிறீர்கள்
அய்யாவென்று
வளையும் முதுகோடு
தன்மானமற்றதான
அடிமை வர்க்கம்
நீங்களற்ற உலகில் தான்
அதிகார போதையற்ற
சமூக நீதி
வழுவாது வாழும்
நீங்களென்பது போலி தேசியம்
நீங்களென்பது போலி சமத்துவம்
நீங்களென்பது போலி புரட்சி
நீங்களென்பது போலி சாதிமறுப்பு
நீங்களென்பது போலி பெண்ணியம்
சின்னதொரு உண்மையின் உரசலில்
நைந்து கிழிகிறது
மகாத்மாக்களாக
மகானுபாவன்களாக
மாபெரும் ஆளுமைகளாக
இதுகாறும் தரித்து வந்த
’போலி’ முகங்கள்
யாவையும் பொய்யென்றுணர்ந்த நாளில்
நீங்களாக நானென்றும்
மாறாதிருக்கவே
நேர்ச்சைகளோடு வேண்டி நிற்கிறேன்
கேளடி பராசக்தி!

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!