Monday, November 12, 2012

தளும்பும் நினைவுகளும் தீபாவளி வாழ்த்துகளும்

தீபாவளி நேரம்.
ஏனோ தளும்பிக் கொண்டிருக்கிறது நினைவுகள்...

நேசமித்திரனின் Google Plus-ல் பகிரப்பட்டிருந்தப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் உடைப்பெடுத்தது  கண்ணீர்.காரணம் இந்த வரிகள்,

”இதோ
இப்படி நீளும்
ஒரு தெருவின் இரண்டாம்
திருப்பத்தில் மூன்றாம் வீடு என்னுடையது.....”  

மெல்ல மெல்லச் சுழன்றது நினைவுகள் இந்த வரிகளின் வழியாக....

ஒரு பெரிய வாயகன்ற மண் பாத்திரம். மண்பானைக்கும் மீன்குழம்புச் சட்டிக்கும் இடைப்பட்ட வடிவிலிருக்குமது. இப்போது அது போல் கிடைப்பதில்லை. மூன்று படிப் பால் பிடிக்கும்.அது போல் இரண்டு பெரிய பாத்திரங்கள்.வீட்டுத் தேவைகள் போக மீதிப்பாலைச் சுண்டக் காய்ச்சி, ஆறவிட்டு, வேடு கட்டி, உறைக் குத்தி,சாமியறைக்குள் வைக்கும் வரை அப்பத்தாவின் முந்தானையோடு நானும் தொடர்ந்தபடியிருப்பேன். அந்த நேரங்களில் கருமமே கண்ணாய் அவள் சுழல்வதும் , மண்பாத்திரங்களைப் பதவிசாய் அவள் கையாளும் விதமும், ஊடாகச் சொல்லிக் கொண்டே போகும் நல்லதங்காள் கதையும்.. இதோ இப்போதும் நீர்க்கட்டுகிறது கண்ணில்.

“உம்பேரச் சொல்ல நானாச்சும் இருகேம்மா!” கெஞ்சும் கடைசிப் பிள்ளையை ஆரத்தழுவிக் கிணற்றில் குப்புறத் தள்ளும் நல்லதங்காள் என்னை விசும்பச் செய்வாள்.

“ஆத்தி! இப்டியாடி இருக்கது நெஞ்சொரமில்லாம? அழப்படாது! நீதியென்னா, கெட்டாலும் தமையன் வீடு செல்லப்படாது. அதத்தேன் மனசுல வாங்கிக்கனும். கோழயாட்டமா அழுவாக?” சேலைத் தலைப்பில் முகம் துடைத்துத் தூங்குவதற்கு அனுப்பி வைப்பாள்.

குசேலனும், கட்டபொம்முவும் அப்பத்தாவின் சொல்வழி அறிந்தவர் தாம். பின்பொருநாள் குசேலர் - சுதாமா எனவும் கட்டபொம்மு - சிவாஜியெனவும் பகுத்தறிந்து(!) அதில் நடித்தவர்களைப் பழைய கதையில் நிரப்பிக் கொண்டேன்.

வருடத்தில் எல்லா நாளும் ஏதாவது இரண்டு மாட்டின் சீம்பால் கிடைத்துக் கொண்டே இருக்கும்.நான்கு இல்லை மூன்று பசு மாடுகள் கன்று ஈன்று, பால் தந்தபடியிருக்கும்.கறவைக்கென வளர்க்கப்பட்ட கலப்பினப் பசுக்கள் எம்மிடம் இருந்ததாய் நினைவில் இல்லை.வெளியில் பால் விற்பதில்லை. எங்கள் மொத்தக் குடும்பத்திறகானத் தேவைக்கு மட்டுமே. அந்தப் பெரிய தொழுவத்தில் அடைக்க இடம் போதாது வைக்கோல் படல் சுற்றிலும் கல்தூண்களோடு ஆவினங்கள் பிணைக்கப்பட்டிருக்கும்.அட! எத்தனை அற்புதமானது அந்த வாழ்க்கை.

காலை விடிந்ததும், முற்றத்துத் தூணில் சாய்ந்தபடி,சிரத்தையாய் மோர்க்  கடைவாள். மத்தோடு தயிரும் தண்ணீரும் கலந்து கைகளால் முன்னுக்குப் பின் சிலுப்பித் தயிருக்கு ’மோர்’ என்னும் மற்றோர் வடிவம் தருவாள்.திரண்டு வரும் வெண்ணெய்(’மிதப்பு’ என்பது அப்பத்தாவின் சொலவடை) தண்ணீரில் போடப்பட்டு, பின்பு மற்றோர் மண்சாடியில் சேமிக்கப்படும். எனக்கு நினைவு தெரிந்த நாள் வரை, மதிய நேரங்களில் யார் வீட்டுக்கு வந்தாலும் மோர் தந்து உபசரிப்பது எங்கள் வழக்கமாயிருந்தது. வீட்டுக்குப் போக  மீதி களத்து மேட்டுக்குப் போகும்.அவள் புழக்கம் அவள் சார்ந்த மிக நுட்பமான வேலைகள் எல்லாமும் மண் பாத்திரங்களின் ஆளுமையில் இருந்தது.
அப்பத்தா இல்லாத வீடும் துப்புறவாய் ஒழிக்கப்பட்ட மண் பாத்திரங்களும்,ஏதோ எனக்கு வலிக்கத் தான் செய்கிறது. நானும் குழந்தையல்ல... குமரிப்பருவம் தாண்டி விட்டேன். ஆனாலும் ஆனாலும்.... குழந்தையென ஆவதற்கு எத்தனிக்கும் எல்லா நேரங்களிலும் அந்தக் கைகளின் வாஞ்சையோடு முகம் துடைக்கும் முந்தானையும் வேண்டுமெனக்கு... பாசத்துக்கு ஏங்கித் தான் போகிறேன்.

பீங்கான் தட்டுகளோடும்,தம்ளர்களோடும் புழங்கினாலும் உடைந்து போவது மண்பாத்திர மட்டுமென்பதை நினைவில் கொண்டு இழிவாய் பார்க்கும் நாகரிகம் அம்மாவுக்கும் சித்திக்கும் இருந்தது. ஆகவே, புரட்சி செய்யப்பட்ட சமையலறைக்குள் பால் காய்ச்சுவது தவிர வேறெதற்கும் அப்பத்தா பங்கெடுப்பதேயில்லை.

ஒரு வாரம் சேர்த்து வைத்த மிதப்பெல்லாம்,சனிக்கிழமையில் நெய்யாகக் காய்ச்சி விடுவாள். வரமிளகாய்,முருங்கைகீரை,உப்புக்கல், கைப்பிடி கறிவேப்பிலை எனச் சேர்த்து காய்ச்சும் அந்த நெய்யின் மணம் அலாதியானது. மீந்து கிடக்கும் மொரு மொரு முருங்கைக்கீரைக்கு அத்தனை கிராக்கியிருக்கும்.
”இப்ப முடிஞ்சிருமா? எவ்ளோ நேராகும்? சீக்ரம் அப்பத்தா. எனக்குத் தான் முதல்ல“ வாயூறப் பரபரக்கும் அந்தச் சிறுமியும்,
“உனக்குத் தாண்டி! சித்த பொறு,நெய்சாதம் உருட்டித் தாரேன் “ அடக்கி வைக்கும் அழகியிடமும் பொக்கிசமாய் எத்தனையோ இருந்தது.
இதோ இப்போது நான் அவளின் வழிகாட்டுதலினூடே தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உருகிவரும் நெய்யில் ஏதோ குறைகிறது.

முன்னெல்லாம் வீட்டு நெய்யில் தீபாவளிப் பலகாரம் செய்வது வழக்கமிருந்தது. பின்பு அதும் அரிதாகிப் போனது. அம்மாவின் Diet Conscious காரணமாயிருக்கலாம்.

பண்டிகைக்கு முதல் நாள்,முற்றத்தில் அடுப்பு மூட்டி எல்லாப் பேரன் பேத்திகளும் புடைசூழ முறுக்குச் சுடுவதில் ஆரம்பிக்கும் தீபாவளி. முறுக்குத் தனி, தேன்குழல் தனி. தேன்குழலில் தேங்க்காய்பால் சேர்ப்பாங்கன்னு நெனைக்கிறேன். சீப்புச் சீடைக்கும் இதே பக்குவம் தானென்று நினைவு. மரத்தாலான முறுக்கு பிழியும் உரல். நான் செய்றேன் நான் செய்றேன் என்றென் குரல் பெரும்பாலும் அம்மாவின் ஒரு சாத்தில் அடங்கிப் போகும். பச்சை முறுக்கு சாமிக்கு வச்சி கும்பிட்டுட்டு,
‘கயலெங்க...?’ என்று அப்பத்தா  கேட்கும் போது அடியெல்லாம் மறந்து அவள் காலைக் கட்டிக் கொண்டிருப்பேன்.

மணவோளம்(இந்த எழுத்துக் கோர்வை சரியா தெரில ஆனா இப்டித் தான் எனக்கு எழுத வருது. எல்லாம் செவிவழிக் கல்வி. உண்மையான வடிவம் கிடைக்கப் பெறல.தெரிஞ்சவங்க தவறிருந்தா திருத்துக்கப்பா)
அப்பத்தாவின் ஆளுமை ஜொலிக்கும்  இதில். நாள்ப்பட வைத்து சாப்பிடலாம்.தேங்காய்ப் பல்லும் பொட்டுக்கடலையும் வெல்லப்பாகில் ஊறிய முறுக்குமாக... செமயா இருக்கும். இப்பல்லாம் அம்மா கடையில வாங்கிடறாங்க எனக்குப் பிடிக்குமென்பதற்காக மறக்கப்படாமலிருப்பது சிறப்பு.

வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம்,அதிரசம்,வடை(ஆமவடை,உளுந்தவடை இரண்டும்), பால் பணியாரம்,மசாலா சுய்யம்(சுழியன் என்பது வேர்ச் சொல் என்றே நினைவு), இனிப்புச் சுய்யம் - இது தான் எல்லாத் தீபாவளிக்கும் எங்கள் வீட்டுப் பட்டியல். ஒற்றைப்படையில் பலகாரக் கணக்கு வரவேண்டும் என்பதற்காக இதில் ஒன்று குறைத்தோ, பஜ்ஜியை சேர்த்தோ நேர் செய்வாள் அப்பத்தா. நீளும் வேலைகளுக்கு அம்மாவிடமும் சித்தியிடமும் முணுமுணுப்பு. பார்க்க நல்லாயிருக்கும். சச்சரவில்லாத குடும்பம் என்னங்க குடும்பம்.அப்புறமென்ன ஒன்றுகூடல்?

எங்கள் வீட்டில் சாமிப்படங்கள் இருக்காது. முன்னோர்கள் வழிபாடே பிரதானம். அப்பாவுக்கும் இதே ஏற்பு.பெட்டகத்தில் சேலையும் இன்ன பிறவும் இருக்கும். தீபாவளி அன்னிக்கு காசு போடுவோம் அந்த ஓலைப் பெட்டிக்குள்.எண்ணெய் தேய்த்து குளித்து அய்யா அப்பத்தா காலில் விழுந்து விபூதி வாங்கி, புத்தாடையுடுத்தி ஸ்ரீதர் மாமாவின் கேமராவுக்குப் போஸ் குடுத்து, வளையலும் பாசிமணியும் நிறத்திற்குச் சரிபார்த்து... பசிக்கும் நேரத்தில் கால்கள்
தடதடவெனச் சாமியறைப் பக்கம் போகும்.பெரிய இலையில் வகைவகையாய்ப் பரப்பப்பட்ட பலகாரங்களுடன்,சாம்பிராணிப் புகையோடும் நெய்விளக்கோடும், எங்கள் வீட்டுச் சாமி அருள்பாலித்துக் கொண்டிருக்கும்.

பலகாரத்தின் சுவையை விடவும் பட்டாசே கவனத்தை ஈர்க்கும்.சில பல ஆணாதிக்கவாதிகள் உள்ள குடும்பத்தில், பொட்டு வெடியும் பாம்பு மாத்திரையும் என் பங்குக்கு வரும். அழுது அடம்பிடித்தாலும் சீனி வெடி(ஊசிப்பட்டாசு) தவிரப் பெரியவெடி எதுவும் கிடைக்காது.உண்ட பலகாரம் செரிக்கப் பனைவெல்லம் தருவார் அய்யா.

மதியம் உறவினர் வருகையோடும் அசைவ உணவோடும் தீபாவளிக்காசு என்பதாகப் பை நிறையும்.அத்தைகள்,மாமாக்கள்,அண்ணன்கள்,புதுமணத்தம்பதிகள்,அப்பாவின் நண்பர்களென வீடு கலகலக்கும்.ஒன்றுகூடல் இனிமையாய்ப் போகும்.

சந்தனமும் வெற்றிலைத் தாம்பூலமும் கையிலேந்திப் புத்தாடை மினுக்க,ஓட்டைப் பல்லோடும்,உச்சிக் குடுமியோடும் அதோ அந்தப் பெரிய வீட்டில் அழகியின் கண்டாங்கிச் சேலைத் தலைப்பை பற்றியபடி கைக்குள்ளும் காலுக்குள்ளும் ஓடித் திரியும் சிறுமியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அழகியின் பாமரத்தனமிகுந்த அன்பும் அவள் நேசம் படர்ந்த அந்தச் சிறுமியும் பழைய நிழற்படம் போல் அப்படியே இருக்கட்டும்.ரசமிழந்த கண்ணாடிக்குள் அசையும் பிம்பமென என் பால்ய நாட்கள், நான் இளவரசியாயிருந்த என் சிற்றரசின் மேதகு பெருமைகள்... முழுக்க முழுக்க அன்பாலனவை.

பெரியவர்கள் இல்லாத இந்தப் பண்டிகைகள் எனக்கு அத்தனை சுவை தருவதேயில்லை.இயல்பில் நானும் அப்பத்தாவைப் போலத் தான் வாழ ஆசைப்படுகிறேன். எல்லாருக்கும் உகந்தவளாய் - பாந்தமும் பாசமும் ஒருங்கே சேர்ந்து- எவர் குறையும் காணாது நிறையோடே அளவளாவி, அன்போடு  அரவணைத்து,குழைவாய்,நெகிழ்வாய்... வசப்பட எனக்கும் வயதாகவேணுமோ? :)

தளும்பும் நினைவுகளை முத்தாய்க் கோர்க்கும் எல்லா நிமிடங்களிலும் கண்களைக் குளமாக்குகிற ஏதோவொன்று இருக்கத்தான் செய்கிறது. நம்மொடு   கூடவே வாழ்ந்து சிறப்பித்துச் சென்ற முன்னோர் அனைவருக்கும் நம் வணக்கங்களைக் காணிக்கையாக்குவோமாக!

தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பர்காள்! வாழ்க வளமுடன்!

6 comments:

நேசமித்ரன். said...

நினைவுகள் மட்டும் இல்லாமல் போய் விட்டால் வாழ்வுதான் எவ்வளவு கனமற்றது .அன்பில் கரைதல் தான் அபத்தங்களில் இருந்து நம்மை கரையேற்றும் பண்டிகை நாள் வாழ்த்துகள் :)

'பரிவை' சே.குமார் said...

அருமை...
அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
தீபாவளி வாழ்த்துக்கள்.

எம்.ஞானசேகரன் said...

அனுபவங்களை உங்களிடம் துள்ளி விளையாடும் தமிழோடு மிக அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்.

திசைசொல் said...

அற்புதமான பதிவு.மக்கள் வாழ்க்கையில் அசையும் பண்பாட்டு அசைவுகளை அழுத்தமாய் பதிந்த பதிவு.அப்பாத்தா அன்பு விரவிய பதிவும் கூட.வாழ்த்துகள் கயல்

கயல் said...

அனைவருக்கும் நன்றி!

ரிஷபன் said...

இயல்பில் நானும் அப்பத்தாவைப் போலத் தான் வாழ ஆசைப்படுகிறேன். எல்லாருக்கும் உகந்தவளாய் - பாந்தமும் பாசமும் ஒருங்கே சேர்ந்து- எவர் குறையும் காணாது நிறையோடே அளவளாவி, அன்போடு அரவணைத்து,குழைவாய்,நெகிழ்வாய்... வசப்பட எனக்கும் வயதாகவேணுமோ?

பெரியவர்கள் என்றும் பெரியவர்கள்தான்..

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!