Sunday, February 5, 2012

மொக்கவிழ்ந்த நொடி


ஒரு கோடைகால ஞாயிறு
வெயில் தகித்த மணல்
வெற்றுக் கால்கள்
வெம்மையின் வேதனை
கைகள் காலணித் தரித்திருந்தன!

நடந்து கொண்டிருந்தோம்
நிறையப் பேச வேண்டியிருந்தது
எதில் தொடங்குவது என்பதில்
வார்த்தைகள் சிக்கியிருந்தன

சொல்லிவிட்டால் என்னுடல்
சுவாசிக்கக் கூடும் - இருப்பினும்
கேட்கத் துணிவில்லை
செவிகளுக்கு!

பீடிகைகளில் புரிந்திருந்தது
ஏனோ  வார்த்தைகளில்
வசமாகவில்லை!

முழுதாக ஒரு மணிநேரம்
செலவிடப்பட்ட வினாடிகள்
எங்களைக் கேலி செய்தபடி...

உப்பு நிறைந்த நீர்
கல் மனதை
கரைத்துப் போயிருந்தது

கணிச இடைவெளியில்
மனங்கள தழுவிக்கொண்டிருந்தன

“நேரமாச்சு மாமா போகலாமா..?”
பொறுமையிழந்தேன்

“ம்ம்”
அமர்த்தலாய் ...

அமைதியாகத் திரும்பினோம்
சொல்லிக் கொள்ளவேயில்லை

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
மோதிக் கொள்ளும் ஆபத்தில்

“ஆயுசுக்கும் வாழணும்டி உங்கூட”

மௌனம் உடைத்த
அவன் குரல் தழுதழுத்தது!
நினைவுச் சுரங்கத்தில்...
இன்னும்
பசுமை மாறாமல்
என்னுள் காதல்
மொக்கவிழ்ந்த நொடி!

1 comment:

மதி said...

நல்ல தலைப்பு .. நல்ல கவிதை .. என்னைக் கவர்ந்த வரிகள்

//சொல்லிவிட்டால் என்னுடல்
சுவாசிக்கக் கூடும் - இருப்பினும்
கேட்க துணிவில்லை
செவிகளுக்கு!//

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!