கல்லூரி நாட்களில், அம்மா தான் எனக்கு எல்லாம்.இளங்கலை கணிணியியல் படித்தேன்.கல்லூரிக்கு பஸ்ஸிலோ அப்பாவின் வண்டியிலோ பயணிப்பது வழக்கம்.ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு கேட்கும் அப்பாவை விட, ’எனக்கு காசு பெரிசில்ல நீ வாங்குற மார்க்கு தான் பெரிசு’ என்று ஆறு மாததிற்கொருமுறை இம்சிக்கும் அம்மா தான் எனக்கு வற்றாத அமுத சுரபி. தினமும் கல்லூரி போகவென்று அப்பா கணக்கு பார்த்து தர, அம்மா மட்டும் கொடை வள்ளல். மொத்தமாய் நூறு ரூபாய் தாள்கள் கையிலிருக்கும் தருணங்களில் அப்படியே தலைக்கு மேல் ஒரு ஒளிவட்டம் சுற்ற கெத்தாய் நடந்து கொண்டிருப்பேன். பணத்தின் மீதான ஆசை வளர ஆரம்பித்த காலகட்டம் கல்லூரி காலங்கள் தான்.
அம்மா வேலைக்கு போகும் காரணத்தால், அப்பாவின் அரசியல் குறுக்கீடில்லாத குடும்ப பொறுப்பு மிகச் சிறு வயதில் தலையிலேற்றப்பட்டது. குருவி தலையில் பனங்காய் என்பதறியாமல் கிடைக்கும் சொற்ப கமிசனுக்காக வலிய ஏற்றிக் கொண்ட சுமையது.எல்லா மாதத்தின் முதல் வாரமும், கல்லூரி முடிந்து திரும்புகையில் கல்லுக்கட்டி சுப்பையா ஸ்டோர்சில் அம்மா கொடுத்தனுப்பியிருக்கும் சீட்டுடன் மளிகை சாமானுக்காக காத்திருப்பேன். பருப்பு,எண்ணை,வற்றல் வடகம் என மளிகை சரக்கு பலவிதமான உட்பிரிவுகள் கொண்டது. ஒவ்வொன்றுக்கும் எது சிறந்தயிடம் என்ற கணிப்பும் சிக்கன தத்துவங்களும் ‘சமர்த்து’ என்கிற பட்டத்தை தரும் காரணிகள் என்பதால் வெகு கவனமாயிருப்பேன். ஓடி ஓடி வாங்கினாலும்,
‘அய்யய்யோ! இங்க பாருடீ! பெருங்கடுகு வாங்கியாந்துட்டா!இதுல காரமே இருக்காதேடீ!’
’தொலியுளுந்து வாங்கியாறலயா? மாவு கணிசம் போறாதேடீ’
இப்படியான அப்பத்தாவின் அங்கலாய்ப்பில் அத்தனை கெத்தும் தூள் தூளாய் பறந்திருக்கும். அவ்வளவு பேருக்கு செய்யுற சமையல்ல எப்படி ரெண்டு தேக்கரண்டி கடுகோட காரம் தெரியப்போவுது? கடுகா பொரியணும் போல கடுகடுப்பா இருக்கும் ஆனா ஏதும் பேசவே முடியாது. அம்மா மட்டும் குறையோ நிறையோ ஏதும் சொல்லாமல், காசும் கணக்கு கேட்காமல் போய்விடுவார். ஆனாலும் குறித்து வைக்க வேண்டும்.
”எங்க வீட்டுல என் பொண்ணுக்கு வீட்டு வரவுசெலவெல்லாம் அத்துப்படி. ஹாஸ்டல்லயே போட்டுடேனா இங்கயிருந்து தான் வாழ்கைய கத்துக்க முடியுமின்னு சின்னச் சின்ன பொறுப்பா தர்றேன். அவளும் நல்லாத்தாங்க சமாளிக்கிறா” சக தோழியிடம் பெருமை பொங்க அம்மா பீற்றிக் கொண்ட தருணத்தில் என் ’கமிசனார்த்துவம்’ தூரப் போய்விட்டது.
**********
அம்மா அப்பாவிடம் அது இதென்று கதை கட்டி சேர்த்து வைத்த காசெல்லாம் பெரியம்மாவின் பாசத்தில் ஒரேயடியாக போய்விடும். வீட்டிற்கு மூத்த பெரியப்பாக்கள் இருவரின் குடும்பமும் மலேசியாவில் இருப்பதால் தொலைபேசியின் தொல்லை எப்போதும் மிகவும் அதிகமாகத்தான் இருக்கும்.யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்கிற சேதி தாங்கி வரும் ஒரு தொலைபேசி அழைப்பு மொத்தபேரின் தூக்கத்தையும் கெடுத்துவிடும். இல்லை கெவுளி(சுவர்க்கோழி) பாசை தெரிந்த அப்பத்தாவின் புலம்பலுக்கு ஆறுதலாய் ஒரு தொலைபேசியழைப்போ, கடிதமோ வராதவரையில் வீடு முழுக்க சாம்பிராணி புகையோடும் தனக்குத் தெரிந்த மன்றாடலோடும் அவளின் பரிதவிப்பு பாவமாய் இருக்கும்.அப்பாவோ சித்தப்பாவோ வீட்டில் இல்லாத நாட்களில் இதுபோன்ற நிலையென்றால், காரைக்குடியிலிருந்து மலேசியாவுக்கு தொலைபேசி விபரம் அறியும் பொறுப்பு என்னிடம் வரும். ரொக்கமாய் சில நூறுகளும் கேட்க வேண்டிய கேள்விகளும் மனனம் செய்தபடி நானும் மிக பவ்யமாக மிச்சமாகப் போகும் ரூபாய்களை கணக்கிலிட்டபடி.வீட்டிலிருக்கும் தொலைபேசியில் அயல்நாட்டுக்கு பேசும் வசதியில்லாததால், பெரியப்பாவிடம் கூறி யாரேனும் ஒருவரை அப்பத்தாவிடம் பேசச் சொல்ல வேண்டும். விசயம் மிகவும் எளிது. ஆனால் எதுக்கு நானூறு ரூபாய் என்கிற யோசனையும் அம்மாவின் நிர்வாகத்திறமை குறித்த எள்ளலும் முதல் முறை மட்டுமே. காரணம் புரிந்தபின் அம்மா எந்த அளவுக்கு புத்திசாலி என்பது தெரிந்தது. எண்களை அமிழ்த்தினேன். எடுத்தது பெரியம்மா தான்.
“பெரிம்மாஆஆஆஆ! நல்லாயிருக்கீங்களா! நான் தான்... ” முடிக்குமுன்னரே குரல் தெரிந்து பெரியம்மா விசும்பலா இல்லை அளவு கடந்த உற்சாகமா எதுவென தெரியாத வகையில்,
“கயலாஆஆஆஆஆஆஆஆஆஆ” என ஒரு பாசமான இழுப்பு. வார்த்தையில் இசையை குழைத்து,எனக்கும் கண்ணீர் முட்டி மீண்டு எழ, முதல் ஆறு ஏழு விநாடிகளை இந்த விளிப்பின் ஓசை நிறைத்திருக்கும்.
பெரியம்மாவின் பூர்வீகம் இந்தியா தானென்றாலும் பதினாறு வயதிலே திருமணமுடித்து கணவனிடம் சென்றவர்.ஆனாலும் எங்க பக்கத்து வட்டார வழக்கு மட்டும் அதே தாள லயத்தில். இன்னொரு சமயமென்றால் இத்தனை வருசமாகியும் மாறாத அவரின் சீரிய மாண்பு பற்றி கவிதை எழுதலாம். ஆனா கையிருப்பு பாசத்துல அடிச்சி இழுத்திட்டு போற சூழ்நிலையில என்ன செய்ய ??? எத்தனை முயன்றும் நம்மள ஒரு வார்த்தை கூட பேச விடாமல் தான் மட்டும் பேசிக் கொண்டிருப்பார். வெறும் ‘ம்ம்ம்ம்’ மட்டும் கொட்டிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அப்படியே இதய துடிப்பு நின்றுவிடும். கட்டணம் நானூறு தாண்டி நானூற்று அம்பதை தொடப்போகும் ஒரு அபாய வேளையில் எனக்கும் தைரியம் வந்து,
“பெரியம்மா! நான் காரைக்குடில இருந்து பேசறேன். வீட்டுக்கு பேசச் சொன்னாங்க. வைக்கிறேன்” கடன் சொல்ல கவுரவம் தடுக்கும், கையிலிருப்பதை எல்லாம் கொடுத்துவிட்டு வரும் போதெல்லாம் வெறும் சோகப் பாட்டுகள் தான் நினைவுக்கு வரும்.அம்மா தீர்க்கதரிசின்னு, மனசு எப்பவும் போல கடைசியா புரிஞ்சுக்கும்.
இப்போது மெயிலிலும்,சாட்டிலும் பேசினாலும்.. நண்டு சிண்டு எல்லாத்துக்கிட்டயும் மொபைல் வந்திட்டாலும்.. நினைத்த மாத்திரத்தில் எவருடன் தொடர்பு கொள்ள ஏதுவாய் எல்லாமிருந்தும்...பேசச் செய்ய அப்பாத்தா போல் கிரியா ஊக்கியாக எவரும் இல்லை. பாசத்தால் பிணைக்க பெரியம்மா போல் இன்னொரு ஜீவனும் அங்கில்லை. பெண்கள் மிகவும் அற்புதமானவர்கள். பெண்கள் எந்த நாட்டிலிருந்தாலும் உள்ளுள் பெருகும் பாசமும் ஒருங்கே சேரும் பாந்தமும் தான் இன்னும் கலாச்சாரம், குடும்பம் என்கிற அடிப்படைக்கு வித்திடுகின்றன போலும். பெரியம்மாவோ அப்பத்தாவோ படிபபறிவே இல்லாதவர்கள். குடும்பம் தவிர வேரொரு உலகம் அவர்களறியாதது. என்வரையில் அவர்கள் அடிமைப்படுத்தப்படவுமில்லை, அடிமையாகவுமில்லை.மாறாக மகாராணிகளாக வாழ்ந்தார்கள் எனச் சொல்லலாம். ஆணாதிக்கவாதிகளாய் சொல்லப்பட்ட என் குடும்பத்தினர் சிலர் கூட இவர்களின் வார்த்தைக்கு எதிர்பேச்சு பேசியதில்லை.படிப்பறிவில்லாத-பகுத்தறியாத பாசம் ஜெயித்தது போலும்.
***********
“கயலு! இங்க வாம்மா!”
”என்னங்கப்பா?”
“இந்த தாள்ல உன்னோட கால வையி”
“எதுக்கு”
“கழுத! கேள்வியா கேக்குற? வையின்னா..”
ஊருக்கு கிளம்பும் அவசர வேளையிலும் பெரியப்பா கையில் வெள்ளைதாளும் கையுமாய் நின்றது நினைவிருக்கிறது.பாதங்களை ஒட்டி பேனாவால் தாளில் வரைந்து பத்திரமாய் பெட்டியில் வைப்பார். வித விதமான காலணிகள் என் விருப்பமென்கிற கரிசனம்.எனக்கான பொருட்கள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து வாங்கி தந்த பாசம்.
ஒவ்வொரு பண்டிகைக்கும், விடியுமுன்னரே ஸ்ரீதர் மாமா, பெரிய பெட்டியோடு வாசலில் நின்றிருப்பார்.குலுவான்கள் அத்தனைக்கும் அவரவர் பேரிட்டு கொத்து கொத்தாய் ஆடைகள் பிரிக்கப்பட்டிருக்கும்.கூடவே எனக்கு மட்டும் இரண்டு மூன்று ஜோடிச் செறுப்புகள். சரியான அளவுகளில் கனக்கச்சிதமாக.மலேயாவிலிருப்பவர்களின் சேமலாபங்களை அப்பத்தா விசும்பலோடு கேக்க, அங்கிருப்பவர்களுக்காய் இது அத்தனையும் கேமராவுக்குள் அடக்கிக் கொண்டிருப்பார் ஸ்ரீதர் மாமா. இத்தனை பிள்ளைகளிருந்தாலும் அங்கிருக்கும் பிள்ளைகள் மீதான பாசம் கண்ணீராய் கரைந்து கொண்டிருக்கும்.அழகி பேரழகியாவாள் அப்போதெல்லாம்.
ஏனோ சில நாட்களாக ஏதோ ஒரு பயங்கலந்த விலகல்.எல்லோருடனுடமும் பேசுவதைக் குறைத்துக் கொண்டேன்.பெரியப்பாவின் உடல் நிலை குறித்த தகவல்கள் ஏதும் சரியாகயில்லை.எப்பவும் நிகழலாம் என்கிற கவலை படர்ந்த எதிர்பார்ப்பு.ஒருநாள் காலை அப்பா விம்மலுடன் அந்தச் சேதி சொன்னார். எதுவுமே சொல்லாமல் அழைப்பை துண்டித்து விட்டேன். கண்ணீர் வர நெடுநேரம் பிடித்தது. கண்ணீர் வரும் வரையிலான மனப்போராட்டம் அப்பப்பா கொடுமை.தனிமையில் கதறி ஓய்ந்ததும் இரண்டு வருடங்களுக்கு முந்திய பொங்கல்தினம் மின்னல் கீற்றாய்...உடல் நலக் குறைவு இருந்தபோதும் எல்லா பொங்கலுக்கும் ஊருக்கு வருவதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
“அப்பா! இந்தாங்கப்பா இது என் காசு நானே சம்பாதிச்சது.” இரண்டு ஆயிரம் ரூபாய் தாளை பெரியப்பாவின் சட்டைப் பையில் வைத்தேன். பெருமை பொங்க தளும்பும் கண்ணீரோடு கைகளைப் பிடித்தவர். அப்படியே சாமியறைக்கு கூட்டி போய் கதறியழுதார். அய்யோ ஏதேனும் அதிகபிரசிங்கித்தனமோ என நான் பயந்துபோய் இருக்க,
“எம்புள்ள இப்படியிருக்கணும் தாண்டா ஆசப்பட்டேன்.யாரையும் நம்பாத. பொம்பளப்புள்ள சுய கால்ல நிக்கணும். அதான் அதுக்கு தான் படிப்பு.இந்த உசிருக்கு இது போதும். இது போதும்.எம்புள்ள சம்பாதிச்ச காசு..” சட்டைப்பையை தடவிக்கொண்டார். உணர்ச்சி மிகுதியில் தள்ளாடிய பெரியப்பா இன்னும் கண்ணை விட்டகலாமல்...
பெரியப்பாவின் பாசமும் அரவணைப்பும் இனியொருமுறை கிடைக்கப் போவதில்லை.ஆயிரந்தான் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை. ஆனாலும்....ஆனாலும்....உள்ளுக்குள் எழுந்தடங்கும் அழுகைக்கு எழுத்துக்களால் அடைக்கலம் தேடி இப்படியாக நான்.
***********
10 comments:
நெஞ்சை தொட்ட கதை
கயல்..
/ பாசமும் அரவணைப்பும் இனியொருமுறை கிடைக்கப் போவதில்லை.ஆயிரந்தான் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை. ஆனாலும்....ஆனாலும்....உள்ளுக்குள் எழுந்தடங்கும் அழுகைக்கு எழுத்துக்களால் அடைக்கலம் தேடி இப்படியாக நான். /
உண்மை தாங்க...
படிக்கும்போது ரொம்ப நெகிழ்வா இருந்ததுங்க..
நெஞ்சை தொட்ட உண்மை.
படிக்கும்போது ரொம்ப நெகிழ்வா இருந்தது கயல்.
என்ன சொல்றதுன்னு தெரியல கயல்....
நினைத்த மாத்திரத்தில் எவருடன் தொடர்பு கொள்ள ஏதுவாய் எல்லாமிருந்தும்...பேசச் செய்ய அப்பாத்தா போல் கிரியா ஊக்கியாக எவரும் இல்லை. பாசத்தால் பிணைக்க பெரியம்மா போல் இன்னொரு ஜீவனும் அங்கில்லை. பெண்கள் மிகவும் அற்புதமானவர்கள். பெண்கள் எந்த நாட்டிலிருந்தாலும் உள்ளுள் பெருகும் பாசமும் ஒருங்கே சேரும் பாந்தமும் தான் இன்னும் கலாச்சாரம், குடும்பம் என்கிற அடிப்படைக்கு வித்திடுகின்றன ....உள்ளுக்குள் எழுந்தடங்கும் அழுகைக்கு எழுத்துக்களால் அடைக்கலம் தேடி...
படிக்கும்போது ரொம்ப நெகிழ்வா இருந்தது கயல்.
பத்தி பிரிச்சி, சரியா வரிசைப்படுத்தினாத்தான் வாசிக்கிறது... இஃகி!
அன்புள்ள கயல்,
எதேச்சையாக உங்கள் தளம் கிடைத்தது, மிகவும் அற்புதமாக இருந்தது..
வாழ்த்துக்கள்.. அன்புடன்
பத்மனபாபுரம் அரவிந்தன்
www.padmanabhapuramaravindhan.blogspot.com
paasam enbathu vesam endru ninaikkum yugathil
paasamaai oru kathai... nenjil thondrum unarvukalukku uruvam illai
Post a Comment