Sunday, October 10, 2010

சேது (எ) சேதுராமன்

மனம் போல் வாழ்வது எத்தனை சுகம் தெரியுமா? ஒரு இறகின் பயணம் போல இலகுவாய்.. கனமேதுமில்லாமல்.. அரிதாய் வாய்ப்பதுண்டு.அப்படி வாழபவர்கள் நிச்சயம் திறமைசாலிகள்.இந்த தத்துவத்துக்குப் பின்னாடியிருக்க கத என்னான்னா? அதிகப்படியான விடுமுறைகளை எப்படித் தள்ளுறதுன்னு தெரியாம முழிக்க வேண்டியதாயிருக்கு. வெட்டியா இருக்கோமுங்குறத எப்படி எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு.அட.. பொழுதே போகமாட்டேங்குதுப்பா!
பாட்டுக் கேக்கலாம். ம்ம்ஹ்ஹும் எல்லாப்பாட்டும் கேட்டாச்சு. புதுசா எதாவது கேக்கறதுன்னா? பதிவிறக்கம் ம்ம் பொறுமை அவசியம். இன்னிக்கு இல்ல இன்னொரு நாளைக்கு...

படம்,பார்க்,பீச் இப்படி எங்காவது போகலாம். யாருமே இல்ல வெறிச்சோடிக் கிடக்குது இங்க. துணைக்கு யாருமில்லாம எப்படி... தோழிகள் யாரையாவது கூப்பிட்டால்?ஞாயிற்றுக்கிழமை கணவன்மார் சாபத்துக்கு ஆளாகக்கூடும்.

எங்காவது கடைக்கு போயிட்டு வரலாம். ஹிக்கிம்போதம்ஸ் போகலாம்.கூட்டமா இருக்கும் கூடவே ஆர்வக்கோளாறு பர்ஸ காலி பண்ணிடும். போகவேணாமுன்னு தோணுது.கோயில்? நேத்து கூட்டத்துல சிக்கி நூலானது போதும். அடுத்தவாரம் பாத்துக்கலாம்.

அலைபேசலாம். நேத்தி பூரா அம்மாட்ட பேசிப்பேசி வாய்வலிக்குது.அறிவுரை திலகம் என் அருமை உடன்பிறப்பு பொழிஞ்ச அக்கறையில(!) காது ரெண்டும் உய்ய்ய்ய்ங்குது.

எதாவது படிக்கலாம்.இருக்க புத்தகம் எல்லாமும் படிச்சாச்சு.முறிந்த சிறகுகள் - இன்னொரு முறை படிக்கலாம். ஆனா அடுத்து என்னவரி வரும்ன்னு தெரிஞ்சே படிக்கிறதுக்கு ரசிகத்தன்மை வேணும். அதில்ல இப்போ. இன்னிக்கு ஏதும் புதிதாய் படிக்க மனமில்லை.

ரொம்ப நாளாச்சு பெயிண்டிங் பண்ணி.இன்னிக்கு பண்ணுவோம். பாதிவரை முடித்ததும் ஒன்றுதல் இல்லாமல் ....

கதிரி கேட்கலாம்... கிருஷ்ணா நீ வேதமே.... சாக்ஸோஃபோன் உருகிக் கொண்டிருந்ததது.அதையடுத்த அரைமணி நேரத்தில் அறுவதுக்கும் மேற்பட்ட பாடல்கள். ஹி ஹி ஹி. ஆரம்பம் மட்டும் கேட்டேன்.இந்த நிலையற்ற மனநிலைக்கு தீர்வு?

ம்ம். நல்ல காஃபி சாப்பிட்டா இதமா இருக்கும். கூடவே அண்ணியோட நக்கலும் நையாண்டியும்..என் அருமை வாலுங்க கூட்டமும் அங்கதானே? சரி போய்வரலாம்.போனவாரம் வா வான்னு கூப்பிட்டாங்க.போகமுடியல. இன்னிக்கு போகலாம்.முன்னறிவிப்பில்லாம போறோமே? பரவால்ல சொல்லிட்டு போனா நாகரீகமா இருக்காது.

****************************

இருபது நிமிட பயணம்.நகரின் பிரபலமான அடுக்குமாடிக் கட்டடம். பத்தாவது தளம். வீடு பூட்டப்பட்டிருந்தது. அலைபேசவும், “என்னம்மா? தியேட்டர்ல இருக்கேன்.எல்லாரும் வந்தோம்.பக்கத்துல தான். நீ எங்க இருக்க?”
“உங்களபாக்க வந்தேண்ணா. சரி நான் கிளம்புறேன். இன்னொரு நாளைக்கு வர்றேன்.”

“இரு இரு.படம் முடிய இன்னும் 20 நிமிசந்தான். மொத்தமா அரைமணிநேரம் பொறுமை கிடையாதா? திடீர்ன்னு வந்திட்டு இப்படி ஓடற. இரு இரு. உங்க அண்ணி வந்து உனக்கு பேயோட்டுனாத்தான் அடங்குவ.போனவாரம் நீ ஏன் வரல.ம்ம்?” திரையரங்க இரைச்சலுக்குள்ளும் அண்ணாவின் கர்ஜனை கொஞ்சம் நடுக்கத்தை தந்தது.
“சரி சரி.வாங்கண்ணா. இருக்கேன்”

சொல்லாமல் வந்ததற்கு மனதிற்குள் நொந்தவாறே திரும்பவும், இடிப்பது போல் ஒரு முதியவர் வந்து எதிரே நிற்க திணறிப்போனேன். அவருக்கு சுமார் 60-65 வயதிருக்கலாம்.மிடுக்காக உடையணிந்தபடி இளமை துள்ளும் கண்களை மறைத்த கண்ணாடி, கையில் இந்தியா டுடே. என்னை விட சற்றே உயரம். அதாவது குள்ளம் - சராசரிக்கும் குறைவான உயரம்.ஏதோ நடைபயிற்சி சென்று திரும்பியிருக்க வேண்டும்.ஆயத்தங்கள் அவ்விதம் உரைத்தன.

”யாருவேணும் உங்களுக்கு?நான் ஏதேனும் உதவலாமா?”

பொதுவாக இதுபோலும் பிளாட்டில் உள்ளவர்கள் எதிரில் வருபவர்களை ஏதோ வேற்று கிரகவாசிகள் போல் பார்ப்பது வழக்கம். தவறி ”இதானே E10” என்கிற மாதிரியான கேள்விகளுக்குக் கூட இயந்திரதனமாய் பதில் வரும்.இந்த முதியவர் போல் வலிய வந்து கேட்பவர்கள் மிகச் சிலர்.அப்படிக் கேட்பவர்கள் பெரும்பாலும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களாக இருக்கக்கூடும். இப்போது தான் கவனிக்கிறேன் போன முறை வந்தபோது காலியாய் இருந்த வீடு....குடி வந்தாயிற்று போல.சேதுராமன்,மரகதம் என மின்னியது பெயர் பலகை.

”உங்களத்தான் மேடம். என்ன பாக்குறீங்க. யாரப்பாக்க வந்தீங்கன்னு சொல்லுறது ஒண்ணும் அத்தனை தவறான விசயம் கிடையாதே!” முதலில் தமிழில் கேட்டவர்,சிறு இளக்கத்துடன் சுத்தமான ஆங்கிலத்தில் மறுபடிக் கேட்கவும் சிரித்தபடி தமிழில் பதில் சொன்னேன்.

“ஓ. கணேசன் வீட்டுக்கா? நமக்கு இந்த வீடும்மா. நம்மூரு பொண்ணா நீ? திமிரா பேசயிலேயே தெரிஞ்சது வைகையாத்து வாசம்.” கலகலவெனப் பேசிக் கொண்டே கதவருகில் சென்று ”மரகதம் கணேசன் தங்கை வந்திருக்காம்மா.ரெண்டு காபி குடு” என்றபடி உள்ளே போனார். நான் தயங்குவது தெரிஞ்சதும்,”உள்ளவா நாங்களும் மதுரக்காரங்க தான்.பயப்படாதே என் மனைவி நல்லா காபி போடுவா” சிரித்தபடி பேசியவர் ஏனோ நெடுநாள் பழகியதான உணர்வை தந்தார்.கூடவே தமிழனுக்குள்ளான பிரிவினை வலிக்கத்தான் செய்தது. மதுரையா? கோவையா? காவிரிக்கரையா? எனக்கேட்டு கேட்டு கூட்டம் சேரும் மாண்பு அப்படியே சிலிர்க்க(?) வைத்தது.அதுபோலும் குறுகிய வட்டமோ இது என்கிற வருத்ததை அடுத்த சில நொடிகளில் போக்கினார் சேது.

“வாம்மா!உள்ளவா!கணேசனுக்கு உறவா?தங்கையின மாதிரிக் கேட்டது.” மென்மையான மதுர குரல்.அழகான லட்சுமிகரமான முகம். தேஜஸான முகத்தில் மஞ்சள் குங்குமம் அதையும் மிஞ்சி ஜொலிக்கும் கல்மூக்குத்தி. ஒரு கறுப்பு முடிகூட எடுக்க முடியாது என்கிற அளவுக்கு வெளுத்த கேசம்.
நான் எழுந்து கரம் குவிக்கவும், “என்னைவிட இவ கொஞ்சம் வயசானமாதிரி தெரியுறால்ல?அதானே வணக்கமெல்லாம் சொல்லுறே! நீ வேணா அவள பாட்டீன்னு கூப்பிடு. என்ன சேதுன்னே கூப்பிடு.” என்றபடி நமட்டலாய் சிரித்தார் சேது.

“ம்ம்க்கும்! யாராவது சின்னப் பொண்ணுங்க வந்திட்டா போதும்.கமலஹாசன் மாதிரி நெனச்சுக்கும் கிழம். இருங்க இருங்க காபிக்கு sugarfree கூட போட போறதில்ல.கொழுப்பு அடங்கட்டும்” அந்த அழகான ஊடலை ரசித்தபடி இருக்க, அண்ணா வரும் வரை பொழுது போவது ஒன்றும் அத்தனை கடினமல்ல எனப் புரிந்தது.
சாலை கடக்கும் பொழுதுகளில் கைபிடிக்கும் யாரோ, கூட்டநெரிசலில் தவறி விழப் போகையில் தோள் பற்றும் யாரோ, ஏதோ ஒரு நகைச்சுவைக்கு பொதுவில் சிரிக்கையில் சினேகித பார்வை பகிரும் எவரோ,முகம் தெரியாத சிலருடன் மின்னாடலில் பகிரும் வார்த்தைகளின் வழியே உணரும் பாசம் இப்படி அறிவிற்கு எட்டாத ஏதோ ஒரு விசயம் மனிதம் இருப்பதை எப்போதுமெனக்கு நினைவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறது.இயல்பான வாழ்க்கை மீதான என் காதலும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

சேதுராமன் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். ஏதோ ராணுவக் கிட்டங்கியில் வேலைபார்த்ததாகவும்,பின்னர் சில காலம் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றதாகவும் சொன்னார்.மகனும் மருமகளும் லண்டனில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.பரஸ்பரம் அறிமுகப்படலம் முடிந்து வீட்டை சுற்றிக்காண்பிக்கலானார்.மனுசன் அறுபதுகளில் ரொம்ப ரசனையான உலகத்தை அனுபவித்தவர் போலும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கதை சொன்னார்.கல்லூரி நாட்களில் காரைக்குடி CECRIயில் வருடம் ஒருமுறை அறிவியற்கண்காட்சி நடத்தப்படும்.அதில் ஹைதர் காலத்து(?) ஃபிளாப்பி டிரைவ் எல்லாம் இருக்கும்.பார்க்க வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும்.அதே உணர்வும் ஆர்வமும் அந்த வீட்டில் உள்ளவற்றை காணும் போதும். எல்லாமே மிகவும் அருமையான கலைப்பொக்கிஷங்கள்.அதுல ஒரு பொருள் மிகவும் கவர்ந்தது.டேப் ரிக்கார்டுகளுக்கு முந்தைய இசையுலகம். கிராமோஃபோன்.நான் பிறக்கும்போதே கிராமஃபோன்கள் செல்வாக்கை இழந்திருந்தன. என் வீட்டில் ஒரு பெரிய கறுப்பு நிற டேப்ரிக்கார்டர் இருந்ததாக நினைவு. இந்தக்கருவியை நான் சினிமாக்களில் பார்த்திருக்கிறேன்.நேரில் அதன் செயல்பாட்டை பார்க்க வாய்த்த அரிதான சந்தர்ப்பம்.


 சேதுவிடம் நிறைய இசைத்தட்டுகள் இருந்தது. சிலவகை அபூர்வமான குரல்களெல்லாம் தன்னிடம் உண்டு என்பதாகச் சொன்னதோடல்லாமல் ஒவ்வொன்றாக போட்டு வேறு காண்பித்தார். கேவி மகாதேவன் மீது மிகப்பற்றுள்ள காரணத்ததால் அவரது பாடல்களே அலமாரியெங்கும் நிரம்பி வழிந்தன. அதுல ஒரு பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சதுங்க. ஆடவந்த தெய்வம் படத்துக்காக டி.ஆர்.மகாலிங்கம் பாடின பாட்டு. ’கோடி கோடி இன்பம் தரவே’ எனத் தொடங்குமது. கொஞ்சம் கீறலோடும் இழுத்தவாறும் இருந்தாலும் அமுதமாய் இருந்தது இசையும் குரலும்.பாடலுக்கு நடுவே காபியோடு மரகதம்மா வரவும், அவங்கள நோக்கி பாடியபடி ஆடவும் செய்தார் சேது. ’ம்ம்க்கும் இதுக்கொன்னும் குறைச்சலில்லை’ என்று வாய் சொன்னாலும் அவரையும் அவர் பாவங்களையும் ரசித்துக்கொண்டிருந்தாள். அன்று வெட்கப் பொழிவோடு சிரித்த அம்முகத்துக்கு நிகரான உயிருள்ள ஓவியம் இருக்கவே முடியாது நான் பார்த்தவரையில்.அவரது இசையார்வம் குறித்து பேசிக்கொண்டு இருந்தார்.வெகுநேரமாய் உறுத்திக்கொண்டிருந்த கேள்வி கேட்டேவிட்டேன்.

“ஓய்வுக்குப் பின்னாடி சொந்த கிராமத்துக்குப்போயி வாழறவங்களத்தான் பார்த்திருக்கேன்.ஆனா இந்த வயசுல தனியா இங்க சொந்தபந்தமில்லாம இருக்கீங்களே.கஷ்டமாயில்லையா?”

“மதுரைப்பக்கம் ஒரு சின்ன கிராமம் என்னோடது. ஐந்து பெண்கள். நான் மூணாவது.அக்கா தங்கச்சிங்க வாழ்க்கையெல்லாம் சீராக்கின பின்னாடி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.என் மனைவிக்கு அப்போ என்னால தனிப்பட்ட வசதிவாய்ப்புகள் செய்து தரமுடியல.பையனும் கிராமத்து சூழ்நிலையில தான் படிச்சி வந்தான்.அவன் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் தான் நாங்க இங்க வந்தது.ஏன்னா இன்னிக்கு கிராமம் எப்படியிருக்கு தெரியுமா? ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு கொடி பிடிச்சிக்கிட்டு இல்ல சாதி மதமுன்னு சிலபேரு ஊரக்கெடுத்திட்டிருக்கான். பங்காளிச்சண்டை சொத்துப்பிரச்சனையின்னு சில பேரு.இதையும் மீறி நாம ஏதாவது செஞ்சா நீயென்ன புதுசா தலைவராக பாக்குறியான்னு கேக்குறாங்கம்மா. நமக்கான வசதிகள் செஞ்சுக்கக் கூட பலபேரு தயவ எதிர்பார்க்கறதாயிருக்கு.காந்தி எதிர்பார்த்த சுதந்திரம் அங்கில்லமா.பலகிராமங்கள்ல கட்டப்பஞ்சாயத்து தான் நடந்திட்டு இருக்கு.அதுக்கும் மேல நாங்க ரெண்டு பேரும் வயசானவங்க மருத்துவ வசதி,போக்குவரத்து வசதி எங்களுக்கு வேணும்.தேசியகீதம் படம் பார்த்தியா அப்படிப்பட்ட சபிக்கப்பட்ட ஊர்கள்ல ஒரு ஊருதான் என்னோடது.அதான்மா கிராமத்த விட்டுட்டு இங்க வந்திட்டோம். கிராமத்துல நகரத்தோட சீரழிவுகள் கொஞ்சம் கொஞ்சமா இறங்கிட்டு இருக்கு. பாரு நான் இங்கே தன்னார்வத்தொண்டனா என்ன வேணா செய்யலாம். ஆனா கிராமத்துல என் சாதி முன்மொழியப்படும். அதான் மாசில்லா தண்ணியும் காத்தும் கூட வேணாமுன்னு இங்கயே...” நிறுத்தி நீண்ட பெருமூச்சு விட்டார் சேது.அவர் பக்கமும் நியாயமிருக்கக்கூடும். சாதிகள்,மதங்கள் இல்லாத இந்தியா வர என்ன செய்ய வேண்டும் கலாம்? கனவு மட்டும் கண்டு கொண்டிருக்கிறேன், ஆதிக்கமில்லாத சமுதாயம் வேண்டி.சிலபல ஆதிக்க சக்திகளுக்கு உட்பட்டு நானும் கனவு மட்டுமே கண்டு கொண்டிருக்கிறேன்.

”அத்தே என்ன மிலிட்டரி தாத்தா உங்க காதுல ரத்தம் வர வச்சிட்டாரா?அப்பா கூப்பிடுறாங்க தப்பிச்சி ஓடிடுங்க” சிவா, அண்ணாவின் பத்து வயது மகன் திடுமெனப் புகுந்தான் எங்கள் அமைதிக்குள்.

“அடி படவா!” என்றபடி துரத்தலானார் சேது.

அண்ணியிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட பிறகு, அண்ணாவிடம் மெதுவாய் கேட்டேன்.
“சென்னையில எங்கண்ணா கிராமஃபோன் கிடைக்கும்? அந்த இசைத்தட்டுகளும் வேணுமே”

புரிந்தாற்போல் மெல்லச் சிரித்தவர், “ரொம்ப சுவராஸ்யமான மனிதர்.நான் நிறைய பேசுவேன் அவர்கூட.அண்ணி தான் பேசவே விடமாட்டா.பொறாமை எங்க நட்ப பார்த்து”

”ஆமா ஆமா மிலிட்டரி சரக்கு உள்ள தள்ளிக்கிட்டே ரொம்ப பேசுவாங்க ரெண்டு பேரும்”, நக்கலான குரல் கேட்டது உள்ளிருந்து.

பின்குறிப்பு:-

சேதுவின் புண்ணியத்தில், அன்றைக்கு என்கிட்ட மின்னாடலிலே மாட்டின தொலைதூர நண்பர்கள் எல்லாரையும் கொடுமைப்படுத்திட்டேன் இந்தப்பாட்டுப் பாடி. தப்பிச்ச மீதிப்பேருக்கு மின்னஞ்சலா போயிருக்கும்.இடுகைய படிக்கற எல்லா பாவப்பட்ட மக்களும் இந்த பாட்ட தவறாம கேக்கனுமின்னு அகில உலக
அடாவடி மகளீர் அணி சார்பா கேட்டுக்கறேனுங்கோ!

14 comments:

எஸ்.கே said...

மிக நன்றாக உள்ளது!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லத்தான் இருக்கு...

கவி அழகன் said...

சூப்பர இருக்குங்க
நல்ல தெளிவான நீண்ட படைப்பு

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பரவாயில்லையே... நீங்களும் அவரை சேதுன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டீங்களே!

sundar said...

எல்லாரையும் கொடுமைப்படுத்திட்டேன் இந்தப்பாட்டுப் பாடி

- இதுக்கு பேர் தாங்க மயிரிழையில உயிர் தப்பறதுன்னு சொல்றது....

TRM மாதிரி கயல்......உங்களுக்கு தைரியம் ஜாஸ்தின்னு தோணுது...

ஸ்ரீராம். said...

மிக அருமையான பாடல். இவர் பாடிய 'திராவிடப் பொன் நாடே', 'செந்தமிழ்த் தென் மொழியாள்', 'தென்றலோடு உடன் பிறந்தாள்', 'மழை சொட்டு சொட்டு சொட்டுன்னு சொட்டுது' பாடல்களும் கேட்டிருப்பீர்கள். திருவிளையாடலில் இவர் பாடும் 'இசைத்தமிழ் நீ செய்த' பாடலை இவர் எடுக்கும் உயரமே அபாரம். கடைசி வரியான 'உனக்கின்றி எனக்கில்லை' வரியை எத்தனை பேரால் எட்டிப் பிடிக்க முடியும்....?

நாமக்கல் சிபி said...

//சேதுவின் புண்ணியத்தில், அன்றைக்கு என்கிட்ட மின்னாடலிலே மாட்டின தொலைதூர நண்பர்கள் எல்லாரையும் கொடுமைப்படுத்திட்டேன் இந்தப்பாட்டுப் பாடி. தப்பிச்ச மீதிப்பேருக்கு மின்னஞ்சலா போயிருக்கும்.இடுகைய படிக்கற எல்லா பாவப்பட்ட மக்களும் இந்த பாட்ட தவறாம கேக்கனுமின்னு அகில உலக
அடாவடி மகளீர் அணி சார்பா கேட்டுக்கறேனுங்கோ!//


ஹெஹெ! எனக்கு மெயில்ல வந்து பாட்டு இதானா?

கயல் said...

//
எஸ்.கே said...
மிக நன்றாக உள்ளது!
//
நன்றி எஸ்.கே!

கயல் said...

//
வெறும்பய said...
நல்லத்தான் இருக்கு...
//
நன்றிங்க!

கயல் said...

//
யாதவன் said...
சூப்பர இருக்குங்க
நல்ல தெளிவான நீண்ட படைப்பு
//
உங்க பொறுமைக்கும் மிக்க நன்றி!

கயல் said...

//
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
பரவாயில்லையே... நீங்களும் அவரை சேதுன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டீங்களே!
//

அதானே அவரு பேரு....

இல்லங்க இளங்கிழவருக்கு அப்படிக் கூப்பிட்டாத்தான் திருப்தி.

ஆனா அவங்க திருமதி மொறைச்சிட்டே தான் இருப்பாங்க அப்டி கூப்பிடறப்போல்லாம்.

கயல் said...

//
sundar said...
எல்லாரையும் கொடுமைப்படுத்திட்டேன் இந்தப்பாட்டுப் பாடி

- இதுக்கு பேர் தாங்க மயிரிழையில உயிர் தப்பறதுன்னு சொல்றது....

TRM மாதிரி கயல்......உங்களுக்கு தைரியம் ஜாஸ்தின்னு தோணுது...
//
ஹா ஹா!

தப்பிச்ச உங்களுக்கு அதிர்ஷ்டம் ஜாஸ்தி!!!

கயல் said...

//
ஸ்ரீராம். said...
மிக அருமையான பாடல். இவர் பாடிய 'திராவிடப் பொன் நாடே', 'செந்தமிழ்த் தென் மொழியாள்', 'தென்றலோடு உடன் பிறந்தாள்', 'மழை சொட்டு சொட்டு சொட்டுன்னு சொட்டுது' பாடல்களும் கேட்டிருப்பீர்கள். திருவிளையாடலில் இவர் பாடும் 'இசைத்தமிழ் நீ செய்த' பாடலை இவர் எடுக்கும் உயரமே அபாரம். கடைசி வரியான 'உனக்கின்றி எனக்கில்லை' வரியை எத்தனை பேரால் எட்டிப் பிடிக்க முடியும்....?
//

ஆமாம் ஸ்ரீராம்.

நிச்சயமா அவரைப் போல யாராலும் முடியாது. நன்றிங்க வருகைக்கு!

கயல் said...

//
என்.ஆர்.சிபி said...
//சேதுவின் புண்ணியத்தில், அன்றைக்கு என்கிட்ட மின்னாடலிலே மாட்டின தொலைதூர நண்பர்கள் எல்லாரையும் கொடுமைப்படுத்திட்டேன் இந்தப்பாட்டுப் பாடி. தப்பிச்ச மீதிப்பேருக்கு மின்னஞ்சலா போயிருக்கும்.இடுகைய படிக்கற எல்லா பாவப்பட்ட மக்களும் இந்த பாட்ட தவறாம கேக்கனுமின்னு அகில உலக
அடாவடி மகளீர் அணி சார்பா கேட்டுக்கறேனுங்கோ!//


ஹெஹெ! எனக்கு மெயில்ல வந்து பாட்டு இதானா?
//
ஆமாண்ணா. இன்னிக்குத் தான் பார்த்தீங்களா???
நல்லது.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!