Wednesday, May 19, 2010

கிளி கொண்ட கிறக்கம்

வாங்க நண்பர்களே! நாமும் இலக்கியம் பேசுவோம். படைக்கத்தான் அத்தனை திறமை எனக்கில்லை.ஆயினும் தமிழில் ரசிக்க இன்னமும் ஆர்வம் நிரம்பிக் கிடக்கிறது. அப்படி ரசித்தவையில் இதுவும் ஒன்று. பிழையிருந்தால் மன்னிக்க! பிடித்திருந்தால் சொல்லுங்கள் ஒரு சில வரிகள் எனக்கு ஊக்கமளிக்கும் விதமாக!


குறுந்தொகை - பாடியவர் : கபிலர்

பாடல் :

சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடுச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிளி,’அவள் விளி’ என,விழல் ஓவாவே;
அது புலந்து அழுத கண்ணே,சாரல்
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தன் துளிக்கு ஏற்ற மலர் போன் றவ்வே.

குறவஞ்சி ஒருத்தி, தன் தினைப்புனத்தில் காவல் காக்கிறாள்.ஆயலோட்ட ஏதுவாக பரண் ஒன்றும் இருக்கிறது.தினையின் சுவையில் ஊறித் திளைத்த கிளிக்கூட்டமொன்று வரக் கண்டு, பரண் மீதேறி அக்கூட்டத்தினை விரட்டும் பொருட்டு மூங்கிலால் ஆன வீணை போன்ற அமைப்பு கொண்ட கருவியை சுழற்றி,இரைச்சல் ஏற்படுத்தி கிளிகளை விரட்டுகிறாள். மிரட்டும் பாவனையில் பாடலொன்றும் இசைக்கிறாள்.

மூங்கில் தெறித்த சத்தமும் அவள் இனிய சாரீரமும் சேர்ந்து அத்தனை கிளிகளையும் சொக்க வைத்துவிட்டது. இனிமையான மனம் கொண்ட வஞ்சிக்கு வாகாய் குரலும் அமைந்ததில் வியப்பென்ன? அது எப்படி மிரட்சி தரும்?கவர்ச்சியல்லவா கேட்பவர்க்கு அவள் மேல் உண்டாகும்? அன்பும் இனிமையும் கரைபுரளும் அவளின் பண்ணில் மெய்மறந்தது கிள்ளை பட்டாளம்.

கொண்ட காரியமோ கிளிகளை துரத்துவது.தன் முயற்சியின் மேன்மையை உணர கிளிகளின் இருப்பை பரிசோதிக்கிறாள். அத்தனையும் அப்படியே அங்கேயே சொக்கிக்க்கிடக்க, இத்தனை முயன்றும் தன் காரியம் பலிக்காத வருத்தத்தில் பொங்கி அழுகிறாள் நங்கை நல்லாள்.அப்படி அழும் போது அவளின் கருவிழிகளின் அழகை படிப்பவர் உள்ளம் அவள் மேல் காதல் கொள்ளும்படியாக இவ்விதம் மொழிகிறார் பாரியின் தோழர் கபிலர்.

குறிஞ்சி நிலம் - மலையும் மலை சார்ந்த பகுதியும். சுனைகள் நிரம்பிய பகுதி நீரவளமிகுத்து பசுமையாக விளங்கும். அப்பகுதியில் பூக்கும் குவளை மலர்கள் செழுமையும் பொலிவும் கொண்டனவாக விளங்கும்.அப்பேற்பட்ட குவளை மலரானது தன் பூவிதழ் மீது மழைத்துளிகளை தாங்கினாற் போல் இருந்ததாம் வஞ்சியவள் கண்களின் நீர்கோர்த்த காட்சி. மலர் தாங்கிய நீரின் அழகை,அதன் பரவலை கவியாய் மொழி்யாது போனாலும்  நம் கண்முன்னே அந்தக் காட்சியை கொண்டு வந்து, அதனோடு ஒரு பெண்ணின் விழிகளை ஒப்புமை படுத்தும் கவிஞரின் கவித்திறன் சொல்லிலடங்கா சுவை படைத்தது.என்னே கபிலரின் ரசனை?

--- மீண்டும் வருவேன்

6 comments:

கமலேஷ் said...

அப்பா!!!
இவளவு விஷயங்கள் இருக்கா இதுக்குள்ள..
உங்களோட சேர்ந்தா நிறைய இலக்கியங்களை தெரிஞ்சிக்கலாம் போலருக்கே..
உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி..சேவையை தொடருங்கள்...

கயல் said...

ரொம்ப சந்தோசம் நண்பரே! சேவை....? இலக்கியம் படிக்க ஆசை ... படித்ததை பகிர்வதிலும் ...மற்றபடி ஏதுமே யாமறியோம் பராபரமே

நசரேயன் said...

இலக்கிய கயல் வாழ்க

கயல் said...

//
நசரேயன் said...
இலக்கிய கயல் வாழ்க
//
ஆகா அப்படியா? அப்ப சரி! என் பங்குக்கு இலக்கிய ரசிகமணி அண்ணாச்சி மாண்புமிகு நசரேயன் வாழ்க! வாழ்க!

அப்பாதுரை said...

ரசித்துப் படித்தேன்

கயல் said...

//
அப்பாதுரை said...
ரசித்துப் படித்தேன்
//
நன்றி

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!