Tuesday, March 30, 2010

உணர்வுச் சங்கிலி

கார்முகிலொன்று
கனத்த இதயத்தோடு
கண்ணீர் உதிர்க்க‌ நேரம் பார்த்து
காற்றின் போக்கில்
கவலை சுமந்தபடி
ஆகாயமார்க்கத்தின் விதிகளை மீறி
விபத்தினை எதிர்பார்த்து....

தீஞ்சுவடு பட்டு தகதகக்கும்
தணலின் வெம்மையோடு
சூரியன் தீண்டிய தேகத்திற்கு
பன்னீர் ஒத்தடம் தேடும்
பருவப் பெண்ணாய்
பூமாதேவி
அண்ணாந்து பார்த்துப் பார்த்து
அவன்முகம் காணாமல்...

இலைதழையோடு காய்த்த மரமொன்று
பருவ மாற்றத்தில் பழுத்த நேரமது!
காவலாளி அயரும் தருணமெது?
கல்லெறிய சமயம் பார்த்து
கவனெல்லாம் கண்ணாகி காத்திருக்க....
கனிந்ததன் பலனாய்
சாவோடு பிரிவையும் சேர்த்து
பயத்தோடு எதிர்நோக்கி...

’இன்னார்க்கு இன்னது ஏற்புடைத்து’
சீராய் ஆராய்ந்து செயலாற்றும்
காலமெனும் கடவுளவன்
கண்ணுற்றான் இத்தனையும்...

கைம்பெண் நிலையில் களைப்புற்ற
கார்முகிலது அரற்றியழ
நெடுதுயர்ந்த மாமலை நோக்கி
காற்றின் திசையை மெல்ல முடுக்கினான்!

திடமுடன் திண்ணமும் கொண்டவன்
வன்தோள் பற்றி கடந்ததின் கதையை
கண்ணீர் மலக நவிலலானாள்
கார்முகில் பெண்ணாள்!

மேகமகள் கண்ணீர் நிறைந்து
மழையெனப் பொழிய
நிலமகள் தானும்
வேட்கையோடு வெட்கமும்
தணிய தன்வசமானாள்!

உற்றவினையாவும் நினைத்தபடி
நிறைவேற உயவுப் பொருளான
காற்றெனும் விதியினது
கருணை கடைசியில் - அந்த
பழுத்த மரத்தின்பால்!

கல்லடிக்கும் கண்ணடிக்கும்
கலங்கிப் போய்
முதிர்ச்சியின் பயனை
ருசிக்கும் உணர்வற்று..
ஏதேதோ மந்திரங்கள்
ஏதேதோ கடவுளுக்காய்
நித்தமும் ஓதியபடி
பருவம் சுமந்த பழுத்த மரம்!

உரிய வலுக்கொண்டு சுழற்றியடித்த
காற்றின் தினவில்
கல்லடியின்றி கனியுதிர்த்தது
நேற்று காய்த்து இன்று பழுத்த மரம்!

ஒன்றின் துயரது
மற்றதின் இன்பம்!
எல்லாம் அவன் செயல்...

இனியேனும் உகுக்கும் கண்ணீரை
இசைவுடன் சொரிக!
சிலரின் களர்நிலமேனும்
பயிர்பெறட்டும்
உன் கண்ணீரின் உரத்தில்!

13 comments:

'பரிவை' சே.குமார் said...

//சிலரின் களர்நிலமேனும்
பயிர்பெறட்டும்
உன் கண்ணீரின் உரத்தில்!//


uyirppana varikal.

vazhththukkal.

கார்க்கிபவா said...

//சொறிய//

சொரியதானே சரி? இதுக்கு வேற அர்த்தம் ஆச்சே :))

கயல் said...

//
சே.குமார் said...
//சிலரின் களர்நிலமேனும்
பயிர்பெறட்டும்
உன் கண்ணீரின் உரத்தில்!//


uyirppana varikal.

vazhththukkal.
//
வாங்க நண்பரே! முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

கயல் said...

//
கார்க்கி said...
//சொறிய//

சொரியதானே சரி? இதுக்கு வேற அர்த்தம் ஆச்சே :))
//
ஆமாங்க! ஆமாங்க! பெரும்பிழை மன்னித்தருள்க!

Unknown said...

Epdi ithellaam !! mudiyala :))

மதுரை சரவணன் said...

நல்லக் கவிதை. வாழ்த்துக்கள்

கயல் said...

//
Nallakumar said...
Epdi ithellaam !! mudiyala :))
//

தானா நடக்குது! என்ன செய்ய எல்லாம் அவன் செயல்! :-))

கயல் said...

//
Madurai Saravanan said...
நல்லக் கவிதை. வாழ்த்துக்கள்
//
நன்றி! பொய் சொன்னதுக்கு!

பழமைபேசி said...

அண்ணா, (p. 18) [ aṇṇā, ] க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. n. (used in the past tense and in the imperative.) To look upward, மேனோக்க. 2. To open the mouth looking upward, அங்காக்க.

பழமைபேசி said...

//கைமையின் //

???

கயமை??

கயல் said...

//
பழமைபேசி said...
அண்ணா, (p. 18) [ aṇṇā, ] க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. n. (used in the past tense and in the imperative.) To look upward, மேனோக்க. 2. To open the mouth looking upward, அங்காக்க.
//

திருத்திட்டேனுங்க!


பழமைபேசி said...
//கைமையின் //

???

கயமை??

//

மாத்தியாச்சு... மாத்தியாச்சு!
நன்றி ஆசானே!

Anonymous said...

வலியின் வடு வண்ணக்கவிதையாய் உருமாறி......

கயல் said...

//
தமிழரசி said...
வலியின் வடு வண்ணக்கவிதையாய் உருமாறி......
//

ம்ம்ம்! அப்போ வலி கூட நல்லது தானே! இந்த வரிக்கு அந்த சோப்புக் கம்பெனிக் காரன் காப்பியடிச்சுட்டாங்கன்னு வழக்கு போடாம இருந்தா சரி... ஹா ஹா ஹா!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!