Monday, March 1, 2010

அது ஒரு அழ‌கிய‌ நிலாக்கால‌ம்

என் தூக்க கலக்கத்திலேயே என்னை முத்தமிட்டுவிட்டு வேலைக்குப் போய்விடும் அப்பாஅம்மா. யாரோ தலைசீவ, யாரோ உணவூட்ட,யாரோ குளிப்பாட்ட இப்படியாக ஒரு குழந்தையின் முழுநேர பராமரிப்புக்கு தோதான கூட்டுக்குடும்பச் சூழல்.

'அம்மா அதுக்குள்ளேயும் வேலைக்குப் போயிட்டாங்களா? ஞாயித்து கிழம எப்போ வரும்? அதுவரைக்கும் அம்மாவ பாக்கவே முடியாதா?இன்னிக்கு சீக்க‌ர‌மே எழுந்திருச்சு அப்பாகிட்ட‌ சைக்கிள் கேக்க‌னும்.'

இப்ப‌டியாக, அழுது அடம்பிடித்தால் அரைமணிக்குள் அம்மா அப்பா த‌விர‌ எல்லாமும் கிடைக்கிற‌ ஒரு வீடு. நிறைய சொந்தங்களும்,நித்தம் ஒரு விருந்தும், கேலியும் கும்மாளமும் என‌ எப்பவுமே எதாவது ஒரு பரபரப்பு இருந்து கொண்டேயிருக்கும்.தொழு நிறைய ஆவினமும்,அதற்கெனவே வீடு கொள்ளா வேலையாட்களும்,தட தடவென ஆர‌வார‌ங்களுமென‌ இருந்த‌ என் கிராம‌த்து வீடும் அது சார்ந்த‌ ம‌ண்வாச‌னையுமே என் மழ‌லைப் ப‌ருவ‌த்தின் ம‌ற‌க்க‌ முடியாத‌ கொடுப்பினை.

நினைக்க‌ நினைக்க‌ பெருமித‌ம் கலந்த வ‌ருத்த‌ம் ப‌ட‌ர்கிற‌து என்னுள்.எல்லாமும் இப்போதும் இருக்கிற‌து வெறும் உயிரோட்ட‌மில்லாத‌ அடையாள‌ங்க‌ளாய்... சந்தடியற்ற முன்னோர்கள் உறைவிடமாய், அள‌வெடுத்த எண்ணிக்கையில் ஆட்களின் நடமாட்டத்தோடு. ஒரு வாழ்ந்து கெட்ட‌ வீட்டின் வ‌லியை கேலிக்கு சொல்வதானால் முன்னாள் த‌லைவ‌னின் இந்நாள் போன்ற‌தான அவ‌ல‌ம். அது வார்த்தையில் சொல்லி மாளாது. ப‌டிப்புக்காக‌,எதிர்கால‌த்துக்காக,சம்பாத்தியத்திற்காக‌ இன்ன‌மும் ஏதேதோ கார‌ண‌ம் சொல்லியும் மனதால் ஒப்ப‌வே இய‌லாத‌ ஒரு பெரும் கொடுமை புல‌ம்பெய‌ர்தல். அது 'நான் பிறந்த மண்' என்கிற அடையாளத்தை அழித்து எழுதுகிற கையாலாகாத்தனம். கிராமம் விட்டு நகரம் தேடிய பல்லாயிரம் பேரில் நானும் ஒருத்தியாய் அங்கலாய்க்க மட்டுமே முடிகிறது. பல வ‌லிக‌ளை நினைவுப‌டுத்தும் வ‌டுக்க‌ள் என்ப‌தாலேயே என் பால்ய‌ பிராய‌ம் என்னால் அடிக்க‌டி நினைக்க‌ ம‌ற‌க்க‌ப்ப‌டுவ‌துண்டு. க‌ண்ணீர் தாண்டி கைத‌ட்டிச் சிரித்த சிற்சில‌ நினைவுக‌ள் உங்க‌ளுட‌ன் ப‌கிர்வ‌தில் இன்ப‌மாய் உண‌ர்கிறேன். முத‌ல் காத‌ல், முத‌ல் முத்த‌ம், முத‌ல் ஸ்ப‌ரிச‌ம் என்ப‌து போலே நான் பிற‌ந்த‌ ம‌ண்ணும் அது சார்ந்த கதைகளும் உணர்வுகள் சிலிர்த்தெழ அடுத்த‌வர் க‌தற‌ க‌தற க‌ழுத்த‌றுப்பது கைவ‌ந்த‌ க‌லையென‌க்கு.(என்ன.... தொட‌ர் ப‌திவுக்கு என்னை அழைத்த 'க‌ல‌க‌ல‌ப்பிரியா' இத‌ற்காக‌ க‌ல்ல‌டி படுகிறாரா? அந்தோ ப‌ரிதாப‌ம்!)

மூன்று த‌லைமுறையாய் ஒரு குடியாய் வாழ்ந்து வ‌ந்த‌ கூட்டுக்குடும்ப‌த்தில் ப‌தினைந்து வ‌ருட‌ங்க‌ள் க‌ழிந்து பிற‌ந்த‌ குழ‌ந்தை.அதுவும் பெண் குழந்தை. அத்தைக‌ள்,சித்திக‌ள்,மாமா,அத்தை,அவ‌ர்க‌ளுக்கு அடுத்த‌ ச‌ந்த‌தியினர் என‌ எல்லோருக்கும் எடுப்பார் கைப்பிள்ளை நான். என் வ‌ய‌துக்கு தோதாய் எவ‌ருமே இல்லாத கார‌ண‌த்தால் கொள்ளுப்பாட்டி,அய்யா,அப்ப‌த்தா,ஆச்சி,தாத்தா என‌ இன்றைய‌ குலுவான்க‌ள் பாட‌த்தில் ப‌டிக்கும் உற‌வுக‌ளோடு நிச‌மாய் நெடுநாள் வாழ்ந்தேன் என்ப‌தில் எப்போதும் என‌க்கு ஈடில்லா ம‌கிழ்ச்சி. வீடு என்கிற‌ கோட்டை தாண்டி என‌க்கு பள்ளி செல்வதற்கு முந்தைய‌ கால‌ க‌ட்ட‌த்தில் தோழ‌மையே இல்லை. ஏதோ ஒருமுறை அரிதாக எல்லோரும் இணைந்த போது அது துக்க நிகழ்வே எனினும் அத்துணை மகிழ்வு. பகிர இத்தனை இருந்திருக்கிறதா?அதே ம‌கிழ்வு உங்க‌ளுட‌ன் என் ப‌தின்ம‌ ப‌ருவ‌த்தின் நினைவுகளை பகிர்வதிலும் பெறுகிறேன். சரி ச‌ரி அழாம வாங்க‌. ந‌ம்ம‌ விச‌ய‌த்துக்கு.

*******************

என்னை டாக்டராகவோ இன்சினியராகவோ ஆசப்பட்டது அம்மா தான்.ஒரு ஜோசியன் சொன்னானாம்.[ அவனதான் தேடிக்கிட்டு இருக்கேன் இது நாள் வரைக்கும் சிக்கவேயில்ல சாமி].ப‌ள்ளிக்கூட‌ நாட்க‌ள் பெரும்பாலும் ம‌துரையில். இப்ப‌வும் தாத்தா ஆச்சி கூட‌ தான்.ஆனா சூழ்நிலை அப்ப‌டியே உல்டா. என் தாயின் தாய் வீடு, ஒரு பாரம்பரியமுள்ள காங்கிரஸ் குடும்பம். ஆச்சி அந்த‌ கால‌த்து எஸ்.எஸ்.எல்.சி. நாகரீக மிடுக்கும் ஆபிஸர் மனைவி என்கிற பெருமிதமும் கொண்டவர்.அத‌ன் ஆளுமை வீட்டின் ஒவ்வொரு பொருளிலும் தெரியும் என் வ‌ள‌ர்ப்பிலும் அப்ப‌டியே. தாத்தா ஒரு வக்கீல் - காதி கிராப்ட்ஸுல் பணி - காந்தீய வாதி ‍- முன்னாள் சுதந்திர போராட்ட வீரர் - சமூக சேவகர் - சிறந்த பேச்சாளர் என பன்முக திறமைகள் கொண்டவர். அவரின் ஒரு செருமலுக்கு வீடே கதிகலங்கிப் போகும். ஆனாலும் நான் மட்டும் எப்பவும் அவருக்குச் செல்லம். ஜான்,பூர‌ணி,பிர‌சாத் என‌ இப்பவும் நினைத்து நினைத்து சிரிக்கிற‌ வாலுத்தன‌ம் மட்டுமே கொண்ட ந‌ண்ப‌ர் வ‌ட்ட‌ம் என‌ அழகாய் ஆர‌ம்ப‌மான‌து ப‌ள்ளி வாழ்க்கை.எல்லா வீட்டு பிள்ளைகளை விடவும் என்னை ஒருபடி மேலாக காட்ட ஆச்சி எடுத்துக் கொண்ட முயற்சிகள் இப்போது நினைத்தாலும் நன்றிக்கடன் பட்டுள்ளதாய் மனச்சாட்சி சொல்லிக் கொண்டே இருக்கிறது. பஞ்ச தந்திர கதைகள் தொடங்கி சமஸ்கிருத ஸ்லோகங்கள்,சுதந்திர கதைகள்,பாட்டு,படிப்பு இப்படியே கட்டிவிட்ட கடிவாளத்தோடு ஆரோக்கியமான அடித்தளம் அமையப் பெற்றேன்.

தாத்தாவின் ஓய்வுக்குப்பின் அவ‌ர் குடும்பத்தோடு கிராம‌த்துக்கே சென்றுவிட‌, பள்ளி மேல்ப்படிப்பு, விடுதி வாழ்க்கையான‌து. தாய் பாசம் என்பதை உணர்ந்து தெளிகிற‌ வரை தோழியருடன் தான் எல்லா பகிர்தலும் புரித‌லும்.பள்ளி + விடுதி கண்டிப்புக்கு பேர் போன ஒரு கிறித்தவ ஸ்தாபனம்.பள்ளியோடு சேர்ந்த கன்னியாஸ்திரிகள் விடுதி அது, அந்த‌ வாழ்க்கைக்கும் சிறை வாழ்க்கைக்கும் கொஞ்ச‌மும் வித்தியாச‌மே இல்லை. படிப்பு,ஒழுக்க‌ம்,எளிமை,ப‌ண்பு இதெல்லாம் இயல்பா வ‌ர‌ணுமின்னு அம்மாவோட பாழாப் போன க‌னவு என்னை ஒரு சாமியாரிணியா சுத்த விட்டுச்சு. ஆனா விதி அவங்க கனவு நிறைவேறாதே போச்சுது. கொலுசு,பூ,க‌ண்மை,தங்க ந‌கைகள்,ஆடம்பரமான உடைகள் இப்ப‌டி எந்த‌வித‌மான பெண்க‌ளின் ஆசாபாசமும் செல்லுப‌டியாத‌ இட‌ம். ஒரு பெரிய‌ வ‌ளாக‌த்தில் ஆண்க‌ள் என‌க் க‌ண‌க்கிட்டால் சர்ச்சுக்கு வரும் வயதான பாதிரியார் தவிர்த்து இர‌ண்டே இர‌ண்டு காவலாளிகள் மட்டும். மீதி அத்தனை பேரும் பெண்கள்..பெண்கள்..பெண்கள்.வ‌ளாக‌த்தை தாண்டிச் செல்ல‌ எங்களுக்கு அனும‌தியே கிடையாது.

நான்,ஜான்சி,மேரி,லிசா,அகிலா,வேணி,சரபின் என‌ எங்க‌ள் ம‌க‌ளீர‌ணி வீர‌ சாக‌ச‌ங்க‌ள் ப‌ல‌ செய்து 'ஒழுங்கீனம்' என‌ க‌வுர‌ ப‌ட்ட‌ம் பலமுறை பெற்ற‌து. க‌ல்கி,குமுத‌ம்,ஆன‌ந்த‌விக‌ட‌ன் இது போலும் புத்த‌க‌ங்க‌ள் க‌ண்ணிலேயே ப‌ட‌க் கூடாது. ஆனா ஜான்சிக்கும் என‌க்கும் க‌தை புத்த‌கம்னா அப்ப‌டி ஒரு ஈடுபாடு. பாடப் புத்த‌க‌த்து மேல‌ இருந்த‌ வெறுப்பு தாங்க‌ காரண‌ம். அந்த புத்தகங்களை எங்க‌ள் விடுதி வ‌ரைக்கும் கொண்டு வ‌ர்ற சாக‌ச‌ம் ஜான்சிக்கு ம‌ட்டுமே தெரிஞ்ச‌ ர‌க‌சிய‌ம்.ம‌ல்லி ம‌ண‌க்கும் ம‌துரையிலே எங்க‌ளுக்கு ம‌ட்டும் பூ வைக்க‌ அனும‌தியில்லை. இந்த‌ அட‌க்குமுறையை மீறுவது என சபையில் முடிவு செய்யப்பட்டது. புட‌வையும் ந‌கைக‌ளும் தலை நிறைய‌ ம‌ல்லிப் பூவும் உடுத்தி அழகுபார்ப்பது, நடப்பது எங்க‌ள் க‌ன‌வு.ஆனா வார்ட‌ன் சிஸ்ட‌ருக்கு தெரிஞ்சா அவ்வ‌ள‌வுதான்.லிசா அருமையான திட்டம் ஒன்னு சொன்னா. அதன்படி வார்டன்கிட்டயிருந்து சாவி க‌ள‌வாடி, ஒவ்வொரு முதல் சனிக்கிழமை இரவும் மொட்டை மாடியில் உல‌வுவ‌து வாடிக்கையாயிற்று. ஆஷா, வீட்டிலிருந்து ப‌ள்ளிக்கு வ‌ரும் மாண‌வி.அவ‌ள் மூல‌மாக‌ வெள்ளிக்கிழ‌மை வெளியிலிருந்து ம‌ல்லிப்பூ ப‌ழைய கதை புத்த‌க‌ங்க‌ள் எல்லாம் வ‌ந்துவிடும்.

ஒவ்வொரு நாளும் 10 ம‌ணிக்கு வார்ட‌ன் சிஸ்ட‌ர் மெழுகு வ‌ர்த்தியோட எங்க‌ ஹாலுக்கு வ‌ருவாங்க.உடை விலக கூடாது, தலைக்கு அணைப்பு எதுவும் வைக்காமல் தரையில் தான் படுக்க வேணும், ஒவ்வொரு படுக்கைக்கும் குறிப்பிட்ட இடைவெளி இதுபோலும் விதிகள் நிதமும் பரிசோதிக்கப்படும்.எல்லாரும் இருக்காங்க‌ளான்னு க‌ண‌க்கு பண்ணிட்டு போயிருவாங்க‌. அதுக்க‌ப்புற‌ம் தான் எங்க‌ ஆட்ட‌ம் ஆர‌ம்ப‌மாகும். மெதுவா பூனை பாத‌ம் வ‌ச்சு மொட்ட‌மாடிக்கு போயி அல‌ங்கார‌ம் எல்லாம் ப‌ண்ணிக்கிட்டு ஆடுறது,நடிக்கிறது அப்புறம் ஃபேஷ‌ன் ஷோ மாதிரி அங்க‌ இங்க‌ ந‌ட‌ந்துட்டு க‌ளைச்சு போயி வ‌ந்து 12 மணிக்கெல்லாம் தூங்கிடுவோம். ஜூனிய‌ர் பொண்ணு ஒருத்தி ஒரு நாள் அல‌ங்கார‌த்தோட‌ எங்க மக்களப் பாத்துட்டா. எங்க‌ குட்டு அம்ப‌ல‌மாக‌ போகுதுன்னு ஒரே ப‌ய‌ம். ஜான்சியா? கொக்கா? வேப்பிலை சருகு எல்லாம் கொளுத்தி அவ‌ திரும்பி வ‌ர்ற‌ப்போ ஒரு பேய் வீடு செட்ட‌ப் செஞ்சா பாருங்க‌ அம்மிணி நாலு நாள் குளிர் காய்ச்சலிலே சிக் ரூமில‌ போயி ப‌டுத்திட்டா. யாருக்கிட்டேயும் அவ எதுவுமே சொல்லல. ஏன்னு இன்னும் தெரியல.

இட்லிக்கு எதிர்ப்பு தெரிவிக்க துடைப்ப குச்சிகளில் கோர்க்கப்பட்ட இட்லிகளை வார்டன் ஜன்னலுக்கு நேரே நட்டு வைப்பது,பவுர்ணமி இரவுகளில் எல்லாருக்கும் போக்கு காட்டி விட்டு மொட்டை மாடியில் சாப்பிடுவது,பின்னிரவு வரைக்கும் சினிமா கதை பேசுவது,காலையில் எல்லாரும் பைபிள் படிக்கையில் நான் மட்டும் வீம்புக்கென்றே பகவத் கீதை படிப்பது[புரியலையினாலும்],தினமும் 4 மணி மாஸுக்கு செல்லாமல் பாத்ரூமில் தூங்குவது,வார்டன் ரூமில் துளையிடப்பட்ட சீகைகாய் பாக்கெட்டை போட்டு விட்டு அவஸ்தையில் அவர் தும்முவதை பார்த்து ம‌கிழ்வ‌து என விடுதி விதி முறைகளில் என்னென்ன‌ பாவ‌ப்ப‌ட்ட‌ செய‌ல்க‌ள் உண்டோ அது எல்லாமும் எங்க‌ள் 'ம‌க‌ளீர‌ணி' செய்யும். எல்லாருக்கும் சேர்த்து ச‌ண்டே மாஸில் லிசாவோ மேரியோ பாவ‌ம‌ன்னிப்பு வாங்கி விடுவ‌ர். இத்த‌னையும் தாண்டி நாங்க‌ ஏன் ம‌திக்க‌ப் ப‌ட்டோம்னா ப‌டிப்போ,விளையாட்டோ,ம‌ற்ற‌ த‌னித்திற‌மைக‌ளோ ஏதாவ‌தொன்றில் எங்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு முக்கிய‌மான‌தாய் இருக்கும்.

ஒவ்வொரு ஞாயிறும் தூர்த‌ர்ஷன் சினிமா காட்ட‌ப்ப‌டும். இதெல்லாம் எங்க‌ புஷ்பா சிஸ்ட‌ர் க‌ருணை. பெரிய‌ போராட்ட‌த்துக்கு பின்னாடி அனும‌தி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. ஆனா எல்லாரும் அன்னிக்கு போடுற‌ பட‌ம் காத‌ல் காட்சிக‌ளில் இல்லாத‌ ப‌ட‌மா இருக்க‌ணும்னு வேண்டிக்குவோம். ஏன்னா அப்ப‌டி ஏதாவ‌து ந‌ட‌ந்தா ப‌ட‌ம் நிறுத்த‌ப்ப‌ட்டு அந்த‌ நேர‌த்துல‌ ப‌டிக்க‌ உக்கார‌னும் க‌ட்டாய‌மா. 'தூற‌ல் நின்னு போச்சு' ந்னு ஒரு பாக்கிய‌ராஜ் ப‌ட‌ம் பாதி ப‌ட‌ம் வ‌ரை சிஸ்ட‌ர் இல்ல‌வே இல்லை. ச‌ரியா பாக்கிய‌ராஜ் ‍சுலோக்ச‌னா காத‌ல்காட்சிக‌ள் தொட‌ங்குற‌ நேரம் சிஸ்டர் வந்தாச்சு. அப்புற‌மென்ன‌ வார்ட‌ன் அக்கா ரெண்டு பேருக்கும் சீட்டை கிழிச்சாச்சு. எல்லாரும் முணுமுணுப்போட‌ 'Study hall' போயிட்டோம்.அன்னைக்கு கெடைச்ச‌ சாப‌த்தை எல்லாம் தொலைக்க அவங்க இன்னும் ரெண்டு ஜென்ம‌ம் எடுக்க‌ணும்.

'பூவே உன‌க்காக‌' ப‌ட‌ம் வெளி வ‌ந்த‌ ச‌ம‌ய‌ம் என‌ நினைக்கிறேன்.ஜான்சி அவ‌ங்க சித்த‌ப்பா க‌ல்யாண‌த்துக்கு போயிட்டு படம் பாத்திட்டு வ‌ந்தா. அதுக்கு முத‌ல் நாள், ந‌க‌ம் நீள‌மா வ‌ள‌த்திருகேன்னு சொல்லி கை விர‌ல்க‌ள்ல‌ ஸ்கேல் வ‌ச்சு வார்டன் செம‌ அடி. ஜான்சி க‌த‌ சொல்ல ஆர‌ம்பிச்சா. க‌த‌ பாதி போயிருக்கும், 12B[எங்க‌ கேங்க்]முழுக்க‌ ஜான்சி தலை ப‌க்க‌த்துல‌. சிஸ்ட‌ர் க‌தவ‌ திற‌க்குற ச‌த்த‌த்துல‌ எல்லாரும் சுதாரிச்சு அவ‌ங்க‌வ‌ங்க‌ எட‌த்துக்கு போயாச்சு. என்னைக்குமில்லாம அன்னிக்கு சிஸ்ட‌ர் அவ‌ங்க வழக்கமான உடுப்பு இல்லாம‌ த‌லைவிரி கோல‌மா, நைட்டியோட‌ கையில் மெழுகுவ‌ர்த்தி சகிதமா வ‌ர்றாங்க. அத பார்த்ததும் முத‌ல்ல‌ ப‌ய‌ம் தெளிஞ்சு அப்புற‌ம் ஆத்திர‌ம் வ‌ந்திருச்சு. அடிவாங்குன‌ நானும் அகிலாவும் திட்ட‌ம் தீட்டிடோம். க‌டைசி வ‌ரை போயிட்டு அவங்க எங்க‌ வழியா திரும்புற‌ப்போ ப‌ய‌ந்து அலறி, தெரியாம செய்யுற மாதிரி சிஸ்ட‌ர் காலை இட‌றி விட்டோம்.நாங்க‌ தொட‌ங்க‌ எல்லாரும் தொட‌ர‌ வெளிச்ச‌ம் வ‌ந்த‌தும் பாத்தா அந்த‌ வ‌ய‌தான‌ ம‌னுசி க‌த‌வு ஓர‌த்திலே, அலங்கோலமாக‌ த‌ரையில். ம‌னசுக்கு க‌ஷ்ட‌மாயிடுச்சு. அதை விட‌ என்ன‌ கொடுமையினா என்னையும் அகிலாவையும் prayer hall க்கு கூட்டி போய் நாங்க‌ ப‌ய‌ந்த‌துக்காக‌ அவ‌ங்க‌ வேண்டின‌து தான். அதுக்க‌ப்புற‌ம் அவ‌ங்க‌ க‌வ‌னிக்க‌ப் ப‌டுற‌ முக்கிய‌மான ஆளாய் மாறிப் போனேன்.எல்லாத்துக்கும் நானும் ஜான்சியும் முன் மொழிய‌ப்ப‌டுவோம். திருட‌ன் கையில‌ காவ‌லைக் கொடுத்த‌ மாதிரி பிர‌ச்ச‌னைக‌ள் விடுதிக்குள் ரொம்ப‌ கொற‌ஞ்சு போச்சு.

அழ‌காக‌ பாடும் லில்லி சிஸ்ட‌ர்,த‌மிழ‌றிவு புக‌ட்டிய‌ புஷ்பா சிஸ்ட‌ர்,க‌ம்பீர‌த்துக்கு பேர் போன‌ ஜோதி சிஸ்ட‌ர் என நான் படித்த நல்ல உள்ளங்கள் இன்னும் இன்னும் எத்த‌னை எத்த‌னையோ! ஜடேஜா,ரஜினி,அமீர்கான் என யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டிருந்த போஸ்டர்கள் லிசாவிடமிருந்து கைப்பற்ற போது,'யாருடீ! இவெனெல்லாம் உனக்கு பாய் பிரெண்டா?' எனக் கேட்டு நிறுத்தவும், அடக்கமாட்டாமல் சிரித்து நாள் முழுக்க சிஸ்டருக்கு முன்னால் வசைகளோடு முட்டி போட்ட அனுபவம்.'ஏப்பா! zoology record ‍எழுதனும் யாராவது 'லப்பர்' கொடுங்கப்பா' என்று ஒருமுறை வாய் குழறிய‌ குற்றத்துக்கு 'லப்பர் ஜெயா' என நாமகரணம் சூட்டப்பட்டு வ‌தைப்ப‌ட்டு எதிரியாய் மாறிப் போன என் முன்னாள் தோழி.கவிதை என்கிற பேரில் பிதற்றலாய் இருந்தாலும் கைதட்டி ஆர்ப்பரிக்கும் தோழிகள் வட்டம். 'என்னடா உன் லட்சியம்?' எனக் கேட்ட அம்மாவிடம் 'எய்ட்ஸ்சுக்கு மருந்து கண்டுபிடிக்கணும்னு' சொல்லி தோலுரிபட்ட ஜான்சி,ஒவ்வொரு Dec 12 ம் நினைக்கப்ப‌டும் கீதப் பிரியா, அண்மையில் மாமியார் கொடுமையில் மரித்துப் போன எங்களுள் கலந்த‌ தோழியொருத்தி என‌ இப்படி சொல்ல எத்தனை எத்தனையோ இருக்கு.

கல்லூரி வாழ்க்கை எல்லாமும் அம்மா அப்பா கூட. அதப்படி இதச் செய்யின்னு எப்பவும் அப்பா அம்மாவின் அடக்குமுறைகளோடும் தனிமையின் பிடியில்.வீட்டுக்குள்ள அப்பிராணியா, வெளியில அடங்காப் பிடாரியா அது ஒரு அழகிய நிலாக்காலம்.பகிர்ந்துக்க எத்தனையோ ......நான் ரெடி ஆனா நீங்க‌ ரெடியில்லையின்னு க‌த‌றுற‌து என‌க்கு கேட்ப‌தினாலே என் க‌டியை இதோட‌ நிறுத்தி மேலும் க‌டிக்க‌ இல்ல‌ தொட‌ர வசந்த் மற்றும் கமலேஷ் இருவரையும் அழைக்கிறேன்.

முத‌ன் முத‌லில் தொட‌ர் ப‌திவெழுத‌ வைத்த‌ க‌ல‌க‌ல‌ப்பிரியாவுக்கு ந‌ன்றி....

குறிப்பு :‍

ப‌ள்ளி குறித்த‌ நினைவுக‌ள் அத‌னினும் மேலாய் காத‌ல் அரும்பிய‌ நாட்க‌ள் த‌ழும்ப‌ ப‌டைப்புக‌ள் த‌ருமாறு கேட்டுக் கொள்ள‌ப் ப‌டுகிறார்க‌ள்.ஏன் நீ இப்ப‌டி எல்லாம் எழுத‌லைன்னு கேக்க‌ப்ப‌டாது. நான் இப்போ தான் முத‌லாமாண்டு க‌ணிணியியல்(?) போறேன் அதுக்குள்ளேயும் காத‌லா? எப்ப‌டி சாமி பொய் சொல்லுற‌து? இஃகி. :)))

22 comments:

கலகலப்ரியா said...

//பஞ்ச தந்திர கதைகள் தொடங்கி சமஸ்கிருத ஸ்லோகங்கள்,சுதந்திர கதைகள்,பாட்டு,படிப்பு இப்படியே கட்டிவிட்ட கடிவாளத்தோடு ஆரோக்கியமான அடித்தளம் அமையப் பெற்றேன்.//

ஸ்ஸ்ஸப்பா... எல்லா இடமும் இப்டித்தானா...

அட அட... பதின்மம் பத்தி எழுதச் சொன்னா.... பிறந்து வளர்ந்து... பாட்டி)).. ஆகற வரைக்கும்... பின்னிப் பெடல் எடுத்துட்டீங்க...

மிக மிகச் சுவாரஸ்யம்...

அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றி கயலு...

கயல் said...

//
பதின்மம் பத்தி எழுதச் சொன்னா.... பிறந்து வளர்ந்து... பாட்டி)).. ஆகற வரைக்கும்... பின்னிப் பெடல் எடுத்துட்டீங்க...
//
பாட்டி? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
நான் இப்ப‌த்தான் பள்ளிக்கூட‌ம் முடிச்ச‌தா ஒரு வ‌ரைவு வ‌ச்சிருந்தா நீங்க‌ இப்ப‌டி தாக்கிட்டீங்க‌ளே!:(( ந‌ன்றி பிரியா!

ப்ரியமுடன் வசந்த் said...

ஆத்தா கயலு சில கேரக்டர்ஸ் இப்பிடித்தான் இருக்கணும் பொண்ணுக மீ டூ...பகவத் கீதை படிக்கிறது மாதிரியான செய்கையில நீங்க அப்போவே பெரிய ரவுடின்னு தெரியுதுத்தா.....

அந்த ஸ்கூல் பத்திதான் அம்புட்டு பேருக்கும் தெரியுமே...

ரொம்ப விரும்பி ரசிச்சு படிச்சேன்...

ஆனாலும் சரியான ஆளுக்கு சரியான சிஷ்யைதான்...

கேர்ஃபுல்லாத்தான் இருக்கோணும்...

எந்தூர்த்தா...?

//ப‌ள்ளி குறித்த‌ நினைவுக‌ள் அத‌னினும் மேலாய் காத‌ல் அரும்பிய‌ நாட்க‌ள் த‌ழும்ப‌ ப‌டைப்புக‌ள் த‌ருமாறு கேட்டுக் கொள்ள‌ப் ப‌டுகிறார்க‌ள்//

லொல்...

தேவன் மாயம் said...

.வீட்டுக்குள்ள அப்பிராணியா, வெளியில அடங்காப் பிடாரியா அது ஒரு அழகிய நிலாக்காலம்.பகிர்ந்துக்க எத்தனையோ ......நான் ரெடி ஆனா நீங்க‌ ரெடியில்லையின்னு க‌த‌றுற‌து என‌க்கு கேட்ப‌தினாலே என் க‌டியை இதோட‌ நிறுத்தி மேலும் க‌டிக்க‌ இல்ல‌ தொட‌ர வசந்த் மற்றும் கமலேஷ் இருவரையும் அழைக்கிறேன்///

கடிக்கு நாங்க ரெடி!! ஒரு ஆள் கடித்தால் தாங்கும்! மேலும் 2 பேரை வேற ஏவிவிட்டா தாங்குமா ....

சுடர்வண்ணன் said...

/*தொழு நிறைய ஆவினமும்,அதற்கெனவே வீடு கொள்ளா வேலையாட்களும் */

அப்படியே என் இளமை பருவத்தை கண் முன்னே கொண்டுவந்தது..

கயல் said...

//
பிரியமுடன்...வசந்த் said...
ஆத்தா கயலு சில கேரக்டர்ஸ் இப்பிடித்தான் இருக்கணும் பொண்ணுக மீ டூ...பகவத் கீதை படிக்கிறது மாதிரியான செய்கையில நீங்க அப்போவே பெரிய ரவுடின்னு தெரியுதுத்தா.....
//

சொன்ன‌ 5% க்கே ர‌வ‌டின்னா சொல்லாம‌ விட்ட‌துக்கெல்லாம்....

//

அந்த ஸ்கூல் பத்திதான் அம்புட்டு பேருக்கும் தெரியுமே...

ரொம்ப விரும்பி ரசிச்சு படிச்சேன்...

ஆனாலும் சரியான ஆளுக்கு சரியான சிஷ்யைதான்...

கேர்ஃபுல்லாத்தான் இருக்கோணும்...

எந்தூர்த்தா...?
//

கலகலப்பிரியா மேல அவ்வளவு பயமா? இருக்கட்டும் இருக்கட்டும்!

ந‌ன்றி வ‌ச‌ந்த்! வ‌ரி வ‌ரியா பொறுமையா ப‌டிச்ச‌துக்கு! சீக்கிர‌ம் எழுதுங்க‌! நாங்கெல்லாம் காத்துக்கிட்டு இருக்கோம்.

//ப‌ள்ளி குறித்த‌ நினைவுக‌ள் அத‌னினும் மேலாய் காத‌ல் அரும்பிய‌ நாட்க‌ள் த‌ழும்ப‌ ப‌டைப்புக‌ள் த‌ருமாறு கேட்டுக் கொள்ள‌ப் ப‌டுகிறார்க‌ள்//

லொல்...
//

உங்க சாக்கு போக்கு எல்லாம் இங்க செல்லாது... எத்தனை ஆட்டோகிராஃப்னாலும் நாங்க தயார் சாரே! வெளுத்து வாங்குங்க எனக்கும் சேத்து!

கயல் said...

//

தேவன் மாயம் said...
.வீட்டுக்குள்ள அப்பிராணியா, வெளியில அடங்காப் பிடாரியா அது ஒரு அழகிய நிலாக்காலம்.பகிர்ந்துக்க எத்தனையோ ......நான் ரெடி ஆனா நீங்க‌ ரெடியில்லையின்னு க‌த‌றுற‌து என‌க்கு கேட்ப‌தினாலே என் க‌டியை இதோட‌ நிறுத்தி மேலும் க‌டிக்க‌ இல்ல‌ தொட‌ர வசந்த் மற்றும் கமலேஷ் இருவரையும் அழைக்கிறேன்///

கடிக்கு நாங்க ரெடி!! ஒரு ஆள் கடித்தால் தாங்கும்! மேலும் 2 பேரை வேற ஏவிவிட்டா தாங்குமா ....
//
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

பாவம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க போல! ஒவ்வொரு வார்த்தையிலேயும் வலி தெரியுது! இருந்தாலும் இருந்தாலும் பல்லைக்க் கடிச்சு பொறுத்துங்க! அப்புறம் பழகிடும்! இஃகிகி! :))

கயல் said...

//
சுடர்வண்ணன் said...
/*தொழு நிறைய ஆவினமும்,அதற்கெனவே வீடு கொள்ளா வேலையாட்களும் */

அப்படியே என் இளமை பருவத்தை கண் முன்னே கொண்டுவந்தது..
//

நன்றி ! முதல் வருகைகும் கருத்துக்கும்!

பித்தனின் வாக்கு said...

டர்ரு டர்ருன்னு கொசுவத்தி நல்லா சுத்திருக்கீங்க. நல்லா வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்துள்ளீர்கள். பகிர்தலுக்கு மிக்க நன்றி.

கமலேஷ் said...

கல்லூரி காலங்களை ரொம்ப கல கலப்பா நகர்ந்திருக்கீங்க போல...எல்லா நினைவுகளையும் நல்ல அழகாக கோர்த்து இருக்ரீர்கள்...பதிவு மிகவும் ரசிக்கும் படி உள்ளது..

//// ப‌ள்ளி குறித்த‌ நினைவுக‌ள் அத‌னினும் மேலாய் காத‌ல் அரும்பிய‌ நாட்க‌ள் த‌ழும்ப‌ ப‌டைப்புக‌ள் த‌ருமாறு கேட்டுக் கொள்ள‌ப் ப‌டுகிறார்க‌ள்.ஏன் நீ இப்ப‌டி எல்லாம் எழுத‌லைன்னு கேக்க‌ப்ப‌டாது. நான் இப்போ தான் முத‌லாமாண்டு க‌ணிணியியல்(?) போறேன் அதுக்குள்ளேயும் காத‌லா? எப்ப‌டி சாமி பொய் சொல்லுற‌து ////

பாத்திங்களா...பாத்திங்களா...உங்களை மட்டும் ரொம்ப நல்ல புள்ளன்னு சொல்லிட்டு எங்களை வம்புல மாட்ட பாக்றீங்க...

கயல் said...

//
பித்தனின் வாக்கு said...
டர்ரு டர்ருன்னு கொசுவத்தி நல்லா சுத்திருக்கீங்க. நல்லா வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்துள்ளீர்கள். பகிர்தலுக்கு மிக்க நன்றி.
//

அப்பாடா! நான் ஏதோ பயந்துட்டேன் எல்லாரும் எம்மேல செம காண்டா இருப்பாங்கன்னு! நீங்க சொன்னதுல்ல இருந்து ஒண்ணு தெரியுது!ஏதோ பொழச்சுப் போன்னு விட்டுட்டாங்க போல! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

கயல் said...

//
கமலேஷ் said...
கல்லூரி காலங்களை ரொம்ப கல கலப்பா நகர்ந்திருக்கீங்க போல...எல்லா நினைவுகளையும் நல்ல அழகாக கோர்த்து இருக்ரீர்கள்...பதிவு மிகவும் ரசிக்கும் படி உள்ளது..

//// ப‌ள்ளி குறித்த‌ நினைவுக‌ள் அத‌னினும் மேலாய் காத‌ல் அரும்பிய‌ நாட்க‌ள் த‌ழும்ப‌ ப‌டைப்புக‌ள் த‌ருமாறு கேட்டுக் கொள்ள‌ப் ப‌டுகிறார்க‌ள்.ஏன் நீ இப்ப‌டி எல்லாம் எழுத‌லைன்னு கேக்க‌ப்ப‌டாது. நான் இப்போ தான் முத‌லாமாண்டு க‌ணிணியியல்(?) போறேன் அதுக்குள்ளேயும் காத‌லா? எப்ப‌டி சாமி பொய் சொல்லுற‌து ////

பாத்திங்களா...பாத்திங்களா...உங்களை மட்டும் ரொம்ப நல்ல புள்ளன்னு சொல்லிட்டு எங்களை வம்புல மாட்ட பாக்றீங்க...
//

அட‌டா! ந‌ம்ம‌ ந‌ல்ல‌ புள்ள‌ விள‌ம்ப‌ர‌த்துக்கு அமோக‌ வ‌ர‌வேற்பு போல‌! க‌ம‌லேஷ் கூட‌ அப்பாவியா ந‌ம்புறாரு! எல்லாம் இருக்க‌ட்டும் சீக்கிரம் உங்க கதைய சொல்லுங்க! நிறைய எழுதுங்க‌ க‌விஞ‌ரே! காது பூரா ர‌த்த‌ம் வ‌ருதுன்னு அழுதாலும் விட‌க்கூடாது! ச‌ரியா?

ப்ரியமுடன் வசந்த் said...

http://priyamudanvasanth.blogspot.com/2010/03/18.html

போஸ்ட் போட்டாச்சு தாயி...

கயல் said...

நன்றி வசந்து!

butterfly Surya said...

ரசனைக்கார கயல்.

பகிர்வு அருமை.

கயல் said...

//
butterfly Surya said...
ரசனைக்கார கயல்.

பகிர்வு அருமை.
//

நன்றி சூர்யா!வாலுத்தனம்=ரசனை? ஏதோ சொல்லுறீக! ம்ம்ம்!:))

Ungalranga said...

அப்படியே நேரில் பார்ப்பது போல் இருக்கிறது உங்களின் இந்த பதிவு..

வாழ்த்துக்கள்..!!

இன்னும் பேசணும்..நேரமில்லை :(

பா.ராஜாராம் said...

ரௌடியா நீயும்? (என் ரெண்டு மகள்களுமே ரௌடியா? கடவுளே!) :-)

மிக நெகிழ்வான, உண்மையான பகிர்வுடா கயல்!

கயல் said...

//
ரங்கன் said...
அப்படியே நேரில் பார்ப்பது போல் இருக்கிறது உங்களின் இந்த பதிவு..

வாழ்த்துக்கள்..!!

இன்னும் பேசணும்..நேரமில்லை :(
//
நன்றி

கயல் said...

//
பா.ராஜாராம் said...
ரௌடியா நீயும்? (என் ரெண்டு மகள்களுமே ரௌடியா? கடவுளே!) :-)

மிக நெகிழ்வான, உண்மையான பகிர்வுடா கயல்!
//

நன்றி!

மஹாவுமா? சிவகங்கை சீமையில... பின்ன? சும்மாவா?

:))

நிலாமகள் said...

வாழ்ந்து கெட்ட வீட்டின் வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது... என கனப்படுத்திய மனசை , உற்சாகமான பள்ளிக்கால நினைவுகளை சுவைபடக் கூறி , இலேசாக்கி பறக்க விட்டாச்சு. தேர்ந்த எழுத்து நடையும், ததும்பும் நகைச்சுவையும் பாராட்டுக்களை அள்ளுகிறது. சிரிப்பும் கும்மாளமும் நிலைக்கட்டும்! வாழிய!!

கயல் said...

//
நிலா மகள் said...
வாழ்ந்து கெட்ட வீட்டின் வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது... என கனப்படுத்திய மனசை , உற்சாகமான பள்ளிக்கால நினைவுகளை சுவைபடக் கூறி , இலேசாக்கி பறக்க விட்டாச்சு. தேர்ந்த எழுத்து நடையும், ததும்பும் நகைச்சுவையும் பாராட்டுக்களை அள்ளுகிறது. சிரிப்பும் கும்மாளமும் நிலைக்கட்டும்! வாழிய!!
//
நன்றி தோழி!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!