யாருமறியாமல் மறைத்து வைத்திருந்தேன் - அந்த
அவமான தருணங்களை பதுக்கி வைத்திருந்தேன்
நினைவுச் சுரங்கத்தில் பாரமான நினைவுகளாய்...
இதுநாள் வரையில் இறுக்கி வைத்திருந்த
இருதயத்து நினைவுகளை எடுத்து பகிர்கின்றேன்
எம்மக்கள் எல்லோரும் உணர்ந்திடவே!
எழுத்துத் தேர்வில் தேறிவிட்ட சந்தோசத்தில்
நேர்முகத் தேர்வுக்கான அறிக்கையுடன்!
இனியாவது நிமிருமா என் பொருளாதாரம்?
இயல்பான எதிர்பார்ப்போடு பதட்டத்தில் நான்
பன்னாட்டு நிறுவனமொன்றின் வரவேற்பறையில் ....
பதிவு கோட்புகளில் பதியாத பெயரோடும்
பாமரத்தனம் பசி இன்னபிற குறைகளோடும்
படிப்பே தெரியாத தமிழகத்து சாபக்கேடு
நான் பிறந்த "மலைக் கிராமம்"
சந்தவரி எழுதி சரித்திரமாக்க போவதில்லை
சமூகம் எனக்கிழைத்த சதியை எடுத்துரைத்து!
உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாய் தெரிவதில்லை
உரிமையை தொலைத்த எம் மக்கள் வாழும்நிலை!!
கற்பிழந்தால் கன்னிமட்டும் .....
கொள்கையிழந்த மானுடர் - தம்
கொடிபிடிக்கும் குற்றத்தை
என்னவென்று இயம்புவது?
தேர்தல் சமயம் மட்டும் தேடி வரும் நரிக்கூட்டம்
தேவை முடிந்த பின் தேவர்களின் அணி வகுப்பாய்..
சூத்திர சாதியென்று ஒதுக்கி வைக்கும் - அவர்தம் வெற்றிக்கு
சூத்திரதாரியான எம்மக்கள் கூட்டத்தை!
மேடையெங்கும் பேய்முழக்கம் தாய்மொழியின் துளிர்பிற்க்காய்...
தமிழ் பாடமேயில்லாத பள்ளியில் தம்மக்கள் படித்திடினும்
தன்நெஞ்சறிந்து பொய்யாய் முழங்குகின்றார்
தம்பட்டமடிக்கின்றார் தாய்மொழிக்கல்வி கொள்கையென்று!
தலைமை இப்படியிருக்க,
கொள்கை பிடிப்புடனே தன்னைத் தொலைத்திட்ட தொண்டன் - தம்முள்
வளர்த்திட்ட வாழும் முறைமையினால்....
தாய்மொழி வழிக்கல்வியெனும் தம்கட்சி கொள்கைக்காய்
தார்மீகப் பொறுப்புணர்வில் என் தந்தை!
படிப்பதே பெரும்பாடு இதிலே தரம் வேறா?
இப்படியாக,
தமிழ்வழிக்கல்வி என் தலையெழுத்தாயிற்று!
எல்லோரும் சமமாய் வாழ்ந்திட்டால் எதுவுமே குற்றமில்லை - மாறாய்
தலைவனென்றும் தொண்டனென்றும் தரம்பிரித்த வாழ்க்கைத்தரம்!
வறுமை தொண்டனுக்கென்றும் வசதி தலைவனுக்கென்றும்
அண்மையில் மாறுதலுக்கு ஆட்பட்ட அரசியல் சட்டத்தால்
மதிப்பிழந்த தன்மானம் காலாவதியான கனவுகளுமாய்
காலச்சக்கரத்தில் நானும் வேலை தேடி....
பாவப்பட்ட சமூகத்தில் பதிக்கப்பட்ட விதை நான்!
பெரும்பாடுபட்டு சூரியவெளிச்சம் பார்த்த வீரிய விதை நான்!
பட்டம் முடித்து பட்டமேற்படிப்பு வரையான போதும்
பொருளாதாரம் மட்டும் கடைநிலையில்!
கலப்பில்லாத மொழியறிவு கனவாகிவிட்ட காரணத்தால்
கருத்தை தெரிவிக்க தமிழை தழிழாகச் சொல்லாமல்
அந்நிய மொழியோடு அரைகுறையாய் கலக்கச் செய்து....
அறிந்துமறியாமலும் யாம்புரியும் தவறனைத்தும்
பொருத்தருள்வாய் தமிழன்னாய்!
வேலைநிமித்தம் என்னுள் செத்துவிட்ட
தாய்மொழிக்காய் துக்கம் கொண்டாடி
பாடாய்படுத்தும் பண நெருக்கடியால்
பிரிதொரு மொழியின் ஆளுமையில்!
கருத்தாழம் மொழியறிவு உடனான கூட்டணி
தோற்றுப் போய் புதிய மொழியொன்று
பிழைப்பிற்காய் உலவுகையில் எப்படி தொடங்குவது?
தயக்கத்தில் கல்லாய் அமர்ந்திருந்தேன்!
நாகரீக நங்கையுடன் நேர்முகத் தேர்வு!
பெயரைக் கேட்டனள் பதிலை சொன்னபின்
வேறொன்றும் கேளாமல் மவுனமாய்- தாய்மொழியின்
தாக்கம் உள்ளதென தட்டிக்கழித்து விட்டாள்.
"தமிழ்ச்செல்வி" யெனும் என் பெயரை
அம்மொழியில் எப்படித் தான் சொல்லுவதோ?
அந்த நொடிப் பொழுதில் நான் பட்ட
அவமானத்தை என்னவென்று எழுதிக்காட்ட?
அம்மொழியும் இல்லாமல் நம்மொழியுமில்லாமல் -கலப்பினத்
தமிழோடு உலவுதல் தாம் இன்று பிழைக்கும்வழி!!
பழமையை கொன்று புதுமையா? - இல்லை
பழமையில் மெருகிடுவது புதுமையா? - தமிழை
முதலாய் கற்ற காரணத்தால் தன்மானம்
மிகுந்து போய் தட்டி கேட்டதன் விளைவு?
தாய்மண்ணில் நானிருந்தும்
மொழியால் அந்நியமாய்!!
தாய் மொழியே என் பெயரில் உள்ளதென
நான் கொண்ட கர்வம் தகர்ந்து போய்
தலைகுனிந்து நடந்ததேன் தன்னிலை மறந்து
என் எதிர்காலம் குறித்த எண்ணில்லா கேள்வியோடு!
வறுமை வதைத்த போதே தெரிந்தது
வாழுதற்கு வளைய தெரிய வேணுமென்று!
இன்று பன்னாட்டு நிறுவனமொன்றின் நிர்வாகஅறையில் ....
முயன்றவரை மொழி கலப்பின்றி மேலாளர் " தமிழ்ச்செல்வி"!
7 comments:
//மொழி கலப்பின்றி மேலாளர் " தமிழ்ச்செல்வி"! //
பேருவகை உற்றனன்
தமிழ் வாழுதென!
பழமைபேசி said...
//மொழி கலப்பின்றி மேலாளர் " தமிழ்ச்செல்வி"! //
பேருவகை உற்றனன்
தமிழ் வாழுதென!
//
வரவேற்பு இல்லையென ஐயமுற்றிருந்தேன்!
வரிகளாய் எமக்கு அதை தந்திட்டீர்!
வருகைக்கு நன்றி!
\\படிப்பே தெரியாத தமிழகத்து சாபக்கேடு
நான் பிறந்த "மலைக் கிராமம்"\\
கவிதைக்காக கூட அப்படி சொல்ல வேண்டாம்.மலைகிராமம் ஒரு வரம்,
\\தாய்மொழி வழிக்கல்வியெனும் தம்கட்சி கொள்கைக்காய்
தார்மீகப் பொறுப்புணர்வில் என் தந்தை!
படிப்பதே பெரும்பாடு இதிலே தரம் வேறா?
இப்படியாக,தமிழ்வழிக்கல்வி என் தலையெழுத்தாயிற்று!\\
தலையெழுத்தல்ல, அதுவும் தேடி வந்த செல்வம்,
\\பட்டம் முடித்து பட்டமேற்படிப்பு வரையான போதும் பொருளாதாரம் மட்டும் கடைநிலையில்\\
வரும்...
\\கருத்தாழம் மொழியறிவு உடனான கூட்டணி
தோற்றுப் போய் புதிய மொழியொன்று
பிழைப்பிற்காய் உலவுகையில் எப்படி தொடங்குவது?
தயக்கத்தில் கல்லாய் அமர்ந்திருந்தேன்!\\
தமிழ் என்றும் தோற்காது. ஆங்கில மொழியையும் நாம் அரவணைப்போம் விருப்பத்தோடு.
புதிதாய் கிடைத்த சகோதரி போல ஏற்போம்.
வாழ்த்துக்கள்...
தாய்மொழி வழிக்கல்வியால் தன்னால் உயர முடியவில்லையே என்கிற தவிப்பில் ஒரு பெண் புலம்புவதாய் புனையப்பட்டதாகையால் கவிதை இப்படியாக...
இது போலும் வளராத கிராமங்கள் இங்கு ஏராளம்! ஏராளம்!மாற்றம் வேண்டி கவிதைகுள் இழுத்தேனே தவிர குறைத்து மதிப்பிடவில்லை!
மற்றபடி வீணையின் நாதம் ஏழையின் காதுக்கு எப்படி புரியும்? தான் பிறந்த கிராமம் அழகும் வனப்பும் கொண்டதாயினும் அங்கேயே இருப்பவர்களுக்கு,அதுவும் வறுமையில் பிறந்து உழன்று,அந்த நிலையிலிருந்து முன்னேற துடிப்பவர்களுக்கு அது எப்படி புரியும்?முன்னேறிய பின் சுவடுகளை திரும்பி பார்பது சுகம்! உயரும் வரை கவனம் இலக்கில் தானே இருக்கும்? கவிதைக்காக என்பதை விட, ஒரு கிராமத்துப் பெண்ணின் பரிதவிப்பை எப்படி காட்டுவது என்கிற கவனத்தில் சில தவறுகள்!
வருகைக்கு நன்றி!
/*
இனியாவது நிமிருமா என் பொருளாதாரம்?
இயல்பான எதிர்பார்ப்போடு பதட்டத்தில் நான்
பன்னாட்டு நிறுவனமொன்றின் வரவேற்பறையில் ...
*/
ரொம்ப இயல்பா இருக்கு அருமை.
/*
உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாய் தெரிவதில்லை
உரிமையை தொலைத்த எம் மக்கள் வாழும்நிலை!!
*/
/*சூத்திர சாதியென்று ஒதுக்கி வைக்கும் - அவர்தம் வெற்றிக்கு
சூத்திரதாரியான எம்மக்கள் கூட்டத்தை!
*/
சமூக கோபங்கள், கொஞ்சம் சுடாதான் இருக்கு. ம்ம்ம் ............. நல்லா இருக்கு.
/*
பிழைப்பிற்காய் உலவுகையில் எப்படி தொடங்குவது?
தயக்கத்தில் கல்லாய் அமர்ந்திருந்தேன்!
*/
இதற்கு நான் என்ன சொல்ல. இம்ம்ம்
ஒரு சின்ன கதை (குட்டி கதையோ புட்டிகதையோ இல்ல சரியா :) )
ஒருமுறை (long long ago, so long ago, no body knows how long ago அவ்வ்வ் ) கவிஞ்சர் கண்ணதாசன் அவர்கள் அவர் நண்பருடன் அண்ணாசாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாரம். அப்போது அவரோட செருப்பு அருந்துவிட்டதாம். அவர் நண்பர் அதைபார்த்து சிரித்துக்கொண்டே கவலைபடாதிங்க வேறு ஒரு செருப்பு வாங்கிடலாம் என்றாராம். அதற்கு கவிஞ்சர் "உறுபிழந்து போனாலும் உள்ளம் கலங்கேன், செருப்பறுந்து போனதற்கோ சிந்தை கலங்குவேன்" என்றாராம். என்ன உறுதி இல்ல...
அப்படி இருக்கனும்.
தயக்கத்தில் கல்லாய் அமர்ந்திருந்தேன்!
கல்லு மேல உட்கார்ந்திருந்தேன்.............
இதெல்லாம் வேலைக்காகாது
நன்றி
தென்னவன் ராமலிங்கம்.
கதை ரொம்ப நல்லாயிருந்தது! விமர்சனத்துக்கு நன்றி!! உறுதி இழந்திருந்தால் மேலாளர் "தமிழ்ச்செல்வி" எப்படி சாத்தியம்? அது தயக்கம்! தயக்கம் வேறு உறுதியின் நிலைப்பாடு என்பது வேறு!எல்லா சந்தர்பங்களிலும் தயக்கத்தை தள்ளி வைப்பது இயலாத காரியம்! என்ன சரிதானே தென்னவன்!
:) வருகைக்கு நன்றி
இந்தக் கதைக்குச் சொந்தக்காரர் செங்கற்படுத்தான் (பட்டுக்கோட்டை) கல்யாணசுந்தரம் அவர்கள். வரிகள் சரியாக ஞாபகம் இல்லை. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் அவை.
உறுப்பறுந்து போனாலும் உள்ளங் கலங்கேன்
செருப்பறுந்து போனதற்கோ சிந்தை கலங்குவேன்?
நெருப்பாற்றில் வீழ்ந்து நீந்தத் துணிந்தேன்; எனக்குக்
கொதிக்கும் தார், குளிர்நீர்.
- ஞானசேகர்
Post a Comment