Saturday, April 25, 2009

நல்லதோர் வீணை செய்தே

உன்னோடு சேர்த்தே உன்னாலான
உறவுகளையும் நேசிப்பதால்
வர்த்தியாய் வாழ்வைத் தொலைக்கிறேன் - அவர்
வசிக்க தோதாய் வெளிச்ச‌ம் த‌ந்து
சிந்திய வேர்வைத் துளிகள் அத்தனையும்
சிப்பமாய் சேமித்து வைக்கிறேன்
என் சந்ததிகள் படித்துக் கொள்ளட்டுமென்று....

தனிமைக்கு ப‌ய‌ந்து உன‌க்குள் சிறைப‌ட்டேன்
வேட்டைக்கார‌னுக்கு ப‌ய‌ந்து வலை புகும்
முயற்குட்டியின் சாமர்த்தியத்தில்....
தெரிய‌வில்லை என‌க்கு அன்று
வீடு முழுக்க வியாபித்திருந்த‌
கூரிய‌ கொடுவாள்களுக்கு என் குருதி
இத்த‌னை பிரிய‌மென்று

கூலிக்கு அதிக‌மாய் கூவியும்
அற்ப‌மாய் கிடைத்த‌ பொருளோடு
கூடு திரும்புகிறேன்
விசிறி விட‌ வேண்டாம்
வேலால் குத்தாம‌லிருந்தால் ச‌ரி

த‌ட‌விப் பார்க்கையில்
த‌ழும்பு ம‌ட்டும் மிச்ச‌மாய்....
பார்ப்பவர்களுக்கு எப்ப‌டி புரியும்
காய‌ம் காய்ந்து வ‌டு வ‌ந்த‌ வ‌ர‌லாறு
கேட்டு அழ‌ வேண்டாம்
கேலி செய்யாதிருத்த‌ல் உத்த‌ம‌ம்

பெண்ணீய‌ம் பெருமையாய் பேசுகிறாய்
கேட்ட‌வ‌ர் அனைவ‌ரும் சொக்கிப் போகிறார்
'கொடுத்து வைத்த‌வ‌ள்'
ஒருமித்த‌ குர‌லில் ஒத்து ஊதுகிறார்
வேட‌னின் சாம‌ர்த்தியம் உன் க‌ண்ணில்...
வெறுப்பில் க‌ண்ணீர் வ‌ந்ததெனக்கு
'இல்லையென்று சொல்ல‌க் கூடாது'
வியாபாரியின் விற்ப‌னைக் கொள்கை போல‌
'எத‌ற்கும் க‌ண்ணீர் கூடாது'
வஞ்சியென் ‌வாழ்க்கை கொள்கை
மிட‌று போல் வேத‌னை விழுங்குகிறேன்

ந‌வ‌யுக‌ நாகரிக‌ங்க‌ள் எத‌ற்கும்
ஏங்க‌வுமில்லை ஏற்க‌வுமில்லை
இய‌ல்பாய் வாழ்வ‌தே இனிப்பாய்.....

வாழ்க்கை விற்று வ‌ச‌தி வாங்கும்
விற்ப‌னை பிர‌திநிதி நீ!
ம‌ல‌ரின் வாச‌னை என்றும்
மண் வாச‌னை என்றும்
தேடி நுக‌ர்வ‌து சாத்திய‌மில்லை
பண‌ம் ப‌ண்ணும் எந்திர‌ம் நீ
பாச‌த்துக்கு ப‌ணிவது சாத்திய‌மில்லை
உரையாடலுக்கு நடு நடுவே
ம‌ணித்துளிக‌ளை க‌ண‌க்கெடுக்கும் உன‌க்கு
ம‌ழையின் பிர‌வாக‌த்தினை எப்ப‌டி சொல்ல‌?

ய‌தார்த்த‌ம் பேசுவ‌தாய் சொல்லிக் கொண்டு
எத்த‌னையோ முறை மிச்ச‌மின்றி
கொன்றிருக்கிறாய் என்னை
ப‌திலேதும் சொல்லாம‌ல் பாவையாய் நான்!

எதுவுமே இல்லை ஆனாலும்
'அர‌சிள‌ங்குமாரி' நான் அப்பாவுக்கு
எல்லாமும் த‌ருகிறேன்
இருந்தும் ஏற்க‌ ம‌றுக்கிறாய்
நானும் சராச‌ரி ம‌னுசியென்று
கனவுகள் தீர்ந்த ந‌ர‌க‌ வாழ்வு
நித‌மும் தினுசு தினுசாய்
த‌ன்மான‌ ப‌டுகொலைகள்
குற்றுயிராய் குமைந்து மறுகினும்
பொழுது விடிகையில் புத்தம் புதியளாய்
உத‌ட்டில் ஒட்ட‌ வைத்த‌ புன்ன‌கையுட‌ன்
உற்சாக‌மாய் போலி ஊர்வ‌ல‌ம்
இயந்திர நாட்டியம் மாதக் கடைசிக்காய்
இவைதாம் நடுத்தரவர்க்கத்து மருமகள்


'தாலிச்சிறை' என்று சொல்ல
ஒப்ப‌வில்லை ம‌ன‌து
தானாய் வ‌ரைந்த‌ வ‌ட்ட‌த்தை
'சிறையென்றா' சொல்வ‌து?

க‌ண்ணாடி வேலி உடைப்ப‌து க‌டின‌மில்லை
ம‌‌ன‌மில்லையென்ப‌தே ம‌க‌த்தான உண்மை!
மாற்ற‌ம் வ‌ரும் ந‌ம்பிக்கையில்
புழுதியாயினும் சுகித்த‌ப‌டி.....

12 comments:

ஆ.ஞானசேகரன் said...

//கூலிக்கு அதிக‌மாய் கூவியும்
அற்ப‌மாய் கிடைத்த‌ பொருளோடு
கூடு திரும்புகிறேன்!
விசிறி விட‌ வேண்டாம்
வேலால் குத்தாம‌லிருந்தால் ச‌ரி!//

எதற்காக இந்த ஏக்கம்..

ஆ.ஞானசேகரன் said...

//'தாலிச்சிறை' என்று சொல்ல
ஒப்ப‌வில்லை ம‌ன‌து
தானாய் வ‌ரைந்த‌ வ‌ட்ட‌த்தை
'சிறையென்றா' சொல்வ‌து?

க‌ண்ணாடி வேலி உடைப்ப‌து க‌டின‌மில்லை
ம‌‌ன‌மில்லையென்ப‌தே ம‌க‌த்தான உண்மை!
மாற்ற‌ம் வ‌ரும் ந‌ம்பிக்கையில்
புழுதியாயினும் சுகித்த‌ப‌டி.....//


எதார்த்தமான உண்மை..

கயல் said...

//கூலிக்கு அதிக‌மாய் கூவியும்
அற்ப‌மாய் கிடைத்த‌ பொருளோடு
கூடு திரும்புகிறேன்!
விசிறி விட‌ வேண்டாம்
வேலால் குத்தாம‌லிருந்தால் ச‌ரி!//

எதற்காக இந்த ஏக்கம்..

//
வாங்க ஞானசேகரன்!
தோழிக‌ள் வ‌ட்ட‌த்தில் இது போலும் நிறைய‌ புல‌ம்ப‌ல்க‌ளை பார்த்த‌துண்டு! அந்த‌ பாதிப்பு வார்த்தைக‌ளாய் இப்ப‌டி! கொஞ்சம் அதிக‌மோ? ச‌ரி! அடுத்த‌முறை அட‌க்கி வாசிக்கறேன்!

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி!

பழமைபேசி said...

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!தினுசு: According to kind; தரந்தரமாய்.

மவளே, அருமை அருமையாக் கவிதை எழுதி, நாங்களும் அதுல குறை கண்டுபிடிக்க முடியாம, எவ்வளவு நாளு? அப்பாட....இன்னைக்குதான் ஒன்னும் சிக்குச்சு.... நிம்மதிடா சாமீ!!

கயல் said...

//
வெற்றி! வெற்றி!! வெற்றி!!!தினுசு: According to kind; தரந்தரமாய்.

மவளே, அருமை அருமையாக் கவிதை எழுதி, நாங்களும் அதுல குறை கண்டுபிடிக்க முடியாம, எவ்வளவு நாளு? அப்பாட....இன்னைக்குதான் ஒன்னும் சிக்குச்சு.... நிம்மதிடா சாமீ!!
//
ஆகா! சிக்கிட்ட‌னே! அவிங்க‌ளா நீங்க‌? இருக்க‌ட்டும்! இருக்க‌ட்டும்! பாத்துக்குறேன்!
தினுசு-‍திருத்திட்டேனுங்க‌!

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ஆசானே!

vasu balaji said...

இடுகைக்கிடுகை மெருகேறுகிறது. பாராட்டுக்கள்.

கலகலப்ரியா said...

//உத‌ட்டில் ஒட்ட‌ வைத்த‌ புன்ன‌கையுட‌ன்
உற்சாக‌மாய் போலி ஊர்வ‌ல‌ம்//

கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், கற்பு, சுற்றம், சூழல், தெரிஞ்சவா, தெரியாதவான்னு.. தெரிஞ்ச தெரியாத சொற்களெல்லாம்.. சேர்ந்து அறிஞ்சோ.. அறியாமலோ.. இப்டி வாழ இல்லை.. இருக்க வேண்டி ஆய்டுது.. இதுக்கு ஒன்று, இரண்டு தவிர யாரும் விதிவிலக்கில்லைன்னு தோண்றது.. சிலருக்கு துருப்பிடித்த வேல்.. சிலருக்கு.. தங்க வேல்..!

அருமையா இருக்கு பதிவு.. துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.. இந்த நெருப்பு இப்டியே இருக்கட்டும்.. :)

கயல் said...

//
இடுகைக்கிடுகை மெருகேறுகிறது. பாராட்டுக்கள்.
//
வாங்க பாலா! நன்றி!!!

கயல் said...

//
//உத‌ட்டில் ஒட்ட‌ வைத்த‌ புன்ன‌கையுட‌ன்
உற்சாக‌மாய் போலி ஊர்வ‌ல‌ம்//

கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், கற்பு, சுற்றம், சூழல், தெரிஞ்சவா, தெரியாதவான்னு.. தெரிஞ்ச தெரியாத சொற்களெல்லாம்.. சேர்ந்து அறிஞ்சோ.. அறியாமலோ.. இப்டி வாழ இல்லை.. இருக்க வேண்டி ஆய்டுது.. இதுக்கு ஒன்று, இரண்டு தவிர யாரும் விதிவிலக்கில்லைன்னு தோண்றது.. சிலருக்கு துருப்பிடித்த வேல்.. சிலருக்கு.. தங்க வேல்..!

அருமையா இருக்கு பதிவு.. துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.. இந்த நெருப்பு இப்டியே இருக்கட்டும்.. :)
//

ஆமா! நீங்க சொல்லுறது சத்தியம்! நன்றி!!!

Sasirekha Ramachandran said...

நல்லதோர் வீணை செய்தே இல் துவங்கி புழுதியாயினும் சுகித்த‌ப‌டி.....வரை அத்தனையும் அருமையான வரிகள்....எதை கோடிட்டுச் சொல்வதெனத் தெரியாமல் விழிக்கிறேன்!!!

கயல் said...

//
Sasirekha Ramachandran said...
நல்லதோர் வீணை செய்தே இல் துவங்கி புழுதியாயினும் சுகித்த‌ப‌டி.....வரை அத்தனையும் அருமையான வரிகள்....எதை கோடிட்டுச் சொல்வதெனத் தெரியாமல் விழிக்கிறேன்!!!
//
நன்றி சகோதரி!!

மயாதி said...

ய‌தார்த்த‌ம் பேசுவ‌தாய் சொல்லிக் கொண்டு
எத்த‌னையோ முறை மிச்ச‌மின்றி
கொன்றிருக்கிறாய் என்னை!
ப‌திலேதும் சொல்லாம‌ல் பாவையாய் நான்!


இதுபோல நிறைய யதார்த்தங்களை பேசியிருக்கிறீர்கள் ...
தொடர்ந்து எழுதுங்கள் மேலும் பல பெண்களை எழுத வையுங்கள்.

உங்கள் கவிதை தேவையில்லாமல் கொஞ்சம் நீண்டு விட்டதாய் உணர்கிறேன், ஒரு சில அடிகளை நீக்கினால் இன்னும் மெருகேரும் என நினைக்கிறேன்.( எனது கருத்தைச்சொல்வதற்கு உரிமையுள்ள தளம் என்ற நம்பிக்கையில் சொல்லி விட்டேன், பிழையாக இருந்தால் எனது பின்னூட்டத்தை அழித்து விடுங்கள்)

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!