Monday, April 20, 2009

ஒளிவ‌ரும் நேர‌ங்க‌ள்



ஓய்வு
ஒழிச்சலின்றி
உழைத்து விட்டு
உயிருள்ள சவமாய்
படுக்கையில் விழுகிறேன்!
பசியாறச் சொல்லியும்
பாசமாய் தலை தடவியும்
பக்கத்தில் நீ!

தன்மானம் துடித்து விழ
தளர்வாய் துவல்கிறேன்
இயலாமையில் கண்ணீர்
நில்லாமல் ஓட
பதறித் துடிக்கிறாய்
எனக்கே எனக்காய் நீ!

என்னை எடுத்தெறிந்து பேசும்
எல்லார் ம‌த்தியிலும் என‌க்காய் பேச‌
'என்ன‌வ‌ன்' ‌என்கிற‌ உரிமையில்
அன்பான ஆத‌ர‌வாய் நீ!

கால‌ ஓட்ட‌த்தில் க‌ரைந்து போன‌
க‌ன‌வுக‌ளை காப்பாற்றி க‌ரையேற்ற‌
க‌ட‌வுளாய் நீ!

த‌னிமையில் பேசுகையில்- நீ
த‌வ‌றி சொன்ன‌ வார்த்தைக‌ளுக்காய்
வாயாடிச் சிரிக்கையில்
வாரிய‌ணைத்து முத்த‌மிடும் நீ!

களிப்பில் கடமையை மறந்து
குழ‌ந்தையாய் மாறி குதூக‌லிக்கையில்
செல்ல‌மாய் குட்டி பொறுப்புண‌ர்த்தும்
புத்திசாலி போத‌க‌னாய் நீ!

த‌னிமையான‌ நேர‌ங்க‌ளில்
த‌ண்மையாய் சொல்கிறாய்
"க‌ல‌ங்காதே! நானிருக்கிறேன்"
துணிவோடு ந‌ட‌க்கிறேன் மீண்டும்!

ப‌குத்தறிவு வேலை செய்கையில்
புரிகிற‌து தெளிவாய்!
நீ என்ப‌து என் க‌ன‌வுக‌ளின்
எச்சம் என்று!

ம‌ன‌தின் உட்சுவரில் பூட்டி வைத்திருந்த
கற்பனை பிம்பம் கட்டுகாவல் தாண்டி
கள்ளனாய் சில‌ நேர‌ம் இப்ப‌டி
என்னுட‌ன் உலா வ‌ரும் நேர‌ங்க‌ள்
க‌வ‌லை தோய்ந்த‌ க‌ண்க‌ளில்
காதல் "ஒளிவ‌ரும் நேர‌ங்க‌ள்"!

3 comments:

பழமைபேசி said...

பொறுமையா, நேரமெடுத்து இடுகை இடுறீங்க.... வழுங்றதே இருக்குறது கிடையாது! சபாசு!!

கயல் said...

நன்றி! ஆசானே! என் சிற்றறிவுக்கு எட்டிய மட்டும் ஏதோ கிறுக்குறேன்!!

vasu balaji said...

பழமை தம்பியை வழி மொழிகிறேன். பாராட்டுக்கள்.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!