Tuesday, April 7, 2009

காணிக்கை

ஆதிக்கமிகுந்த சமுகத்தில் அட‌ங்க‌ ம‌றுத்து
அதிகார வர்க்கத்தின் ஆணவத்தை ஆத்திரமாய்
தட்டி கேட்டதே நின் தவறென போயிற்றோ?

வியர்வை சிந்தி வரப்பேற்றி
வயல் உழுது விதையிட்டு
உயிர் கொடுத்து ப‌யிர் வ‌ள‌ர்த்து
அறுவ‌டை பார்க்கையில்
அரைப்பிடி நெல்லேயுன‌க்கு
அதுவும் அடிமையாய் வாங்கிப் போ!
அதிகார‌மாய் சொன்ன‌வ‌னை
அனுச‌ரித்து போகாத‌தோ ‍உன்
த‌ப்பென‌ சொல்லுகின்றார்!
நீ த‌மிழ‌ன‌ல்லாவா?
எப்ப‌டி பிழைப்பாய் நீ
த‌ன்மான‌ம் விற்று?

உழுத‌வ‌னுக்கே உழ‌வுநில‌ம் சொந்த‌ம்
பொதுவுட‌மைச் சித்தாந்த‌ங்கள்
பெய‌ர‌ள‌வில் ப‌ள்ளிப்பாட‌மாய் இங்கே!
நெல்ம‌ணி எந்த‌ச் செடியில் காய்க்கும்?
பிள்ளையின் கேள்வியை பெருமையாய் பீற்றிக்கொண்டு!
தோளைத் த‌ட்டி முதுகை வ‌ளைக்கும் இராஜ‌த‌ந்திர‌ம்
தெரியாம‌ல் காலை தொட்டு சொகுசுக்காய்
தமிழின அடையாளத்தை தொலைத்து விட்டு
பதவிக்காய் நிறமாறும் அரசியல் தலைவர்கள்
இதையுமீறி எழுச்சிக்காய் யாராவது கருகிப்போனாலும் - ‍அது
அன்றைய நாளிதழ் செய்தியாய் மட்டும்....
த‌மிழா! இவ‌ர்களிட‌மா எதிர்பார்க்கிறாய் தார்மீக‌ ஆத‌ர‌வை?

வ‌ந்தாரை வாழ வைக்குமாம் த‌மிழ‌க‌ம்
வாழ்க்கை முழுதும் ஈழ‌த்த‌மிழ‌ன் - த‌ன்
விலாச‌த்தை தேடித் தேடி நாடோடியாய்-எஞ்சியோர்
ம‌ண்ணை விட்டு ம‌ர‌ண‌ம் தேடிக் கொண்டு!
புத்தனை வணங்கும் கூட்டம்
புத்தநெறி வழுவாதிருத்தல் அவசியமன்றோ?
தீர்வென‌ச் சொல்லிச் சொல்லி
தீது செய்யும் தீயோர் ந‌டுவில்
த‌ன‌துயிரை தான‌மாய் பெற்று வாழ‌
த‌மிழ‌ன் ஒருபோதும் தயாரில்லை
த‌ன்மான‌ம் இழ‌க்காத‌வ‌னை 'தீவிர‌வாதியென்று'
த‌னிப்ப‌ட்ட‌ தீர்மான‌த்தை த‌ர‌ணியெங்கும்
நிலையென‌ப் ப‌ர‌வ‌ச்செய்த‌‌ அர‌க்க‌ர் கூட்ட‌ம்
பொய்மைக்கு கிடைத்த‌ வெற்றியென‌
புல‌ம் பெய‌ரும் த‌மிழ‌ர் கூட்ட‌ம்...
எழில் கொஞ்சும் ஈழத்தீவில்
எழுத்தாணிக்குப் ப‌தில் எந்திர‌ துப்பாக்கி
இடிந்த‌ வீடுக‌ள் த‌க‌ர்ந்த‌ நிலைப்பாடு
மயானமாகிப் போன கிராமங்கள்
என்றைக்கு வ‌ரும் ம‌ர‌ண‌ம்
எதிர்பார்ப்பை தாங்கிய‌ப‌டி
த‌ன்மான‌ த‌மிழ‌னின்று த‌ன்ன‌ந்த‌னியாய்
த‌ன‌க்கான‌ ச‌ரித்திர‌த்தை எழுத‌
த‌ன் குருதியில் ந‌னைத்த‌ தூரிகையோடு.....

ப‌ல‌ ஆண்டு போராட்ட‌ம் - ஆனால்
இன்று,
த‌ன் விர‌ல் கொண்டு
த‌ன் க‌ண்ணைக் குத்தும்
ம‌னிதாபிமான‌ ப‌டுகொலை
தீவிர‌வாத‌ எதிர்ப்பு என்கிற‌ பெய‌ரில்...
க‌ருகிச் சாவ‌து அப்பாவி த‌மிழின‌ம் மட்டுமென்று
உல‌க‌ம் எப்போது ஏற்கும்?

க‌டுமையாய் எச்ச‌ரித்தாலும்
க‌ண்ணீர் ம‌ட்டும் க‌ட்டுக‌ட‌ங்காம‌ல்...
மொழி,இன‌ம்,ம‌த‌ம் க‌ட‌ந்த
இந்திய‌னாய் இருந்தாலும்
ம‌ற‌த்த‌மிழா உன் தியாகங்களுக்காய்
என்னால் இய‌ன்ற‌ காணிக்கையாய்
இந்த‌ க‌ண்ணீர் வ‌ரிக‌ள்

உன்னை விற்று ஓட்டு வாங்கும்
த‌ர‌மிழ‌ந்த‌ த‌மிழ‌னுக்கு ஒரு வார்த்தை
பார‌தியின் வ‌ரிக‌ளில்...
'சீச்சீ! நாயும் பிழைக்கும் இந்த‌ பிழைப்பு'

6 comments:

பழமைபேசி said...

சொல்லத் தெரியாது, கலங்குபவர்களுள்
ஒருவனாய்!

கயல் said...

நானும் அதுபோல‌வே ம‌ன‌தால் உழ‌ன்று க‌விதையாவ‌து த‌ர‌லாமென்றெண்ணி இப்ப‌டியாக‌...
வருகைக்கு ந‌ன்றி ப‌ழ‌மைபேசி!!!

கலகலப்ரியா said...

சித்தப்பிரமை பிடித்து, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் என்னைப் போன்றவர்களுக்கு இவ்வாறான படைப்புகள் மிகவும் ஆறுதலாக இருக்கின்றன.. நன்றி சகோதரி..!

கயல் said...

//
கலகலப்ரியா said...
சித்தப்பிரமை பிடித்து, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் என்னைப் போன்றவர்களுக்கு இவ்வாறான படைப்புகள் மிகவும் ஆறுதலாக இருக்கின்றன.. நன்றி சகோதரி..!
//
நன்றி சகோதரி!! என் கவிதைகள் அரசியலை நோக்கி திசை மாறுவதாய் நண்பர்கள் வட்டத்தில் விமர்சனங்களை எதிர்கொள்கிறேன்!! அடிப்படை மனிதாபிமானம்,இன உணர்வு எப்படி அரசியலாகும்? நியாமான இன உணர்வு கூட அரசியலாவது கசப்பான உண்மை! வலியோடு வந்த எனக்கு தங்களின் வார்த்தைகள் ஆறுதலாய்...

கலகலப்ரியா said...

இதுதான் இப்போ உலகம்.. ஜனங்க குப்பை குப்பையா சாவுறாங்கன்னு கத்தினா.. புலி ஆதரவாளர்கள்..! எல்லாம் பார்த்துக்கொண்டு அடிமையாய் உயிருடன் இரு.. இல்லையேல் செத்துத் தொலை என்பதுதான் எல்லோரினதும் சாராம்சம்..! மனிதம் செத்து விட்டது என்று சொல்ல முடியவில்லை.. இருந்தால் அல்லவா சாவதற்கு. அது அவ்வப்போது, பிறந்து, தலையை நீட்டிக் கொண்டிருந்தது.. இப்பொழுது அதன் கால் கையை ஒடித்து, தலையை நீட்டினால் தலையையும் ஒடிப்பேன் என்று முடக்கிப் போடப்பட்டிருக்கிறது.

கயல் said...

எங்கேயோ போகுது ந‌ம்ம‌ ஜ‌ன‌நாய‌க‌ம்!! பார்ப்போம் பொறுமை தான் நிறைய‌ இருக்கே! இந்திய‌னா பொற‌ந்தா இப்ப‌டித் தான் இருக்க‌னும் போல‌!! :‍‍-(

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!