Monday, April 6, 2009

கடலோரம்

கால்களை நனைத்தபடி
கடற்கரையோரம்!

கனமான மனசு லேசாக‌
எனக்கு நானே செய்யும்
அன்றாட வைத்தியம்!

ஓடிவந்து தொட்டுப் பிடித்து
நாம் சுக‌த்தில் திளைக்கையில்
விட்டுப் பிரியும் அலையின்
விளையாட்டு எப்பவும் என‌க்கு
ஏமாற்றம் கலந்த பேரானந்தம்!

உள்ள‌க் கொதிப்புட‌ன்
ஆத்திர‌ப் பார்வையில்
அட‌ங்காத‌ சின‌த்துட‌ன்
ஆயிர‌முறை வ‌ந்திருக்கிறேன்
உன்னிட‌ம் ஆறுதல் தேடி!!

அலைகளின் ஆர்ப்பாட்ட‌த்தில்
சீறிவ‌ரும் நீர்த்திவ‌லைக‌ளில்
சில்லிட்ட‌ நனைத்த‌லில்
சின‌ம் சிதறிப் போன‌துண்டு கூட‌வே
சிறுமியாய் மாறி சிலிர்ப்ப‌துமுண்டு!
க‌வ‌லைகள் க‌ண்ணீராய்
பரிணாம‌ மெடுக்கையில்
'ஹோ' வெனும் பேரிரைச்சல்
க‌ண்ணீருக்கு போக்கு காட்டிவிட்டு
ம‌கிழ்ச்சிக்கு விதை போடுவ‌து த‌னிக்க‌தை!

உள்ள‌க்கிட‌க்கைகளில் ஒன்றையாவ‌து
உன்னிட‌ம் ச‌த்தமாய் முறையிடுவ‌து
வ‌ழ‌க்க‌ம் என்பதறியாத தோழி
ஒருத்தி 'பைத்தியமென்று' அல‌றியோடிய‌து போல்
கோமாளியான‌ க‌தைகள் ப‌ல‌வுண்டு!

எல்லோருக்கும் எப்ப‌டியோ
எனக்குள் நீ
சில‌ ச‌ம‌ய‌ம் தோழியாய்
சில‌ ச‌ம‌ய‌ம் ஆலோச‌கராய்
சில‌ ச‌ம‌ய‌ம் ஆசிரிய‌னாய்
பல சமயம் ஞானியாய்
உண்மையாதெனில்
ந‌ம‌க்குள்ளான‌ பிணைப்பை
உருவ‌க‌ப்படுத்த‌ வார்த்தைகளேயில்லை!

7 comments:

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

அலைகளின் ஆர்ப்பரிப்பு
இந்த அழகு தமிழின்
மலர்ப் பாதங்கள்
தொட்டுவிட வந்து
சென்றனவோ!

இன்னும் தொட்டுவிட
கரை வந்து வந்து
பார்த்துச் சென்று
ஏமாந்தனவோ?!

கலகலப்ரியா said...

ரொம்ப அழகா இருக்குங்க கவிதை.. உங்க பெயரைப் போலவே..

கயல் said...

//
பழமைபேசி said...
அலைகளின் ஆர்ப்பரிப்பு
இந்த அழகு தமிழின்
மலர்ப் பாதங்கள்
தொட்டுவிட வந்து
சென்றனவோ!

இன்னும் தொட்டுவிட
கரை வந்து வந்து
பார்த்துச் சென்று
ஏமாந்தனவோ?!

//

நன்றி பழமைபேசி! ரொம்ப பொறாமையா இருக்குப்பா உங்க அழகான பின்னூட்டத்த பாக்குறப்போ! இன்னும் நல்ல கவிதையா தந்திருக்கலாமோன்னு ஆதங்கமானவும் இருக்கு!
வர்றேன் மறுபடியும்!

கயல் said...

//
கலகலப்ரியா said...
ரொம்ப அழகா இருக்குங்க கவிதை.. உங்க பெயரைப் போலவே..
//

வாங்க!
நன்றிங்க!

பிளாட்டினம் said...

எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.

குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.

எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.

எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!

இப்படிக்கு
சாவின் விளிம்பில் உள்ள
உங்கள் தொப்புள்கொடி உறவுகள்

நாமக்கல் சிபி said...

kadal - kayal Good Combination! Mindla vechikkuren!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!