Tuesday, August 14, 2012

மழைக் கதை

ஒளிவீசும் இறக்கைகளின் சிறகடிப்பில்
வண்ணங்கள் தூவும் தேவதையொருத்தி
கருமுகிலொன்றை நிறமாற்றயெண்ணி
பெருஞ்சித்திரக் கனவுகளோடு
ஆர்வமாய் துரத்தலானாள்

சூல்கொண்ட மழைத்துளிகள்
தள்ளாடும் தாய்மை
பிரசவிக்க தருணம் பார்த்து
கார்முகிலோ வலியோடு
மிதந்தபடியிருந்தது

அம்முகில் கூட்டம் அயர்ந்த நேரம்
இமைகளின் சிமிட்டலில்
பொய்வலை பின்னி நைச்சியமாய்
வட்டமிட்டாள் நிறங்களின் காரிகை

பனிச்சிப்பங்களை ஏடுகளாக்கி
விரல்களை தூரிகைகளாக்கி
பேரரசுகளின் வரலாற்றை
வண்ணங்களால் வடிவங்களாக்கினாள்

உயிர்கொண்டெழுந்த சித்திரங்கள்
விண்ணில் நகர்ந்தபடியிருந்தது
அலங்கரிக்கப்பட்ட தேராக...

கதை சொல்லி நிறுத்தினேன்
புரிந்தும் புரியாமலும்
எனை மொய்த்தன கண்கள்
“பிறகென்னவாயிற்று?”
வார்ததைகளாகவும் பார்வைகளாகவும்
கேள்விகள்
எம்மிடம் நிறைத்தன

ம்ம்...

பிறகு...

மலை முகடொன்றின் மோதலில் 
நீர்குடமுடைந்து மழை பிறந்தது

மண்ணோடு புதைந்தன
நிறுவிய கதாபத்திரங்கள்
கரைந்த ஓவியங்கள்
பூக்களாகவும் புற்களாகவும்
பூமியில் மாற்றுரு கொண்டன

சிதைந்து போன சித்திரக்கனவுகள்
சீர்படும் பொருட்டு
பட்டாம் பூச்சிகளின் இறக்கைகளில்
சிற்றரசுகளை நிறுவலானாள்
நிறங்களின் தேவதை

இன்றும் உலவியபடியிருக்கிறது
தேவதையவளின் உயிரோவியங்கள்
வண்ணத்துப் பூச்சிகளாக!

4 comments:

கவி அழகன் said...

Vithiyasamana kavithai valthukkal

மதி said...

அருமையான வார்த்தைப் பிரயோகம் .. ரசிக்கத்தக்க கவிதை

'பரிவை' சே.குமார் said...

மழைக்கதை மழை நேரத்தில் காற்றில் அடிக்கும் மண்ணின் வாசம் போல் அழகாய் இருக்கிறது.

பழமைபேசி said...

//நிறமாற்றவெண்ணி //

நிறமாற்றயெண்ணி

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!