கவலையில்லா மனம்
வேண்டுமெனக் கேட்டேன்
இறப்பில்லாத வீட்டில்
யாசித்து வரப் பணித்த
கௌதமன் நினைவு
வருகிறதென சொல்லிச் சிரித்தாய்
தன்னம்பிக்கை உலர்ந்த
பொழுதொன்றில் தளர்ந்து
உன்மடி சாய்ந்தேன்
மில்டனின் கதை சொன்னாய்
கண்கள் ஒளிரப் பெற்றேன்
துரோகத்தின் நிழல் படர்கையில்
சுடுமணல் தொட்ட கயலாய்...
எல்லா நேரத்திலும்
கடல் சேர்த்த கடவுள் நீ!
தோழியின் பிரிவு சொன்னேன்
சொல்லொணா துயரென
அரற்றினேன்
ஓஷோவின் புத்தகங்கள் தந்தெனக்கு
இருத்தலின் நிலையாமை
உணரச் செய்தாய்
ஒட்டாத சமூகம் பற்றி
உதவாத கலாச்சாரம் பற்றி
இயலாத என் நிலை பற்றி
அங்கலாய்த்த போழ்துகளில்
மென்சிரிப்பொன்றை உதிர்த்தவாறே
நகர்ந்து விடும் மெல்லிய மௌனத்தில்
கற்றுத்தீரா பாடங்கள் இன்னுமுண்டு!
தண்டவாளங்களின் காதல்
சொன்னாய்
துக்கம் துச்சமெனுமளவு
உலகம் பகிர்ந்தாய்
வெற்றிகள் வாங்கிவர
என்னைச் செதுக்கித் தந்தாய்
உன்னாலெனக்கு
கவிஞர்கள் பலரும்
கவிதைகள் பலதும்
காட்சியாய் கருத்தாய்
வாய்க்கப் பெறினும்
இன்று வரை நீ
ஆண் என்கிற அந்நியமற்று
மனதுக்கு நெருக்கமாய்
நிஜத்தில் தூரமாய்
எதிர்பார்ப்பில்லா நட்போடு
எனக்கான துடிப்போடு
நண்பனாய்...
5 comments:
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
ஒட்டாத சமூகம் பற்றி
உதவாத கலாச்சாரம் பற்றி
இயலாத என் நிலை பற்றி
அங்கலாய்த்த போழ்துகளில் - நட்புகள் இப்படி கூட உதவுமா?
அருமையான வரிகள் இனிமையான தகவல்கள்..
very nice poem.. a tribute to male-female friendships ..
வாழ்த்துக்கள்... மிக அருமையான கவிதைப் பதிவுகள்
அருமையான கவிதைகள். தொடர்ந்து தங்கள் கவிதைகள் எல்லாம் படிக்க பல நாட்கள் வேண்டும் போல... இன்றுதான் பார்த்தேன், படித்தேன்... இத்தனை நாள் விட்டுவிட்டோமே என்ற உணர்வு. நண்பன் பற்றிய கவிதையிலிருந்து ஆரம்பிப்பதில் மகிழ்ச்சி.
தோழமையுடன் ஸ்நாபக் வினோத்.
snabakvinod.blogspot.com
Post a Comment