Saturday, April 9, 2011
நிறுவுக நியதி குற்றமென்று!
எப்போதும் ஒருகோட்டில்
அடங்குதலில் உவப்பில்லை
திசைமாறி திசைமாற்றி
அறிவன அத்தனையும்
அறிந்துவர உத்தேசம்
நைந்த சிறகுகள்
உருப்பெற காத்திருக்கிறேன்!
செய்யாதே எனபதை செய்யெனவும்
செய்யென்பதை செய்யாதேயெனவும்
செவியுறுகின்றன எம்புலன்கள்!
பட்டாம்பூச்சிகள் மீதே கவனம்
ஒரு நாளின் சமபங்கை மனம்
திக்கின்றி அலைதலில் செலவிடுகிறது!
ஆற்றுப்படுத்த வேண்டாமென்பது
ஆறாம் அறிவுக்கு தற்போதைய கட்டளை!
ஒழுங்கற்று இருத்தலின் பயன்யாதென
கற்பித்துப் போனாள் கீழ்வீட்டுச்சிறுமி
அழுகையை காட்டிலும் அலங்கோலமாக்கல்
அத்தனை பிடித்தது எனக்கு!
சற்று நேரத்திலெல்லாம்
என்னறையின் அமைதியை
மழலையால் கிழித்துப் போட்டவள்
பிஞ்சு விரல்களின் மந்திரத்தால்
மாயங்கள் செய்யத்துவங்கினாள்.
சிதறித் தெளித்திருந்த திரவங்களிலெல்லாம்
வான்கோவும் வர்மாவும் தெரியத் துவங்கி
கிழித்தெறிந்த புத்தகங்களிலெல்லாம்
பைரனும் பாரதியும்
போதாதென்று புத்தன் வேறு
பொறுப்பாய் வந்து சொல்லிப் போனான்
வாழ்வென்பது இது தானென்று!
நானொரு பறவை போலே
உருமாறும் தருணம்
‘அம்மா’ நினைவு வர
அவசரமாய் ஓடி மறைந்தாள்.
படியிறக்கிப் போனபின்
வெறிச்சென்றானது
என் வீடும்
அவள் வாசம் படர்ந்த
என் மனதும்!
ஆனால் இப்போதும்
கண்கொள்ளாக் கனவுகளுடன்
காலச்சக்கரத்தில்
நைந்தயென் மென்சிறகுகள்
உருப்பெற காத்திருக்கிறேன்!
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!
13 comments:
//கண்கொள்ளாக் கனவுகளுடன்
நைந்த சிறகுகள்
உருப்பெற காத்திருக்கிறேன்!//
ம்ம்ம்
எப்போதும் ஒருகோட்டில்
அடங்குதலில் உவப்பில்லை
திசைமாறி திசைமாற்றி
அறிவன அத்தனையும்
அறிந்துவர உத்தேசம்
நைந்த சிறகுகள்
உருப்பெற காத்திருக்கிறேன்!//
ஆகா... ஆரம்பமே...அருமையான குறியீட்டில் தொடங்குகிறது,
இறக்கை விரித்துப் பறக்கத் தொடங்கும் ஆழ்மன எண்ணங்களை அழகுறச் சொல்லியிருக்கிறீங்கள்.
செய்யாதே எனபதை செய்யெனவும்
செய்யென்பதை செய்யாதேயெனவும்
செவியுறுகின்றன எம்புலன்கள்!//
அடடே.....இது தானே மனித மனங்களின் யதார்த்த குணம்.
ஆற்றுப்படுத்த வேண்டாமென்பது
ஆறாம் அறிவுக்கு தற்போதைய கட்டளை!//
மனதின் ஆசைகளைக் கட்டுப்படுத்தக் கடுவாளம் போடக் கூடாது என்பதனை நாசூக்காய் உரைத்திருக்கிறீங்க.
அழுகையை காட்டிலும் அலங்கோலமாக்கல்
அத்தனை பிடித்தது எனக்கு!//
இது தானே கவிஞர்களின் இயல்பான குணம்......
பாடாத ஒரு பொருளை, பார்க்க முடியாத விடயங்களை, வேண்டாத, வெறுப்புத் தரும், அழுக்கான விடயங்களை அழகாக்கிப் பாடுவதும் ஒரு பண்பு தானே?
பிஞ்சு விரல்களின் மந்திரத்தால்
மாயங்கள் செய்யத்துவங்கினாள்//
யாழ் இனிது, ,குழல் இனிது என்பார்..தம் மழலைச் சொல்............. என்பதனை மெய்ப்பிக்கிறது.............இவ் வரிகள்..
சிதறித் தெளித்திருந்த திரவங்களிலெல்லாம்
வான்கோவும் வர்மாவும் தெரியத் துவங்கி
கிழித்தெறிந்த புத்தகங்களிலெல்லாம்
பைரனும் பாரதியும்
போதாதென்று புத்தன் வேறு
பொறுப்பாய் வந்து சொல்லிப் போனான்
வாழ்வென்பது இது தானென்று!//
வாழ்வின் அர்த்தத்தை அறிய புத்தகங்கள் வகிக்கும் பங்கினைச் சுட்டுகிறீர்கள்.
நானொரு பறவை போலே
உருமாறும் தருணம்
‘அம்மா’ நினைவு வர
அவசரமாய் ஓடி மறைந்தாள்.//
பாசப் பிணைப்பினை விளக்குவதற்கும், கவிதையின் போக்கின் மாற்றத்திற்கும் இவ் வரிகள் காரணமாய் அமைகின்றன,
படியிறக்கிப் போனபின்
வெறிச்சென்றானது
என் வீடும்
அவள் வாசம் படர்ந்த
என் மனதும்!//
ஆமாம், தனிமையில் இருக்கையில் எல்லாவற்றையும் தொலைத்து விட்ட, பிரம்மை ஏற்படுவதை அழகுறப் புனைந்திருக்கிறீங்கள்.
ஆனால் இப்போதும்
கண்கொள்ளாக் கனவுகளுடன்
நைந்த சிறகுகள்
உருப்பெற காத்திருக்கிறேன்!//
கவிதை மீண்டும், மீண்டும் பறக்கத் துடிக்கும் ஒரு இதயத்தின் உள்ளத்து, உணர்வுகளைச் சுட்டி நிற்கிறது.
////////////////////
படியிறக்கிப் போனபின்
வெறிச்சென்றானது
என் வீடும்
அவள் வாசம் படர்ந்த
என் மனதும்!
ஆனால் இப்போதும்
கண்கொள்ளாக் கனவுகளுடன்
நைந்த சிறகுகள்
உருப்பெற காத்திருக்கிறேன்!
////////////////////
அருமையான வரிகள்...
எப்போதும் ஒருகோட்டில்
அடங்குதலில் உவப்பில்லை
BTR என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்(BREAK THE RULE).
கோடுகள் மீறப்படும் போது தான் காவியங்களே உருவாகியிருக்கின்றன.
அதனால் நியதிகளை அவ்வப்போது மீறுவது ஏற்புடையது தான்.
சுந்தர்
// பட்டாம்பூச்சிகள் மீதே கவனம்
ஒரு நாளின் சமபங்கை மனம்
திக்கின்றி அலைதலில் செலவிடுகிறது!
ஆற்றுப்படுத்த வேண்டாமென்பது
ஆறாம் அறிவுக்கு தற்போதைய கட்டளை!//
அருமையான கவிதை .. வாழ்த்துக்கள்
Post a Comment