Friday, September 24, 2010

குருவிக்கூடு

”அம்மு!விடிஞ்சு இம்புட்டு நேரமாகியும் இன்னுமா தூங்குற? எழுந்து பல்ல வெளக்கிட்டு வா! சுக்குத் தண்ணி இருக்கு குவளையில! எதமா இருக்கும் தொண்டைக்கு..எந்திரி!எந்திரி!”
நேத்து இருமினதுக்கு இன்னிக்கு தண்டனை.அனுமதிக்கு கூட காத்திராமல் போர்வையை என்னிலிருந்து பிரித்து கவனமாய் மடிக்கத் துவங்கும் அப்பத்தா,என் விடிகாலைத் தூக்கத்தைக் கெடுக்கும் வில்லி. மனதுக்குள் அவளுக்கு ஆயிரமுறை அர்ச்சனை செய்தவாறே திருப்பள்ளி எழுவது எல்லா மழைக்கால விடுமுறையிலும் எனக்கு வழக்கம். இல்லை பதிலுக்கு முரண்டு பிடித்து படுக்கலாம் என்றால் வீட்டில் எல்லோரிடமும் நான் அர்ச்சனை வாங்கும் பரிதாபம் வாய்க்கக்கூடும்.

பல்துலக்கியபடியே சன்னல் வரை நகர்ந்து பக்கவாட்டில் நீண்டு எட்டிப்பார்க்கும் மாமரத்தை நோட்டமிடுவது வழக்கம்.பழம் ஏதாவது இருக்கா, அணில் கொறித்திருக்கிறதா, தரையில் விழுந்து கிடைக்கிறதா என்பது போலும் புள்ளிவிவரக் கணக்குகள் அந்த சில நிமிடங்களில் ஞாபகத்திரையில் பதியப்படும். பொறுப்பா இருக்கறதா காட்டிக்க வேண்டிய சந்தர்பங்கள் இருக்குமென்பதால் இது போலும் சிலவை அவசியம்.இத்தனை மேதாவித்தனமும் முடிகையில் சுக்குத்தண்ணி பச்சைத் தண்ணியாகியிருக்கும்.

‘படிக்கிற புள்ள வேலையேதும் சொல்லிப்புடாதீக. பரீட்சை இருக்காம் அதுக்கு.போத்தா மேவூட்டுக்கு போயி படி’, இப்படி யாராவது சொல்லி என்னை கெளரவிப்பது வழக்கம்.மத்தியான நேரங்களில் படிப்பதாய் பேர் பண்ணிக் கொண்டு மாடியறைக்கு வருவதும் சத்தமாய் வானொலியை அதிரவிட்டு என் கடமையுணர்ச்சியின் ஸ்திரத்தை ஊருக்கு உணர்த்துவதுமாய் போகும்.இன்னிக்கு ஏனோ மாமரத்து கிளைகளில் ஏதோ பரபரப்பு.இரண்டு குருவிகள் வலுவானதொரு கிளையின் பிடிப்பில் தன் கூட்டைக் கட்ட ஆரம்பித்திருந்தது.ஏறத்தாழ முடிந்திருந்த கூட்டின் கட்டமைப்பில் இன்னும் ஏதோ சில புற்களை தன் அலகால் அழகாய் மேலும் கீழும் நெய்ய ஆரம்பித்தது. அதன் சாமர்த்தியத்தில் லயித்துப் போய் மெய்மறந்திருந்த வேளை சட சடவென பெய்தமழை துவைத்துப் போட்ட துணி,காய வைத்த வற்றல்,கோதுமை என எல்லாமும் மறக்கடித்திருந்தன குருவியையும் அதன் உழைப்பையும்.

பந்திக்கட்டை கடக்கும் போது ஈரச்சாக்குப் போட்டு மறைத்திருந்த விதைநெல் வினோத மணத்தைப் பரப்பியது.முற்றம் முழுவதும் மழை நீர் சிந்தியபடி இருக்க, முகப்பு திண்ணையில் மணல் பரப்பி அதில் அடுப்பேற்றி வேர்கடலை வறுக்கவும் வறக்காப்பி போடவும் அப்பத்தா கடை அழகாய் அரங்கேறியிருந்தது.அதோ மூலையில் சாய்க்கப்பட்டிருக்கிற பனை ஓலையில் சாயமிட்டு பதனமாய் காய வைத்து உட்காரும் தடுக்கு,ஓலைப்பெட்டி,படுக்கிற பாய் என அழகான வடிவம் கொண்ட கலைப்பொருட்களாய் செய்வது அப்பத்தாவின் அன்றாட பொழுது போக்கு. சோம வாரங்களில் பூசைக்கு அரிசி,வெல்லம்,பருப்பு,தேங்காய் என ஒவ்வொன்றுக்கும் ஒரு புது ஓலைப்பெட்டி தவிர சீர் அனுப்ப, மற்ற காரியங்களுக்கு என எல்லாத்துக்கும் அப்பத்தா பின்னும் இந்த ஓலைப்பெட்டிகள் தான்.அம்மாவின் அதிரடி மாற்றங்களால் சாப்பாட்டு மேசையே பிரதானமாய் போனாலும் அப்பத்தாவின் உபசரிப்பு இந்த ஓலைப்பாய் நாகரிகத்திலே ஆரம்பிக்கும். அம்மாவோ சித்தியோ இவற்றை பாவிப்பார்களா என்பது நிச்சயம் கேள்விக்குறி தான்.ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியே சின்ன ஓலைப்பெட்டி மூடியோட,அதில் வறுத்த கடலை நிரப்பி பித்தளைக் குவளையொன்றில் மணக்கமணக்க பனங்கருப்பட்டி காப்பி தரப்படும். நடவு நாட்களிலும் வயல் வேலை நாட்களிலும் அப்பத்தா கைமணம் அரிதாய் சுவைக்க கிடைக்கும்.நாளைக் காலை விதை பாவுவது போல, அதான் அத்தை வீடெல்லாம் வந்திருக்காங்க.இப்படி கூட்டமா இருந்தா தான் அப்பத்தா முகத்தில சிரிப்பே வரும்.பாருங்க அந்த பொக்கை வாய் கிழவி சிரிச்சிக்கிட்டு இருக்கிறத.ஆனா ஆளுங்க இல்லாம போனா வெறிச்சோடின வீட்டை விடவும் பேச்சுத் துணைக்கு யாருமில்லாமல் தவிக்கும் அப்பத்தா தான் மிகவும் பரிதாபத்திற்குரியவள்.

அத விடுங்க,கருப்பட்டி காப்பியும் வறுத்த கடலையும் அருமையான கூட்டணிங்க. சுவைத்ததுண்டா நீங்கள்? எனக்கு பலசமயம் அந்த பாக்கியம் வாய்த்திருக்கிறது.இன்னிக்கும் அதே கூட்டணியோடு மாடியேறவும் சிட்டுக்குருவிகள் பத்தின நினைவு, நடை துரிதமடைந்து கடைக்கோடி சாளரத்தினருகே நின்றது. மரத்தில் கூட்டையும் காணவில்லை குருவிகளையும் காணவில்லை. எம்பிப் பார்க்கையில் மாமரத்துக்கடியில் மழைநீர் ஏகிய கூட்டை காணமுடிந்தது. இந்தக் கூட்டை கட்ட எத்தனை நேரம் பிடித்ததோ அதற்கு.இன்னும் ஒரு கூடு, இது போலும் அழிந்து போகாது என்பது எப்படி சாத்தியம்?அடுத்த முறை நம் வீட்டுக்குள் கூடு கட்ட பழக்க வேணும்.எனக்குள் சொல்லிக் கொண்டேன்.ஏனோ அப்பத்தாவின் உழைப்பு மழுங்கடிக்கப்பட்ட வலி குருவிக் கூடு கலைந்த போதும் இருந்தது.

அடுத்த விடுமுறைக்கு வரும் போது மாடியில்,அந்த அறையை ஒட்டிய முகப்பின் தாழ்வாரத்தில் கீச் கீச் எனும் சத்தம்.தேடிப் பார்த்தபோது தாழ்வாரத்துக்கும் மாடியறைக்கும் இடையே ஒரு அழகான கூடு நிறைந்திருந்தது.அதில் இரண்டு குருவிகளும் சில முட்டைகளும் இருந்தன. இரை தேடி போகிற நேரங்களில் முட்டைகள் தனித்துவிடப்படுவதை பார்த்ததும் விடுதி வாழ்க்கை நினைவுக்கு வர, இரையை நானே தருவது என முடிவு கொண்டேன். அகலமான பிளாஸ்டிக் டப்பாக்களில் அரிசி கம்பு என தானியங்கள் நிறைத்து கூட்டின் அருகே கட்டி தொங்க விட்டேன். இப்போதெல்லாம் குருவிகளில் ஒன்று வெளியே செல்வதும் மற்றொன்று முட்டைகளின் அருகில் இருப்பதும் பார்க்கவே மிகுந்த சந்தோசத்தை தந்தது. வெளிச்சென்ற குருவி வந்ததும் தன் அலகால் அதன் அலகை உரசுவதும்,இறக்கைகளை நீவிவிடுவதும், கூட்டுக்குள்ளே சண்டையிட்டு ஊடலோடு தத்தி தத்தி பறப்பதும் என அவற்றின் அன்றாடங்கள், அழகான சமிஞ்கைகளாக எனக்கு புரியத் தொடங்கியிருந்தன. பின் வந்த நாட்களில், அவற்றின் ஒவ்வொரு அசைவும் அழகியலோடு உயிர்ப்பான ஓவியமாய் தோன்றியது எனக்கு.

கீச் கீச் கீச்.
வந்திட்டாங்க போல. வழக்கமான தொந்தரவு தான்.பழகிடுச்சு. காலை பரபரப்பு ஒடுங்கி வீடே அமைதியாகிப் போகும் அந்த அழகான தருணங்கள் இவற்றினோடு கழியத் தொடங்கியிருந்தது இரை வைப்பதால் ஏதோ ஒரு எஜமான விசுவாசமோ, பக்கத்து வீட்டுக்காரி என்கிற பந்தபாசமோ தினமும் என்னோடு பயமின்றி பழகுவது அந்த ஜோடிக்கு வாடிக்கையாய் போயிற்று.இமைகள் திறக்காமல் ஏதும் அசையாமல் அப்படியே படுத்திருந்தேன்.சத்தம் இன்னும் அதிகரிக்கவே கண்களை திறந்து பார்த்தேன். இரண்டும் என்னை சுற்றி பறந்து கூட்டில் உட்கார்ந்து கொண்டன.கடந்த பத்து நாட்களாக மேல் மாடிக்கு வருவதும், சாளரத்தின் எதிரே அமர்ந்து தத்தி பறந்து மகிழும் பறவைகளோடு பொழுதைக் கழிப்பதுமென விடுமுறையெல்லாம் இப்படி செலவாகிக் கொண்டிருந்தது.

ஒரு அதிகாலை பொழுதன்று என்னை எழுப்ப வந்த அப்பத்தா ஆச்சர்யத்தோடு,

”என்னாத்தா? ஏதும் உடம்புக்கு நோவா?இம்புட்டு சீக்கிரமே முழிச்சிட்ட?” கரிசனமாய் நெற்றி தொட்டவளை இழுத்து போய் குருவிக் கூட்டை காண்பித்தேன். புதிதாய் பிறந்த நாலைந்து குருவி குஞ்சுகளோடு கீச் கீச் சத்தமிட்டபடி அங்கே ஒரே பரபரப்பாயிருந்தது.

”அட குருவிக்கூடு! எப்போயிருந்து கட்டியிருக்கு.நல்ல சகுனந்தேன்.அதென்ன டப்பாவுல? தீனியா? நீயா வச்ச? வேலை மும்முரத்துல கவனிகாம விட்டுட்டனே.ஒஞ்சித்தப்பனுக்கு தெரிஞ்சா வீட்டக் கெடுக்குதுன்னு கூட்ட பிரிச்சுப்புடுவானே” சந்தோசமும் ஆச்சர்யமும் பதைபதைப்பும் அவளின் முகத்தில் நொடிக்கொருமுறை மாறிய வண்ணம் இருந்தது.

“இல்ல அப்பத்தா! நாங்க லீவு முடிஞ்சி போனப்புறம் நீ தனியா இருக்க கஷ்டமா இருக்குமில்ல.இந்த சொந்தகாரங்களாச்சும் இங்கயே இருக்கட்டுமின்னு தான்!”

பதிலேதும் சொல்லாமல் வாஞ்சையாய் தலை வருடியபடி கண்ணீர் மல்க என் கன்னம் தொட்டு நெட்டி முறித்தாள் அப்பத்தா.

3 comments:

யாதவன் said...

me the first
i will came after read

யாதவன் said...

சுப்பர்

sundar said...

நவீன வாழ்க்கை ஓட்டத்தில் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போவதையும், உறவுகளின் பிரிவின் வலிகளையும் எளிதாக் வெளிப்படுத்தும் கதை...

சத்தியமாக எப்படி இருக்குமென்று தெரியாது....அதாங்க....கருப்பட்டி காபி with வறுத்த கடலை combination

Cheers

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!