Sunday, August 15, 2010

காமாட்சிப் பாட்டி

“பேத்தி வந்திருக்காளா பார்வதி” ஆச்சிக்கிட்ட யாரோ பேசுவது கேட்டது. அந்தக் குரலின் குழைவு...அது காமாட்சிப் பாட்டி தானே.தட தடவென வெளியே வந்தேன்.

குதப்பிய வெத்தலையும், இரவிக்கை அணியாத சேலையும்,எந்நேரமும் வெத்தலை முடிச்சும் சுருக்குப்பையும் எல்லா கிராமத்து பாட்டிகளையும் போலவே தான் காமாட்சிப் பாட்டியும். ஆனால் எனக்கும் அவளுக்குமான அலைவரிசை கோடியில் ஒருத்தருக்கிட்ட தான் வருமாக்கும். ஏன்னு தெரியுமா ? எல்லாத்துக்கும் பெருமை அவளுக்கு என்மேல.யாரோடும் பங்கு போட அவசியமில்லாத எனக்கே எனக்கான பாசம். என் குறைகள் மட்டுமே விமர்ச்சிக்கப்படும் பள்ளி நாட்களில் என்னை கைவிடாத ஒரே கூட்டணி காமாட்சி பாட்டி தான்.

ஊருக்குள்ள பிரசவம் பார்ப்பதில் காமாட்சிப் பாட்டி ரொம்ப பிரபலம். குழந்தை பிறந்து 2 முதல் 3 மாதம் வரை பாட்டிக்கு அந்த வீட்டில் தான் வேலை. பொழுது முச்சூடும் புள்ளத்தாச்சி சாப்பிடும் முறையிலிருந்து,குழந்தை குளிப்பாட்டும் முறை வரைக்கும் அத்தனையும் கற்பித்து பதிலாய் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் தன் ஊதாரி மகனுக்கு தந்துவிட்டு எங்கள் வீட்டு புறக்கோடி திண்ணையில் சாய்ந்துவிடுவாள். இதுபோக, விதவை பென்சனும் பஞ்சாயத்து ஆபிஸ்ல சம்பளமும் அவள் ஊதாரி மகனுக்கு விழலுக்கிரைத்த நீராய் போயிற்று.ஆச்சியும் இதுவரை அவளை தூரமாய் பார்த்ததில்லை.தானாய் இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்வதும், எங்களை வளர்ப்பதும் தோட்டத்தில் வயலில் என எங்கும் நிறை பராபரமாய் அவள்.

“நீ பொறந்தப்போ மூக்கு சப்பையா போச்சுன்னு ஒன்னோட அத்த சொன்னாளா? எனக்கு சுள்ளுன்னு கோவம் வந்திருச்சு. அந்த முப்பது நாளக்கிம் மூக்க நிமிண்டி நிமிண்டி குளிப்பாட்டி... பாரு இப்ப உம்மூக்கு எப்படி இருக்குண்ணு? “என்னையறியாமல் கண்ணாடி பார்ப்பேன் நான். அத்தனை போராடியுமே இப்படியா..?

தன் விரலாலே சிக்கெடுத்து சாம்பிராணியிட்டு வளர்த்த என் நீண்ட கூந்தல் விடுதி வாழ்க்கை கருதி வெட்டப்பட்ட ஒரு தினத்தில் என்னை விடவும் எனக்காய் அழுத மகராசி.
”இப்ப என்னத்துக்கு நீ ஒப்பாரி வைக்கிற? மயிற தானே வெட்டுனோம் என்னமோ அவ தலைய சீவுன மாதிரி கூப்பாடு போடுற?” அம்மாவின் அதட்டலையும் சட்டை செய்யாமல் தாழ்வாரத்தின் மூலையில் விசும்பிக் கொண்டிருந்தாள் அவள்.

“அந்த மணியன் வீட்டு வாலுக்கு எப்பவுமே ஏந்தங்கத்த சீண்டலையின்னா ஒறக்கமே வராது. இரு இரு..நாளைக்கி அவன் காத திருகி கேணிக்குள்ள போட்டிடுறேன்.என்ன பண்ணுவான்னு பாக்குறேன்.நீ அழாதடா ராசாத்தி” அம்மா முதுகில் குடுத்த அடிகளின் வலி மறந்து ஓட்டைப்பல்லோடு சிரித்துக் கொண்டிருப்பேன் நான்.

”ஏந்தாயி இப்பத்தான் வந்தியா? வாரதே கொஞ்ச நாளு.வீட்டிலே இருக்காம என்னத்துக்கு வெயில்ல சுத்துற. கறுத்துப் போயிட்ட பாரு.” தம்பியும் அம்மாவும் செருமுவதில் ஏகப்பட்ட கேலியிருக்கும். ”நீ ஏன்டா சிரிக்கிற. அவளுக்கென்னடா குறைச்சல்?வெளியூருல தங்கின்னா படிக்குது. கஸ்தூரி மஞ்சளும் கடல மாவும் தேச்சா பழைய மாதிரி பொன்னா மின்னுவாள்ல.” சலுகையாய் அவள் மடிசாய்வேன் நான்.

கூட்டுக் குடும்பமாகையால் எங்க வீட்டில் ஒவ்வொருவரின் பிறந்தநாளும் அவரவர் நினைவு வைத்திருக்க வேண்டும். அந்த மாதம் பிறந்தவுடன் நச்சரிக்க ஆரம்பித்தால் தான் பரிசும் பணமும் பிறந்தநாளன்று நிறையச் சேரும்.மாதக் கடைசியில் வரும் பிறந்த நாளென்பதால் எனக்கு மட்டும் இந்த விற்பனை தந்திரம் பலிக்கவே செய்யாது.பாட்டி வீட்டில் மட்டும் அந்தக் குறை இருக்கவே இருக்காது. காரணம் காமாட்சிப் பாட்டி.
”கார்த்திகை பிறந்த தேதி முதலா காமாட்சிக்கா தொணத் தொணக்க ஆரம்பிச்சிருச்சு.அதான் எல்லாங் கெடக்கட்டுமுன்னு அம்முவ பார்க்க வந்துட்டேன். இந்தா”, தாத்தாவின் காலில் விழுந்து, ஆசிக்கு கூட காத்திராமல் பறித்துக் கொண்டு ஓடுவேன். காதிப் பட்டில் பாவடை சட்டை என் நீள அகலங்களை உத்தேசித்து அழகாய் அம்சமாய் தைக்கப்பட்டிருக்கும்.

பட்டுப்பாவடை தாவணியும்,தாழம்பூ தைத்த சடையும்,மை தீட்டப்பட்ட விழிகளுமாய் ஒருநாள் அவள் காலில் விழுந்த போது,
“ஆத்தி.ஒத்த ரூவாகூட இல்லையே புள்ள கையில வச்சுக் கொடுக்க..பொசுக்குன்னு கால்ல விழுந்திருச்சே. இரு இந்தா வாரேன்.” அவசர அவசரமாய் தன் இயலாமையை குறை கூறியபடியே போனவள்,கையில் இரண்டு ரூவாய் தாளோடும் தோட்டது வெண்பூசணிக்காயோடும் வந்தாள்.எனக்கும் திருஷ்டி சுத்த ஒருத்தி இருந்தான்னா அது எவ்வளோ பெரிய விசயம்?அவள் தந்த அந்த இரண்டு ரூபாய் நோட்டு இன்னும் என் பழைய நாட்குறிப்பில் ஞாபகக் குறிப்பாகவும்.

”கால் வலிக்குது பாட்டி!சொடக்கு எடுத்து விடு”, உரிமையாய் அதிகாரமிடும் வாடிக்கை அவளைத் தவிர இதுவரைக்கும் எவரிடமும் இல்லை.சிரிக்க சிரிக்க பாட்டுப்பாடி,பாவத்தோடு கதை சொல்லி தலை கோதியபடி தூங்கச்செய்வாள். அது போலே குலுங்க குலுங்க சிரித்தபடி தூங்கிப்போன என் இளமை காலங்கள், நடுநிசியில் ஆர்ப்பரிக்கும் மனதோடு கவிதையில் பாரத்தை இறக்கி விடத்துடிக்கும் இந்த வசதியான வாழ்க்கையில் ஏதோ இல்லாமை கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது.

”ராத்திரியானா வேப்ப எண்ணை நாறும் அந்த கிழவிக்கிட்ட. ஆனா இவ அப்படியே உரசிக்கிட்டு கிடக்கறா.ஏண்டி நீ இப்படியிருக்க?” சித்தி முதல் தம்பிகள் வரை யாருக்கும் அவள் மனசு தெரிய வாய்ப்பேயில்லை. நாகரீகம் கருதி அவர்கள் அவளை நாடுவதேயில்லை. எனக்கு இதுவரை அந்தக் குறை தெரிந்ததேயில்லை.

நெனச்ச மாத்திரத்தில் நையாண்டி பாட்டுக்கட்டி அந்த எடம் முழுக்க சிரிக்க வைக்கும் தெறமசாலி.எப்படித்தான் வார்த்தை சேர்த்து மெட்டுப் போடுவாளோ தெரியாது. அவள் பாடும் தான்னான்னே இல்லாத முளைப்பாரியோ பாரிவேட்டையோ இது வரை அந்த ஊரில் இருந்ததில்லை.இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். ஒரு திருவிழாவில், சாதிக்கலவரத்தில் மகன் செத்துப் போன பின், அது சம்பந்தமான வழக்கு வாய்தா என்று அவள் திண்ணையில் படுப்பது குறைந்து போயிற்று. இதோ அவள் தான் வந்திருக்கிறாள்.

“பாட்டீ” என்றவாறே அடுப்படிக்குள் நுழைந்தவளை வாரியணைத்தபடி,

“ஏஞ்சாமி. எப்படித்தா இருக்க? இன்னிக்கு தான் வந்தியா?” என்றவாறே கன்னம் வருடியவளின் உருவத்தில் அசைவில் நம்பிக்கையில் வயோதிகம் வெகுவாய் படர்ந்திருந்தது.

இரவு, முல்லையின் நறுமணத்தோடு நிலவை ரசித்திருந்த ஒரு பவித்திர தருணத்தில் மெதுவாய் கேட்டாள்.
”எம்புட்டு நா இங்கயிருப்ப?”

ஏனோ மனசு பிசைய, “பாட்டி எங்கூட சென்னைக்கு வந்திடு.நானிருக்கேன் உனக்கு!”

“வாரேஞ்சாமி! ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு எம்பேரு எழுதச் சொல்லித்தருவியா? அந்த கவர்மெண்டு கிளர்க்கு என்ன கைநாட்டு கைநாட்டுன்னு கூப்பிடுறான்.செத்தும் என்ன இப்படி அசிங்கப்பட வச்சிட்டானே எம்மவன்.”

சன்னமாய் கதறியவளுக்கு காமாட்சிப் பாட்டியாகிக் கொண்டிருந்தேன் நான்.

30 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

நினைவுகளை பின்நோக்கி செல்ல வைக்கிறது...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

கதை மிக அழகு. படித்தவுடன் சிலிர்த்து விட்டேன். முடிவை மிக இரசித்தேன்.

படிக்காத கிராமத்தாளுங்களுங்கன்னாவே எலக்காரந்தான் எல்லாருக்கும். அதுவும் வேட்டி கட்டிக்கிட்டு போனவே இன்னும் எலக்காரம்.

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்வான பகிர்வு!

சுசி said...

அருமையா இருக்கு கயல்..

நல்ல எழுத்து நடை.

Ungalranga said...

ரசிச்சு எழுதி இருக்கீங்க..!!

பாராட்டுக்கள்..!!

மிகவும் ரசித்தேன்..!!

கலகலப்ரியா said...

கண்களில் மெலிதாய் ஈரம்... ஓவியமாயிருக்கு கயல்...

கார்க்கிபவா said...

wow


i liked it very much

a said...

//
நடுநிசியில் ஆர்ப்பரிக்கும் மனதோடு கவிதையில் பாரத்தை இறக்கி விடத்துடிக்கும் இந்த வசதியான வாழ்க்கையில் ஏதோ இல்லாமை கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது.
//
சன்னமாய் கதறியவளுக்கு காமாட்சிப் பாட்டியாகிக் கொண்டிருந்தேன் நான்
//
ரொம்ப ரசித்த வரிகள்...

கமலேஷ் said...

அருமையான உணர்வுகளை தொட்டு இருக்கிறீர்கள்.
வரிகளுடன் ஒன்றிப் போய் படித்தேன்...
கவிதையை போல இதையும் தொடர்ந்து (நினைவு) சிறுகதைகளையும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்..

நசரேயன் said...

//இருக்காம என்னத்துக்கு வெயில்லசுத்துற. கறுத்துப் போயிட்ட
பாரு.//

இப்பத்தான் புரியுது நான் ஏன் கருப்பா இருக்கேன்னு

நசரேயன் said...

பாட்டி பேரு கயலா ?

கயல் said...

//
வெறும்பய said...
நினைவுகளை பின்நோக்கி செல்ல வைக்கிறது...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

//
நன்றி நண்பரே உங்கள் மேலான ஆதரவுக்கு!

வாழ்த்துக்கள்

கயல் said...

//
மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...
கதை மிக அழகு. படித்தவுடன் சிலிர்த்து விட்டேன். முடிவை மிக இரசித்தேன்.

படிக்காத கிராமத்தாளுங்களுங்கன்னாவே எலக்காரந்தான் எல்லாருக்கும். அதுவும் வேட்டி கட்டிக்கிட்டு போனவே இன்னும் எலக்காரம்.
//

நன்றி.
ம்ம்... கட்சி[கறை] வேட்டி கட்டாதவங்கன்னு சொல்லுங்க.

கயல் said...

//
பா.ராஜாராம் said...
மிக நெகிழ்வான பகிர்வு!
//
நன்றி பாரா!

கயல் said...

//
சுசி said...
அருமையா இருக்கு கயல்..

நல்ல எழுத்து நடை.
//
மிக்க நன்றி சுசி.

கயல் said...

//
ரங்கன் said...
ரசிச்சு எழுதி இருக்கீங்க..!!

பாராட்டுக்கள்..!!

மிகவும் ரசித்தேன்..!!
//

மிக்க நன்றி பெரியவரே! எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்.

கயல் said...

//
கலகலப்ரியா said...
கண்களில் மெலிதாய் ஈரம்... ஓவியமாயிருக்கு கயல்...
//

ஓவியமாயிருக்கு ..? பின்னூட்டம் கூட எப்படி இத்தனை அழகாய்..?

நன்றி பிரியா.

கயல் said...

//
கார்க்கி said...
wow


i liked it very much
//
நன்றி கார்க்கி

கயல் said...

//
வழிப்போக்கன் - யோகேஷ் said...
//
நடுநிசியில் ஆர்ப்பரிக்கும் மனதோடு கவிதையில் பாரத்தை இறக்கி விடத்துடிக்கும் இந்த வசதியான வாழ்க்கையில் ஏதோ இல்லாமை கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது.
//
சன்னமாய் கதறியவளுக்கு காமாட்சிப் பாட்டியாகிக் கொண்டிருந்தேன் நான்
//
ரொம்ப ரசித்த வரிகள்...

//
ரசித்தமைக்கு நன்றி நண்பரே!

கயல் said...

//
கமலேஷ் said...
அருமையான உணர்வுகளை தொட்டு இருக்கிறீர்கள்.
வரிகளுடன் ஒன்றிப் போய் படித்தேன்...
கவிதையை போல இதையும் தொடர்ந்து (நினைவு) சிறுகதைகளையும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்..

August 16, 2010 12:43 AM

//

கட்டாயம் முயற்சிக்கிறேன்
நன்றி

கயல் said...

நசரேயன் said...
//
//இருக்காம என்னத்துக்கு வெயில்லசுத்துற. கறுத்துப் போயிட்ட
பாரு.//

இப்பத்தான் புரியுது நான் ஏன் கருப்பா இருக்கேன்னு

//

பாருங்கப்பா... இல்லையினா மட்டும்..?

//
பாட்டி பேரு கயலா ?
//

தலைப்ப பாருங்க சாமீய்ய்ய்... அய்யோ அய்யோ.. வயசான காலத்துல கண்ணாடி போட்டு படிக்கறது தானே?

Unknown said...

ரொம்ப அருமையான எழுதியிருக்கீங்க.. கடைசி வரியைப் படிக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சுங்க..

நல்லா எழுதறீங்க..

'பரிவை' சே.குமார் said...

கதை மிக அழகு. படித்தவுடன் சிலிர்த்து விட்டேன். முடிவை மிக இரசித்தேன்.

Bharkavi said...

Nalla padhivu. Migavum rasithen :)

என்னைத் தேடி said...

வண்ணதாசனை வாசித்த திருப்தி, அருமையான மொழி நடை, என் பால்ய நாட்கள் நினைவுக்கு வந்தன, இன்னும் எழுதுங்கள்-sankaranarayanan

வல்லிசிம்ஹன் said...

அன்பு கயல், காமாட்சிப் பாட்டியின் சித்திரம் கண்களில் ஈரமாகிறது. சங்கடம் செய்கிறது. அழகான நாட்டுப்புற ஓவியம். அருமையான எழுத்து. மிகவும் நன்றி. எத்தனையோ தொலைந்த இதயங்களை நினைக்க வைத்துவிட்டீர்கள்.

கயல் said...

//
பதிவுலகில் பாபு said...
ரொம்ப அருமையான எழுதியிருக்கீங்க.. கடைசி வரியைப் படிக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சுங்க..

நல்லா எழுதறீங்க..
//
நன்றி பாபு!

கயல் said...

//
சே.குமார் said...
கதை மிக அழகு. படித்தவுடன் சிலிர்த்து விட்டேன். முடிவை மிக இரசித்தேன்.
//
நன்றி குமார்

நாமக்கல் சிபி said...

அருமை! நேர்த்தியாக இருக்கிறது!

மாதவராஜ் said...

பாட்டியின் வாசம் கூடவே வருது. கலங்கி நிற்கிறேன். நல்லா எழுதுறீங்க கயல்.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!