Showing posts with label நினைவுக‌ள். Show all posts
Showing posts with label நினைவுக‌ள். Show all posts

Tuesday, May 5, 2015

காதல் பெருஞ்சுனை

”லீவு விட்டா போதும். அங்க இங்கன்னு சுத்த வச்சி சாவடிக்கிற. அடிக்கிற வெய்யில்ல என்னத்துக்கு வெளிய வரணும்?”
”Carry Bag இங்கயே வாங்கினா என்ன? இப்படி கட்டைப்பை தூக்கிட்டு அலையணுமா?”
கடுகடுவென பொரிந்து கொண்டிருந்தார்.
”சரி சரி... ரெண்டு பவாண்டோ பாட்டில் வாங்கு”
ஏசில மூளை குளிர்ந்திருச்சு போல. மெல்ல கேசட் செக்‌ஷனுக்கு போயிட்டார். பொதுவா இந்த கடுகடுப்பும் சிடுசிடுப்பும் பர்ஸ் காலியாவுமென்கிற பயமோன்னு எனக்குத் தோணும். சொல்லிக்கிட்டதில்ல. smile emoticon
எல்லாம் வாங்கி பில் போட்டதும் கொண்டுபோன ரெண்டு கட்டைப்பையும் நிரம்பி நகர மறுக்குது. திரு திருன்னு முழிச்சிட்டே நின்னேன். பக்கத்துல இருக்க வீட்டுக்கு ஆட்டோ கேட்பது அபத்தம்.சரி நாமளே தூக்கிட்டு போகலாம்ணு நினைக்கும் போதே..
“விட்றி. உன்னால முடியாது நானே கொண்டுவர்றேன்.” என்றபடி
ஏதும் பேசாமல் இரண்டு சுமைகளையும் வீடுவரை சுமந்து வந்தார்.
இன்றைக்கு மட்டுமல்ல இதுவரைக்கும் இப்படித்தான். என்றைக்குமே கடினமான வேலைகளை மலைப்பாய் பார்த்துக்கொண்டிருக்கும் போதே உதவிக்கரம் நீட்டுவார்.
கருத்து வேறுபாடுகளில்லாத ’ஆமாம்சாமி’ போடுகிற ஆளெல்லாமில்லை. அதீத கோபமும் அதீத பாசமும் சேர்ந்த அதிசய மனிதன். நாங்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட வாழ்க்கையில் அழுகை,ஆனந்தம்,ஆற்றாமை,ஏக்கங்கள்,பெருமிதங்கள், ஏமாற்றங்கள் எல்லாமும் உண்டு.பேரன்பின் நதியாயிருப்பதால் எல்லாவற்றையும் கரைத்து நகரப் பழகியாயிற்று. இப்போதெல்லாம் நான் பரவும் இடமெல்லாம் விரியும் பசுமை தான் கண்ணுக்குத் தெரிகிறது. திருமணத்துக்குப் பின்னான இந்த வாழ்க்கையில் நிறைவென்பது இதுதான்.
என் சுமைகளை பகிர்ந்து சுமக்க எனக்கென ஒரு மனிதன்.
ஊற்றுக்கண் புலப்படாத காதல் பெருஞ்சுனை என்றென்றும் எம்மை மகிழ்வில் நனைத்தபடிதானிருக்கும்.

Sunday, October 20, 2013

கலவையான உணர்வுகள்

*
**
ஒரு மழை நாளில், நான் பாதி நனைந்தபடியும் அந்த கர்ப்பவதி முழுக்க நனையாமலும் ஒரே குடையின் கீழ் சாலை கடந்தோம்.சாலையின் மறுபுறம் சென்றடையவும் அவளது பேரூந்து வரவும் நன்றி கூடச் சொல்லாமல் கடந்து போனாள் அந்தப் பெண். சுணங்கிப் போனது மனது. நன்றிக்கென உதவி செய்யவில்லையெனினும் நன்றிகள் பெரும்பாலும் நாகரிக பழக்கத்தின் விடைபெறும் அடையாளமாக மாறி விட்டது.

என் குடையில் வீடு வரை தனியே நனையாமல் தான் வந்தேன். எவருக்கும் நன்றி சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு உதவுகிறேன் பேர்வழியென்று இறங்கிய கணத்திலிருந்த மகிழ்வும் நிம்மதியும் தனித்த என் பயணத்தில் இல்லை. அற்புதமான அந்த கணங்களுக்காகவேணும் நன்றி சொல்லியாகவேணும் மானசீகமாக. இப்படியே நினைத்துக் கொண்டிருந்தேனா பிறகு வந்த விடியலில் வழக்கம் போல் மறந்தும் போனேன்.

காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த நாட்களில் பிஸியோதெரபிஸ்டுக்கென காத்திருக்கையில் அங்கே உதவியாளராக இருந்த முகம் பரிச்சயமானதாயிருக்கவே யோசித்துக் கொண்டிருக்கும் போதே முகமெல்லாம் சிரிப்பாக கையைப் பிடித்துக் கொண்டு ஏதோ சொல்ல வந்தவள் என் தளர்நடையில், ‘என்னாச்சு மேடம்? அடியா? காலிலயா? எங்க காட்டுங்க? என்றபடி பெரிய வயிற்றுடன் குனிந்து சரிபார்த்தாள். அதில், கடமையைத் தாண்டிய சினேகமிருந்தது.

*
**
எங்கள் தெருவில் கூர்க்காக்களே இல்லை.

நேற்றைய தினம் பத்து ரூபாய் வேண்டி நடுத்தர வயதில் ஒருவர் வந்து நின்றார்.தான் இந்த ஏரியாவின் கூர்க்கா என்றார். எப்படி நம்புவதென்று பெரிதாய் விவாதங்களை நீட்டி முழக்கிக் கொண்டிருந்தேன். எனக்கும் ஹிந்தி
தெரியுமென்று பீற்றிக் கொள்ளும் தருணங்களவை. ”ஜீ! மேடம்” என்றவாறே ஆமோதித்துக் கொண்டிருந்தார். வேலையே செய்யாது என்னை ஏமாற்றப் பார்க்கிறார். எப்படி சகிப்பது? தர முடியாதென சொல்லவா இத்தனை பேசினாய் என்பாரே! போனால் போகிறது பத்து ரூபாய் தானே? அவரிடம் ஐம்பது ரூபாய் தந்து பால் பாக்கெட் ஒன்று வாங்கி வரச் சொன்னேன். நகர்ந்ததும் தான்உறைத்தது. பத்து ரூபாயோடு போக வேண்டியது. ஐம்பது ரூபாய் தந்து ....இப்படியா இருப்பாங்க. நீ சரியான ஏமாளிடீ! பதினைந்து நிமிட இடைவெளியில் அவரைக் குறித்து ஏதும் சிந்திக்காமல் நான் ஏமாளியாகப் போகும் கணங்களை வெறுப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவரின் நம்பகத்தன்மை குறித்த எனது பார்வை எப்படி சரியானவையாக இருக்க முடியும்? சற்று நேரத்திற்கெல்லாம் 17 ரூபாய் போக 33 ரூபாய் சில்லரையுடன் வந்து நின்றார். மன்னிப்பு கேட்டிருந்திருக்கலாம். எங்கேவிட்டது என்னுள்ளிருக்கும் முரட்டுக்குணம். மாறாக ஒரு பிஸ்கெட் பாக்கெட்டுடன் பத்து ரூபாய் தந்து அனுப்பினேன்.

 நல்லிரவில் கவனித்தேன் கூர்க்காவின் விசில் சத்தம். அது அவராகவும் இருக்கலாம். நம்பிக்கையுடனிருப்பதற்கும் வாழ்வில் காரணங்கள் இருக்கின்றன.

*
**

வெள்ளிக் காசுகளுக்காக காட்டிக் கொடுக்க இருப்பவனையும் மூன்று முறை தன்னைத் தெரியாதென மறுதலிக்க இருப்பவனுக்கும் சேர்த்தே தன் உடலையும் செந்நீரையும் அப்பமும் திராட்சையுமாக அந்த கடைசி விருந்தில் பந்தியிட்டார் இயேசு. அதே புன்னகையுடன் ஆரத்தழுவி உச்சி முகர்ந்து என்னை சுவாசித்து பிரிந்ததொரு நல்உறவு.

மெசியா போலில்லை.

விம்மி விம்மியழுதேன். என்னை துவேசித்து உமிழ்ந்ததற்காகவும், யாரென்றே தெரியாதென சொன்னதற்காகவும்.

யோசித்துப் பார்த்ததில் பிடிபட்டது பிழை. இடியாப்பமும் குடல் குழம்பும் பரிமாறிவிட்டேன். ஆப்பமும் திராட்சை ரசமும் உண்ணத் தந்திருந்தால் ஒரு வேளை நான் மெசியாவின் மனனிலையில் ஜீவித்திருக்கக் கூடும்.

தேற்றுதலுக்கென சப்பைக் காரணங்களுக்கா பஞ்சம் நம்மிடத்தில்...

#நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா...

*
**
நண்பர் ஒருவர்.

பைக் ஆக்சிடெண்டாகி பிழைத்ததே அதிர்ஷ்டம். அதிலும் தலையில் அடிப்பட்டதில் இன்னும் நினைவு ரீதியான பிரச்சினைகள் சரியாகவில்லை. உணவின் சுவை கூட இன்னும் விளங்கவில்லை.

’தீபாவளிக்கு ஊருக்கு போகலயா?’

’இல்லப்பா’

’ஏன்?’

’நான் பஸ்ல ஊருக்கு போயி பத்து பதினைஞ்சு வருசமாச்சு.’

’ஓ அப்ப டிரைன்லயா போறீங்க?’

’இல்ல’

’பிளைட்? உங்கூருக்கு கப்பல் ப்ளைட்லாம் போகாதே!’

’நக்கலா? நான் எங்க போனாலும் பைக்ல தான் போவேன்.’

அவருக்கு ஏதோ ஒரு கிராமம் நாகர்கோவில் பக்கத்துல. 600 கிமீ க்கு மேலேயே இருக்கும். தீபாவளி அன்னிக்கு ஊரு நினைவு வந்து ஆக்சிடெண்ட் ஆனது மறக்கக் கூடாது.

கவனமா இருங்கப்பா. இதிலெல்லாம் என்ன கெத்து வேண்டிக் கெடக்கு.. பஸ்ஸோ ட்ரைனோ பிடிச்சி போறதுக்கென்ன? டிக்கெட் கிடைக்குமா என்பது தனி.. ஆனா பயமில்லாம இருப்பமில்ல நாங்களும் ? இதுல போற போக்குல என்னையும் மெரட்டிவுட்டுறது.. இன்னிக்கு தான் இது மாதிரி டென்சன்லாம் என் தலையில ஏறும்.
*

Friday, October 11, 2013

சுயவிளக்கம்....

யார் கைதூக்கிவிட்டும் யாராலும் முன்னுக்கு வர முடியாது.யார் இகழ்ந்தும் காழ்ப்பில் ஒதுக்கியும் யாரையும் பின்னுக்குத் தள்ள முடியாது.
அவருக்கென்று சுயமாக திறமையோ தெளிவான அறிவோ இல்லாத வரை அவர் முன்னேற தான் மட்டுமெ காரணமென்று அலுத்துக் கொள்ளும் கூட்டம் முளைத்துக் கொண்டேயிருக்கும்.

இன்னும் சில இடங்களில், வளர்ந்து வரும் சிலர் தான் தாக்கப்படுவதாகவும் ஒடுக்கப்படுவதாகவும் தானே புரளியைக் கிளப்பி பெரிய பச்சாதாபத்தையும் கருணையும் கொண்டு தன்னை நிலை நிறுத்தத் துடிக்கிறார்கள். படுகேவலமான விளம்பர யுக்தி. ’என்னடா விளம்பரம்? அந்த சினிமாக்காரங்க தான் அப்டின்னா’ கரகாட்டக்காரன் காமெடி தான் நினைவுக்கு வருது.

இந்த நவீன இலக்கிய உலகை, இலக்கியவாதி என்கிற தகுதியில்லாமல் பொதுவான பார்வையாளராக வெகுநாட்களாக கவனித்து வருகிறேன். எனக்கெல்லாம் எழுத்தென்பது மனதில் நினைப்பதை எழுத்தாக்கும் முயற்சி. முயற்சித்துக் கொண்டேயிருக்கும் மாணவி தான் நான் இன்னும். நவீன இலக்க்கியவாதிகள் பேசித் திரியும் ஆயிரம் வரிகளில் ஒன்றிற்கு கூட அவர்கள் எழுத நினைத்த அந்த மறைபொருள் கருவை உள்வாங்குமளவு அத்தனை பெரிய அறிவுஜீவியுமில்லை. அதே சமயம் எழுத்துக்கும் நடத்தைக்கும் இம்மியளவு சம்பந்தமுமில்லாத பல ஆளுமைகளைப் பார்த்து எரிச்சலடைந்து இருக்கிறேன். தனிமனித அறம் கடைபிடித்தலென்ன அத்தனை கஷ்டமா? ’நீ வாழ அடுத்தவனைத் தூற்றாதே’ இந்தமட்டும் கூடவா கஷ்டம்?

தலித்தியம் பெரியாரிஸம் பெண்ணியம் இதெல்லாம் முன்னெடுக்கும் பெரும்பாலோர் தன் சுய விளம்பரத்துக்காக,அரைகுறை உணர்வோடு பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். மிகவும் வருத்தமான விசயம் இது. லைக்கும் கமெண்டுக்குமென இது போலான மதிப்பும் வலியுமிக்க விசயங்களை முன்னிறுத்த என்ன அவசியம் வந்தது? பிறப்பால் நீ இன்னவனென்று ஒதுக்கப்படும் ஒரு நிலையில், அவன் அட! ஏன் இப்பிறவியெடுத்தோம்ன்னு கூனிக் குறுகிப் போதல் எத்தனை வலியோடான வருத்தம். இன்னும் நடக்குது தானே... ?அதையே குத்திப் பேசி இன்னும் மிருகமாய் அலையும் பலர் பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்தைப் படிக்க மறந்து வல்லுநர் ஆனார்கள் போலும். நான் கடந்த வலிமிகு விசயங்களை நிச்சயம் பதிவேன். இதற்கு சாதிச் சாயம் பூசப்பட்டாலும் உண்மை என்பதை படிப்பவர்கள் நிச்சயம் உணர முடியும். கவிதையில் பொய் சொல்லிவிடலாம். ஆனால் உரைநடையில் மிகை உணர்வு பொய் தூவல் எல்லாம் எளிதில் புரிந்திடும் தானே ... ?

இதோ இங்கே பெரியாரையும் தலித்தியத்தையும் (உயர்வாகவோ / தாழ்வாகவோ) பேசி தன்னை நிறுப்பித்துக் கொள்ளும் எவரும் அந்த கருத்துக்களையும் அவர்தம் வலியையும் உணர்ந்தாரில்லை. எங்களைப் போன்று இதன் எல்லாபடிநிலைகளிலும் வாழ வாய்ப்புக் கிடைத்தவர்களையும் மட்டமாக இந்த முகனூல் கலாச்சாரத்தில் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்ப்பது எரிச்சல் மிகுந்த வலி. இதில் புதிதாய் வந்தவர்கள் என்கிற ஹைலைட் வேறு. சங்கத் தமிழ் பேசுவதாலேயே எழுதுவதாலேயே எல்லாமும் ஏற்கனவே பதியப்பட்டதென்றும் படியெடுக்கிறோம் என்கிற சொல்லாடலும் தவறு. எனக்கும் கற்பனா சக்தி உண்டு. கொஞ்சம் எழுத வருதுன்னும் சொல்லாம்ன்னு நெனைக்கறேன். சங்கத் தமிழ் படித்த ஒருவனுக்கு தான் மட்டுமே தமிழின் சுமை தாங்கி என்கிற அனாவசிய கர்வம் இல்லாது போகும். தமிழ் நிறைவுடை மொழி. புரியாதவனுக்குத் தான் எழுத்தாளுமையென்றும் எழுதுவதாலேயே தலைக்குப் பின் சூரிய வட்டமிருக்கிறதென்கிற கனமும் இருக்கும்.

சங்கப் பாடல்களில் எல்லா உணர்வுகளிலும் தமிழன் ஊறித்திளைத்திருக்கிறான். நம் தேவைக்கேற்ப புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. ஒரு தனிமனித வாழ்வியல் சூழல் என்கிறமட்டும்.. சமூக ஏற்றத் தாழ்வு எத்தனையோ ஆண்டுக் கொடுமை. அது தவறென வாதம் புரியும் நவீனங்கள் வரவேற்கத் தக்கன. இன்னமும் ஒருவன்/ஒருத்தியின் மனநிலை சார்ந்து தானே எழுதப்படுகிறது படிப்பவருக்கும் புரிந்தும் சில நேரம் புரியாமலும்.... ஆக கடமைக்கென கவியெழுதல் அத்தனை உடன்படும் விசயமல்ல என்றாகிறது. இதே தொனியில் எழுதிக்கொண்டும் பிதற்றிக் கொண்டும்.. கடுப்பா இருக்கு. என்னையும் நான் படிக்கிற எழுத்துக்களையும் சேர்த்து தான் சொல்றேன். ஆனால் பாருங்க, நானெல்லாம் இலக்கிய வட்டத்துக்குள்ள நுழையவேயில்லை. அது என் விருப்பத் தெரிவுமல்ல. ஒளிவட்டம்,ஆசிச்சொல்,அகமலர் நிறைவாழ்வுத் தழும்பலகளென பெரிய சுயபிரசங்கமும் செய்வதில்லை.

ஆதலினால் என்னைச் சீண்டாது படிக்கவிடுங்கள். ஆயுள் முடிவதற்குள் ஆன்ம படைப்பிற்கென அவசியமிருக்கிறது.

Wednesday, October 9, 2013

நான் பாஸாகி விட்டேன்

”என்ன பிரச்சினைடீ. இந்த நேரத்துல.....”

“ ”

“உங்கம்மாப்பாக்குள்ள சண்டையா?”

“ம்ம்ம்”

“சமைச்சாளோ”

“இல்ல”

“தோசை வார்க்கவா?”

“வேணாம். பத்தில லைட் மட்டும் எரியட்டுமா வாத்தியாரம்மா? படிச்சிக்கறேன்”

“இதுக்கேண்டி இத்தன தயங்குற...வெறும் வயித்திலயா கெடக்க? இரு இந்தா வர்றேன்”

இரண்டு தோசையும் பொடியும்...

‘உண்ணீர் உண்ணீரென’ ஔவையின் வாக்கின்படி அத்தனை அன்பாய் கெஞ்சுவாள். விண்டு விழுங்குமுன் கண்ணீர் நிறைத்து விம்மல் வெளிப்படும். தன்மானத்தில் கூனிக் குறுகிப்போய்....

தம்பிகள் சின்னவர்கள். தூங்கிக் கொண்டிருப்பார்கள். விவரம் தெரிந்த நான் மட்டும் வேதனையோடு அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருப்பேன்.

”அழக்கூடாது. நாளைக்கு பரிட்சையில்ல.படி”

அதட்டலின் தொனியில் இருமலோடு ஒரு குரல் வீட்டுக்குள்ளிருந்து கேக்கும்.

”படி.... அதெல்லாம் பெரியவங்க புரிஞ்சு சேர்ந்துக்குவாங்க. நீ அழாம படி”. செல்லம் வாத்தியார் ஆஸ்துமா முனங்கலோடு அதட்டுவார்.

விம்மலடங்க ஒரு குவளைத் தண்ணீரை நீட்டுவாள் அந்தம்மா.

ஆசுவாசப்படுத்திக் கொண்டு, Artificial Intelligence ஐ புரட்ட ஆரம்பிப்பேன். நள்ளிரவு கடந்து மணி ஒன்றை நெருங்கும் நேரம் தலையணையோடு போர்வையும் தந்தபடி என்னருகில் வந்து படுத்துக் கொள்வாள்.

விடிகாலை நாலுமணிக்கு எழுப்பி, செய்யும் அன்றாட வேலைகளுக்கிடையில் எனக்கும் வாத்தியாரய்யாவுக்கும் சுடச்சுட பில்டர் காப்பி. தெம்பாய் இருக்கும்.

ஆறுமணியானதும் எங்கள் வீட்டின் நிலவரமறிந்தும் அம்மாவுக்கு அறிவுரை சொல்லிய பின்னர் என்னை அனுப்பி வைப்பாள்.

அழுது வீங்கிய முகத்துடன் கல்லூரிக்குள் நுழையும் போது முட்டிக் கொண்டுவரும். என்ன என்ன என்று கேட்கும் தோழிகளிடம் எதுவும் சொல்லவும் முடியாமல்.... இதோ இப்படி எழுதுகிறேனே, அன்றைக்கெல்லாம் அத்தனை ரகசியமாய் இருந்தது என் வேதனைகளும் அழுகைகளும். பரீட்சை மும்முரத்தில் தோழிகள் முட்டிக் கொண்டிருக்க என் சுணக்கமறிந்தே நெருங்கி வந்து,

‘சாப்டியா கயல்’ என்ற நண்பனின் முகம் பார்க்காமல் திரும்பும் போதே தெரிந்துவிடும் அவனுக்கு.

’ஒழுங்கா எழுதுடா! இதெல்லாம் மறந்துடும் ஒருநாள் பாரு. கவலப்படாதே!’ பெரியமனுசனாய் ஆறுதல் சொல்வான் என் வயதுக்காரன்.

மாலையில் வீடு திரும்பினால் ஏதேனும் ஒரு உறவுக்கார கும்பல் வந்திருக்கும். அம்மாவும் அப்பாவும் சண்டையை மறந்து தடபுடல் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

அந்தப் பேப்பரில் நான் பாஸாகி விட்டேன்.

இது போல் எத்தனையோ பரிட்சைகளிலும்....

நட்பாய் வாத்தியாரம்மா,வாத்தியாரய்யா, என்னுயிர் நண்பன் என்ற காரணிகள் இருந்திருக்கிறார்கள். நன்றி சொல்ல காரணமா இல்லை? உச்சி முகர்ந்து ஆனந்தப்பட அவர்கள் தானில்லை என்னுலகில்...

கணவன் இறந்த மூன்றாம் மாதத்தில் இறந்து போனாள் அந்தம்மா. தொலைதூர தேசமொன்றில் வசிக்கிறான் என் நண்பன்.

எங்கிருந்தாலும் அவர்களுக்கு என் நன்றிகள் சமர்ப்பணம்.

Friday, April 19, 2013

ஏப்ரல் பத்தொன்பதாம் திகதி

என் டைரி முழுவதும் அடையாளங்களோடு குறிக்கப்பட்ட நாட்கள் தான் நிரம்பி வழிகிறது ஒவ்வொன்றையும் நினைவுக்கு அழைத்துச் செல்கையில், சில நாட்கள் சந்தோசமாகவும்..சில நாட்களைக் கொண்டாடவும்.. சில நாட்களில் யாருக்கோ ஆறுதல் சொல்லவும்..சில நாட்களில் எதற்கோ யாரிடமும் பேசாமல் அழுது மருகவும்... ஏங்கிச் சாகவும்...

ஏப்ரல் பிறந்ததுமே படபடப்போடு அந்த நாளுக்கான காத்திருப்பா எதிர்கொள்ளத் துணியா பயமா...இம்சிக்கும் வேதனையா.. இல்லாத பதிலோடு நகரத்துவங்கும் நாட்கள் காலத்தால் ரணங்களைக் கீறிப் பார்த்தபடி...

வாழ்க்கையில் மறதி என்பது வரமென உணரும் தருணங்களுமுண்டு. வாய்த்ததேயில்லை.

துயரங்களை மூடி மறைத்து சிரித்து மழுப்பிக் கொண்டே வாழ்கிறோம். ஏதோவொரு இழப்பிற்கு வருந்துவது இல்லையெனில் இழந்து விட்ட அந்த உறவை எண்ணி வருந்துவது எல்லாருக்கும் உண்டு. அதிலும் தன்னைமீறி துக்கச் சுமை வெளிப்பட்டு விடக்கூடாதெனும் சுயக்கட்டுகளில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது மனசு பண்பாட்டின் பேரில்... எல்லாப் பிரிவுக்கும் உயிர்வலிக்கும்.

மறக்கப்பட்டதை நினைப்பதற்கும் மறக்கமுடியாததை மறைப்பதற்கும்  தான் நாட்கள் போலும்... எத்தனை தான் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை. நிதர்சனம். பாழும் மனதெப்போதும் நிதர்சனங்களை ஏற்பதில்லை.

1998 வருடத்தின் கறுப்பு நாள் Apr 19. என் பெரிய தம்பியின் நினைவுநாள். அதிலும் எப்படியான நினைவு அவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கடைசிநேரத் தருணங்களை அருகிருந்து பார்த்து அனுபவித்த நாள். அவனுக்கென்ன அன்றோடு முடிந்தேவிட்டது. நினைவுக்குள் அவன் புகும் எல்லாக் கணங்களும் அவஸ்தை தான். வலியில்லா அவஸ்தை. கண்ணீர் மட்டும் தளும்பி வழியும் அனிச்சையாய். என் கூடவே வளர்ந்து வறுமையை பங்கிட்டுக் களித்தவன். நான் வாங்கும் எல்லா பரிசுகளும் அவனுக்கென உரிமை கொண்டாடுபவன். பரிசென்றால் சோப்பு டப்பாக்களும் எவர்சிலவர் தட்டுகளும் அத்தனை பெருமையாயிருக்கும் அவனுக்கு. அந்தச் சிறிய வயதிலும் எனக்கென கனவுகள் வளர்த்துக் கொண்டவன். சுயநலமில்லா அவன் என் முதல் குழந்தை.  தொடங்கும் எல்லா நாளிலும் ஏதாவதொரு சந்தர்பத்தில் பலவீனமாய் துரத்தியும் பாசமாய் அமர்ந்து கொள்ளும் அவன் பற்றிய நினைவுகள் என்னைத் தவிர யாரோடும் பரிச்சயமில்லாத நாய்க்குட்டியைப் போல. வசதிகள் அத்தனையும் உழைத்து பெற்றிருக்கிறேன். உரிமையோடு வாழத்தான் அவனுக்கு கொடுப்பினையில்லை. அதே கற்றையான ரூபாய் நோட்டுகள் கைதொடும் போதெல்லாம் இது அப்போதே கிடைத்திருக்கலாமே என்கிற வருத்தம் பணத்தை வெறுக்கச் செய்கிறது. மொத்தமாய் தந்துவிடுகிறேன் திருப்பித் தரச் சொல்லுங்கள் வறுமைக்கு நான் இழந்தயென் தம்பியை.

உன்னை நினைக்காதே நாளேயில்லை. இந்த நாளில் உன்னைத் தவிர யாரையும் நினைப்பதில்லை.

இளமையில் மரித்தவர்கள் எப்போதும் மூப்பெய்வதில்லை.

எப்போதும் மனதுக்குள் சொல்வது தான்...

துண்டுகளாய் வெட்டப்பட்டும்
காற்றில் உயிர்பெறும்
அதிசய ஜீவியென - உன் பிரிவினில்
உருக்குலைந்த உள்ளத்துக்கு
ஒன்று மட்டும் உறுதியாய்
சொல்லி வைத்திருக்கிறேன்

உன்னை மகவெனச் சுமக்கும்
வரம் கைவரும் வரை
’பகிரத்துடித்த பாசத்தையெல்லாம்
பத்திரமாய் வைத்திரு!
என் சகோதரனின் ஆன்மா
இப்போதும் என்னைத் தான்
சுற்றிக் கொண்டிருக்கும்!’

Wednesday, January 16, 2013

வாழ்க்கைச் சக்கரத்தில் நினைவென்னும் உயவுப் பொருள்


மஞ்சு விரட்டு மாடுகள் வளர்ப்பது கிராமத்தின் முக்கியாம்சங்களில் ஒன்று. சிலர் இதை அரசியலாக்கி லாபம் காண்பதும் உண்டு. ’ஏறுதழுவல்’ வீரத்தமிழர் பண்பாடு.விழுப்புண் பெற்ற இளங்காளையர்க்கு மாலைசூட்டுதல் அவர்தம்
வழக்கம்.இலக்கிய காட்சிகள் அழகாக விவரித்துச் சொல்லும்.இதெல்லாம் இருக்கட்டும் இன்று காணும் பொங்கல். எங்க ஊர்ல - மஞ்சு விரட்டுக் களைகட்டும். கிராமத்து வாழ்க்கையைப் போலவே, இது போலான அரிய நிகழ்ச்சிகளையும் ரொம்பவே இழக்கிறேன்.

மஞ்சுவிரட்டுக் குறித்த விசயங்களில் எனக்கும் கொஞ்சம் பரிச்சயமுண்டு. அதற்கான ஆயத்தங்கள் பற்றியும் கொஞ்சம் அறிவுண்டு. பொங்கலுக்கு ஒரு மாதமுன்பே மாட்டின் வலுவிற்கான தயாரிப்புகள் ஆரம்பித்துவிடும் உணவுரீதியாக. மஞ்சுவிரட்டு மாட்டோட மூக்கணாங்கயிற முதல் நாள் தான்  பிரிச்சி எடுப்பாங்க. அப்பத் தான் அதுக்கு அதிக வெறி வரும்ன்னு.
சிவப்புக் கயிறும் சலங்கையும் நெத்திச் சுட்டியும் சந்தனப் பொட்டு மாலை என இன்னிக்கு மட்டும் எல்லா முரட்டுக் காளைகளும் மணக்கோலத்துல... மஞ்சு விரட்டில் மாடுகள் கட்டுமிடம்,தொழுவம் இதெல்லாம் வர்க்க ரீதியானதென்றாலும் நின்று விளையாடும் மாடுகளுக்கு எந்த வர்க்கபேதமும் இல்லை. கட்டவிழ்த்தால் எதிர்போரைத் தாக்கித் தனியிடமேகுவதே குறிக்கோளாயிருக்கும். மேல் பாய்ச்சல், கீழ்பாய்ச்சலென்று பழக்கிய வித்தைகளையெல்லாம் எதோவொரு வீரனிடம் காண்பித்துவிட்டு ரத்தம் வழியும் கொம்புகளோடு மண்மேட்டைக் குத்திக் கிளரும் அடங்காத மாடுகளைப் பார்த்திருக்கிறேன்.
எத்தனை பேர் குடல் சரிய இறந்து போனார்கள்? எத்தனை பேரின் நிலைக் கவலைக்கிடம் இதெல்லாம் காதில் போட்டுக் கொண்டே விருந்தோம்பல் கொஞ்சமும் குறைவின்றி நடந்தபடியிருக்கும்.

கட்டு அவிழப் பெற்ற மாடுகளைத் திருப்பியும் வீடு வந்து சேர்ப்பது தான் பெரிய வேலை.திருப்பியும் அதைக்  கட்டிப்போட பிடி கயிற்றோட இன்னிக்கு முச்சூடும் ஆட்களை எங்கள் பிராந்தியத்தில் பார்க்கலாம்.
எங்கள் வீட்டில் வேலை ரொம்ப மிச்சம், வெல்லம்-தேங்காய்-பச்சரிசி இத வச்சிக்கிட்டுச் சமர்த்தா வந்திருன்னு சொன்னாக் கேட்குமளவுக்கு ஒரு மாடு வளர்த்தேன்.அதை மெல்ல ஏமாற்றிக் கொம்புகளில், முடிச்சிட்ட கயிற்றை மாட்டி விட வேண்டும். பிறகனைத்தும் மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.மிகக் கூராகச் செதுக்கப்பட்டிருக்குமதன் கொம்புகளின் பிரயோகம் எனக்கெதிராய்த் திரும்பினால் மரணம் நிச்சயம்.என்னை விடவும் ’அது’  என்குறித்து மிகக்கவனத்தோடிருக்கும்.யாருக்கும் அடங்காத அந்த முரட்டு உருவத்துக்கு என் அன்பாலேயே வசியம் செய்திருந்தேன்.



மூக்கணாங்கயிறு அழுந்திய ரணம் ரத்தமாய் வடிந்தாலும் என் கட்டளைக்குக்  கீழ்ப்படியும்.வாலையும் துமிலையும் தொடுவது மிகவும் ஆபத்தானது அந்த நேரத்தில்.. அத்தனை ஆக்ரோசமாயிருக்கும். ஆனாலும் என்னை அதன் கழுத்தை நீவி விட அனுமதிக்கும். அப்பாவுக்கு என் தைரியம் பெருமையாயிருக்குமென்பதாலே இந்த விசப்பரீட்சையில் நான் இறங்குவது வழக்கம். மிகவும் கம்பீரமான மாடு.அலங்காரங்கள் செய்தபின் அதன் துள்ளலும் துடிப்பும் பார்ப்பவரை மிரளவைக்கும்.மஞ்சுவிரட்டுக்குத் தோதான காளைப்பருவமதற்கு. அதற்கு மட்டும் பகுத்தறிவிருந்தால் அதன் சக்திக்கு முன் என்னையெல்லாம் மதிக்கவே செய்யாது.நல்லவேளையாக, அது என்னை எஜமானியாகவும் அதை நான் வளர்ப்புப் பிராணியாகவும் மனதார சுவீகரித்திருந்தோம்.
முக்கியமானதொரு விசயம் அதற்குச் சிவப்பென்றாலும் கறுப்பென்றாலும் ஆகாது. அந்தக் காலகட்டத்தில், அவ்விரு நிறங்களிலான ஆடைகளைத் தவிர்க்க எங்களுக்குள்ளான புரிதல் தாண்டிய பாசமொரு காரணம்.எங்களுள் நிலவியது நல்லதொரு நேயமென்றே கொள்ளவேண்டும். என் பெயரைக் கேட்டாலோ என் குரல் கேட்டாலோ அதனிடத்தில் ஒரு மெல்லிய பரபரப்பு தொற்றிக் கொள்வதைக்  கவனித்திருக்கிறேன்.
கல்லூரி முடித்து வீடு வந்தவுடன் அதனோடு பேசா விட்டால் தலை வெடித்துவிடும். என் வளர்ப்பு பிராணிகளில் நாய்கள்,மைனா,கிளி,பூனை,கோழி என எல்லாமும் இருந்திருக்கிறது, ஆனாலும் நான் அதிகம் நேசித்த ஒரு  ஜீவன் அதுவாகத் தானிருக்கும்.
மூன்று வருடங்கள் ’அது’ என்னோடிருந்தது.
வேலைக்கென ஊரை விட்டுச் சென்னை வந்த அடுத்த வருடம், யார் பராமரிப்பதென்ற குடும்ப அரசியலில் அதுவும் இல்லாமல் போனது மாட்டை மிகவும் நேசிக்கும் பெரியப்பாவைப் போல....

‘அது’வும் பெரியப்பாவும் எல்லாப் பொங்கலுக்கும் தவறாமல் நினைவுக்கு வந்து விடுகிறார்கள். ஏனென்று தெரியவில்லை வெற்றிடமொன்று பரவி வலியோடான கனம் பரவுகிறது.

 சொல்ல மறந்து விட்டேன் அதன் பேர் ‘ராமு’.

Monday, January 7, 2013

கல்விக் கொடை தந்த வள்ளல்

விஜய் டீவில இன்னிக்கு 'நீயா?நானா?' பார்த்தேன்.நான் பார்த்த எல்லா ஷோவைக் காட்டிலும் ஒரு கிராமப்புற மாணவியா இதான் ’பெஸ்ட்’ந்னு சொல்வேன். அத்தனை அற்புதமா அரசுக் கலைக் கல்லூரிகளின் கல்வித்தரம் பத்திச்  சொன்னாங்க.விவரிச்சாங்க.ஏத்துக்கிட்டாங்க.சொல்லப்பட்ட விதம் கூட ரொம்ப அறிவார்த்தமாவும் இயல்பாவும் இருந்துச்சு. கேட்டுக்கிட்டே இருந்தேனா என்னோட கல்லூரியப் பத்தின நினைவுகளில் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.மிகவும் போராட்டமாத் தான் அமைஞ்சது கல்லூரி வாழ்க்கைக்குப் பின் வேலை தேடும் படலம்.வாழ்க்கையில ஏற்ற இறக்கங்களைச் சுலபமா எதிர்கொள்கிற துணிவும் தைரியமும் இதுபோலான கல்லூரிகளிலே படிக்கற நடுத்தரவர்க்கத்துப் பெண்களுக்குத் தான் இயல்பா வருதுன்னு சொன்னாங்க.100% சரி. எப்பவும் போல எனனை முழுதா ஆராய்ந்தபின்னாடியே தான் இதச் சொல்றேன்.கல்லூரிச் சூழல் என் வாழ்வில் மிகவும் அருமையான,முக்கியமான காலகட்டம். 

படிப்பில நான் ரொம்பவே சுமார்.ஆனா மதிப்பெண் வாங்குறதுக்குப் படிக்காம,எப்படி எதில் படித்ததை உபயோகிப்பது என்கிற சுதந்திரத்தோடு சுயசிந்தனையை வளரச் செய்தயென் கல்லூரிக்கு நன்றி.மனிதர்களைப் படிக்கிற வித்தையை அங்க தான் நான் கத்துக்கிட்டேன்.அருமையான வாழ்வியல் கற்றுத் தந்தது என் கல்லூரி.

ஏனோ இன்னிக்கு என்னோட கல்லூரி மேல அத்தன மரியாதை வருது. எப்பவும் இருக்கும்னாலும் எழுதத் தோணினதில்ல.ஆகா,உனக்கு வயசாயிடுச்சுடீன்னு உள்ளுக்குள்ள அடிச்சிக்கிட்டாலும் சொல்லவந்ததச் சொல்லியே ஆகனும். 

எம்.ஜி.ஆர். காரைக்குடிக்கு ஒரு பொதுக் கூட்டத்தில கலந்துக்க வந்தப்போ, அவரை ஏழைப் பங்காளன்,வள்ளலென்றெல்லாம் அழைப்பதை இடைநிறுத்திச் சொன்னாராம்,’இது அழகப்பர் வாழ்ந்த மண். இங்க என்னை வள்ளல்ன்னு சொல்லாதீங்க.அதுக்கு நான் தகுதியானவனில்லைன்னு’. பல்கலைக்கழகத்திலிருந்து உடற்கல்வி பயிற்சிக் கல்லூரி வரையிலான அத்தனை பெரிய நிலப்பரப்பு. தானமாத் தர யாருக்கு மனசு வரும்? கடன் வாங்கிக் கல்விக் கண் திறக்க எந்த மாமனிதனுக்குத் தோணும்? தன் உடல்நிலை சரியில்லாத காலகட்டத்திலும் கூட? எத்தனையோ பேர் அவரை எத்தனையோ விதமா புகழ்ந்திருந்தாலும் நானும் சொல்ல வேணாமா? நான் என்ன சாதிச்சிட்டேன். அவர் புகழ் பாட நானெல்லாம் ஆளான்னு மனசாட்சி கேட்டாலும், ’உரிமை தான்’ன்னு பெருமையாச் சொல்லிக்கிறேன். ஒரு தனி மனுஷியாய் என் சாதனைகளுக்கு ஒன்றும் குறைவில்லை.

வள்ளல் அழகப்பர் என்கிற மாமனிதன் நிர்மாணித்த அந்தக் கல்லூரியில் படித்தேன் என்பதை நான் படிக்கும் காலத்தில் உணரவேயில்லை. ஏனெனில்,அது எங்கள் குடும்பத்தினர் அனைவருக்குமானதொரு கல்லூரி. :). அப்பா சித்தப்பா,அண்ணன்கள், தம்பி, தங்கை என என் ஒட்டு மொத்தக் குடும்பத்தில் எல்லோரும் ஒரு முறையாவது தங்கள் கல்விக் காலத்தை அந்தப் பெயரோடு தொடர்புபடுத்திக் கொண்டிருப்பர். அப்படி எங்கள் வாழ்வில் இரண்டறக் கலந்தது ‘அழகப்பச் செட்டியார்’ என்கிற பெயர்.

மூன்றாமாண்டு என்று நினைக்கிறேன், அப்பாவும் ராஜூ மாமாவும்(அப்பாவின் கல்லூரித் தோழன்) பேசிக் கொண்டிருந்தார்கள். கல்லூரியில் கால்பந்து போட்டி நடந்து முடிந்ததும் அழகப்பர் வீட்டிலிருந்து உணவு வருமாம். அவரோடு சேர்ந்து எல்லோரும் சாப்பிடுவார்களாம்.போட்டியில் தோற்றாலும் இதே உபசரிப்பென்பது கூடுதல் தகவல்.தன் மாணவர்களைத் தன் சகதோழனாகப் பாவிக்கும் மாண்பு வள்ளலின் தனிச்சிறப்பு.அப்பாவின் வாழ்வில் அவர் கல்லூரிப் பேராசிரியர்கள் மிகச் சிறந்த இடத்தைப் பிடித்திருந்தார்கள். பெரியார் வழிக்கு, சுயமரியாதை என்கிற சொல்லுக்கு வித்திட்டவர்களுள் ஒருவரென வள்ளலை அப்பா சொல்வது வழக்கம். தறிகெட்டலைந்த காலகட்டங்களையும் கல்லூரிக்குள் கற்றுக் கொண்ட அனுபவப் பாடங்களையும் பகிருவார் அப்பா. பெருமையாயிருக்கும். எளிமை, அடக்கம்,அறிவுசார் வாழ்வென வள்ளலிடம் கற்றுக் கொள்ள ஏராளமான உயரிய பண்புகளுண்டு. அத்தனைக்கும் மேல் கல்லூரியை உயிராய் நேசித்தவர் வள்ளல் அழகப்பச் செட்டியார். கல்லூரியிலேயே தான் அவர் சமாதியும் அமைந்திருக்கிறது. 

அவரின் கொடைச் சிறப்புப் பற்றிக் கூகிளில் தேடினால் ஆயிரம் கிடைக்கும். என்வரையில் பிரம்மித்த விசயத்தைச் சொல்கிறேன்.எங்கள் கல்லூரி நூலகத்திற்குச் செல்லுங்கள். அங்கிருக்கும் பல்லாயிரக் கணக்கான புத்தகங்களைப் பாருங்கள். தன் வாழ்நாள் முழுவதும் தேடிச் சேகரித்த அத்தனை புத்தகங்களையும் தானமாய்த் தான் நேசித்த கல்லூரிக்கே தந்து அறிவுக் கண் திறந்த அவரின் பெருந்தன்மைக்கு எப்படி நன்றி சொல்ல? அவர் வாழ்ந்த காலத்தில் கிட்டத் தட்ட எல்லாத் தரப்பு நூல்களும் அங்கிருக்கும். குறிப்பாய், தமிழ்த்துறைசார் நூட்கள் யாவும் அங்கு கிடைக்கும்.

“கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த
 வீடும் கொடுத்த விழுத்தெய்வம் – தேடியும்
 அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும் 
 வெள்ளி விளக்கே விளக்கு” 

இந்த வாழ்த்தை,எல்லாக் கல்லூரி விழாக்களிலும் வாசிப்போம்.மனப்பாடமும் கூட. ஆனால் இப்போது இதை வாசிக்கும் போது ஏனோ திரைகட்டுகிறது கண்ணீர். ஒரு தனிமனித முயற்சியும் கனவும் சமுதாய மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிகோலும் என்பதை வாழ்ந்து சாதித்தவர். பொதுவாய்,  மனிதர்களைப் புகழ்வது எனக்கு வழக்கமல்ல. இவரைப் போல மனிதருள் வாழ்ந்து சிறந்த தெய்வங்களைப் புகழாது போனால் எனக்குத் தெரிந்த சொற்பத்  தமிழும் என்னைப் புறக்கணிக்கும்.

ஆம், வள்ளல் அழகப்பச் செட்டியார் எங்களுள் வாழும் தெய்வம்.

Thursday, January 3, 2013

தூபம் போல் என் ஜெபம்...

இயந்திரகதியில் ஆயத்தமாகி,மாணவிகளோடு மாணவியாய் வரிசையில்.என்னைச் சுற்றி இருநூறு பேர் ஏசுவின் நாமத்தை சிரத்தையாய் ஜெபித்துக் கொண்டிருந்தாலும், அசராமல் குலுங்காமல் சாமியாடிக் கொண்டிருப்பேன்.இல்லையில்லை இரண்டு பக்கத்திலும் அரணாய் தோழிகள் இருப்பர்.முன்வரிசையிலும் பின்வரிசையிலும் அடுத்தகட்டத் தற்காப்புக்கு தோழிகள். காலையில் 5 மணிக்கு இறைவனை துதிக்கப் பழக்கிய பள்ளிக்கு கோடானுகோடி நன்றி.

”தூபம் போல் என் ஜெபம் -அது
உன்னைச் சேர வேண்டும்
நேசத்தந்தாய் உந்தன் அருள்.... “

மொத்த தேவாலயமும் அமைதியில் ஆழ்ந்திருக்க, வாத்தியங்களுக்கு நடுவிலொரு தேவக்குயில் இந்தப் பாட்டை பாடும் அந்த அதியுன்னதமான நேரத்தில் தான் என் தூக்கம் கலையும்.அந்தக் குயிலின் பெயர் லில்லி சிஸ்டர்.கண்டிப்புக்கு பேர் போன ஒரு ராணுவக்கூடாரத்தில் நேயத்தால் என்னைக் கட்டிவைத்த சாந்தசொரூபி.தப்பியோட வாய்ப்பே தராமல் அன்பு மழை பொழியும் கருணை தேவதை.

இரண்டு முறை கூடைப்பந்தாட்ட பயிற்சிக்கும் ஒரு முறை பேச்சுப் போட்டிக்கும் விடுதி மாணவிகளை அழைத்து போகும் பொறுப்பேற்றார்.முதல் சந்திப்பிலேயே  என்னை என் தோழிகள் வட்டம் தவிர்த்து டெடி(deady) என்றழைக்கும் உரிமையுடையவராகிப் போனார். டெடி என்கிற பெயர் காரணத்துக்கு என்மீதனைவரும் கொண்ட அன்பே காரணம்.வேறொன்றுமில்லை. :)

லில்லி சிஸ்டர், வீட்டுக்கு மூத்த பெண்.வயது? எனக்கு கணிக்க தெரியவில்லை.இவருக்குப் பின் மூன்று பெண்கள் உள்ள குடும்பம். அப்பா இல்லை. அம்மா மட்டும்.அழகாய்,அறிவாய்,கம்பீரமாய்,பணிவாய் அப்படியொரு சரிவிகிதத்தில், அவரைப் போல் அவருக்குப் பின் ஒரு பெண்ணை நான் பார்த்ததேயில்லை.பலமுறை  தோன்றும் இந்த உடையில் எந்த வசீகரமும் இல்லை, ஆனாலும் எப்படி இவரால் மட்டும் இப்படி ஜொலிக்க முடிகிறது? உள்ளத்தின் தூய்மை போலும்.

ஒரு கிறிஸ்துமஸ் லீவுக்கு ஊருக்குப் போகவில்லை. புத்தகம் வாஙகவென்று காரணம் சொல்லி, புதுமண்டபத்தில் சுற்றிக் கொண்டிருந்தோம். வார்டன் அக்காவும், லில்லி சிஸ்டரும் மேற்பார்வைக்காக. நான் அவருடன் பேசிக் கொண்டும் வாயாடிக் கொண்டும் வளைய வந்து கொண்டிருந்தேன்.ஒரு கணவன் மனைவி, எங்களைக் கடக்குமுன் கணவன் மட்டும் நின்று 2 நொடி நிதானித்து திரும்பிப் பார்த்தபடியே வேகமாக கடந்து போனான். லில்லி சிஸ்டரின் மொத்த உற்சாகமும் வடிந்தே போனது. அவருக்கு நெருக்கமானவராக இருக்க வேண்டும். ஏன் பேசாமல் போகிறார்? ஏதோ புரிந்தாலும் அப்படியேதுமிருக்கக் கூடதென்றிருந்தேன்.
பள்ளிப் பேரூந்தின் கடைசிச் சீட்டில் இருந்தார். கண்ணீர் சிந்திக் கொண்டே, கண்களை மூடி, உதடு கடித்து,
“தேவரீர்..” என்ற முணுமுணுப்போடு மனதுக்குள் கடவுளோடு மன்றாடிக் கொண்டிருந்தார்.ஆட்டமும் பாட்டமும் அந்தப் பக்கம் களைகட்டியிருந்தது. கும்மாளமிட அது போல் இன்னொரு நாள் வாய்க்காது போகலாம். ஆனால் என் அன்பிற்குரிய ஜீவன் அல்லாடிக் கொண்டிருந்தது. லயிக்கவில்லை மனது.

“என்னாச்சு சிஸ்டர்?”
சட்டென உணர்வு வந்தவர் பதற்றமாய், “ஒண்ணுமில்லம்மா!வந்துட்டமா அதுக்குள்ளயும்? சத்த அசந்துட்டேன்” என்று நானறியாமல் கண்ணீரை துடைக்கும் முனைப்பிலிருந்தார்.
“மனசு கஷ்டபடாதீங்க சிஸ்டர்”
“பெரிய மனுசியாட்டம். போடி முன்னால” கன்னதைக் கிள்ளி தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டார். ஏனோ நான் அன்றிரவு முழுதும் அழுது கொண்டிருந்தேன்.

அன்றிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரோடு பேசிச் சிரிப்பதே என் வேலையாகிப் போயிற்று.எனக்கொரு பலவீனம்... பியானோ வாசிக்கும் பெண்கள், அதிகமாய் ஆங்கிலக் கவிதைகள் பேசும் பெண்களெல்லாரும் என் அன்புக்குரியவராகிப் போவார்கள் எந்தவித மனத்தடையுமின்றி. அப்படித் தான் இவரும், லில்லி சிஸ்டர் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்தவர்.வாரப் பத்திரிக்கைகளுக்கும் தமிழ் கதைப் புத்தகங்களுக்கும் பள்ளியில் தடையே தவிர காதல் சொட்டும் ஆங்கில இலக்கியத்துக்கு தடையேதுமில்லை.லில்லி சிஸ்டர் மொழிபெயர்த்து சொல்வதில் மிகத் திறமைசாலி. சேக்ஸ்பியர்,கீட்ஸ்,பைரன் இப்படி நிறைய இலக்கியங்கள் கிடைக்கும்

“....இதில என்ன சொல்றான்னா நிலவோட அவள ஒப்பிட்டு பேசறான். He is speaking about the similarities...." கண்ணிமைக்காமல் நானும் லிசாவும் சொக்கிப் போயிருந்தோம் அவர் குரலினிமையிலும் அந்த இலக்கிய நயத்திலும்.

”உங்களுக்கு காதல்னா அவ்ளோ பிடிக்குமா சிஸ்டர். இவ்ளோ அருமையா சொல்றீங்க?”

சட்டென முகம் வாடி “அதும் அன்பு தானேடி”

“சிஸ்டர். அதெப்படி அதும் அன்பாகும்?”

“உனக்கும் ஒருநாள் புரியும்.வாலு.நட முன்னால”

அரையாண்டுத் தேர்வுக்கு முந்தின நாள் இரவு. ஹாலில் யாவரும் ஒன்று கூடியிருக்க, ரோஸி அழுது வீங்கிய கண்களோடு வழிபாட்டறையில். பெண்களின் உலகம் ரகசியங்களால் நிரம்பி வழிகிறது.ஆறுதல் சொல்லும் கரத்தின் வெதுவெதுப்பில் மீட்படைந்தோருமுண்டு. ரோஸி,அவள் என் எதிரிகள் பக்கம்.நான் ஒழுங்கீனமென பட்டம் வாங்க பலமுறை காரணமாயிருந்த நல்லபிள்ளை. எனக்கு அவளைக் கண்டாலே ஏகத்துக்கு எரிச்சல்.பணக்காரி. திமிரென்பதில்லை அவள் என்னை மதிப்பதில்லை ஆகவே அவள் என் எதிரியென நானே வரித்துக் கொண்டேன்.அது தவிர என்னுயிர் தோழி ஜான்சியின் மிகப்பெரிய எதிரி, ஆகவே எனக்கும்.
நாங்கல்லாம் மாங்கு மாங்குன்னு படிகறப்போ அவமட்டும் ஜாலியா தப்புறதா? கூடாது.வத்தி வைத்தாயிற்று.கனல் பார்வை பார்த்தாள்.மிரண்டு போய்ட்டேன். கண்ணீரோடு கோவத்தை கலந்து எய்தும் பார்வையம்பு, உயிர் நீங்கலாக திராணி அனைத்தையும் உறிஞ்சிச் செல்லும். உண்மை மக்களே!

வார்டன் சிஸ்டர் முன்னிலையில் முட்டி போட்டபடி அழுதுகொண்டிருந்தாள்.பதினோர் மணி சுமாருக்கு அலுப்பாய் வந்தாள். நானும் ஜான்சியும் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்து வைத்தோம்.

காலையில் வழிபாடு முடிந்து திரும்பும் போது கவனித்தேன் அவளும் ஜான்சியும் பேசிக் கொள்வதை. ஏதோ பெரிய பிரச்சினை. ஜான்சி அவளது ஊரைச் சேர்ந்தவள்.இராமேஸ்வரம் பக்கத்தில் ஒரு சின்ன கிராமம். நிறைய மீனவக் குடும்பங்கள். ரோஸியின் அப்பாவும் மற்ற சொந்தக்காரர்களும் மீன்பிடித்தொழிலை ஆதாரமாக கொண்டவர்கள். பெருந்தனக்காரர்கள் தான். பணமோ சாதாரண வாழ்வாதார பிரச்சனைகளோ இல்லை. என்னவாயிருக்கும்?
மதியம் உணவு இடைவேளை முடிந்து திரும்புகையில் காய்ச்சலென சொல்லி படுத்துக் கொண்டிருந்தாள்.சாப்பிடவுமில்லை. அவள் குழுவினரெல்லாம் அதீதப் படிப்பாளிகள். அவர்கள் கவனம் படிப்பிலிருந்தது.
நாளை மறுநாள் வரை தேர்வுகள் நெருக்கிப் பிடிக்கும்.ஏன் இந்த லூசு இப்படி சோம்பித் திரியுது. கேட்கலாம் தான். ஆனால் அனல் பார்வைக்குப் பயம்.மெதுவாய் லில்லி சிஸ்டரிடம் சொல்லி வைத்தேன்.
“நீயே போய் படின்னு சொல்றதுக்கென்ன ?”
“அவ என் எனிமி சிஸ்டர். நான் சொன்னா முறைப்பா”
“நீதாண்டி அவ பெஸ்ட் பிரண்ட். அவளும் படிக்கணும்ன்னு நெனைக்கிறேல்ல அதான்.என் செல்ல டெடி” சினேகமாய் தோளில் கைபோட்டு அழைத்து போனார். இப்படியான தருணங்களின் மிகவும் பெருமையாக இருக்கும்.பாத்தீங்களா நான் தான் இவங்களுக்கு ரொம்ப பிடிச்சமான மாணவின்னு ஒரு கர்வத்தோடும், எதிரில் வருபவர்களின் எரிச்சல் கலந்த முகத்தையும் பார்ப்பதில் அலாதி ஆனந்தம்.

அதன் பிறகு, தினமும் வழிபாடு முடிந்து திரும்பும் போது லில்லி சிஸ்டருடன் ரோஸி பேசினாள்.என்ன பேசுவார்களென்று தெரியாது, ஆனால் சொல்லும் ரோஸியும் கேட்கும் சிஸ்டரும் கலங்குவது பார்பவருக்கு எளிதில் விளங்கும்.
இரவு நேரத்தில் தூங்குமுன்பு மாதாவின் முன் அமர்ந்து வெகு நேரம் கண்ணீரொழுக பிராத்திப்பாள்.எப்போதும் சிஸ்டருடன் தான் அவளைப் பார்க்கமுடிந்தது. எனக்குள் வெறுப்பும் எரிச்சலும் மண்டிக் கிடந்தது.
அரையாண்டுத் தேர்வு முடிந்து மூட்டை முடிச்சுகளுடன் வீட்டுக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நானும் வெகு ஜோராய் அப்பாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். அப்பா எதோ மாநாட்டுக்கு மதுரை வருவதாயும் இரண்டு நாள் கழித்து அழைத்துச் செல்வதாயும் தொலைபேசிச் சொல்லிவிட்டார்.அதாவது பதினோரு நாள் லீவில் இரண்டு நாட்கள் இங்கேயே போய்விடும். அதிலும் கொடுமை ரோஸியும் நானும் மட்டுமே தனித்திருக்க வேண்டும். ஆறுதல் சாப்பாடு மிகப்பிரமாதமாய் இருக்கும்.கூடவே லில்லி சிஸ்டருடன் பேசலாம்.

நூற்றியிருபது பேர் இருந்த இடத்தில் இப்போது நான்கே பேர். அதில் இருவர் வார்டன் அக்காக்கள். ஏனோ அமைதி சகிக்கமுடியவில்லை. இரண்டு மணிநேரம் கூட என் வீம்பு பலிக்கவில்லை.
“ஏண்டி எப்பப் பாத்தாலும் அழுதுட்டேயிருக்க?” மௌனத்தை உடைத்தே விட்டேன்.
“”
“ஆமா நீ ஏன் ஊருக்குப் போகல? ஜான்சி லிசா கூடத் தானே போவ? ஏன் போகல?”
“”
“நீ என்கிட்ட தான் பேசனும் வேற வழியேயில்ல. ரெண்டு நாள் தான் அப்றம் நீ இப்டியே இருந்தாலும் யாரும் கேக்கப்போறதில்ல”
“”
“பேசமாட்டியா? நான் லில்லி சிஸ்டர்கிட்ட சொல்லிடறேன். நானா பேசினாலும் அவ முகத்தத் தூக்கி வச்சிக்கிறான்னு”
“நீ தான் அவங்க கிட்ட சொன்னியா?” முத்து உதிர்ந்தது.
“ஆமா. நீ ஏண்டி அழற?”
“”
அத்தனை எளிதாய் பதில் வரவில்லை.
நடு இரவில் அவள் எழுந்து பிராத்தனைக் கூடத்துக்குச் செல்வது தெரிந்தது.
“யாரு யாரு?” வார்டன் அக்காக்கள் குரல் பதற்றமாய் ஒலிக்கவே திடுக்கிட்டு நின்றாள். நாலாப்புறமும் தாளிடப்பட்ட அந்த பெரிய ஹாலிலிருந்த ஒரு பக்கத்துக் கதவைத் திறந்தால் பிராத்தனைக்கூடம். இன்று பாதுகாப்புக் கருதி எல்லாக் கதவுகளும் பூட்டப்பட்டிருந்தது.தூக்கம் கலைந்த எரிச்சலில் குதறி விட்டனர்.பாவம் அழ ஆரம்பித்தாள்.

“என்ன தாண்டி உம் பிரச்சினை? எப்பப் பாத்தாலும் அழுதுக்கிட்டே.....என்கிட்ட சொல்லுடி”
“யாருக்கிட்டயும் சொல்ல முடியாதுடி”
“லில்லி சிஸ்டர்கிட்ட மட்டும் சொல்ற”
“அவங்களுக்குப் புரியும்”
“எல்லாம் எங்களுக்கும் புரியும் சொல்லு”
”எல்லாமேயிருக்குடி எனக்கு ஆனா உசுரு தான் இல்ல”
“ஹா ஹா அப்ப பேய்கிட்ட பேசிட்டு இருக்கனா” மொக்கைத்தனமாகச் சிரித்தேன் என்பது அவள் இளக்காரப் பார்வை உணர்த்தியது.
“சரி சரி சொல்லு”
“வாழ்க்கையில தோத்துட்டேண்டி.என் அத்தை பையன் நான் உயிரா காதலிச்சவன் வேரொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். எங்களவிட வசதி. பெரிய இடம்.மொத்தமா அவன வெறுத்தேன் என்னை ஏமாத்திட்டான்னு”
”ம்ம்”
“அவன் போன வாரம் ஒரு ஆக்சிடெண்ட்ல செத்துப் போய்ட்டான்”
“ஓ!உனக்கு செஞ்ச பாவம்.விடுடி.உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்”
“அப்டி சொல்லாதேடி.என்னை சிஸ்டராக்க போறதா என் அப்பா சொல்லியிருக்கார். எங்களுக்குள்ள இருந்த பாசம் தெரியல அப்பாக்கு அதான். இவனும் எதும் சொல்லாம கல்யாணம் பண்ணியிருக்கான்.இப்ப தாண்டி தெரிஞ்சது”
“உங்கிட்ட உங்கப்பா கேக்கலியா?”
“இல்ல இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு பார்த்திருப்பார்.அதுக்குள்ள... கடவுளே!நான் நெனைச்சது ஒண்ணு எனக்கு நடக்கறது ஒண்ணு”
“கஷ்டமா இருக்குடி”
“இப்ப இந்த லீவுக்கு கூட எனக்கு வீட்டுக்கு போகப் பிடிக்கல, இங்கயே தான் இருக்கணும் போல தோணுது.லில்லி சிஸ்டர் தான் என்னை சமாதானம் செஞ்சாங்க. என் வலி அவங்களத் தவிர யாருக்கும் புரியாதுடி. அப்பாகிட்ட பேசினாங்க. கொஞ்ச நாளைக்கு ஊருக்கு வரவேணாம் இங்கயே இருக்கணும்னு.இந்தத் தோல்வி முடிவில்லடி வாழ்க்கைக்கு நெறைய அர்த்தமிருக்கு.முடிஞ்சதப் பத்திப் பேச என்னயிருக்கு? தேங்க்ஸ்டி நீ மட்டும் அவங்க கிட்ட சொல்லலன்னா நான் வேற எதாவது முடிவுக்கு போயிருப்பேன்”
எனக்கும் ஏதோ புரிந்தது.
மறுநாள் பிரார்த்தனையில் நான் தூங்கவில்லை.ரோஸிக்காகவும் மன்றாடினேன். அரையாண்டு லீவு முழுவதும் விடுதியிலே கழிந்தது.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்து வெளிவரும் போது நாங்களிருவரும் நேயமிகு எதிரிகளாயிருந்தோம். எதிரி என்று எப்போது சொல்லிக் கொண்டாலும் உடனே கண்முன் வந்து நிற்கும் அந்த ஒடிசலான கறுத்த உருவத்துக்கு நான் ரோஸியென்று பெயரிட்டிருக்கிறேன். எரிச்சல் மூட்டாமல் சிரிக்க வைக்கிற எதிரிகளுள் அவளும் ஒருவள்.
நண்பர்கள் சடுதியில் கிடைத்து விடுவார்கள்.ஆனால் ஆத்ம நண்பர்கள்? எதிரிகளும் சட்டென முளைத்துவிடுவார்கள். ஆனால் அங்கீகரிகப்பட்ட எதிரியென்று ஒரு விசயம் உள்ளதல்லவா..

பள்ளி முடித்து பலகாலமாகிற்று.

என்னை உங்களுக்கு நினைவிருக்குமா சிஸ்டர்? இப்பவும் நான் உங்க பாசத்துக்கு ஏங்குற அதே டெடி தான் சிஸ்டர். என்னை அடையாளம் தெரியுமா உங்களுக்கு? உங்களின் சின்ன விலகல் பார்வை கூட என்னை நொறுக்கிவிடுமென்பதாலே விலகியே நிற்கிறேன்.தோல்விகள் என்னை அமிழ்த்தும் போதெல்லாம் மூச்சுக் குமிழிகள் உங்களைத் தான் தேடுகிறது. ஒரு தேவகரம் என் தலைமயிர் பற்றி கரை சேர்கிறது.நினைவு வரும்போது தலையணை நனைக்கும் கண்ணீருடன் மேலே சுழலும் மின்விசிறி.உயிருடன் இருப்பதை உறுதி செய்கிறது.
ரோஸி, மை டியர் எனிமி. உனக்கு என்னை நினைவிருக்கா? என்னைப் பற்றி நினைக்கும் போது நீயும் சிரித்துக் கொள்வாயா?

உயரிய சேவையினால் - கலங்கமற்ற அன்பினால் - தன்னலமற்ற பாசத்தால் - நீங்களிருவரும் எப்போதும் என் நினைவில் இருக்கிறீர்கள்.

லில்லி சிஸ்டர் அதே கருணையுடன் என்னைப் போல பல்லாயிரம் மாணவிகளுக்கு தாயாக அங்கேயே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
ரோஸியும் பல்லாயிரம் மாணவிகளுக்கு ஆசானாக ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் விரிவுரையாளராக மிகச்சிறப்பாகச் செயல்படுகிறாள்.

வாழும் தெய்வங்கள். வணக்கத்திற்குரியவர்கள்!

Sunday, May 22, 2011

எங்கே இருப்பாய் நீ?

நெடு நாளாயிற்று எனக்கு இப்படியிருந்து,வேடு கட்டிய தலையும் தூசிக்கு பதில் மரியாதையாய் தும்மியபடியும் சுறுசுறுப்பாய் இயங்கி...அந்த இருட்டு அறைக்குள் கரப்பான் பூச்சிகளையும் சிலந்தி வலைகளையும் அலட்சியம் செய்தபடி தேடிக் கொண்டிருந்தேன் ஒவ்வொரு மரப்பெட்டியாக! பரபரவென தேடுவதும் கண்டடையாத ஆற்றாமையில் உதடு சுழிப்பதுமாய்...

அம்மாவுக்கு ஆச்சர்யம். வந்ததும் அசதியா இருக்கென நத்தையாய் சுருங்கி கொள்பவள். என்ன முக்கியமானதுனாலும் தூங்கி எழுந்தபின் பேசலாமென்று கத்தரித்து போய்விடும் மகள்,ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக எதை தேடுகிறாள்?

தாத்தா எப்போதோ மதுரை சித்திரைப் பொருட்காட்சியில் வாங்கித் தந்த மரச்சொப்பு சாமான்களுடன் வந்ததாய் நினைவு. முத்துவும் மேரியும் இது குறித்து சண்டை போட்டது கூட இன்னும் அப்படியே. தம்பி ஒரு நாள் விளையாட்டாய் அரிவாள் கொண்டு பின்னமாக்கியதாய்..இன்னும் இன்னும் வரலாற்று முக்கியம் வாய்ந்த நிறைய போர்கள் ’அது’ யாருக்கு உரிமை என்கிற கேள்விக்கு பதிலாய்.

சட்டென ஏதோ உடம்பில் ஊர்வது கண்டு திடுக்கிட்டபடி,பழைய நினைவுகளை ஒழுங்குபடுத்தி ஞாபகங்களை தூசி தட்ட, அதன் இருப்பிடம் புலப்பட்டது.அந்த சுவரோரத்தில் இருக்கும் கள்ளி மரப்பெட்டிக்குள்ள தான் இருக்கணும். துருப்பிடித்த ஜாமெண்டரி பாக்ஸ், மை உறைந்தும் கூர் ஒடிந்தும் கிடக்கும் பேனாக்கள்,எலி கடித்தது போக இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் வலைகளோடு பிடி உடைந்த டென்னிஸ் பேட்,சுருட்டி வைத்த ஸ்க்கிப்பிங் கயிறு இத்யாதி இத்யாதி..ம்ம்.இங்க தான் எங்கோ இருக்கணும்.விழிகள் பளிச்சிட, அதோ அதோ அதே தான்.

ஒரு கை உடைந்த மரப்பாச்சி பொம்மை

கண்ணில் நீர் துளிர்க்க தூசு தட்டி முத்தமிட்டவள்,குழந்தையாதல் சாத்தியமல்லாத இயந்திர பொழுதுகளில் தன்னிலிருந்து தன்னையே மீட்டெடுக்க பத்திரப்படுத்தினேன் பெட்டிக்குள்.



Wednesday, November 24, 2010

காகிதக் கடவுளும், சில கண்ணீர் துளிகளும்

கல்லூரி நாட்களில், அம்மா தான் எனக்கு எல்லாம்.இளங்கலை கணிணியியல் படித்தேன்.கல்லூரிக்கு பஸ்ஸிலோ அப்பாவின் வண்டியிலோ பயணிப்பது வழக்கம்.ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு கேட்கும் அப்பாவை விட, ’எனக்கு காசு பெரிசில்ல நீ வாங்குற மார்க்கு தான் பெரிசு’ என்று ஆறு மாததிற்கொருமுறை இம்சிக்கும் அம்மா தான் எனக்கு வற்றாத அமுத சுரபி. தினமும் கல்லூரி போகவென்று அப்பா கணக்கு பார்த்து தர, அம்மா மட்டும் கொடை வள்ளல். மொத்தமாய் நூறு ரூபாய் தாள்கள் கையிலிருக்கும் தருணங்களில் அப்படியே தலைக்கு மேல் ஒரு ஒளிவட்டம் சுற்ற கெத்தாய் நடந்து கொண்டிருப்பேன். பணத்தின் மீதான ஆசை வளர ஆரம்பித்த காலகட்டம் கல்லூரி காலங்கள் தான்.
அம்மா வேலைக்கு போகும் காரணத்தால், அப்பாவின் அரசியல் குறுக்கீடில்லாத குடும்ப பொறுப்பு மிகச் சிறு வயதில் தலையிலேற்றப்பட்டது. குருவி தலையில் பனங்காய் என்பதறியாமல் கிடைக்கும் சொற்ப கமிசனுக்காக வலிய ஏற்றிக் கொண்ட சுமையது.எல்லா மாதத்தின் முதல் வாரமும், கல்லூரி முடிந்து திரும்புகையில் கல்லுக்கட்டி சுப்பையா ஸ்டோர்சில் அம்மா கொடுத்தனுப்பியிருக்கும் சீட்டுடன் மளிகை சாமானுக்காக காத்திருப்பேன். பருப்பு,எண்ணை,வற்றல் வடகம் என மளிகை சரக்கு பலவிதமான உட்பிரிவுகள் கொண்டது. ஒவ்வொன்றுக்கும் எது சிறந்தயிடம் என்ற கணிப்பும் சிக்கன தத்துவங்களும் ‘சமர்த்து’ என்கிற பட்டத்தை தரும் காரணிகள் என்பதால் வெகு கவனமாயிருப்பேன். ஓடி ஓடி வாங்கினாலும்,
‘அய்யய்யோ! இங்க பாருடீ! பெருங்கடுகு வாங்கியாந்துட்டா!இதுல காரமே இருக்காதேடீ!’
’தொலியுளுந்து வாங்கியாறலயா? மாவு கணிசம் போறாதேடீ’
இப்படியான அப்பத்தாவின் அங்கலாய்ப்பில் அத்தனை கெத்தும் தூள் தூளாய் பறந்திருக்கும். அவ்வளவு பேருக்கு செய்யுற சமையல்ல எப்படி ரெண்டு தேக்கரண்டி கடுகோட காரம் தெரியப்போவுது? கடுகா பொரியணும் போல கடுகடுப்பா இருக்கும் ஆனா ஏதும் பேசவே முடியாது. அம்மா மட்டும் குறையோ நிறையோ ஏதும் சொல்லாமல், காசும் கணக்கு கேட்காமல் போய்விடுவார். ஆனாலும் குறித்து வைக்க வேண்டும்.
”எங்க வீட்டுல என் பொண்ணுக்கு வீட்டு வரவுசெலவெல்லாம் அத்துப்படி. ஹாஸ்டல்லயே போட்டுடேனா இங்கயிருந்து தான் வாழ்கைய கத்துக்க முடியுமின்னு சின்னச் சின்ன பொறுப்பா தர்றேன். அவளும் நல்லாத்தாங்க சமாளிக்கிறா” சக தோழியிடம் பெருமை பொங்க அம்மா பீற்றிக் கொண்ட தருணத்தில் என் ’கமிசனார்த்துவம்’ தூரப் போய்விட்டது.

**********

அம்மா அப்பாவிடம் அது இதென்று கதை கட்டி சேர்த்து வைத்த காசெல்லாம் பெரியம்மாவின் பாசத்தில் ஒரேயடியாக போய்விடும். வீட்டிற்கு மூத்த பெரியப்பாக்கள் இருவரின் குடும்பமும் மலேசியாவில் இருப்பதால் தொலைபேசியின் தொல்லை எப்போதும் மிகவும் அதிகமாகத்தான் இருக்கும்.யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்கிற சேதி தாங்கி வரும் ஒரு தொலைபேசி அழைப்பு மொத்தபேரின் தூக்கத்தையும் கெடுத்துவிடும். இல்லை கெவுளி(சுவர்க்கோழி) பாசை தெரிந்த அப்பத்தாவின் புலம்பலுக்கு ஆறுதலாய் ஒரு தொலைபேசியழைப்போ, கடிதமோ வராதவரையில் வீடு முழுக்க சாம்பிராணி புகையோடும் தனக்குத் தெரிந்த மன்றாடலோடும் அவளின் பரிதவிப்பு பாவமாய் இருக்கும்.அப்பாவோ சித்தப்பாவோ வீட்டில் இல்லாத நாட்களில் இதுபோன்ற நிலையென்றால், காரைக்குடியிலிருந்து மலேசியாவுக்கு தொலைபேசி விபரம் அறியும் பொறுப்பு என்னிடம் வரும். ரொக்கமாய் சில நூறுகளும் கேட்க வேண்டிய கேள்விகளும் மனனம் செய்தபடி நானும் மிக பவ்யமாக மிச்சமாகப் போகும் ரூபாய்களை கணக்கிலிட்டபடி.வீட்டிலிருக்கும் தொலைபேசியில் அயல்நாட்டுக்கு பேசும் வசதியில்லாததால், பெரியப்பாவிடம் கூறி யாரேனும் ஒருவரை அப்பத்தாவிடம் பேசச் சொல்ல வேண்டும். விசயம் மிகவும் எளிது. ஆனால் எதுக்கு நானூறு ரூபாய் என்கிற யோசனையும் அம்மாவின் நிர்வாகத்திறமை குறித்த எள்ளலும் முதல் முறை மட்டுமே. காரணம் புரிந்தபின் அம்மா எந்த அளவுக்கு புத்திசாலி என்பது தெரிந்தது. எண்களை அமிழ்த்தினேன். எடுத்தது பெரியம்மா தான்.

“பெரிம்மாஆஆஆஆ! நல்லாயிருக்கீங்களா! நான் தான்... ” முடிக்குமுன்னரே குரல் தெரிந்து பெரியம்மா விசும்பலா இல்லை அளவு கடந்த உற்சாகமா எதுவென தெரியாத வகையில்,
“கயலாஆஆஆஆஆஆஆஆஆஆ” என ஒரு பாசமான இழுப்பு. வார்த்தையில் இசையை குழைத்து,எனக்கும் கண்ணீர் முட்டி மீண்டு எழ, முதல் ஆறு ஏழு விநாடிகளை இந்த விளிப்பின் ஓசை நிறைத்திருக்கும்.

பெரியம்மாவின் பூர்வீகம் இந்தியா தானென்றாலும் பதினாறு வயதிலே திருமணமுடித்து கணவனிடம் சென்றவர்.ஆனாலும் எங்க பக்கத்து வட்டார வழக்கு மட்டும் அதே தாள லயத்தில். இன்னொரு சமயமென்றால் இத்தனை வருசமாகியும் மாறாத அவரின் சீரிய மாண்பு பற்றி கவிதை எழுதலாம். ஆனா கையிருப்பு பாசத்துல அடிச்சி இழுத்திட்டு போற சூழ்நிலையில என்ன செய்ய ??? எத்தனை முயன்றும் நம்மள ஒரு வார்த்தை கூட பேச விடாமல் தான் மட்டும் பேசிக் கொண்டிருப்பார். வெறும் ‘ம்ம்ம்ம்’ மட்டும் கொட்டிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அப்படியே இதய துடிப்பு நின்றுவிடும். கட்டணம் நானூறு தாண்டி நானூற்று அம்பதை தொடப்போகும் ஒரு அபாய வேளையில் எனக்கும் தைரியம் வந்து,

“பெரியம்மா! நான் காரைக்குடில இருந்து பேசறேன். வீட்டுக்கு பேசச் சொன்னாங்க. வைக்கிறேன்” கடன் சொல்ல கவுரவம் தடுக்கும், கையிலிருப்பதை எல்லாம் கொடுத்துவிட்டு வரும் போதெல்லாம் வெறும் சோகப் பாட்டுகள் தான் நினைவுக்கு வரும்.அம்மா தீர்க்கதரிசின்னு, மனசு எப்பவும் போல கடைசியா புரிஞ்சுக்கும்.

இப்போது மெயிலிலும்,சாட்டிலும் பேசினாலும்.. நண்டு சிண்டு எல்லாத்துக்கிட்டயும் மொபைல் வந்திட்டாலும்.. நினைத்த மாத்திரத்தில் எவருடன் தொடர்பு கொள்ள ஏதுவாய் எல்லாமிருந்தும்...பேசச் செய்ய அப்பாத்தா போல் கிரியா ஊக்கியாக எவரும் இல்லை. பாசத்தால் பிணைக்க பெரியம்மா போல் இன்னொரு ஜீவனும் அங்கில்லை. பெண்கள் மிகவும் அற்புதமானவர்கள். பெண்கள் எந்த நாட்டிலிருந்தாலும் உள்ளுள் பெருகும் பாசமும் ஒருங்கே சேரும் பாந்தமும் தான் இன்னும் கலாச்சாரம், குடும்பம் என்கிற அடிப்படைக்கு வித்திடுகின்றன போலும். பெரியம்மாவோ அப்பத்தாவோ படிபபறிவே இல்லாதவர்கள். குடும்பம் தவிர வேரொரு உலகம் அவர்களறியாதது. என்வரையில் அவர்கள் அடிமைப்படுத்தப்படவுமில்லை, அடிமையாகவுமில்லை.மாறாக மகாராணிகளாக வாழ்ந்தார்கள் எனச் சொல்லலாம். ஆணாதிக்கவாதிகளாய் சொல்லப்பட்ட என் குடும்பத்தினர் சிலர் கூட இவர்களின் வார்த்தைக்கு எதிர்பேச்சு பேசியதில்லை.படிப்பறிவில்லாத-பகுத்தறியாத பாசம் ஜெயித்தது போலும்.

***********

“கயலு! இங்க வாம்மா!”
”என்னங்கப்பா?”
“இந்த தாள்ல உன்னோட கால வையி”
“எதுக்கு”
“கழுத! கேள்வியா கேக்குற? வையின்னா..”
ஊருக்கு கிளம்பும் அவசர வேளையிலும் பெரியப்பா கையில் வெள்ளைதாளும் கையுமாய் நின்றது நினைவிருக்கிறது.பாதங்களை ஒட்டி பேனாவால் தாளில் வரைந்து பத்திரமாய் பெட்டியில் வைப்பார். வித விதமான காலணிகள் என் விருப்பமென்கிற கரிசனம்.எனக்கான பொருட்கள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து வாங்கி தந்த பாசம்.
ஒவ்வொரு பண்டிகைக்கும், விடியுமுன்னரே ஸ்ரீதர் மாமா, பெரிய பெட்டியோடு வாசலில் நின்றிருப்பார்.குலுவான்கள் அத்தனைக்கும் அவரவர் பேரிட்டு கொத்து கொத்தாய் ஆடைகள் பிரிக்கப்பட்டிருக்கும்.கூடவே எனக்கு மட்டும் இரண்டு மூன்று ஜோடிச் செறுப்புகள். சரியான அளவுகளில் கனக்கச்சிதமாக.மலேயாவிலிருப்பவர்களின் சேமலாபங்களை அப்பத்தா விசும்பலோடு கேக்க, அங்கிருப்பவர்களுக்காய் இது அத்தனையும் கேமராவுக்குள் அடக்கிக் கொண்டிருப்பார் ஸ்ரீதர் மாமா. இத்தனை பிள்ளைகளிருந்தாலும் அங்கிருக்கும் பிள்ளைகள் மீதான பாசம் கண்ணீராய் கரைந்து கொண்டிருக்கும்.அழகி பேரழகியாவாள் அப்போதெல்லாம்.

ஏனோ சில நாட்களாக ஏதோ ஒரு பயங்கலந்த விலகல்.எல்லோருடனுடமும் பேசுவதைக் குறைத்துக் கொண்டேன்.பெரியப்பாவின் உடல் நிலை குறித்த தகவல்கள் ஏதும் சரியாகயில்லை.எப்பவும் நிகழலாம் என்கிற கவலை படர்ந்த எதிர்பார்ப்பு.ஒருநாள் காலை அப்பா விம்மலுடன் அந்தச் சேதி சொன்னார். எதுவுமே சொல்லாமல் அழைப்பை துண்டித்து விட்டேன். கண்ணீர் வர நெடுநேரம் பிடித்தது. கண்ணீர் வரும் வரையிலான மனப்போராட்டம் அப்பப்பா கொடுமை.தனிமையில் கதறி ஓய்ந்ததும் இரண்டு வருடங்களுக்கு முந்திய பொங்கல்தினம் மின்னல் கீற்றாய்...உடல் நலக் குறைவு இருந்தபோதும் எல்லா பொங்கலுக்கும் ஊருக்கு வருவதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

“அப்பா! இந்தாங்கப்பா இது என் காசு நானே சம்பாதிச்சது.” இரண்டு ஆயிரம் ரூபாய் தாளை பெரியப்பாவின் சட்டைப் பையில் வைத்தேன். பெருமை பொங்க தளும்பும் கண்ணீரோடு கைகளைப் பிடித்தவர். அப்படியே சாமியறைக்கு கூட்டி போய் கதறியழுதார். அய்யோ ஏதேனும் அதிகபிரசிங்கித்தனமோ என நான் பயந்துபோய் இருக்க,
“எம்புள்ள இப்படியிருக்கணும் தாண்டா ஆசப்பட்டேன்.யாரையும் நம்பாத. பொம்பளப்புள்ள சுய கால்ல நிக்கணும். அதான் அதுக்கு தான் படிப்பு.இந்த உசிருக்கு இது போதும். இது போதும்.எம்புள்ள சம்பாதிச்ச காசு..” சட்டைப்பையை தடவிக்கொண்டார். உணர்ச்சி மிகுதியில் தள்ளாடிய பெரியப்பா இன்னும் கண்ணை விட்டகலாமல்...

பெரியப்பாவின் பாசமும் அரவணைப்பும் இனியொருமுறை கிடைக்கப் போவதில்லை.ஆயிரந்தான் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை. ஆனாலும்....ஆனாலும்....உள்ளுக்குள் எழுந்தடங்கும் அழுகைக்கு எழுத்துக்களால் அடைக்கலம் தேடி இப்படியாக நான்.

***********


Sunday, October 10, 2010

சேது (எ) சேதுராமன்

மனம் போல் வாழ்வது எத்தனை சுகம் தெரியுமா? ஒரு இறகின் பயணம் போல இலகுவாய்.. கனமேதுமில்லாமல்.. அரிதாய் வாய்ப்பதுண்டு.அப்படி வாழபவர்கள் நிச்சயம் திறமைசாலிகள்.இந்த தத்துவத்துக்குப் பின்னாடியிருக்க கத என்னான்னா? அதிகப்படியான விடுமுறைகளை எப்படித் தள்ளுறதுன்னு தெரியாம முழிக்க வேண்டியதாயிருக்கு. வெட்டியா இருக்கோமுங்குறத எப்படி எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு.அட.. பொழுதே போகமாட்டேங்குதுப்பா!
பாட்டுக் கேக்கலாம். ம்ம்ஹ்ஹும் எல்லாப்பாட்டும் கேட்டாச்சு. புதுசா எதாவது கேக்கறதுன்னா? பதிவிறக்கம் ம்ம் பொறுமை அவசியம். இன்னிக்கு இல்ல இன்னொரு நாளைக்கு...

படம்,பார்க்,பீச் இப்படி எங்காவது போகலாம். யாருமே இல்ல வெறிச்சோடிக் கிடக்குது இங்க. துணைக்கு யாருமில்லாம எப்படி... தோழிகள் யாரையாவது கூப்பிட்டால்?ஞாயிற்றுக்கிழமை கணவன்மார் சாபத்துக்கு ஆளாகக்கூடும்.

எங்காவது கடைக்கு போயிட்டு வரலாம். ஹிக்கிம்போதம்ஸ் போகலாம்.கூட்டமா இருக்கும் கூடவே ஆர்வக்கோளாறு பர்ஸ காலி பண்ணிடும். போகவேணாமுன்னு தோணுது.கோயில்? நேத்து கூட்டத்துல சிக்கி நூலானது போதும். அடுத்தவாரம் பாத்துக்கலாம்.

அலைபேசலாம். நேத்தி பூரா அம்மாட்ட பேசிப்பேசி வாய்வலிக்குது.அறிவுரை திலகம் என் அருமை உடன்பிறப்பு பொழிஞ்ச அக்கறையில(!) காது ரெண்டும் உய்ய்ய்ய்ங்குது.

எதாவது படிக்கலாம்.இருக்க புத்தகம் எல்லாமும் படிச்சாச்சு.முறிந்த சிறகுகள் - இன்னொரு முறை படிக்கலாம். ஆனா அடுத்து என்னவரி வரும்ன்னு தெரிஞ்சே படிக்கிறதுக்கு ரசிகத்தன்மை வேணும். அதில்ல இப்போ. இன்னிக்கு ஏதும் புதிதாய் படிக்க மனமில்லை.

ரொம்ப நாளாச்சு பெயிண்டிங் பண்ணி.இன்னிக்கு பண்ணுவோம். பாதிவரை முடித்ததும் ஒன்றுதல் இல்லாமல் ....

கதிரி கேட்கலாம்... கிருஷ்ணா நீ வேதமே.... சாக்ஸோஃபோன் உருகிக் கொண்டிருந்ததது.அதையடுத்த அரைமணி நேரத்தில் அறுவதுக்கும் மேற்பட்ட பாடல்கள். ஹி ஹி ஹி. ஆரம்பம் மட்டும் கேட்டேன்.இந்த நிலையற்ற மனநிலைக்கு தீர்வு?

ம்ம். நல்ல காஃபி சாப்பிட்டா இதமா இருக்கும். கூடவே அண்ணியோட நக்கலும் நையாண்டியும்..என் அருமை வாலுங்க கூட்டமும் அங்கதானே? சரி போய்வரலாம்.போனவாரம் வா வான்னு கூப்பிட்டாங்க.போகமுடியல. இன்னிக்கு போகலாம்.முன்னறிவிப்பில்லாம போறோமே? பரவால்ல சொல்லிட்டு போனா நாகரீகமா இருக்காது.

****************************

இருபது நிமிட பயணம்.நகரின் பிரபலமான அடுக்குமாடிக் கட்டடம். பத்தாவது தளம். வீடு பூட்டப்பட்டிருந்தது. அலைபேசவும், “என்னம்மா? தியேட்டர்ல இருக்கேன்.எல்லாரும் வந்தோம்.பக்கத்துல தான். நீ எங்க இருக்க?”
“உங்களபாக்க வந்தேண்ணா. சரி நான் கிளம்புறேன். இன்னொரு நாளைக்கு வர்றேன்.”

“இரு இரு.படம் முடிய இன்னும் 20 நிமிசந்தான். மொத்தமா அரைமணிநேரம் பொறுமை கிடையாதா? திடீர்ன்னு வந்திட்டு இப்படி ஓடற. இரு இரு. உங்க அண்ணி வந்து உனக்கு பேயோட்டுனாத்தான் அடங்குவ.போனவாரம் நீ ஏன் வரல.ம்ம்?” திரையரங்க இரைச்சலுக்குள்ளும் அண்ணாவின் கர்ஜனை கொஞ்சம் நடுக்கத்தை தந்தது.
“சரி சரி.வாங்கண்ணா. இருக்கேன்”

சொல்லாமல் வந்ததற்கு மனதிற்குள் நொந்தவாறே திரும்பவும், இடிப்பது போல் ஒரு முதியவர் வந்து எதிரே நிற்க திணறிப்போனேன். அவருக்கு சுமார் 60-65 வயதிருக்கலாம்.மிடுக்காக உடையணிந்தபடி இளமை துள்ளும் கண்களை மறைத்த கண்ணாடி, கையில் இந்தியா டுடே. என்னை விட சற்றே உயரம். அதாவது குள்ளம் - சராசரிக்கும் குறைவான உயரம்.ஏதோ நடைபயிற்சி சென்று திரும்பியிருக்க வேண்டும்.ஆயத்தங்கள் அவ்விதம் உரைத்தன.

”யாருவேணும் உங்களுக்கு?நான் ஏதேனும் உதவலாமா?”

பொதுவாக இதுபோலும் பிளாட்டில் உள்ளவர்கள் எதிரில் வருபவர்களை ஏதோ வேற்று கிரகவாசிகள் போல் பார்ப்பது வழக்கம். தவறி ”இதானே E10” என்கிற மாதிரியான கேள்விகளுக்குக் கூட இயந்திரதனமாய் பதில் வரும்.இந்த முதியவர் போல் வலிய வந்து கேட்பவர்கள் மிகச் சிலர்.அப்படிக் கேட்பவர்கள் பெரும்பாலும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களாக இருக்கக்கூடும். இப்போது தான் கவனிக்கிறேன் போன முறை வந்தபோது காலியாய் இருந்த வீடு....குடி வந்தாயிற்று போல.சேதுராமன்,மரகதம் என மின்னியது பெயர் பலகை.

”உங்களத்தான் மேடம். என்ன பாக்குறீங்க. யாரப்பாக்க வந்தீங்கன்னு சொல்லுறது ஒண்ணும் அத்தனை தவறான விசயம் கிடையாதே!” முதலில் தமிழில் கேட்டவர்,சிறு இளக்கத்துடன் சுத்தமான ஆங்கிலத்தில் மறுபடிக் கேட்கவும் சிரித்தபடி தமிழில் பதில் சொன்னேன்.

“ஓ. கணேசன் வீட்டுக்கா? நமக்கு இந்த வீடும்மா. நம்மூரு பொண்ணா நீ? திமிரா பேசயிலேயே தெரிஞ்சது வைகையாத்து வாசம்.” கலகலவெனப் பேசிக் கொண்டே கதவருகில் சென்று ”மரகதம் கணேசன் தங்கை வந்திருக்காம்மா.ரெண்டு காபி குடு” என்றபடி உள்ளே போனார். நான் தயங்குவது தெரிஞ்சதும்,”உள்ளவா நாங்களும் மதுரக்காரங்க தான்.பயப்படாதே என் மனைவி நல்லா காபி போடுவா” சிரித்தபடி பேசியவர் ஏனோ நெடுநாள் பழகியதான உணர்வை தந்தார்.கூடவே தமிழனுக்குள்ளான பிரிவினை வலிக்கத்தான் செய்தது. மதுரையா? கோவையா? காவிரிக்கரையா? எனக்கேட்டு கேட்டு கூட்டம் சேரும் மாண்பு அப்படியே சிலிர்க்க(?) வைத்தது.அதுபோலும் குறுகிய வட்டமோ இது என்கிற வருத்ததை அடுத்த சில நொடிகளில் போக்கினார் சேது.

“வாம்மா!உள்ளவா!கணேசனுக்கு உறவா?தங்கையின மாதிரிக் கேட்டது.” மென்மையான மதுர குரல்.அழகான லட்சுமிகரமான முகம். தேஜஸான முகத்தில் மஞ்சள் குங்குமம் அதையும் மிஞ்சி ஜொலிக்கும் கல்மூக்குத்தி. ஒரு கறுப்பு முடிகூட எடுக்க முடியாது என்கிற அளவுக்கு வெளுத்த கேசம்.
நான் எழுந்து கரம் குவிக்கவும், “என்னைவிட இவ கொஞ்சம் வயசானமாதிரி தெரியுறால்ல?அதானே வணக்கமெல்லாம் சொல்லுறே! நீ வேணா அவள பாட்டீன்னு கூப்பிடு. என்ன சேதுன்னே கூப்பிடு.” என்றபடி நமட்டலாய் சிரித்தார் சேது.

“ம்ம்க்கும்! யாராவது சின்னப் பொண்ணுங்க வந்திட்டா போதும்.கமலஹாசன் மாதிரி நெனச்சுக்கும் கிழம். இருங்க இருங்க காபிக்கு sugarfree கூட போட போறதில்ல.கொழுப்பு அடங்கட்டும்” அந்த அழகான ஊடலை ரசித்தபடி இருக்க, அண்ணா வரும் வரை பொழுது போவது ஒன்றும் அத்தனை கடினமல்ல எனப் புரிந்தது.
சாலை கடக்கும் பொழுதுகளில் கைபிடிக்கும் யாரோ, கூட்டநெரிசலில் தவறி விழப் போகையில் தோள் பற்றும் யாரோ, ஏதோ ஒரு நகைச்சுவைக்கு பொதுவில் சிரிக்கையில் சினேகித பார்வை பகிரும் எவரோ,முகம் தெரியாத சிலருடன் மின்னாடலில் பகிரும் வார்த்தைகளின் வழியே உணரும் பாசம் இப்படி அறிவிற்கு எட்டாத ஏதோ ஒரு விசயம் மனிதம் இருப்பதை எப்போதுமெனக்கு நினைவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறது.இயல்பான வாழ்க்கை மீதான என் காதலும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

சேதுராமன் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். ஏதோ ராணுவக் கிட்டங்கியில் வேலைபார்த்ததாகவும்,பின்னர் சில காலம் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றதாகவும் சொன்னார்.மகனும் மருமகளும் லண்டனில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.பரஸ்பரம் அறிமுகப்படலம் முடிந்து வீட்டை சுற்றிக்காண்பிக்கலானார்.மனுசன் அறுபதுகளில் ரொம்ப ரசனையான உலகத்தை அனுபவித்தவர் போலும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கதை சொன்னார்.கல்லூரி நாட்களில் காரைக்குடி CECRIயில் வருடம் ஒருமுறை அறிவியற்கண்காட்சி நடத்தப்படும்.அதில் ஹைதர் காலத்து(?) ஃபிளாப்பி டிரைவ் எல்லாம் இருக்கும்.பார்க்க வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும்.அதே உணர்வும் ஆர்வமும் அந்த வீட்டில் உள்ளவற்றை காணும் போதும். எல்லாமே மிகவும் அருமையான கலைப்பொக்கிஷங்கள்.அதுல ஒரு பொருள் மிகவும் கவர்ந்தது.டேப் ரிக்கார்டுகளுக்கு முந்தைய இசையுலகம். கிராமோஃபோன்.நான் பிறக்கும்போதே கிராமஃபோன்கள் செல்வாக்கை இழந்திருந்தன. என் வீட்டில் ஒரு பெரிய கறுப்பு நிற டேப்ரிக்கார்டர் இருந்ததாக நினைவு. இந்தக்கருவியை நான் சினிமாக்களில் பார்த்திருக்கிறேன்.நேரில் அதன் செயல்பாட்டை பார்க்க வாய்த்த அரிதான சந்தர்ப்பம்.


 சேதுவிடம் நிறைய இசைத்தட்டுகள் இருந்தது. சிலவகை அபூர்வமான குரல்களெல்லாம் தன்னிடம் உண்டு என்பதாகச் சொன்னதோடல்லாமல் ஒவ்வொன்றாக போட்டு வேறு காண்பித்தார். கேவி மகாதேவன் மீது மிகப்பற்றுள்ள காரணத்ததால் அவரது பாடல்களே அலமாரியெங்கும் நிரம்பி வழிந்தன. அதுல ஒரு பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சதுங்க. ஆடவந்த தெய்வம் படத்துக்காக டி.ஆர்.மகாலிங்கம் பாடின பாட்டு. ’கோடி கோடி இன்பம் தரவே’ எனத் தொடங்குமது. கொஞ்சம் கீறலோடும் இழுத்தவாறும் இருந்தாலும் அமுதமாய் இருந்தது இசையும் குரலும்.பாடலுக்கு நடுவே காபியோடு மரகதம்மா வரவும், அவங்கள நோக்கி பாடியபடி ஆடவும் செய்தார் சேது. ’ம்ம்க்கும் இதுக்கொன்னும் குறைச்சலில்லை’ என்று வாய் சொன்னாலும் அவரையும் அவர் பாவங்களையும் ரசித்துக்கொண்டிருந்தாள். அன்று வெட்கப் பொழிவோடு சிரித்த அம்முகத்துக்கு நிகரான உயிருள்ள ஓவியம் இருக்கவே முடியாது நான் பார்த்தவரையில்.அவரது இசையார்வம் குறித்து பேசிக்கொண்டு இருந்தார்.வெகுநேரமாய் உறுத்திக்கொண்டிருந்த கேள்வி கேட்டேவிட்டேன்.

“ஓய்வுக்குப் பின்னாடி சொந்த கிராமத்துக்குப்போயி வாழறவங்களத்தான் பார்த்திருக்கேன்.ஆனா இந்த வயசுல தனியா இங்க சொந்தபந்தமில்லாம இருக்கீங்களே.கஷ்டமாயில்லையா?”

“மதுரைப்பக்கம் ஒரு சின்ன கிராமம் என்னோடது. ஐந்து பெண்கள். நான் மூணாவது.அக்கா தங்கச்சிங்க வாழ்க்கையெல்லாம் சீராக்கின பின்னாடி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.என் மனைவிக்கு அப்போ என்னால தனிப்பட்ட வசதிவாய்ப்புகள் செய்து தரமுடியல.பையனும் கிராமத்து சூழ்நிலையில தான் படிச்சி வந்தான்.அவன் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் தான் நாங்க இங்க வந்தது.ஏன்னா இன்னிக்கு கிராமம் எப்படியிருக்கு தெரியுமா? ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு கொடி பிடிச்சிக்கிட்டு இல்ல சாதி மதமுன்னு சிலபேரு ஊரக்கெடுத்திட்டிருக்கான். பங்காளிச்சண்டை சொத்துப்பிரச்சனையின்னு சில பேரு.இதையும் மீறி நாம ஏதாவது செஞ்சா நீயென்ன புதுசா தலைவராக பாக்குறியான்னு கேக்குறாங்கம்மா. நமக்கான வசதிகள் செஞ்சுக்கக் கூட பலபேரு தயவ எதிர்பார்க்கறதாயிருக்கு.காந்தி எதிர்பார்த்த சுதந்திரம் அங்கில்லமா.பலகிராமங்கள்ல கட்டப்பஞ்சாயத்து தான் நடந்திட்டு இருக்கு.அதுக்கும் மேல நாங்க ரெண்டு பேரும் வயசானவங்க மருத்துவ வசதி,போக்குவரத்து வசதி எங்களுக்கு வேணும்.தேசியகீதம் படம் பார்த்தியா அப்படிப்பட்ட சபிக்கப்பட்ட ஊர்கள்ல ஒரு ஊருதான் என்னோடது.அதான்மா கிராமத்த விட்டுட்டு இங்க வந்திட்டோம். கிராமத்துல நகரத்தோட சீரழிவுகள் கொஞ்சம் கொஞ்சமா இறங்கிட்டு இருக்கு. பாரு நான் இங்கே தன்னார்வத்தொண்டனா என்ன வேணா செய்யலாம். ஆனா கிராமத்துல என் சாதி முன்மொழியப்படும். அதான் மாசில்லா தண்ணியும் காத்தும் கூட வேணாமுன்னு இங்கயே...” நிறுத்தி நீண்ட பெருமூச்சு விட்டார் சேது.அவர் பக்கமும் நியாயமிருக்கக்கூடும். சாதிகள்,மதங்கள் இல்லாத இந்தியா வர என்ன செய்ய வேண்டும் கலாம்? கனவு மட்டும் கண்டு கொண்டிருக்கிறேன், ஆதிக்கமில்லாத சமுதாயம் வேண்டி.சிலபல ஆதிக்க சக்திகளுக்கு உட்பட்டு நானும் கனவு மட்டுமே கண்டு கொண்டிருக்கிறேன்.

”அத்தே என்ன மிலிட்டரி தாத்தா உங்க காதுல ரத்தம் வர வச்சிட்டாரா?அப்பா கூப்பிடுறாங்க தப்பிச்சி ஓடிடுங்க” சிவா, அண்ணாவின் பத்து வயது மகன் திடுமெனப் புகுந்தான் எங்கள் அமைதிக்குள்.

“அடி படவா!” என்றபடி துரத்தலானார் சேது.

அண்ணியிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட பிறகு, அண்ணாவிடம் மெதுவாய் கேட்டேன்.
“சென்னையில எங்கண்ணா கிராமஃபோன் கிடைக்கும்? அந்த இசைத்தட்டுகளும் வேணுமே”

புரிந்தாற்போல் மெல்லச் சிரித்தவர், “ரொம்ப சுவராஸ்யமான மனிதர்.நான் நிறைய பேசுவேன் அவர்கூட.அண்ணி தான் பேசவே விடமாட்டா.பொறாமை எங்க நட்ப பார்த்து”

”ஆமா ஆமா மிலிட்டரி சரக்கு உள்ள தள்ளிக்கிட்டே ரொம்ப பேசுவாங்க ரெண்டு பேரும்”, நக்கலான குரல் கேட்டது உள்ளிருந்து.

பின்குறிப்பு:-

சேதுவின் புண்ணியத்தில், அன்றைக்கு என்கிட்ட மின்னாடலிலே மாட்டின தொலைதூர நண்பர்கள் எல்லாரையும் கொடுமைப்படுத்திட்டேன் இந்தப்பாட்டுப் பாடி. தப்பிச்ச மீதிப்பேருக்கு மின்னஞ்சலா போயிருக்கும்.இடுகைய படிக்கற எல்லா பாவப்பட்ட மக்களும் இந்த பாட்ட தவறாம கேக்கனுமின்னு அகில உலக
அடாவடி மகளீர் அணி சார்பா கேட்டுக்கறேனுங்கோ!

Sunday, August 15, 2010

காமாட்சிப் பாட்டி

“பேத்தி வந்திருக்காளா பார்வதி” ஆச்சிக்கிட்ட யாரோ பேசுவது கேட்டது. அந்தக் குரலின் குழைவு...அது காமாட்சிப் பாட்டி தானே.தட தடவென வெளியே வந்தேன்.

குதப்பிய வெத்தலையும், இரவிக்கை அணியாத சேலையும்,எந்நேரமும் வெத்தலை முடிச்சும் சுருக்குப்பையும் எல்லா கிராமத்து பாட்டிகளையும் போலவே தான் காமாட்சிப் பாட்டியும். ஆனால் எனக்கும் அவளுக்குமான அலைவரிசை கோடியில் ஒருத்தருக்கிட்ட தான் வருமாக்கும். ஏன்னு தெரியுமா ? எல்லாத்துக்கும் பெருமை அவளுக்கு என்மேல.யாரோடும் பங்கு போட அவசியமில்லாத எனக்கே எனக்கான பாசம். என் குறைகள் மட்டுமே விமர்ச்சிக்கப்படும் பள்ளி நாட்களில் என்னை கைவிடாத ஒரே கூட்டணி காமாட்சி பாட்டி தான்.

ஊருக்குள்ள பிரசவம் பார்ப்பதில் காமாட்சிப் பாட்டி ரொம்ப பிரபலம். குழந்தை பிறந்து 2 முதல் 3 மாதம் வரை பாட்டிக்கு அந்த வீட்டில் தான் வேலை. பொழுது முச்சூடும் புள்ளத்தாச்சி சாப்பிடும் முறையிலிருந்து,குழந்தை குளிப்பாட்டும் முறை வரைக்கும் அத்தனையும் கற்பித்து பதிலாய் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் தன் ஊதாரி மகனுக்கு தந்துவிட்டு எங்கள் வீட்டு புறக்கோடி திண்ணையில் சாய்ந்துவிடுவாள். இதுபோக, விதவை பென்சனும் பஞ்சாயத்து ஆபிஸ்ல சம்பளமும் அவள் ஊதாரி மகனுக்கு விழலுக்கிரைத்த நீராய் போயிற்று.ஆச்சியும் இதுவரை அவளை தூரமாய் பார்த்ததில்லை.தானாய் இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்வதும், எங்களை வளர்ப்பதும் தோட்டத்தில் வயலில் என எங்கும் நிறை பராபரமாய் அவள்.

“நீ பொறந்தப்போ மூக்கு சப்பையா போச்சுன்னு ஒன்னோட அத்த சொன்னாளா? எனக்கு சுள்ளுன்னு கோவம் வந்திருச்சு. அந்த முப்பது நாளக்கிம் மூக்க நிமிண்டி நிமிண்டி குளிப்பாட்டி... பாரு இப்ப உம்மூக்கு எப்படி இருக்குண்ணு? “என்னையறியாமல் கண்ணாடி பார்ப்பேன் நான். அத்தனை போராடியுமே இப்படியா..?

தன் விரலாலே சிக்கெடுத்து சாம்பிராணியிட்டு வளர்த்த என் நீண்ட கூந்தல் விடுதி வாழ்க்கை கருதி வெட்டப்பட்ட ஒரு தினத்தில் என்னை விடவும் எனக்காய் அழுத மகராசி.
”இப்ப என்னத்துக்கு நீ ஒப்பாரி வைக்கிற? மயிற தானே வெட்டுனோம் என்னமோ அவ தலைய சீவுன மாதிரி கூப்பாடு போடுற?” அம்மாவின் அதட்டலையும் சட்டை செய்யாமல் தாழ்வாரத்தின் மூலையில் விசும்பிக் கொண்டிருந்தாள் அவள்.

“அந்த மணியன் வீட்டு வாலுக்கு எப்பவுமே ஏந்தங்கத்த சீண்டலையின்னா ஒறக்கமே வராது. இரு இரு..நாளைக்கி அவன் காத திருகி கேணிக்குள்ள போட்டிடுறேன்.என்ன பண்ணுவான்னு பாக்குறேன்.நீ அழாதடா ராசாத்தி” அம்மா முதுகில் குடுத்த அடிகளின் வலி மறந்து ஓட்டைப்பல்லோடு சிரித்துக் கொண்டிருப்பேன் நான்.

”ஏந்தாயி இப்பத்தான் வந்தியா? வாரதே கொஞ்ச நாளு.வீட்டிலே இருக்காம என்னத்துக்கு வெயில்ல சுத்துற. கறுத்துப் போயிட்ட பாரு.” தம்பியும் அம்மாவும் செருமுவதில் ஏகப்பட்ட கேலியிருக்கும். ”நீ ஏன்டா சிரிக்கிற. அவளுக்கென்னடா குறைச்சல்?வெளியூருல தங்கின்னா படிக்குது. கஸ்தூரி மஞ்சளும் கடல மாவும் தேச்சா பழைய மாதிரி பொன்னா மின்னுவாள்ல.” சலுகையாய் அவள் மடிசாய்வேன் நான்.

கூட்டுக் குடும்பமாகையால் எங்க வீட்டில் ஒவ்வொருவரின் பிறந்தநாளும் அவரவர் நினைவு வைத்திருக்க வேண்டும். அந்த மாதம் பிறந்தவுடன் நச்சரிக்க ஆரம்பித்தால் தான் பரிசும் பணமும் பிறந்தநாளன்று நிறையச் சேரும்.மாதக் கடைசியில் வரும் பிறந்த நாளென்பதால் எனக்கு மட்டும் இந்த விற்பனை தந்திரம் பலிக்கவே செய்யாது.பாட்டி வீட்டில் மட்டும் அந்தக் குறை இருக்கவே இருக்காது. காரணம் காமாட்சிப் பாட்டி.
”கார்த்திகை பிறந்த தேதி முதலா காமாட்சிக்கா தொணத் தொணக்க ஆரம்பிச்சிருச்சு.அதான் எல்லாங் கெடக்கட்டுமுன்னு அம்முவ பார்க்க வந்துட்டேன். இந்தா”, தாத்தாவின் காலில் விழுந்து, ஆசிக்கு கூட காத்திராமல் பறித்துக் கொண்டு ஓடுவேன். காதிப் பட்டில் பாவடை சட்டை என் நீள அகலங்களை உத்தேசித்து அழகாய் அம்சமாய் தைக்கப்பட்டிருக்கும்.

பட்டுப்பாவடை தாவணியும்,தாழம்பூ தைத்த சடையும்,மை தீட்டப்பட்ட விழிகளுமாய் ஒருநாள் அவள் காலில் விழுந்த போது,
“ஆத்தி.ஒத்த ரூவாகூட இல்லையே புள்ள கையில வச்சுக் கொடுக்க..பொசுக்குன்னு கால்ல விழுந்திருச்சே. இரு இந்தா வாரேன்.” அவசர அவசரமாய் தன் இயலாமையை குறை கூறியபடியே போனவள்,கையில் இரண்டு ரூவாய் தாளோடும் தோட்டது வெண்பூசணிக்காயோடும் வந்தாள்.எனக்கும் திருஷ்டி சுத்த ஒருத்தி இருந்தான்னா அது எவ்வளோ பெரிய விசயம்?அவள் தந்த அந்த இரண்டு ரூபாய் நோட்டு இன்னும் என் பழைய நாட்குறிப்பில் ஞாபகக் குறிப்பாகவும்.

”கால் வலிக்குது பாட்டி!சொடக்கு எடுத்து விடு”, உரிமையாய் அதிகாரமிடும் வாடிக்கை அவளைத் தவிர இதுவரைக்கும் எவரிடமும் இல்லை.சிரிக்க சிரிக்க பாட்டுப்பாடி,பாவத்தோடு கதை சொல்லி தலை கோதியபடி தூங்கச்செய்வாள். அது போலே குலுங்க குலுங்க சிரித்தபடி தூங்கிப்போன என் இளமை காலங்கள், நடுநிசியில் ஆர்ப்பரிக்கும் மனதோடு கவிதையில் பாரத்தை இறக்கி விடத்துடிக்கும் இந்த வசதியான வாழ்க்கையில் ஏதோ இல்லாமை கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது.

”ராத்திரியானா வேப்ப எண்ணை நாறும் அந்த கிழவிக்கிட்ட. ஆனா இவ அப்படியே உரசிக்கிட்டு கிடக்கறா.ஏண்டி நீ இப்படியிருக்க?” சித்தி முதல் தம்பிகள் வரை யாருக்கும் அவள் மனசு தெரிய வாய்ப்பேயில்லை. நாகரீகம் கருதி அவர்கள் அவளை நாடுவதேயில்லை. எனக்கு இதுவரை அந்தக் குறை தெரிந்ததேயில்லை.

நெனச்ச மாத்திரத்தில் நையாண்டி பாட்டுக்கட்டி அந்த எடம் முழுக்க சிரிக்க வைக்கும் தெறமசாலி.எப்படித்தான் வார்த்தை சேர்த்து மெட்டுப் போடுவாளோ தெரியாது. அவள் பாடும் தான்னான்னே இல்லாத முளைப்பாரியோ பாரிவேட்டையோ இது வரை அந்த ஊரில் இருந்ததில்லை.இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். ஒரு திருவிழாவில், சாதிக்கலவரத்தில் மகன் செத்துப் போன பின், அது சம்பந்தமான வழக்கு வாய்தா என்று அவள் திண்ணையில் படுப்பது குறைந்து போயிற்று. இதோ அவள் தான் வந்திருக்கிறாள்.

“பாட்டீ” என்றவாறே அடுப்படிக்குள் நுழைந்தவளை வாரியணைத்தபடி,

“ஏஞ்சாமி. எப்படித்தா இருக்க? இன்னிக்கு தான் வந்தியா?” என்றவாறே கன்னம் வருடியவளின் உருவத்தில் அசைவில் நம்பிக்கையில் வயோதிகம் வெகுவாய் படர்ந்திருந்தது.

இரவு, முல்லையின் நறுமணத்தோடு நிலவை ரசித்திருந்த ஒரு பவித்திர தருணத்தில் மெதுவாய் கேட்டாள்.
”எம்புட்டு நா இங்கயிருப்ப?”

ஏனோ மனசு பிசைய, “பாட்டி எங்கூட சென்னைக்கு வந்திடு.நானிருக்கேன் உனக்கு!”

“வாரேஞ்சாமி! ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு எம்பேரு எழுதச் சொல்லித்தருவியா? அந்த கவர்மெண்டு கிளர்க்கு என்ன கைநாட்டு கைநாட்டுன்னு கூப்பிடுறான்.செத்தும் என்ன இப்படி அசிங்கப்பட வச்சிட்டானே எம்மவன்.”

சன்னமாய் கதறியவளுக்கு காமாட்சிப் பாட்டியாகிக் கொண்டிருந்தேன் நான்.

Tuesday, April 20, 2010

நினைவுகள் அழிவதில்லை

எப்போதோ யாருடனோ
பகிர்ந்தளிக்கப்பட்ட
பாசத்தின் சொச்சம்
இன்னும் மிச்சமிருப்பதாய்...

வாழ்வின் வளமையெல்லாம்
தனியளாய் சுகிக்கையில்
ஒப்புக்குச் சிரித்தும்
உள்ளுக்குள் உறுத்தும்
வெற்றிடமொன்று
இன்னும் நிரம்ப வழிவகையற்று...

சட்டென இருள்பரவும்
மின்வெட்டுத் தருணங்களில்
துழாவும் கைகள்
எப்போதோ இழந்த
ஸ்பரிசத்தை இப்போது
தேடுவதாய்..

கை தவறிக் கொட்டிய
வெந்நீரை விடவும்
எனக்காய் வடிக்கப்பட்ட
கண்ணீர் இன்னும்
வலி தந்த பொழுதுகள்..

வேகமாய் நகரும்
வாகன நெரிசலில்
சாலை கடக்கும்
ஒவ்வொரு முறையும்
அனிச்சையாய் பற்றுதலை
எதிர்நோக்கும் எல்லா
நாட்களிலிலும்...

உன் கைபிடித்து விளையாடிய
வண்ணமிகு வசந்தங்கள்
மங்கலாய் வந்து மறைகிறது!
கூடவே
நான் மட்டும் பார்த்துத் துடித்த
உன் கடைசிநேர அவஸ்தைகளும்!

வரிகளில் எப்படி இத்தனை
வலியை அப்படியே வடிப்பது?
வலுவிழந்து போயின
வார்த்தைகளெல்லாம்...

வருடத்தில் ஒருநாள்
உன்னை மட்டுமே நினைக்க
ஒதுக்கினாலும் - உன்னை
நினைவுபடுத்தாத நாளொன்று
என் வாழ்வில் இல்லவேயில்லை!

புத்திக்குத் தெரிந்த உண்மை
நெஞ்சுக்கு புரிவதில்லை
ஆயிரந்தான் அழுதாலும்
மாண்டார் மீள்வதில்லை!

துண்டுகளாய் வெட்டப்பட்டும்
காற்றில் உயிர்பெறும்
அதிசய ஜீவியென - உன் பிரிவினில்
உருக்குலைந்த உள்ளத்துக்கு
ஒன்று மட்டும் உறுதியாய்
சொல்லி வைத்திருக்கிறேன்

உன்னை மகவெனச் சுமக்கும்
வரம் கைவரும் வரை
’பகிரத்துடித்த பாசத்தையெல்லாம்
பத்திரமாய் வைத்திரு!
என் சகோதரனின் ஆன்மா
இப்போதும் என்னைத் தான்
சுற்றிக் கொண்டிருக்குமென்று!’



Saturday, January 30, 2010

மாவீரன்

திடீரென ஒரு நடுத்தர வயது மனிதர் பெருங்குரலெடுத்து அழுதால் எப்படி இருக்கும்? அந்த அறையின் அமைதியை முழுக்கவே கிழித்துப் போட்டுவிட்டு கதறிக் கொண்டிருந்தார் அவர். என்னவாயிற்று? சில வினாடிகள் சுரணையற்று நின்றோம் செய்வதறியாமல்! கையில் வைத்திருந்த செய்தித்தாளை முகத்தில் ஒற்றி 'இழந்துட்டோமே! இழந்துட்டோமே' என்றவாறு பிதற்றிக் கொண்டிருந்தார்.

ஏதோ ஒரு தீய செய்தி! காரணமறிய செய்தி தாளை பார்த்தால் போதும்!ஒருவாறு வழி புலப்பட்டதும்,அது அவர் குடும்பத்தினர் குறித்த செய்தியாயிருக்கலாம் என்றெண்ணினேன். கப்பற் படையில் பணிபுரியும் அவரது இளைய மகனோ? இல்லை வளைகாப்பிற்கு வருவதாயிருந்த அவரது கர்பிணி மகளோ ஆபத்திலிருக்கலாம்! அவர் மனைவியும் மருமகளும் பயந்து போய் தூர நின்றிருந்தார்கள். மெல்ல நெருங்கி அவர் தோளைத் தொட்டேன். கண்ணீருடன் நிமிர்ந்தவர்,

"பாரும்மா! இவன பாரு! இந்த முட்டாப் பசங்களுக்கு உணர்வு வரணுமின்னு தன்னையே காவு கொடுத்திருக்கான் பாரு! எத்தன நிதானம்? எத்தன‌ கொள்கைப் பிடிப்பு? சாகும் வரைக்கும் தன்னை தன் இனத்தின் பிரதிநிதியா நெனச்சு வாழ்ந்திருக்கான் பாரு! தியாகி! நெசத் தியாகி! இப்படி ஒரு பிள்ளைய நான் பெத்துக்கலயே! உணர்வுள்ள ஒரு தமிழன் செத்துட்டான்! இழந்துட்டோமே! இழந்துட்டோமே!" திரும்பவும் கதறலானார்.

"எல்லா விசயத்துக்கும் அதிகமா அலட்டிக்கிறதே இந்தாளுக்கு வேலையா போச்சு! ஏய்! நீ டீவிய போடுடீ! சீரியல் பாக்கனும்! நான் கூட‌ என்ன‌மோ ஏதோன்னு" அல‌ட்சிய‌மாய் ச‌க‌ஜ‌மான‌து அந்த வீடு!

கசங்கிய செய்திதாளுக்குள்ளே என் இனத்தின் கம்பீரம் ஒளிர்ந்திருந்தது.

முத்துக்குமார்!

தன் இனத்தின் அழிவுக்கு முற்றுப் புள்ளி வைக்க, ஈழத்தில் இறந்து கொண்டிருந்த மனித நேயத்தை உயிர்பிக்க, தன்னையே பலியிட்ட எழுச்சி மிகு தமிழன். கடைசி மணித்துளி வரையிலும் தன் மரண வாக்கு மூலத்தை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல துடித்தானே தவிர, பிழைக்க நினைக்கவேயில்லை!

உலகம் ஒரு முறையாவது ஈழம் பிறக்க வழி செய்ததா?

எத்தனை எத்தனை போராட்டங்கள்,மறியல்கள், உண்ணாவிரதங்கள் ஏதாவது ஏதாவது தமிழீழம் உயிர்க்க வழி செய்ததா?

தொட்டுவிடும் தூரத்தில் நீ!

நான் இந்தியத் தமிழனென்றும்

நீ ஈழத் தமிழனென்றும்!

கை பிசைந்தபடி, சர்வ வல்லமை படைத்த விதியை நொந்தபடி,

எங்கள் இழிவான இயலாமை முட்டி தள்ள

எதுவும் செய்ய முடியாமல் ......

மதிப்புமிக்க தமிழர் ஒருவர் சொன்னது, "ஊடகங்கள் தவறான அனுகுமுறையால் பிரசாரத்தால் ஒரு இளைஞனின் உயிரை பறித்துவிட்டன!"

உன் வாக்குமூலத்தை படித்திருந்தால் தெரியும் நீ சாவை எதற்கு எவ்விதம் வருவித்துக் கொண்டாய் என்று!

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினாராம் வடலூரார்!

அதற்குப் பெயர் ஜீவகாருண்யமாம்!

சொல்கிறார்கள் மெத்தப் படித்தவர்கள்! ஆயிரமாயிரம் உயிர்கள் அழிந்து கொண்டிருக்கையில் என்ன செய்தார்கள்? அஹிம்சை தேசம் என்ன செய்தது?
அவர்களுக்காக எல்லாரும் கண்ணீர் மட்டும் சிந்துகையில் உயிரையே தந்து போன மாவீரன் நீ!

மறத்தமிழா!

நீ விட்டுப் போன கனவுகளெல்லாம் பலித்ததா? தெரியாது!

தூங்கிய தமிழன் விழித்தானா? தெரியாது!

மனிதம் மலிந்த தேசத்தில் பிறந்ததாலோ என்னவோ உன் மரணம் வெறும் செய்தியாக போயிற்று!

இன்றைக்கு என்ன சமையல்? அந்த நடிகைக்கும் இந்த நடிகனுக்கும் ஏதோவாமே! அக்கம் பக்கம் புரணி என இத்தனைக்கு மத்தியிலும் உன் தியாகம் பேசுமா? தெரியாது!

சலித்துக் கொள்ள மட்டுமே முடிகிற‌,எதுவுமே செய்ய திரணியற்ற வெற்றுக் கூட்டத்தில் நானும் ஒருத்தி என்கிற குற்ற உணர்வில்,என்னால் ஆன காணிக்கையாய் இந்த கண்ணீர் வரிகள் உன் ஆன்மாவிற்கு!

ஆப்ரகாம் லிங்கனும் அதிமேதாவியும்




ஒரு ஏழை விவசாயி மகனாக பிறந்து, பிற்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்த ஒரு மாமனிதன் ஆப்ரகாம் லிங்கன்! பலமுறை ஜனாதிபதி தேர்தலில் தோற்றும்,அவரது விடாமுயற்சியின் பலனாக அந்த பதவியை வென்று சிறந்தவர் என்பது உலகம் அறிந்ததே! என்றென்றும் உலக வரலாற்றில் விடாமுயற்சி என்ற சொல்லின் பொருளாக லிங்கனின் பெயர் இருக்குமென்பதில் ஐயமில்லை!

ம‌க்க‌ள் பிர‌திநிதி செல்வ‌ந்த‌ர்க‌ள் ம‌த்தியிலும் ப‌ழ‌கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் அமைவ‌து ச‌க‌ஜ‌ம் தானே!பொதுவாக, மேல்த்தட்டு வர்க்கம் அடிம‌ட்ட‌த்திலிருந்து துளிர்விட‌ துடிப்ப‌வ‌னை மேலெழும்ப‌ விடாது அழுத்தி,அழிக்கப் பார்க்கும்! பார‌ம்ப‌ரிய‌ம்,அந்த‌ஸ்து,நிறம்,ம‌த‌ம்,இன‌ம்,சாதி இன்ன‌ பிற‌ கார‌ணிக‌ள் அவர்கள் பக்கம் இருக்கலாம்.தன் பெருமை குறித்து த‌ம்ப‌ட்டம் அடித்தும், 'எனக்கு நீ நிகரில்லை' என இழித்துப் பேசியும் ஒருவனின் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்ப்பதில் வெறி கொண்டவர்களாகவே சில மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.இது மாதிரியான ச‌ந்த‌ர்ப்ப‌ங்களை எப்படி எதிர் கொள்ள‌ வேண்டுமென்ப‌த‌ற்கு கீழ் வ‌ரும் நிக‌ழ்வு ஒரு சிறந்த முன்மாதிரி!அவ‌ர‌து வாழ்க்கையில் ந‌ட‌ந்த‌ ப‌ல‌வித‌ உருசிக‌ர ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் இதுவும் ஒன்று!

ஒரு பெரிய‌ செல்வ‌ந்த‌ர் தந்த‌ விருந்து ஒன்றில் லிங்க‌னும் க‌ல‌ந்து கொள்ள‌ வேண்டியிருந்த‌து.அந்த‌ செல்வ‌ந்த‌ர் நிற‌வெறிக் கொள்கை கொண்ட‌வ‌ர் என்ப‌து லிங்க‌ன் முத‌ல் அனைவ‌ரும் அறிந்த‌தே! விருந்து மிக‌வும் கோலாக‌ல‌மாக‌வும் அம‌ர்க‌ள‌மாக‌வும் ந‌ட‌ந்து கொண்டிருந்தது.ப‌ல‌ முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ளுட‌ன் லிங்க‌ன் உரையாடிக் கொண்டிருந்தார்.

திடீரென்று செல்வந்தர் இடைமறித்து,

"லிங்க‌ன்! ஒரு ம‌னித‌னுக்கு சராச‌ரியாக‌ கால்க‌ளின் நீள‌ம் எவ்வ‌ள‌வு இருக்க‌வேணும்?" என்றார் அறிந்து கொள்ளத் துடிக்கும் பொய்யான‌ பாவ‌னையுட‌ன்.

கேள்வியின் உட்க‌ருத்தை உண‌ர்ந்த‌ அத்த‌னை பேரும் ப‌ல‌மாக‌ சிரிக்க‌த் தொட‌ங்கின‌ராம். அதாவ‌து,லிங்க‌னின் உருவ‌ அமைப்புக் குறித்த‌ ப‌ரிகாச‌ம் அது.லிங்கன் சராசரிக்கும் சற்று அதிகமான உயரமும், கறுப்பான‌ ஒடிசலான தேக அமைப்பும் கொண்டவர். அவ‌ர‌து கால்க‌ள் ச‌ற்றே நீண்டிருக்கும்.

அத்தனை கிண்டலுக்கு மத்தியிலும் எந்த‌வித‌ ச‌ல‌ன‌முமின்றி லிங்கன்,

"பொதுவாக‌ கால்க‌ளின் நீள‌ம் இடுப்பிலிருந்து த‌ரையை தொடும் வ‌ரையில் இருந்தால் போதுமான‌து" என்றாராம்.

நகைசுவையோடு கலந்த ச‌ம‌யோஜித‌ அறிவு மட்டுமல்லாது, பிறர் கேலியையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தெளிவு கொண்டவர் அவ‌ர்.

அப்புறமென்ன ? அந்த கிண்டல் ஆசாமி விருந்து முடியும் வரையில் கப்சிப்!



Sunday, January 24, 2010

த‌ன்னிக‌ர‌ற்ற‌ த‌லைவ‌னுக்கு அஞ்சலி

அரசியல் செய்தியா?
அசிரத்தையுடன் அலட்சியமாய்
விமர்ச்சித்த நானும்
விழிகள் விரிய
விபரம் கேட்கலானேன்
அப்பாவின் வாயிலாக!

ஆர்வம் வரக் கண்டு
அவரைப் பற்றிய
புத்தகங்களையும் செய்திகளையும்
தேடித் தேடி படிக்கலானேன்!
அதுவரையிருந்த அரசியல் குறித்த
அவநம்பிக்கைகள் அகன்று
இப்படியும் இருக்கிறாரென
நம்பிக்கை வந்தது!

காந்தீயம் என்பது குறித்த
காகித கோப்புகளின் வரிகளுக்கு
கணக்கச்சிதம்
'மார்க்கசீயம்' சுமந்த
ஜோதிபாசு அவர்கள்!

எளிமை என்பது என்ன?
தலைவன் என்பவன் யார்?
மொத்தமாய் விழுங்கும்
மேல்த்தட்டு முதலாளி
வர்க்கத்துக்குள் தொழிலாளி
தலையெடுப்பது சாத்தியமா?
மேற்படி கேள்விகளுக்கு பதிலாய்
என் தலைமுறையில்
நான் கண்டு,கேட்டு தெளிந்த
களங்கமில்லா உதாரணம்
தலைவர் ஜோதிபாசு!

'ஊருக்கு உபதேசம்
உள்ளுக்குள் உல்லாசம்'
இப்படி நடைமுறை
அரசியல் தவிர்த்து
உள்ளும் புறமும்
உயர்வாய்
கட்டமைக்கப்பட்ட
அற்புத தலைவன்!

சர்ச்சைகளின் போது
கொள்கைப் பிடிப்புடன்
அனாயசமாய் வழிநடத்தும்
சீர் மறை காத்த
செம்மல் ஜோதிபாசு!

புகழஞ்சலி வாசிப்பதில்
மட்டும் பயனேது?
உன் சீரிய வழியொற்றி
வாழ்க்கையை நயமாய்
ஒழுங்குற வளைத்து
வாழ்வதில் தானே இருக்கிறது
நீ விதைத்த கொள்கையின் பயன்?

அடக்குமுறைக்கு தலை வணங்குவதில்லை
இனியெப்போதும் என் பேனாவும் நானும்!

கொஞ்சம் அகந்தை கலந்த
வாக்கியமானலும்
என் வாழ்வின் கட்டாய
கொள்கையாக்கியிருக்கிறேன்
இவரைப் படித்து!

ஓடி ஓடி உழைத்து
இப்போது தான்
ஓய்வெடுக்கிறாய்!
துயில் கொள்!
எப்போதும் எமக்குள்
எரியும்
எம் வாழ்வு மலர‌
நீ ஏற்றி வைத்த 'செந்தீ'!

வாழ்ந்து சிறந்து உயர்ந்த
சாமான்யனின் பிரதிநிதிக்கு
செவ்வணக்கம்!


Thursday, January 14, 2010

த‌மிழ‌ர் திருநாள் ந‌ல்வாழ்த்துக்க‌ள்!

பூக்களெல்லாம் சிரித்துப் பேசி மணம் பரப்ப
ஓரறிவு உயிரின மெல்லாம் செழித்து
பூமிக்கு பசுமை போர்த்த‌
மார்கழியின் தண்மையோடு
தென்ற‌லும் சேர்ந்து வ‌ர‌
பிற‌ந்து விட்டாள் த‌மிழ‌ர் மாண்புய‌ர்த்தும்
"தை திங்கள் நல்லாள்"

பழையன கழிந்து புதியன மனைபுக
மாவிலையோடு ஆவரம்பூ தோரணங்கட்டி
பசுஞ் சாணமெடுத்து வீடு மொழுகி
வேலிப்பருத்தியிட்ட கோமியத்தால் சுத்திசெய்து
ப‌ச்ச‌ரிசி மாக்கோலம் பதவிசாய் அள்ளித் தெளித்து
உழைப்புக்கு ஒத்துழைத்த இயற்கை அன்னைக்கு
நன்றி நவில்வதாம் 'தைப் பொங்கல்'!

வேர்வை சிந்தி வ‌ர‌ப்புய‌ர்த்தி ப‌ருவ‌த்தில் நீர்பாய்ச்சி
ஓடி உழைத்து க‌ள‌ம் சேர்த்த‌ நெல்ம‌ணியை
பக்குவமாய் இடித்து புடைத்து அரிசி செய்து
பாலிட்டு பருப்போடு பனை வெல்ல‌ம் பசுநெய்
இன்ன‌பிற‌ கூட்ட‌ணி சேர்த்து இனிதாய் படையலிட
உள்ளம் களித்த கதிரவனும் கேட்ட வரமளித்திடுவான்!
மாதம் மும்மாரி பொழிய ஏது செய்வான்!

ந‌ன்றி மொழித‌லிலும் எம்ம‌வ‌ர் சிற‌ப்பு காண்!
எல்லாமாய் இருந்திட்ட இயற்கைக்கு முதல் வணக்கம்!
ஏர்பிடிக்க தோள்கொடுத்து உயர்வு நல்கிய‌
ஐந்த‌றிவின‌ங்க‌ளுக்கு இர‌ண்டாம் நாளாம்!
'இன்ன‌து கிட்டியது! வ‌ருக‌ கூடி ம‌கிழ‌வென'
சுற்ற‌ம் க‌ல‌த்த‌ல் மூன்றாம் நாளாம்!

மேற்ப‌டி ச‌ங்க‌திக‌ள் எதுவும்
ந‌க‌ரத்தில் சாத்திய‌மில்லை
எனினும்,
ஆர்ப‌ரித்து த‌மிழ‌ர் திருநாளை வ‌ர‌வேற்போம்!

'தை' பிறந்த சந்தோசத்தை
குலவையிட்டு குதுகலிக்க
வருக! வருக!

"நாடு செழிக்க‌ ந‌ல்ல‌ ம‌ழை பெய்திட‌
பொங்க‌லோ பொங்க‌ல்!
வீடு சிற‌க்க‌ ந‌ல்ல‌ன எல்லாம் பெற‌
பொங்க‌லோ பொங்க‌ல்!
ம‌த‌வெறிய‌து ந‌லிந்து ஒற்றுமை ஓங்க‌
பொங்க‌லோ பொங்க‌ல்!
த‌ர‌ணியெங்கும் அமைதி பெருகி வ‌ன்முறை ஒழிய‌
பொங்க‌லோ பொங்க‌ல்!"




Saturday, January 9, 2010

கிணற்றுத் தவளை



ஏதாவது ஏதாவது எழுதனும். அப்படியே படிக்கிறப்பவே 'சும்மா கலக்கிட்டடீ'ன்னு தோழிகள் அலறனும். என்ன எழுதலாம்? காதலப் பத்தி? அய்ய! பிரின்சி முன்னாடிப் போய் எப்படி வாசிக்கிறது? அப்பாகிட்டப் போட்டுக் கொடுத்துட்டா? அண்ணன் வேற புதுசா வேவு பாக்க உளவுப் படை தயார் பண்ணிருவான்(!) வேற எழுதனும்.

தமிழ் பத்தி? ம்ம் எழுதலாம். ''ழ' கரம் சரியாவே வர மாட்டேங்குது. எனக்குப் போய் இவ பொண்ணாப் பொறந்துருக்காளே. நாக்குல வசம்ப வச்சுத் தேய்க்க‌' ஆத்திரத்தில் அப்பா கொட்டிய குட்டு இப்பவும் வலிக்குது. வேணாம் இலக்கியச் செய்தியெல்லாம். வம்பு.

வேற ஏதாச்சும்?

ந‌ட்பு ப‌த்தி. ம்ம். பூபால‌ன் அதான் எழுதுறான். ஒரே த‌லைப்பு. சே. ந‌ல்லாயிருக்காது.

பெண்மை,தாய்மை இதெல்லாம். எல்லாரும் பொண்ணு எழுதுற கவிதைனா இத தான் எதிர்பார்ப்பாங்க. வேணாம்.

எது நல்லாயிருக்கும்?இப்படியே துணிகளைத் துவைத்தபடி,இழுத்து சொருகிய பாவடை சட்டையுடன் தோட்டத்து கொசுக் கடியிலும் கனவில் உழன்ற நாட்கள்.பொருளோடு மனனம் செய்ய தினம் ஒரு குறள், அப்பாவின் தினப்படி கட்டளைக்குப் பயந்தே வீட்டு வேலையில் அக்கறை இருப்பதாய் அலட்டிக் கொண்ட என் இலக்கியம் அறியாத வயது.

'க‌டுகு பொரிய‌ல‌ பார்.' 'ப‌ச்சை வாடை போன‌தும் புளி ஊத்து.' 'ஈர்க்குச்சி கீழே விழுது பார். என்ன சந்திரமதின்னு நெனப்போ.' அப்ப‌த்தாவின் வார்த்தைக‌ளை அலட்சிய‌ ப‌டுத்திய‌ப‌டி,'அடுப்ப‌டிகுள்ளேயே முட‌ங்கிப் போவேன்னு நென‌ச்சியா? நாளை பார். உல‌க‌மே என்ன‌ பாக்க‌ போகுது.அப்புற‌ம் பேசிக்கிறேன்' ச‌த்த‌மின்றிச் ச‌ப‌த‌ம் செய்த‌ப‌டி, க‌விதைக்கான த‌லைப்பைத் தேடி,தேடி வெந்நீர் கொப்ப‌ரைக‌ளிட‌மும், ச‌மைய‌ல‌றை தட்டு முட்டு சாமான்களுடனுமான என் புலம்பல்கள் அப்பத்தாவின் கழுகுப் பார்வையில் பட்டதும் அர்த்தமே மாறிப் போயிற்று.

"டேய் ச‌ண்முக‌ம்!  இவ‌ போக்கே ச‌ரியில்ல‌டா. காலேஜுக்கு அனுப்பாதே  அனுப்பாதேன்னு ப‌டிச்சு ப‌டிச்சு சொன்னேன் கேட்டியா. தானா பேசிக்கிறா. சிரிக்கிறா. பொம்ப‌ள‌ புள்ள‌ இப்ப‌டியிருந்தா ஏடாகூட‌மாக‌ப் போகுதுடா!"

"சும்மா இருங்க‌ம்மா. ஒண்ணும் இருக்காது.கேக்குறேன் இப்ப‌வே. இங்க‌ வா."

க‌ண்ணில் நீர்க்கோர்த்து நடுங்கிய‌ப‌டி,"இல்ல‌ப்பா. க‌விதை ஒண்ணு எழுத‌னும் ஒரு விழாவில‌ வாசிக்க‌ . அதுக்குத் தான்." பய‌த்திலா ? ப‌டிப்புப் பறிபோய்விடும் ஆப‌த்திலா? தாரை தாரையாய் க‌ண்ணீர்.

அப்பா அதிசயமாய்ச் சிரித்த‌ப‌டி, "இது என்ன‌ பெரிய‌ விச‌யம். அல‌மாரில‌ இருக்க‌ புத்த‌க‌ங்க‌ள ப‌டி. ம‌.பொ.சி உரைக‌ள்,நா.காம‌ராச‌ன்,உல‌க அர‌சிய‌ல் எல்லாமும் இருக்கு பாரு. ப‌டி. பெரியாரின் சாதீய‌ம்,பெண்ணீய‌ம் எல்லாமும் இருக்கு. க‌க்க‌ன் முத‌ல் காந்தி வ‌ரை எல்லாமும் இருக்கு பார். தோணுனத‌ எழுது. திருத்தித் த‌ர்றேன். அப்புற‌ம் போய் வாசி.ஆனா 'அவை' நாகரீகம் ரொம்ப முக்கியம்"

இப்ப‌டியே என‌க்குப் புத்த‌க‌ங்க‌ள் தோழிக‌ள் ஆயின. வீட்டைத் தாண்டி வெளியே வர விருப்பமேயில்லை. சில‌ப்ப‌திகார‌மும் குறுந்தொகை கூட்ட‌மும் இவ்விதமே என் கூட்டாளிக‌ள் ஆயின‌. அம்மாவின் 'காந்தீய‌ம்' ப‌ற்றிய‌ கொள்கைக‌ள் அர‌ச‌ல் புர‌ச‌லாக‌ செவிக்கு வ‌ந்ததால் காந்தியையே என் க‌விதைக்கான‌ க‌ருப்பொருளாக்கினேன்.

புர‌ட்டிய‌ ப‌க்க‌ங்க‌ளின் வ‌ழியே சில‌ விய‌ப்புறும் உண்மைக‌ள் கிடைக்க‌ப் பெற்றேன். கோட்சேயான‌வ‌ன் ஆரம்பக் காலத்தில் காந்தியின் தொண்ட‌னென்றும் 'ம‌தம்' பிடித்த‌பின் மிருக‌மானான் என்றும். 'ஒரு க‌ன்ன‌த்தில‌றைந்தால் ம‌றுக‌ன்ன‌த்தைக் காட்டு' இது போலும் ந‌டைமுறைக்கு உத‌வாத‌(?) கொள்கைக‌ளைப் பொருட்ப‌டுத்தாத‌ வ‌ய‌து அது. கோட்சே பாவ‌ம் தெரியாம‌ ப‌ண்ணிட்டார் அப்ப‌டின்னு அவ‌ருக்கு வ‌க்கால‌த்து வாங்கிய‌து ம‌ன‌து.

துணி துவைக்கையிலும்,அரிசி களைகையிலும்,வீடு பெருக்கையிலும் க‌விதை குறித்த‌ க‌ன‌வுக‌ள்.இரவு முழுதும் எழுதி எழுதிக் கிழித்த‌ குப்பைக‌ளை அம்மா பார்க்குமுன் அப்புற‌ப்ப‌டுத்தினேன்.முடிவில் க‌விதைக்கான‌ க‌ருப்பொருள் பிடிச்சாச்சு. 'சொர்க்க‌ம் ந‌ர‌க‌ம் ப‌ற்றின‌ கோட்பாடுக‌ளில் ந‌ம்பிக்கை உள்ள‌வ‌ர்களுக்கு ம‌ட்டும்' பீடிகை எல்லாம் போட்டுச் சொர்க்க‌த்திலிருக்கும் காந்திக்கு(?) ந‌ர‌க‌த்திலிருக்கும் கோட்சே எழுதுவ‌தாய் ஒரு க‌டித‌ வ‌டிவில் க‌விதை ச‌ம‌ர்ப்பித்தேன்.

படிக்கப் படிக்கத் தாங்க முடியல நாமளா எழுதினோம்னு ஒரு பெருமிதம் கலந்த கர்வம். அடுத்து வரப் போற விபரீதம் தெரியாம. மூனு பக்கத்துக்கு கவிதை(?) எழுதி அப்பா வரட்டும்னு காத்திருந்தா ஏதோ மாநாட்டுக்குப் போறதா போனவுங்க ரெண்டு நாளாகும்னு தகவல் மட்டும் அனுபிச்சாங்க. என்ன பொறுப்பில்லாத் தனம்? அம்மாவுக்கு இந்தக் கவிதை கதை எல்லாம் படிக்கிறதே பிடிக்காது. என்ன செய்யலாம்? சரி துணிஞ்சு முடிவெடுத்தாச்சு.தப்போ சரியோ ஒரு கை பாத்துடுவோம்.

கல்லூரி வளாகம் களை கட்டுது.எங்கள் கணிப்பொறி துறை சார்ந்த இலக்கிய விழா. கல்லூரி முதல்வர்,துறைத்தலைவர் என எல்லாரும் இருக்க,நிகழ்ச்சியில் நான்காவதா என் கவிதை. மேடையில் என் பெயருக்கு அப்புறம் தோழி பிரசாந்தினி கவிதையின் தலைப்பை வாசிக்கிறா. வெளியில் செல்லவிருந்த முதல்வர் தலைப்பைக் கேட்டதும் திரும்பி வர்றாங்க. காரணம் என்னன்னா அவரு ஒரு காந்தியவாதி. சொந்த வாழ்க்கையிலும் எளிமையைக்  கடைபிடிக்கும் அருமையான‌ கல்வியாளர். தலைப்பு இது தான்.

"காந்தீயத்திற்கு ஒரு கலியுக விளக்கம்"
‌
கிள‌ம்பிப் போயிருவாங்க‌ன்னு ஆர்வ‌மாப் பார்த்தா திரும்பி வ‌ர்றாங்க‌. அய்யோடா! ந‌ல்லா மாட்டிக்கிட்டோம்.முதல் இரண்டு நிமிட‌ம் செய‌ல‌ற்று நிற்க‌, அறிவிப்பாளினி வ‌ந்து சொன்ன‌தையே சொன்ன‌தும் தான் சுர‌ணை வ‌ந்த‌து.போகிற‌ போக்கில் கிள்ள‌ல் வேறு.கவிதை தொட‌ங்குமுன் கடிதம் பற்றி காட்சிகளை விள‌க்கிவிட்டு, நேராய் முத‌ல்வ‌ர் ப‌க்க‌ம் திரும்ப‌வும் அவ்ர் வெகு சுவ‌ராசியமாக‌ கவ‌னித்துக் கொண்டிருந்தார்.

பாதி வ‌ரை முடிந்திருக்கும், லேசாய் நிமிர்ந்து பார்த்தேன். என்னை எரிப்ப‌து போல் அவர் பார்ப்ப‌து தெரிந்த‌து.முச்சு முழுசா நின்னுடுச்சு. ஆகா. ச‌ரியா மாட்டிக்கிட்டோமே. என்ன‌ ப‌ண்ணுற‌துன்னு நெனைச்ச‌ நேர‌த்துல‌ அடுத்த‌ வரி வாசிக்க‌ ம‌ற‌ந்துட்டேன். க‌விதை ப‌டிச்சு முடிச்சாச்சுன்னு ஒரே கைத‌ட்ட‌ல். வீட்டுக்கு அனுப்புறதிலயே குறியா இருந்தவுங்க கைங்கரியம்.

ஆனாலும் விடாம எல்லாத்தையும் எழுதின மாதிரி படிச்சிட்டு கீழே எறங்கி வந்துட்டேன். அதுக்கப் புற‌ம் ந‌ட‌ந்த‌ எதுவுமே க‌வ‌ன‌த்துக்கு வ‌ர‌லை. ப‌ய‌ந்த‌ மாதிரி முத‌ல்வ‌ர் எதுவுமே கேட்க‌ல‌. ஆனா அப்பா தான் பிச்சு வாங்கிட்டார். புதுக்க‌விதைக‌ள் மேலே அவ‌ருக்கு அப்ப‌டி ஒண்ணும் ஈடுபாடில்ல‌. அதுவும் க‌விதை, கோட்சே ம‌ன‌ம் திருந்தி காந்தியால் ஏற்றுக் கொள்ள‌ப்ப‌ட்டான் என்கிற‌ மாதிரி. அம்மாவோட அப்பா ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்கிற‌ம‌ட்டில் நான் செய்த‌து கொலை பாத‌க‌ம் போல‌ சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டது வீட்டில். அப்பா வ‌லிய‌ போய் க‌ல்லூரி முத‌ல்வ‌ர்கிட்டே ம‌ன்னிப்பெல்லாம் கேட்டுட்டு வ‌ந்தார். அம்மா ஏதோ குல‌த்தைக் கெடுக்க‌ வ‌ந்த‌ கோடாரிக் காம்பேன்னு எல்லாம் பொறிஞ்சு த‌ள்ளிட்டாங்க‌.

என்ன‌ ந‌ட‌க்குமோன்னு க‌ல்லூரிக்கு போனா,வ‌குப்பில‌ எந்த‌ மாற்ற‌முமில்ல‌. ரொம்ப‌த் தான் எதிர்பாத்துட்டோம்னு ம‌ன‌ச‌த் தேத்திக்கிட்டேன். அடுத்த‌ சில‌ நாட்க‌ள்ல‌, முத‌ல்வ‌ர‌ நேருக்கு நேர் ச‌ந்திக்கும் வாய்ப்பு கிடைச்சுது. "இப்படி வா.அன்னிக்கு விழாவிலே நீ வார்தைக‌ளை கோர்த்த‌ வித‌ம் ந‌ல்லாயிருந்துச்சு ஆனா க‌ருத்துல‌யும் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌ம் வை. மற்ற‌ப‌டி துணிச்ச‌லா இத‌ பேசினே பாரு பாராட்ட‌த்தான் வேணும்." என்ற‌ப‌டி சென்றார். என‌க்கோ மோதிர‌க் கையால் குட்டுப் பெற்ற‌ ம‌கிழ்ச்சி.

அதுக்கப்புற‌ம் க‌ணிணி என்கிற‌ இய‌ந்திர‌ம‌ய‌ம் என‌க்குள் உள்வாங்கின‌ பின் க‌விதைக‌ள் எப்போதாவ‌து என் நாளேடுக‌ளை நிறைப்ப‌தோடு சரி. அத‌ற்க‌டுத்த‌ ப‌ரிமாண‌த்தை அவை தொட‌வேயில்லை. வலைப்ப‌திவு ஆர‌ம்பித்த‌பின் அவை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வ‌ள‌ர்வ‌தை அவ‌தானிக்க‌ முடிகிற‌து.

சில‌ த‌வ‌றுக‌ள், நாக‌ரீக‌ பிச‌வுக‌ள், க‌விதை என்கிற‌ பிடியில் பெண்மைக்குரிய‌ அட‌க்க‌ம் மீறிய‌ சில‌ வார்த்தைக‌ள் என இந்த கிறுக்கல்களிலும் பிழைகள் இருக்க‌க் கூடும்.கார‌ண‌ம் எதுவெனில், எல்லாவித‌மான‌ மனநிலையிலும் க‌விமொழித‌ல் கைவ‌ர‌ வேணுமென்கிற‌ ஆர்வம். அதுவே கோளாறு.

அய்ய‌,காத‌ல் தோல்வியா? யார‌ப் பாத்து காப்பிய‌டிச்சே? நெச‌மாலுமே ச‌மூக‌த்து மேல‌ கோவ‌ம் இருக்கா?இல்ல சீனா? எனக்கு டமீல்னா கொஞ்சம் அலர்ஜி . அது இது போலும் சில இழிப்புரைக‌ள். செவிடாய் ஊமையாய் இருக்க‌த் தான் முடிகிற‌தே த‌விர வேறொன்றும் சொல்வத‌ற்கில்லை.

அப்பாவின் அலமாரியில் உள்ள புத்தகங்கள் எண்ணிக்கை நூறுக்குள் அடங்கிவிடும்.அதில் நுனிப்புல் மேய்ந்தபடி கிறுக்கிய போதிருந்த துணிவு, ஓரளவு அனுபவம், கொஞ்சமேனும் மொழியறிவு,ஆழப் படித்த புத்தகங்கள், இப்படி அடிப்படை எல்லாம் கைவரப் பெற்றும் துணிவு ஏனோ துணை வர மறுக்கிறது. அந்தக் கிணற்றுத் தவளையின் கனவுகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே.

அதுல முதலாவது,
அப்பா நல்ல கவிதையின்னு சொல்லுற மாதிரி ஒரு கவிதை புனைய வேணும். சீரிய கருப்பொருளோடு கூடவே தெளிவான இலக்கண நடையும் சேர்த்து மரபு அடிபேணி.

நிறைவேற உங்கள் வாழ்த்துக்களையும், வழிகாட்டுதலையும் எதிர்பார்த்தபடி
இனிவரும் படைப்புகள் அனைத்தும் தாங்களின் மேலான பார்வைக்கு. திருத்தி மதிப்பிடுங்கள். இலக்கியத்தில் வெளியுலகம் பார்க்கத் துடிக்கும் எனக்கு நட்பாய்க் கைகொடுங்கள். தவறெனில் தவறாது அடிக்கோடிடுங்கள்.

Saturday, April 18, 2009

ஈன்று புறந்தருதல் தந்தைக்குக் கடனே!

        பசுமையான‌ பள்ளி நாட்கள்! பள்ளியிறுதியாண்டில் நடைபெற்ற ஒரு மறக்க முடியாத நிகழ்வு! பெண்கள் மட்டுமே படிக்கும் கிறித்துவ மதப் பள்ளி அது! அபூர்வமாய் ஆட்டம் போட வாய்ப்பு கிடைப்பதுண்டு! முதல் நாள் விடுதி தினக் கொண்டாட்டம்(Hostel Day Celeberation) ஆட்டம் பாட்டம் என அமர்கள‌ப்படுத்தி விட்டு மறுநாள் வகுப்பில‌ எல்லோரும் ஒரே சாமியாட்டம் தான்.தூக்கம்னா தூக்கம் அப்படி ஒரு தூக்கம். இந்த நெலமையில முதல் வகுப்பு வேதியியல் வகுப்பு எப்படியோ தள்ளியாச்சு!
        இரண்டாம் வகுப்பு, கண்டிப்புக்கு பேர் போன‌ ஒரு கன்னியாஸ்திரியின் தமிழ் வகுப்பு! கணீரென்ற குரலும் அவரது தமிழ் மொழி ஆளுமையும் கண்,செவி இரண்டையும் அவர்பால் இழுப்பதில் வியப்பொன்றும் இல்லை!ஆனா அன்னிக்கு எங்க‌ நெலமயே வேற!அவரோட வகுப்ப கவனிக்குற சுவராஸ்யத்த விடவும் நித்திரா தேவியின் தாலாட்டு ஆதரவா இருக்க போகவே, விடுதி மாணவிகள் எல்லோரும் அரைத் தூக்கத்துல! எங்கள் வரிசையில உள்ள ஐந்து பேர்ல ஒருத்தி தவிர எல்லோரும் சரியான தூக்கத்துல! என்னதான் சொல்லுங்க பாடம் நடத்துறவுங்களுக்கு டிமிக்கி கொடுத்துட்டு தூங்குறது ரொம்ப பெரிய சாதனை!
        இப்படியாக, "ஈன்று புறந்தருதல்"ன்னு ஆரம்பிக்கும் புறநானூறு(பொன்முடியார்) பாடலை அடிப்படையாகக் கொண்டு வகுப்பு நடைப்பெற்று கொண்டிருக்கையில், திடீரென நினைவு வந்தவர் போல், பாடத்தை நிறுத்தி விட்டு,"ஜான்சி,எங்கே படித்துக் காட்டு பார்க்கலாம்!", என்றார்.தெளிவான உச்சரிப்புக்கும், இனிமையான் குரலுக்கும் சொந்தக்காரியான,எனக்கடுத்து அம‌ர்ந்திருந்த‌ என் தோழிக்கான‌ அழைப்பு அது!
        அரை தூக்கத்திலிருந்த அத்த‌னை பேரும் வாரிச் சுருட்டிக் கொண்டு ஒர் வழியா சுயநினைவுக்கு வரவும், அவர் மத்த விசயங்களை சொல்லி முடித்து விட்டு, இவள் வாசிப்புக்கு செவிமடுக்கவும் மிகச் சரியா இருந்தது! (ந‌டுவுல எல்லாரும் தயாரா தமிழ் புத்தகத்ததுல அந்த குறிப்பிட்ட பக்கம் விரல் வச்சு கவனிக்குற அள‌வுக்கு பாசாங்கு) மொத்த வகுப்பும் ஜான்சியின் வாசிப்புக்கு கட்டுப்பட்டிருக்க, திடீரென ஒரே சிரிப்புச் சத்தம். மொத்த வகுப்பும் குலுங்கி குலுங்கி சிரிக்குது! ஜான்சிக்கோ,எனக்கோ ஒண்ணும் புரியல! எங்க தமிழாசிரியை அப்படி சிரிச்சு அதுவரைக்கும் பாத்ததேயில்லை! எதுக்கு சிரிக்கிறாங்கன்னே தெரியாம‌ நாங்களும் சிரிக்கோம்!!
        மெல்ல மெல்ல புரிய வந்துச்சு,ஜான்சி அம்மையார் தூக்க கலக்கத்துல இரண்டாம் வரியோட கடைசிய தூக்கி முதல் வரியில போட்டது தான் அந்த களேபாரத்துக்கு காரணம்!
        என்றைக்கும் நினைவில் நிற்கும் அந்த புற‌நானுற்றுப் பாட‌ல் பின்வ‌ருமாறு,

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
---புறநானூறு(பொன்முடியார்)


        ஒரு பெண்ணுக்கு தலையாய கடமையாக குழந்தைப் பேறும், தந்தைக்கு தலையாய‌ கடமை தன் குழந்தையை சான்றோனாக்குதலும் அவனுக்கு வேல் வடித்து தருதல் கொல்லனுக்கு கடமையாகவும், அப்படித் தயாராகி நிற்கும் தீரமான‌ இளைஞனுக்கு செழுமை நிரம்பிய நிலப்பரப்பை அரசாளக் கொடுப்பது வேந்தனுக்கு தலைக் கடமையாகவும் சொல்கிறது புறநானூறு.அப்படி சான்றோன் என பேர் பெற்ற அந்த இளைஞனுக்கு தலையாய கடமை, போரில் களிறை(யானையை) வென்று தன் வீரத்தை நிலை நிறுத்துவதே என்கிறார் பொன்முடியார்.இன்னார்க்கு இன்ன கடன் என வரைய‌றுக்கப்பட்ட சங்கத் தமிழர் நிலை போற்றுதற்குரியது. அது என் தோழியின் நாவில் பட்டு பொருள் மாறியது நகைப்புக்குரியது!'ஈன்று புறந்தருதல் தந்தைக்குக் கடனே!' அதாவது குழந்தை பேறு தந்தைக்குரிய கடன் எனச் வாசித்ததால் பொருள் திரிந்து போயிற்று!
        முன் வ‌ரிசை தோழிக‌ள் மூலமா நில‌வ‌ர‌ம் தெரிஞ்சுக்கிட்டு, ஜான்சிக்கு எப்ப‌டியோ புரிய‌ வ‌ச்சுட்டேன்! எல்லாம் சைகையில‌ தான்! சிரித்து முடித்து விட்டு, திருப்பியும் இவளை வாசிக்கச் சொல்ல அதே த‌ப்பு! கூண்டோட‌ கைலாச‌ம்ன்னு நாங்க க‌தி க‌ல‌ங்கி போயிருக்கையில் ஜான்சி ராணி ஒரு விள‌க்க‌ம் கொடுத்தா பாருங‌க‌! ஆயுசுக்கும் ம‌ற‌க்காது!
        "இல்ல‌ சிஸ்ட‌ர்! எத்த‌னை நாள் தான் நாம‌லே சும‌க்குற‌து? பாட்டுல‌யாவ‌து மாத்த‌ம் வ‌ர‌ட்டுமேன்னு தான்" என்று பெரிய‌ மாத‌ர் ச‌ங்க‌ த‌லைவி க‌ணக்கா நீளமான‌ உரை வேற‌! வ‌குப்பு ஆணாதிக்க‌ ச‌மூக‌ம் ப‌ற்றி திசை திரும்ப‌ 'அப்பாடா த‌ப்பிச்சுட்டோம்' பெருமூச்சு விட்டு ஜான்சியை நிமிர்ந்து பாத்தா அவ‌ என்ன‌மோ ரொம்ப‌ தீவிர‌மா வகுப்ப கவனிச்சுக்கிட்டு இருந்தா, ரொம்ப நல்ல புள்ளையா!
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!