Showing posts with label ப‌யிற்சி க‌விதைக‌ள்(?). Show all posts
Showing posts with label ப‌யிற்சி க‌விதைக‌ள்(?). Show all posts

Wednesday, August 29, 2012

சமன் செய்

இருமனங்கள்
ஒன்றின்
உள்ளீடாய்
நட்பு
அதன்
வெளியீடாய்
மற்றதில்
குரோதம்.

சமன்பாட்டின்படி
நட்புக்கு பதிலாய்
நட்பே கிடைக்கவேண்டும்

நடுவழியில்
ஏதோ குளறுபடி

பிறழ்வுக்கு
ஏதேனும்
காரணமாயிருக்கலாம்
அப்படியேதும் இல்லையெனில்
நண்பனென நீ நினைத்தவன்
கபடனாய் இருக்கலாம்
ஆராய்ச்சியின் முடிவு
எப்படியிருந்தாலும்
உடனடியாக
அவனை நண்பனென
அழைப்பதை நிறுத்திவிடு!

பலன் எதிர்பாராதது
நட்பு
அது போலே
வெறுப்பையும்

யாரோ எறிந்த
சின்னஞ்சிறு கல் கூட
பேரலைகளை உண்டாக்குமெனில்
என் படகு பயணிக்க
வேறோர் ஆற்றுக்கு
கொடுப்பினையுண்டு

Tuesday, October 12, 2010

திருக்கூத்து

அருஞ்சுவை உண்டி அமரவர் உப்பரிக்கை
அம்பாரி பவனி ஆஞ்சநேயம் வியந்தோதி
வான்பொழி அமிழ்தம் அந்தாதி பிதற்றல்
மேருகொள் தீரம் ஆழியமிழ் பொறைமை
உளங்கனி திருவருட் சிந்தை பகர்ந்து
சொலவடை இலக்கணம் கூறு பிரித்து
சிலேடை முகர்ந்து சிறுநகையூட்டி மீள,
ஆவிபோக்கி மிடரு விழுங்கும் வன்பசி
அல்லையரற்றி அறுந்துவிழும் சுவைநரம்புகள்
கரவொலி கேட்டு கண்ணொளியது உயிர்பெற
கதிரவன் தகித்தும் அகமலர்ந்து குரல்மீட்டி
மாயவன் எழிலை மாசற வடிக்கலானான்
காலாஞ்சி சிறுகடலை கைப்பிடிச்சோறு தாம்பூலத்தோடு
இறைவன் சூடிக்கழித்த மாலையும் கைவர!

Saturday, September 25, 2010

பட்டியல்


”அப்பா அந்த மிட்டாய்
வாங்கித்தாங்கப்பா”
ஆசையாய் கேட்டான் மகன்

”பல்லு சொத்தையாயிரும்
பூச்சிப்பல் வந்துரும்
அதுக்குப் பதிலா ...”
வெறும் சட்டைப்பையை
தடவியவாறே...
”இல்ல...
வீட்டுக்குப் போய்
சாப்பிட்டுக்கலாம் வா”

ஏமாற்றமாய் நிமிர்ந்தவன்
”காசு வந்ததும் வாங்கித்தாங்கப்பா
பரவால்ல”
என்றான்

இப்போது அந்த மிட்டாயும்
இடம்பிடித்து விட்டது
சம்பளம் வந்ததும் நிறைவேறும்
திட்டங்களின் பட்டியலில்...

Wednesday, July 7, 2010

உயிர்த்தீ

பாருங்கள் இவர்களை!

தன் அறியாமையை அறியாமலே
அடுத்தவர் குறித்து
பரிகசிக்கிறார்கள்!

ஒரு ஆலமரத்தின் பிரமாண்டத்தையும்
அதன் அகண்ட பரவலையும்
புகழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள்
வித்திட்டவிதையின் விஸ்ரூபம்
தெரியாமல்....

பெருந்தீயில் சிதைந்த காட்டில்
எஞ்சியிருக்கும் கரித்துண்டுகளை
கேட்டிருந்தால் தெரிந்திருக்கும்
காட்டுத்தீயின் காரணம்
எத்தனை சிறியதென்று!

நடுவண் நிலைப்பாடும்
நாகரீக மிடுக்கும் கொண்டதாய்
சொல்லிக் கொண்டே
மனிதத்தின் மாண்பையும்
மன்னிப்பின் மதிப்பையும்
மிகச்சுலபமாய் மறந்துவிடுகிறார்கள்

யாதொரு காரணமுமில்லாமல்
என் நட்பின் உயிர்த்தீயை
அணைத்தது போலவே!

Tuesday, July 6, 2010

போதும் நிறுத்துங்கள்!


வழியும் என் குருதி தொட்டு
உலகச் சமாதானத்துக்கொரு
கவிதை வடிக்கிறீர்கள்

எழுத்தின் வடிவம்
பொருளின் செறிவு
இலக்கணச் சகிதம்
பரிசோதிக்கிறது உங்களின் பார்வை
ஓலையில் வரையப்பட்ட
கவியில் ஒரேயொரு குறை
குரலை உயர்த்தி
’எழுத்துரு நிறக்கவில்லை’
என்கிறீர்கள்

இதுவரை வலிபொறுத்த நான்
விசும்பத் தொடங்குகிறேன்
பயமா? பச்சாதாபமா?
புரியாத குழப்பத்தில்
உகுக்கப்படுகிறது கண்ணீர்

போதும் நிறுத்துங்கள்!
கீறப்பட்ட என் ரணம்
காயும் வரையாவது
கவிதை எழுதுவதை

Monday, July 5, 2010

சீதா பிராட்டிகள்

இரையை பிடிப்பதாயும்
இணையை தேடுவதாயுமான
ஒரு உணர்வின் விளிம்பு
தளும்ப நேரம் பார்த்து..

விளக்கொளியில் சுவர்கோழிகள்
இரண்டின் ஊடலும் குலவலும்..

பிரிந்த காதலோ இழந்த
நேசமோ ஏதோவொன்று
தொட்டிருக்க கூடும்
அவளின் உயிர் வரை

தெளிந்த நிலவொளியில்
விரகத்தின் பெருமூச்சு
அனேகம் குற்றலைகள்
அமைதியான ஊருணிக்குள்

மெல்ல மெல்ல விடிகையில்
ஈரமுலர்ந்த சேலையுடன்
குடம் நிறைய நீருடனும்
எத்தனை முறை பார்த்திருப்பேன்

வயல் வீடு பிள்ளை மக்கள்
மகசூல் வட்டிப்பணம் புள்ளிவரி
எல்லாமும் ஏறக்கட்டி
ராத்திரியில் தலைசாய்க்க
பாழும் அவன் நினைவு!

எப்போதோ வரும் கடுதாசியும்
எழுத்துக்கூட்டி கூட்டி
வரையப்பட்ட வார்த்தைகளும்
தபால்காரன் புண்ணியத்தில்
தாலிச்சரடோடு அவன்
குறித்த சேதிகளும்...

தீர்மானங்களும் சம்பிரதாயங்களும்
தானே நிர்மாணித்த சட்டங்களும்
திரவியம் தேடிப் போனவன்
திரும்பி வரும் வரை
முள் மேல் தவமாய்..

எல்லாப் பாசத்தையும்
குழந்தையிடம் நிரப்பிவிட்டு
கொண்டவன் முகம் காண..

இன்னமும் என் கிராமத்தில்
வறுமை சிறைபிடித்தும்
’சீதைகள்’ ஆயிரமுண்டு!

Tuesday, March 2, 2010

வேடதாரி


மறைநூல் மன்னுவன் ஓதிய ம‌றைபொருள்
சிறும‌தி சேவி உள‌மொரு தாளமிட்டு
நாணம் மேவுறும் அடக்கம் த‌தும்ப‌
க‌ருத்தினை அட‌க்கி முன்ன‌து பிற‌ழா
காரிருள் தட‌வி முறுக்கிட்ட‌ ம‌ட‌மையில்
விசித்து அர‌ற்றி ஒளிவாள் கருமணி
ஒய்யாரமாய் அன்னநடை பேணுங்கால்,
அதிராம‌ல் வந்த‌னன்; ஏந்திழை இள‌கிட‌
ஏற்புடை மாண்ப‌து எடுத்திய‌ம்பின‌ன்
சொல்லிடை தழுவிய சிருங்காரச் சேதி
எச்சமாய் ஈறுகளில் தடம்மாறி..
குருதிபடிந்த‌ கீழுதடு கண்ணுற
பற்றினானதை பற்றில்லா வேடதாரி!
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!