Showing posts with label அழ‌கி புராண‌ம். Show all posts
Showing posts with label அழ‌கி புராண‌ம். Show all posts

Friday, May 31, 2013

துவரஞ் செடியும் அவரைப் பூவும்

மிளகாய்,உப்பு,வெந்தயம்,கடுகு,பெருங்காயம் இன்னபிற சேர்மானங்கள் சேர்த்து இடித்து, ஊறவைத்த மாங்காயுடன் சேர்த்துக் குலுக்கி, பெரிய ஊறுகாய் ஜாடியில் போட்டு, வேடுகட்டி, வெய்யிலில் எடுத்து வைத்து பதனமாய் தயார் செய்வாள் அப்பத்தா. நார் அதிகம் உள்ள வரகாம் புஞ்சை மாமரத்து மாங்காய் தான் எனக்கு வேண்டுமென்று சொல்லிவிடுவேன். அந்த மாங்காய் ஊறுகாயின் ருசிக்கு என் பள்ளித் தோழிகள் அத்தனை பேரும் ரசிகைகள். எனக்கென தனியே இடித்துச் சேர்ப்பாள். அத்தனை அக்கறைக்கும், மெனக்கெடலுக்கும் பெயர் பாசம் என்று தெரிந்ததேயில்லை. உணர முடிகிறது இப்போது.

சித்திரைக் கடைசியிலெல்லாம் கடாகம் நிறைய மாங்காயும் வெண்டை வத்தலும், சீனி அவரங்காயும் மொட்டை மாடியில் காய்ந்தபடி இருக்கும் வருடம் முழுவதற்கும்....உப்புக் கண்டங்களும் சில வகை வற்றல்களும்...வெளியூரில் இருக்கும் மகள்களுக்கும் மகன்களுக்குமெனவும், என்னைப் போல வெளியூரில் தங்கிப் படிக்கும் வாண்டுகளுக்கெனவும் அத்தனை மெனக்கெடுவாள். சின்னச்சின்ன மூட்டைகளாய் அவலும் சத்துமாவும் புறப்படுமுன் வந்து சேரும். பாசிப்பயரு உருண்டை, எள் கலந்த இட்லிப் பொடியென ஒரு கிராமத்துப் பாட்டியின் கைவண்ணம் என் பை நிறைக்கும். அப்போதெல்லாம் தெரிந்ததேயில்லை அவள் பாசம்.



அம்மா மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆற்றுப் பாசனம் வாய்த்ததால் அங்கே வயல்களில் பயிர்செய்வார்கள். நாங்கள் சிவகங்கை மாவட்டத்தின் வறட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.வானம் பார்த்த பூமிக்கு புஞ்சை,தோட்டப் பயிர்கள் தான் விளையும். அதற்கும் கடும் உழைப்பும் முனைப்பும் தேவை. துவரை தான் எங்கள் குடும்பத்தின் முக்கிய விவசாயப் பயிர். அய்யா காலத்தில் எல்லாம் அதில் மகசூல் அதிகம் பெற்ற காரணத்தால் குடும்பத்துக்கும் அதே பெயர் வந்தததாம். ’ஏ ! யாருத்தா அது! துவரயன் வீட்டுக்குட்டியா?’ இப்போதும் இப்படியான விளிப்பு என் ஊரில் எனக்குக் கிடைக்கும்.

பாசிப்பயறு,தட்டைப்பயறு,வேர் கடலை போன்றவையும் விதைத்து சாதனை புரிந்திருக்கிறார்களாம்.திணை,கேழ்வரகு போன்றவையும் அப்பத்தா விவசாயம் செய்து பார்த்திருக்கிறேன். பொழுது புலர்ந்ததும் களைக்கொட்டும் கையுமாய் அவளை எப்போதும் புஞ்சையிலோ தோட்டத்திலோ பார்க்கலாம். மழைவரத்தைப் பொறுத்து தான் வயலில் விவசாயம். அதிலும் நெல்லைத் தவிர ஏதும் விளைவித்ததேயில்லை. அதும் வீட்டுத் தேவைக்கு மட்டுமே சரியாய் போகும். மாடுகளும் புஞ்சையும் தான் அத்தனை பெரிய குடும்பத்துக்கு முதுகெலும்பு. எப்படி விவசாயத்தை வைத்து இத்தனை பேரை வளர்த்து ஆளாக்கினாள்? யோசித்துப் பார்க்கையில் அழகியின் அயராத உழைப்பு அகக்கண்ணுக்குத் தெரிகிறது.

அப்பத்தா கடும் உழைப்பாளி.

தோட்டத்திலும் அவள் வியர்வை விளைந்தபடியிருக்கும். சிறுவாடு என்கிற சொல்லைக் கேட்டிருக்கிறீர்களா? யாருக்கும் தெரியாமல் வீட்டுப் பெண்கள் தனக்கென சேமிப்பது. வீட்டுக்கென காய்கறிகளில் எல்லாமும் விளைவிப்பாள்.ஆரம்பத்தில் கை இறவையில் தான் பாசனம். எங்கள் வீட்டுக் கத்திரிக்காய்க்கு ஏக மவுசு இருக்குமாம் அப்போதைய சந்தைகளில். எனக்கு விவரம் தெரிந்து விளையும் காய்கறிகள் வீட்டுக்குத் தானே தவிர வெளியில் விற்றுப் பார்த்ததில்லை.தனியாய் காய்கறி விற்று காசு சேர்க்கிறாள். கணக்கில் வருவதில்லையென்று அய்யாவும் அம்மா,சித்திகளும் கிசுகிசுத்துக் கேட்டிருக்கிறேன். அத்தோடு ஒரு சின்ன பம்புசெட் மோட்டார் அப்பத்தாவுக்கென பெரியப்பாவின் கொடையாக தரப்பட்டதில் அத்தனை மகிழ்ச்சி. அவள் பொழுது எப்போதும் தோட்டத்தில் தான் கழிந்தது. நானும் அவளிடம் தான் கற்றுக் கொண்டேன் காய்கறித் தோட்டமிடுவதை. சின்ன தோட்டத்தில் என்னவெல்லாம் இருந்தது. என்னவெல்லாம் கிடைத்தது! முள்வேலி தான். ஆத்தி மரத்தட்டி தான் கதவு. ஆனால் களவே போனதில்லை. அடுத்தவர் உழைப்பைச் சுரண்டாத நிஜ உழைப்பாளிகளை அனேகம் கிராமங்களில் பார்க்கலாம்.வாருங்கள் காண்பிக்கிறேன்.

மிகச் சிறந்த திட்ட மேலாண்மையுடன் பாத்தி பிரித்திருப்பாள். பூச்சி வெட்டு அதிகமாகச் சாத்தியமுள்ள காய்கறிகளை ஓரத்திலும், மீதமுள்ளவற்றை தோட்டத்தின் மத்தியிலும் பயிரிடுவாள். பெரும்பாலும் விதைக்கும் பருவத்தில் உடனிருக்கும் நான் காய்க்கும் பருவத்தில் தான் வீட்டிலிருப்பேன். அத்தனை சந்தோசமாய் இருக்கும் சின்னச்சின்னதாய் கறிகாய் முளைப்பதைப் பார்க்க. இரண்டு கிண்றுகள் உண்டு. அதில் ஒன்று தூர்ந்து போனபின் மோட்டாரின் தேவை அதிகரித்துவிட்டது. புதிதாய் வாங்கித் தந்தார் பெரியப்பா. இதை எல்லாச் செடிகளிடமும் சொல்லிச் சொல்லி வளர்த்தாள்.மலர்வாக அவளைப் பார்க்க அத்தனை பிடிக்கும் எனக்கு.

வீட்டுக்கு வரும் உறவினர்களில் எங்கள் தோட்டத்துக் காய்கறி ருசியறியாதவர் எவரும் இருக்க முடியாது. மோர் உபசரிப்பும் நெய்யிட்ட பருப்புக் குழம்பும் எல்லோருக்கும் எப்போதும் கிடைக்கும் பஞ்சம் தலைவிரித்தாடிய நாட்களிலும். ஒவ்வொரு செடியிடமும் ஒவ்வொரு கதை சொல்லி உச்சி நெருங்குகையில் பார்த்தால் அவளோடே பாதி நிலம் களையெடுத்திருப்போம். சாம்பலும் வேப்பம் புண்ணாக்கும் எருக்களும் தான் உரம். இரசாயன உரம் உபயோகித்து நான் பார்த்ததேயில்லை. இப்போது அடிக்கோடிடப்படும் இயற்கை விவசாயம் அதை இன்னதென்று அறியாமலே அமுலாக்கியிருக்கிறாள்.

நாட்டு வெண்டைக்காய்(வெள்ளை நிறத்தில் இருக்கும்), தோட்டத்து கத்திரிக்காய்(செட்டிநாட்டு உணவுகளில் இது பிரபலம்,பச்சை நிறத்திலிருக்கும்),பச்சை மிளகாய், சீனிமிளகாய்,தக்காளி,கருணை,முள்ளங்கி,பயித்தங்காய்,வெள்ளைப்பூசணி,குமுட்டிக் காய்,சர்கரைப்பூசணி,பீர்க்கை,புடலை என எல்லாமும் விளைவித்திருக்கிறோம். அவரைப்பூ போல அழகான பூ எதுவுமே இல்லை என் ரசனையின்படி.முளைக் கீரைகளுக்கென தனியாய் வலை பின்னி, சுற்றிலும் வேலி அமைத்து அழகாய் பராமரிப்பாள். எல்லாப் பயிரிலும் ஈசானிய மூலையில் நடப்பட்டது விதைக்கு. மாறிக் கொண்டேயிருக்கும் தோட்டப்பயிர்களில் ஏதேனும் தனித்துத் தெரிந்தால் அது விதைக்கு விடப்பட்டது எனத் தெளியலாம். எனக்கும் இதெல்லாம் பரிச்சயமே.

முருங்கை மரங்களில் எல்லா வகையும் இருந்தது. சித்தப்பாவின் ஆசையில் தென்னைமரங்களும் ஒன்றிரண்டு கொய்யா மரங்களும் தோட்டம் நிறைத்தன. விவசாயக் கூலியாய் இருந்தவளுக்கு தம் மக்கள் சம்பாதித்துத் தந்த அந்தத் தோட்டமே சொர்க்கம். பொன்னாங்கனி கீரையும் உண்டு. சீமைப் பொன்னாங்கனி,நாட்டுப் பொன்னாங்கனி என்று இரண்டு வகை இருக்கும். ஒரு மண்டலம் நாட்டுப் பொன்னாங்கனி கீரையை பருப்போடு சேர்த்து உண்டுவர ‘பொன்னால் ஆன கனி’ போல ஆகும் உடல் என்று வலம்புரி ஜான் சொன்னதைக் கேட்டு அப்பத்தாவை கிள்ளிக் கேட்டேன்,
’தங்கமாவா இருக்க அப்பத்தா?’
’வியாதியில்லாத உடம்பு தங்கம் தானடி’ சடாலென பதில் வந்தது.
ஆம். 92 வயது வரை வாழ்ந்தவளுக்கு வைத்தியமென்று பெரிதாய் எதுவும் செய்தோமா? நினைவேயில்லை.

பெரியமனுசியான ஒரு தினத்தில் அம்மாவின் வேலைப்பளு காரணமாக அப்பத்தாக்களின் பராமரிப்பில், கிராமத்தில் விடப்பட்டேன். சித்தி சித்தப்பாக்கள்,அண்ணியும் அண்ணன்களும் இருந்தாலும் அப்பத்தாக்களின் பங்களிப்பு எத்தனை எத்தனை? சிறுவாடு காசு மொத்தமும் எனக்கெனவே செலவு செய்தாள் அப்பத்தா. சில ஆயிரங்கள் தானென்றாலும் அதைச் சேர்க்க எத்தனை நாள் ஆகியிருக்கும்.உளுந்தங்களியும் தினமொரு பலகாரமும் நல்லெண்ணெய் முட்டையென ஒன்றரை மாதம் ராஜவாழ்க்கை வாழச்செய்தாள். பிறருக்கு மருந்துக்கும் செலவு செய்யாதவள் எனக்கென அத்தனை செய்ததின் பிண்ணனி சேர்த்து வைத்தப் பாசமென்று தெளிவாய் புரிந்தது. சிறுவாட்டுக் காசத்தனையும் எனக்கென செலவு செய்வதில் அத்தனை பெருமிதப்படும் அப்பத்தா படுக்கையில் இருக்கும் போது சொல்லிப் போனாள்,
‘படிப்பும் சம்பாத்தியமும் முக்கியமாத்தா! என்ன மாதிரி காட்டுலயும் மேட்டுலயும் கஷ்டப்படாத! பொம்பளன்னா ஒரு கவுரதை வேணும். ஆருக்கிட்டயும் கையேந்தி நிக்காத கவுரத. நெனவுல வச்சிப் பொழச்சிக்க கண்ணு!’

அவளில்லாத புஞ்சையும் காட்டுச் செடி படர்ந்த தோட்டமும் பார்த்தேன் போனமுறை ஊருக்கு போனபோது. மண்டியிட்டு அழுதுவிட்டு வந்தேன். பிறகு என்ன தான் செய்ய முடியும் ஆளில்லாத அவ்வூரில்?

Saturday, January 23, 2010

அப்ப‌த்தா!! ‍ப‌ட‌ல‌ம் 5


அட இந்த நாளும் பொழுதுந்தேன் எப்படி விறுவிறுன்னு ஓடுது. ரெண்டு வருசம் முடிஞ்சி போச்சி. நல்லபடியா போய் சேந்ததா ஒரு தகவல் மட்டும் வந்துச்சு. மறுக்கா ஒரு தகவலும் இல்ல. நம்ம அழகிக்கு அப்ப என்ன வயசுங்கிறீக? ஒரு பதினாறு இருக்கும். உண‌ர்ச்சிக‌ள‌ த‌கிச்சிக்கிட்டு, இல்ல அப்படீன்னா என்னன்னே தெரியாம,எதுக்கு ஏங்குறோம்முன்னு தெரியாமயே அந்த அசோகவனத்து வாழ்க்க பழகிடுச்சு அவ‌ளுக்கு.

அப்ப‌ப்போ அரச‌ல் புர‌ச‌லா இங்கிருந்து சீமைக்கு போன‌விங்க‌ அங்கேயே 'குடியும்' குடித்த‌ன‌மா ஆகிட்டாங்க‌ன்னு சேதி வ‌ரும். அப்ப‌ல்லாம் மாமியாரும் ஓர‌க‌த்தியும் பொல‌ம்புற‌து ந‌ல்லா கேட்கும். சில‌ ச‌ம‌ய‌ம் அது ஒப்பாரியா ஆர‌ம்பிச்சு இவ‌ ராசி மேல‌ ப‌ழி வ‌ந்து நிக்கும்.ஆத்தா அப்ப‌ன‌ முழுங்குன‌ மாதிரி எம்ம‌வ‌னையும் முழுங்கிட்டான்னு ஏச்சு வ‌ச‌வா மாறி மனச நைய‌ப்புடைக்கும். அப்ப‌ல்லாம் ம‌ட்டும் இவ‌ ம‌ன‌சு பாறையா இறுகி போயிடும்.

என்ன வாழ்க்கடா சாமின்னு சலிப்பு,மாமியாரோட வார்த்த‌ சூட்ட‌ தாங்காம‌ க‌ண்ணீர்,எது வ‌ந்தாலும் தளும்பி நிக்கிற‌ புன்ன‌கைக்குள்ள‌ ஆயிர‌மாயிர‌ம் வ‌லிக‌ளை ம‌றைக்கிற‌ வித்த‌ ந‌ம்ம‌ ஊரு பொண்னுக்குதாம‌ய்யா சாத்தியம். 'அவுக‌ளுக்கு ஒன்னும் ஆகாது ந‌ல்ல‌ப‌டியா திரும்பி வ‌ருவாக.எம்மேல ஆச உள்ள எம்புருசனாவே திரும்பி வருவாக.' ன்னு ம‌ன‌சுக்குள்ள‌ எழுதி வ‌ச்ச‌த‌ திரும்ப‌ திரும்ப‌ ப‌டிச்சுக்குவா.

ஆச்சு. அந்தா இந்தான்னு முழுசா ரெண்டு வருசம். அந்த வருசக் கடைசீல ஊருக்காடெங்கும் ஒரே பஞ்சம் தலவிரிச்சாடுது.ஒரே நோவும் சாவும். எப்படி காலந்தள்ளுறதுன்னு தவிச்சுப் போயி பக்கவாததுல விழுந்துட்டா அந்த பெரிய மனுசி. அவ நடமாட்டம் இருந்த வரைக்கும் எந்த பயமும் இல்லாத வாழ்ந்த‌வுகளுக்கு அப்புறந்தேன் தெரியுது அவ அரும பெருமையெல்லாம். நம்ம அழகி மாமியா வாயிக்கும் அவ சலசலப்புக்கும் பயந்து கெடந்த மைனர் பயலுவ எல்லாருக்கும் அவ நோவு ஒரு வாய்ப்பா போச்சுது நெனச்சாகளாம். ஆம்பள இல்லாத வீடுன்னு சலம்பல் பண்ணுனவனுக்கு எல்லாம் நம்ம அழகியோட கருக்கருவா பதில் பேசிச்சாம்.

'புலிக்குனா இம்புட்டு நாளும் தண்ணி காட்டிருகோம்முன்னு நெனச்சு மனசுக்குள்ளே மருகிப் போறா மாமியார்காரி.இம்புட்டு ஆங்காரத்த உள்ள வச்சிக்கிட்டா இந்த புள்ள அப்புராணியா சொன்னத கேட்டுச்சு? எப்படியோ புள்ளகுட்டி பெறாத எனக்கு மருமகளுவள மகளா குடுத்த சாமிக்கு படப்பு வச்சுதேன் நன்றி சொல்லோணும்' வெகுவாரியா மனசுக்குள்ள உருகத்தேன் முடியுதே தவிர அந்த பெரிய மனுசியால ஒண்ணுமே முடியல‌.

அழகி வேறமாதிரி யோசிக்கிறா. சொத்தாய் இருந்த நாலு ஆடு மாடும்,வீட்டுக்கு பின்னாடியிருந்த தோட்டமும், கழனியாக்கப்பட்ட கட்டாந்தரையும் அடித்த பஞ்சத்துல ஆட்டங்காண ஆரம்பிச்சிட்டுது. எப்படி கரையேறுறதுன்னு யோசிக்கிறாக. கைப்புள்ளயோட சேத்து மூனு பொண்ணு ஓரகத்திக்கு. வய வேல அவளால் பாக்கமுடியாது. கூலி வேலைக்கு போனா வாற கூலி ஆறு உசுருக்கு எப்படி பத்தும்? திரும்பவும் ஒத்தயா விவசாயம் பண்ணுறதுன்னு முடிவுக்கு வந்துட்டா.

உழைப்புன்னா காத்தாடிக்கு கீழ கணக்கெழுதுற வேல இல்ல சாமி.. சூரியனுக்கு சவால் விடுற மாதிரி ஓய்வு ஒழிச்சலில்லாத நாய் பொழப்பு. மொதக் கோழி கூவயில தோட்டத்துக்கு போயிட்டானா, கை எறவையில தண்ணி பாய்ச்சி அங்கன சோழி முடிய சூரியன் உச்சிக்கு வந்திரும். தோட்டத்துல காய்கறி பயிருன்னா, அந்த வானம் பாத்த பூமிய நம்பியும் வருசமுச்சூடும் வெள்ளாம. இவ படுற‌பாடு அக்காளுக காதுக்கு வந்ததும் இவள மட்டும் கூப்பிடுறாக. அம்மானும் நடையா நடக்குறாரு வீட்டுக்கு கூப்பிட்டு.மழுப்பலா பதில் சொன்னாலும் அவ வைராக்கியத்துல அவ இம்மியும் அசையல.இதுக்கா எம்புள்ளய இங்கன‌ கட்டிக் குடுத்தேன்னு பொலம்பி பொலம்பி,முடிவா அவரும் போய் சேந்துட்டாரு. சொந்தமுன்னு சொல்லிக்க யாருமில்லையின்னு மறுகாம இருக்குற வீட்டையே சேத்துக் கட்டுனா பாசத்தால.

அடுத்து அயித்தைக்கு வைத்தியம். சித்த வைத்தியமும் தைலமும் ஒரு ரொக்கத்த முழுங்க ஆரம்பிச்சிருச்சு. இப்ப ஒத்தாசைக்கு இளையவஞ் சம்சாரமும் வந்து நிக்கா. ஆம்பள இல்லாத வீடுன்னு எளப்பமா பேசுனவுக எல்லாரும் அசந்து போயி நின்னாக.ஒசரமுன்னு பாத்தா ஒன்னுமில்ல தான் . அதே வட்டக் குடிச, வசதி வாய்ப்பெல்லாம் ஒன்னும் ஏறல. ஆனா அழகி அந்த வீட்டுக்குள்ள அன்ப,பாசத்த வெதச்சு விட்டிருக்கா.அவ ஆசைக்கு தக்கன அந்த கூடு இப்ப மாறிப்போச்சு. சண்டை போடாத மாமியாரு மருமகளும், பொறாமையில்லாத மனுசமக்கன்னு அந்தக் குடிச இப்போ அழ‌கியோட அன்பால அரண்மனையாயிருச்சு. ஓரகத்தி பிள்ளைகளுக்கு யாரு தன்ன பெத்தவனே தெரியாதாம் கலியாணம் வரைக்கும். உண்மை தாஞ் சாமி நம்பல‌யின்னா எங்கூரு பக்கம் வந்து பாருங்க இன்னும் பல கூட்டுக குடும்பங்களிலே இதுபோல நடக்கத்தாஞ் செய்யுது.

இத்தன ஓட்டத்துக்கு மத்திலேயும் 'அவுக எப்படி இருக்காகளோ? எப்ப பாப்பேனோ? மாரியாத்தா. எங்கண்ணுக்கு முன்னக் கொண்டாந்து நிறுத்திப்புடு.',வேண்டுதலும் மன்றாட்டும் அதுபாட்டுக்கு நடந்துக்கிட்டு தான் இருக்குது.

க‌ட்டுப்பெட்டித் த‌ன‌மான‌ பொண்ணு,ப‌டிப்போ, வெளியுலக‌ வாழ்க்கையோ தெரியாத‌ ஒருத்தி, புருச‌னும் துணைக்கு இல்லாத‌ ஒரு கிராம‌வாசி த‌ன் கை உழைப்பை ம‌ட்டும் ந‌ம்பி ரெண்டு குடும்ப‌த்தோட‌ வ‌ள‌ர்ச்சிக்கு கார‌ணமாயிருந்து பாசத்தோட வறுமையை எதிர்த்து போராட‌ முடிஞ்சுதுன்னா, ஏன் எல்லா திற‌மையும் உள்ள சில‌ ந‌வ‌யுக‌ பெண்க‌ள் அற்ப‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ விவாக‌ர‌த்துங்கிற‌ க‌த்தியோட‌ உத‌விய‌ நாடுறாங்க‌? ப‌தில் சில‌ சம‌ய‌ம் த‌லைமுறை இடைவெளின்னு வ‌ரும், சில சமயம் பெண்ணீயம் வளராத காலகட்டம்ன்னு சொல்லலாம்.ஆனா கார‌ண‌ம் அது இல்லைங்கிற‌து என் தாழ்மையான‌ க‌ருத்து.எடுத்த‌ எடுப்பிலேயே பிரிவ‌ ப‌த்தின‌ முன்மொழித‌லோட‌ தீர்வு காண‌ ஆர‌ம்பிக்கிற‌து தான் காரணம். பெண்ணுக்குள்ளே எல்லா ஆளுமையும் பூரணத்துவமும் உண்டு.ஏதோ ஓரிடத்தில் குறைகையிலே அடுத்தவர்க்கு அடிமையாதல் நிகழ்கிறது.அத சீர் செய்யோணுமே தவிர ஆண் போல பாவனை செய்வது சரியேயில்லை. வீட்டுப் பிரசனைக‌ள்ல ஒரு பொண்ணால சாதிக்க முடியாதது எதுவுமேயில்ல.இது ந‌ம‌க்கு இப்போ தேவையில்லாத விச‌ய‌ம்.இருந்தாலும் ஒரு வித‌ ம‌ன‌க்க‌ச‌ப்புங்க‌ உங்க‌கிட்ட‌ சொல்லாம‌ யாருகிட்ட‌ சொல்லுவேன்? அதேன் இப்புடி சில‌ ச‌ம‌ய‌ம், க‌ண்டுக்காதீங்க‌ பாஸ். ச‌ரி வாங்க‌ ந‌ம்ம‌ விச‌ய‌த்துக்கு.

அன்னிக்குன்னு பாத்து மனசு பட‌ படன்னு அடிச்சுக்குது.என்னக்கிமில்லாம மேற்க பாத்து கெவுளி வேற நல்ல சகுனம் சொல்லுது.அழகிக்கு என்ன நல்லது நடந்திருக்கும். பாக்கலாம் வாங்க.

<========== அழகி புராணம் தொடரும் [5] ============>

Saturday, January 16, 2010

அப்பத்தா! - ப‌ட‌ல‌ம் 4

"ஏலே! யாருப்பா அது? "

கருக்கலிலே சாணஞ் தெளிச்சு கோலம் போட்டு நிமிரவும், மாரியப்பன் கூவலோடு வாசல் மிதிக்கவும் ச‌ரியாயிருந்துச்சு!

"ஆங்! அழகியா! ஆத்தா! ஓம் புருசன கொஞ்சம் வெளிய வரச் சொல்லு தாயி!வெரசா ஒரு சேதி சொல்லோணும்!"

"சித்த இருங்கண்ணே வாரேன்" என்றபடி திரும்ப, கணவன் எதிர்படவும் "உங்களத் தான் கேட்டாக!" என்ற‌ப‌டி மெல்ல‌ ந‌க‌ர்ந்தாள்.

"என்னல‌‌! விடிய‌ல்ல‌ க‌த்திக்கிட்டிருக்க?என்ன சேதி?" என்ற‌வ‌ன், நிமிச‌த்துல‌ மாரி சொன்ன‌ விச‌ய‌த்த‌ கேட்ட‌தும் சிரிக்க‌வே தெரியாதுன்னு தெரிஞ்ச‌ மொக‌த்துல‌ அம்புட்டு சிரிப்பு!

வெரசா இவ‌ கிட்ட‌ வ‌ந்து , " ம‌லேயாவுல‌ வேல‌க்கி ஆளெடுக்காக‌ளாம்.நிச்ச‌ய‌ங் கெட‌ச்சுரும்! உம் மாம‌ங்கிட்ட‌ சொன்ன‌ மாதிரி உன்ன‌ ராசாத்தியா வ‌ச்சுக்குவேன்.நா ஏமாத்த‌ல‌ புள்ள‌ நீ என்ன‌ ந‌ம்பு. ந‌ல்ல‌ பொழ‌ப்பில்லாத கொற‌ தான் உங்கிட்ட‌ மொக‌ங்குடுத்து பேச‌ல‌.இப்ப‌ இந்த‌ வேல‌ த‌க‌ஞ்சுரும். போயிட்டு வாரேன்.வ‌ந்து பேசுதேன்"

ஒரு வார்த்த‌ பேச‌மாட்டானான்னு ஏங்கி கெட‌ந்த‌வ‌கிட்ட‌ ம‌ட‌ம‌ட‌ன்னு பொறிஞ்சிட்டு போயிட்டான். இத்த‌ன நா விடுக‌தக்கி இன்னைக்கு ப‌தில் கெட‌ச்சிருச்சு. அம்மான் என்ன‌ சொல்லி க‌லியாண‌ம் முடிச்சு குடுத்தாருன்னு தெரிஞ்ச‌ புள்ள‌ அவரு ஆக்ரோச‌த்துக்கும் கார‌ணம் தெரிஞ்சுகிட்டா. இத்தன பாசம் வச்சிருக்கானா எம்புருசன் எம்மேல? நெனைக்க நெனைக்க கரும்பா இனிக்கிது. எப்ப வருவான்னு காத்திருக்கா வாசல்ல ஒரு கண்ணும் அடுப்பில ஒரு கண்ணுமா.

'அடப்பாவி! காசில்லையினு தானா இம்புட்டு ரகளயும்! ஒத்த வார்த்த சொல்லப்பிடாது? நானும் என்னன்மோ நெனச்சு மருகி போனேனே.ஆத்தா மகமாயி! ஆகா ஓகோன்னு வாழலையினாலும் கவுரதயா,பாசமா வாழனும் தாயி! அதுக்கு வழி பண்ணு'

"என்னா? காலையிலேயே கனாவா? தோட்டத்துக்கு போகல?" ம‌ன‌சு போன‌ போக்க‌ மாமியாரு கொர‌லு வ‌ந்து க‌லைச்சு போட்டுது!

"இல்ல‌ அயித்த‌! அவுக‌ வெளிய‌ சோழியா போயிருக்காக‌! என்ன‌ ஏதுன்னு கேட்டுட்டு போக‌லாமின்னு........!"

"அதெல்லாம் நா பாத்துக்கிறேன்! நீ போ!" ச‌ட்ட‌மாய் சொன்ன‌தும் ம‌னசில்லாம‌ல் தென‌ச‌ரி பாக்குற‌ வேல‌ய‌ தொட‌ருறா அழ‌கி.

பொழுது சாய வீட்டுக்கு வ‌ந்தா வீடே த‌ல‌கீழா மாறியிருக்கு. க‌ப்ப‌ல்ல‌ ப‌ய‌ண‌மாம். ரெண்டு மூணு நாளைக்குள்ள கெள‌ம்ப‌னுமாம். அப்ப‌டி இப்படின்னு ஓர‌க‌த்திக்கிட்ட‌ வ‌ம்ப‌ள‌ந்துக்கிட்டிருந்த‌ மாமி,இவ‌ள‌ பாத்த‌தும் என்ன‌ தோணுச்சோ, "அவ‌ன் உள்ள‌ தான் இருக்கான் போயி பேசு" என்றாள்.

யோச‌னையா இருந்த‌வ‌ன் மெட்டி ஒலி கேக்க‌வும் மெல்லத் திரும்பி,மஞ்சளும் குங்குமமும் திகழ, தாமரப்பூ கணக்கா மலர்ந்து கெடந்த முகத்த பாத்ததும் பேச்சிலழந்தவன், திக்கித் திணறி ச‌ன்ன‌மா,

"ரெண்டு நாள்ல‌ கெள‌ம்ப‌ணும். மூணு வ‌ருச‌ம் ஆகும். கொஞ்ச‌ம் ந‌ம‌க்குண்ணு சேத்துகிட‌லாம்,அதேஞ் சரினுட்டேன். ஆனா நீ இங்க ச‌மாளிச்சிருவியா? இல்ல‌....உன்ன உன் வீட்டுல கொண்டு விட‌னுமா?"

அவ‌ன் மூச்சுக்காத்து த‌ந்த‌ க‌த‌க‌த‌ப்ப‌ அனுப‌விச்ச‌வ, க‌த்தியா வ‌ந்த‌ வார்த்தைக‌ள்ல‌ நொறுங்கி போனா.
"என்ன‌யிது? என் வீடு இது தானே! நான் உங்க‌ள‌ ந‌ம்பித்தானே வ‌ந்தேன்?இப்பிடி பிரிச்சு பேசுறீக‌? இதுக்கு முன்ன மாதிரி பேசமலே இருந்திருக்கலாம்!" விசும்ப‌லுட‌ன் க‌த‌ற‌லும் சேர‌ அப்ப‌டியே உருகிப் போயிட்டான்.

"இல்ல‌ புள்ள‌. நா ஒன்ன‌ ஒரு நாளும் பிரிக்க‌ல‌. என‌க்கு எல்லாமும் நீந்தேன். ஆத்தா என்ன‌ பெத்த‌வுக‌ இல்ல‌யினாலும் ந‌ல்லா வ‌ள‌த்த‌வுக. அதுக்கு ந‌ன்றிக்க‌ட‌னாத்தேன் நான் வ‌ர‌வு செல‌வு எதுவுமே கேட்குற‌தில்ல‌. இளைய‌வ‌ ப‌டுற‌பாடு தெரிஞ்சும் நா இல்லாத‌ ச‌ம‌ய‌த்துல உன்ன இங்க‌....நீ... அதாம்புள்ள‌ அப்பிடி..." க‌ண்க‌ல‌ங்க‌ நின்ன‌வன‌ பாத்த‌தும் ஏதோ ப‌த‌றிப் போச்சு இவ‌ளுக்குள்ள‌.

"ஆத்தி! என்ன‌ இப்ப? எதுக்கு கலங்குறீக?சீமைக்கு போயி ந‌ல்லா ச‌ம்பாதிங்க‌.அயித்த‌ சொல்லுற‌ வார்த்தைய‌ ம‌திச்சி ந‌ட‌ப்பேனுங்க. குடும்பத்த பத்தி வெசனப் படாதீக! ப‌ய‌ப்புடாதீக! ஆனா அக்க‌ர‌ சீம‌ போனாலும் உங்க‌ நென‌ப்போட‌ ஒருத்தி இருக்கான்னு ம‌ட்டும் நென‌வுல‌ வ‌ச்சுக்குங்க"

"என‌க்கு தெரியும்புள்ள‌! நீ சேக்க‌ வ‌ந்த‌வ‌, யாரையும் பிரிக்க‌ மாட்ட! எனக்கு தெரியும்"

காதலோடு கட்டி அணைத்ததும் மறுப்பேயில்லாமல், இது என‌க்கான‌ எட‌முங்கிற‌ உரிமையில‌ நா த‌ழுத‌ழுக்க பரவசக் கண்ணீரோட அவ‌ன் தோளில் ச‌ரிந்தாள் அழ‌கி.

<===========அழ‌கி புராண‌ம் தொட‌ரும் ===========>



Sunday, September 27, 2009

அப்பத்தா! - ப‌ட‌ல‌ம் 3


அழகி க‌ல்யாணம் சீரும் சிறப்புமா நடந்தேறிச்சு. பந்தி முடிஞ்ச கையோட அம்மான் மக்க எல்லோரும் சொல்லாம கொள்ளாம வண்டியேறி போயிட்டாக. மனசு நெறஞ்ச கவலையோடவும் கண்ணு கொள்ளாத கண்ணீரோடவும். புதுப்பொண்ணு அம்மான் வீட்ட விட்டு கெளம்புறா. நல்லபடியா கரையேத்திட்டோம்கிற நம்பிக்கை அம்மானுக்கு. பாவம் வெள்ளந்தியான‌ மனுசந்தானே. மாப்பிள்ளய மட்டும் பாத்து ஏமாந்துட்டாரு.

'சல் சல்'ன்னு தாளத்த சிந்துன சதங்க சத்தம், பக்கத்துல தாலி கட்டுன புருசன்,சர சரக்குற கூரை புடவை.கதம்பமும் சந்தனமும் கலந்த வாடை. ஒரு திணுசான மயக்கத்துல இருந்தா அழகி. இப்போ நடக்குற பெரும்பாலான க‌ல்யாண‌த்துக்கு மாப்பிள்ள மட்டும் போதும், தனிக்குடித்தனம் வழக்கத்துல இல்லாத அந்த காலத்துல மாப்பிள்ளைய விடவும் மாப்பிள்ளைய சார்ந்தவுங்க ரொம்ப முக்கியம். அதுலயும் அழகி வாக்கப்பட்டு போற அந்த வீடு இருக்கே, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா பிரச்சினைகள் வந்தமேனிக்கு இருக்கும்.ஆளாளுக்கு நாட்டாமை.புது அடிமைதான் நாம‌ அங்கன்னு தெரியாத‌ அழ‌கி, ந‌ம‌க்குன்னு ஒரு கூடு கெட‌ச்சிருச்சு,இப்ப‌டி வாழ‌னும் அப்ப‌டி வாழ‌னுமுன்னு க‌ண் நெறைய‌ க‌ன‌வோட, ஏகப்பட்ட எதிர்பார்ப்போட‌ மாமியார் வீட்டுக்கு போறா.
மாட்டு வ‌ண்டி நிக்குது, சுய‌ நென‌வுக்கு வ‌ந்த‌வ‌ளா திடுமென‌ முழிக்குறா. க‌ம்மாயிக்கு எதுக்க‌ மாதிரி ஒரு காலி எட‌ம், ந‌டுவுல‌ ஒரு வ‌ட்ட‌ குடிசை. 

'இது தான் ந‌ம்ம‌ வீடு எற‌ங்கு', ப‌தில் வ‌ந்த‌ தெச‌ய‌ பாத்தா சிரிக்க‌வே தெரியாத‌ மாதிரி ஒரு பொண்ணு நெற மாச சூலோட‌.மாப்பிள்ளையோட‌ த‌ம்பி பொண்டாட்டியாம்.சீம‌க் கெல்லாம் போன‌வ‌ருன்னாங்க‌ ஒரு வ‌ட்ட‌ குடுசையும் நால‌ஞ்சு ஆட்டுக் குட்டியும் தான் சொத்து போல‌.

க‌ல்யாண‌ வீடுன்னாங்க‌ ஒரு ச‌ன‌த்தையும் காணும். லேசா அழ‌கிக்கு உள்ளுக்குள்ள‌ கிலி பிடிக்குது.அம்மான் தான் விசயத்துல‌ ஏமாந்துட்டாருன்னு ம‌றுநா விடிஞ்ச‌தும் தெளிவா தெரிஞ்சு போச்சு.ஆனா என்ன‌ தோதுக்கு இந்த‌ க‌லியாண‌முன்னு ம‌ட்டும் புரிய‌வே மாட்டேங்குது அவ‌ளுக்கு.இங்க‌ எல்லாமே மாமியாரு ராஜ்ஜியமுன்னு புரிஞ்சி போச்சி அவ‌ளுக்கு. அரச புர‌சலா தெரிய‌ வ‌ருது மூத்த‌வ‌ நோவால‌ சாக‌ல, இவ‌ங்க படுத்தின பாடு தாங்காம செத்துப் போயிட்டான்னு.

மொத‌க் கோழி கூவுறதுக்கு முன்னாடி காட்டுக்கு போனா பொழுது சாய‌த்தான் திரும்ப‌ முடியுது,ராவுல‌ வாற‌ புருச‌னோ முழுக்க போதையில‌. என்ன‌ செய்யுற‌து? ஆன துணி கட்ட கூடாது,பக்கத்து வீடுகள்ல யாரோடயும் பேசக் கூடாது.அப்படி இப்படின்னு ஆயிரம் சட்டம்.குருவியா பறந்து திரிஞ்சவள கூண்டுக்குள்ள சுருக்குன மாதிரி. ஆசை மோகம் எல்லாஞ் சேத்து தொண்ணூறு நாளைக்கெல்லாம் தவிப்புகள் அத்தனையும் நத்தையா சுருங்கிப் போச்சு.ஆனா ஏதானாலும் யாருக்கிட்டேயும் கையேந்தி நிக்க மாட்டேன்னு ம‌னசுல‌ எழுதிக்கிட்டா.

இது தான் வாழ்க்கை, இதுல‌ தான் நீந்தி க‌ரையேற‌னும். எங்க‌ போக‌னுமின்னு தெரியாட்டினாலும் எங்க‌ போக‌க் கூடாதுன்னு தீர்மான‌ம் ப‌ண்ணிக்கிட்டா.அனாதையா நின்ன‌வ‌ள‌ தூக்கி எடுத்து,ம‌க‌ளுக்கும் மேலா வ‌ள‌த்த‌வ‌ரு த‌லை நிமிர‌ வாழ‌னுமின்னு முடிவு ப‌ண்ணிக்கிட்டா. ”மறு வீடு” கூட வராத மாப்பிள்ளையையும் பொண்ணையும் பாக்க‌ கூட்டாளி ச‌கித‌மா ஆசையோட அம்மான் வ‌ந்திருக்காரு. காத்துக் கெட‌க்காரு காத்துக் கெட‌க்காரு ம‌ணிக்க‌ண‌க்கா. இம்புட்டும் தெரியாம‌ அழ‌கி வாறா அலுத்துக் க‌ளைச்சு பொழுது சாய‌.

'வாடா. வாடா.ன்னு சொல்லி , மெல்ல நிமிந்து பாக்குறாரு‌ இவ‌ வந்து நின்னக் கோல‌த்த‌ப் பாத்து 'அய்யோ' ன்னு அல‌றிப் போயிட்டாரு. வாடி வ‌த‌ங்குன‌ வெத்த‌ல‌ கொடியா, நிக்க‌வும் தெர‌ணிய‌த்துப் போயி,அப்ப‌டியே சாஞ்சு நின்ன‌வ‌ள‌ உத்து பாக்குறாரு. ச‌ந்தோச‌த்துக்கான‌ அறிகுறி ஒன்னயும் காணும் அந்த கண்ணுல. 

ப‌திலுக்கு, அவ ஒடம்புல தழும்புகளும் காயங்களும் அம்மான் மனச ரணமாக்கிடுச்சு. வெறி கொண‌ட‌ வேங்கையா சீறுறாரு எல்லாருகிட்டேயும் . நியாய‌ம் கேக்குறாரு. என்ன‌ பிர‌யோச‌ன‌ம்? ஒரு அனாத‌ புள்ள‌ வாழ்க்க‌யில‌ வெள‌யாடிப்புட்டோமே.குடிகார‌ப் ப‌ய‌ வாக்க‌ ந‌ம்பி ஏமாந்துட்டோமேன்னு மெதுவா ஏறுது புத்திக்குள்ள‌.குத்தமுள்ள‌ நெஞ்சு ப‌ரிகார‌ம் தேட‌ நெனைக்குது.ஆனா பாவ‌ப்ப‌ட்ட‌ அழ‌கியோட‌ த‌லை எழுத்தோ அத்த‌ன‌ சீக்கிர‌ம் சீராயிடுமா என்ன‌?

<========= அழகி புராணம் தொடரும் ==========>

Sunday, September 13, 2009

அப்ப‌த்தா! - ப‌ட‌ல‌ம் 2


க‌ல்யாண‌த்துக்கு வ‌ந்த‌வுக‌ எல்லாரும் பெற‌ந்த‌ ம‌க்க‌ க‌ண்க‌ல‌ங்கி அழுவுற‌த‌ பாத்து ச‌ங்க‌ட்ட‌ப்ப‌ட்டு,வ‌ந்து ச‌மாதான‌ப் படுத்துறாக‌. ஆனா எல்லாரும் ஒரு ம‌ன‌சா இந்த‌ க‌லியாண‌த்த‌ வேணாமுங்குற‌துல‌ வெற‌ப்பா நிக்‍கிறாக‌.

கத்தலும் விசும்பலும் கலந்து வர,வெடுக்கென நிமிந்து பாக்குறா அழகி. என்ன ஆச்சு? திடுமென என்ன கொழப்பம்? வெரசா வந்து மணபந்தல பாக்குறா.
ஆளாக்கி வளத்தவரு கொலக்குத்தம் பண்ணுன‌வராட்டம் தல குனிஞ்சு தடுமாற நிக்க,அக்காமாரு அத்தன பேரும் இவ ஆத்தாவா மாறி அவரோட சண்டைக்கு நிக்க,அத்தன பேரு பாசமும் கண்ணீரா பொங்கி வழியுது.இதுவ‌ரைக்கும் க‌ண்ணீரும் க‌ம்ம‌லையுமா இருந்த‌ அழ‌கிக்கோ, இந்த‌ சடுதி மாத்த‌ம் ஒரு நிதான‌த்த‌ கொடுத்திருச்சு.

மெல்ல சுதாரிச்சு, சுத்தி முத்தி பாக்குறா. ம‌ல்லுக்கு நிக்குற‌ அம்மாவ‌ அட‌க்க‌ முடியாம‌ தெண‌றிக்கிட்டு,ஒடிச‌லா, ஒச‌ர‌மா,க‌ருப்பா ஒருத்த‌ரு ... ஆமா அவ‌ராத்தான் இருக்கோணும். ப‌ட்டு வேட்டி எல்லாம் உடுத்தியிருக்காரே. மொத மொதலா அழகிக்கு கண்ணால பேசுற பாசை எல்லாம் நல்லா புரியுது.

'இத்தன பேரு மத்தியிலயும் என்ன அசிங்க படுத்திபுடாத.'

மறுக்கா பாக்குறா,
'என்ன வுட்டு போயிறாத புள்ள.....'

அந்த கண்ணுல கெஞ்சலும் கதறலுமுன்னா, ஒன்னோட ஒன்னா பாவிக் கெடக்கு.

ச‌ட்டுன்னு , 
அட‌! ஒரே பார்வையில‌ க‌வுந்துட்டா போங்க‌.பொம்ப‌ள‌ புள்ள‌ மாட்டுற‌தே இந்த பரிதாப பார்வைக்குள்ள‌ தாங்க.

'பாத்தாக்க‌ பாவ‌மா இருக்கு. எம்புட்டு ந‌ல்ல‌வரா இருந்தா அம்மான் இத்த‌ன‌ போராட‌னும்?' மனசு அவர நோக்கி ஒடுதுன்னு புடி பட்டுருச்சு இவளுக்கு. 

வெக்கம் ஒடம்பு பூரா பரவுது.முகம் ரோசாப்பு கணக்கா செவந்திருச்சு. எம்புட்டு பெரிய‌ த‌கிரிய‌ சாலியா இருந்தாலும் காதலுக்கும்,பாசத்துக்கும் அட‌ங்கித் தானே ஆக‌னும். என்ன நாஞ் சொல்லுறது?

உள்ளுக்குள்ள என்ன‌ ந‌ட‌க்குதுன்னு தெரியாம‌, ப‌ர‌வ‌ச‌மாயி அழ‌கி செலை‌யா நிக்க‌யில‌,ஊருக்கு பெரிய‌வ‌ரு சீலக்கட மாத‌வ‌ன்னு பேரு, வ‌ந்து எல்லாரயும் அட‌க்கிபுட்டு,
'தே.முடிவா என்ன‌ சொல்லுறீக‌?'ன்னாரு.  
அக்காமாரு அத்த‌ன‌ பேரும் ஒருமனசா வேணாமுன்னு சொல்ல‌,ஒரு மொர‌ட்டு கொர‌லு ஊட‌ பாயுது. 
'பொண்ண‌ கேட்டுச் சொல்லுங்க‌.'
திரும்பி பாக்குறா, மாப்பிள‌ தான் பேசுன‌து. ச‌ன‌ மொத்த‌மும் இப்போ இவ‌ள‌ பாக்குது. ஆத்திர‌துல‌ அறிவிழ‌ந்தாலும் நிதான‌துல‌ இவ‌ ஆயிர‌ம் அறிவாளிக்குச் ச‌ம‌ம்.

அல்லிப்பூ அத‌ர‌ம் அதிராம‌ சொல்லுறா.

'என‌க்கு அவிய‌ள‌ க‌ட்டிக்க‌ச் ச‌ம்ம‌த‌ம்'. ப‌ரித‌விச்சு நின்ன‌ அம்மான் ஓடியாந்து,
'இது போதுமுடா.இது போதும்ன்னு!' 

க‌ல்யாண‌ ப‌ந்த‌ல், நாத‌சுவ‌ர‌முன்னு பதினாறு வயசு பாலகனாட்டம் ஓடி திரியுறாரு... சிந்துன‌ மூக்கும் நொந்த‌ ம‌ன‌சுமா அக்காமாரு இவ‌ளுக்கு அல‌ங்கார‌ம் ப‌ண்ணுறாக‌. அடுத்த‌வ‌ ப‌ங்கிட்ட‌ வாழ்க்க‌ ந‌ம்ம‌ த‌ங்க‌ச்சிக்கு கெடைக்குதேங்குற‌ வ‌ருத்த‌ம்.இவள இந்த கல்யாணத்துல இருந்து காப்பாத்த முடியலயேன்னு கோவம்.அப்ப‌ன‌ மீற‌ முடிய‌ல‌யேன்னு இயலாமை. எல்லாமும் சேந்து மூத்த‌வ‌ளுக்கு ஆங்கார‌த்த‌ குடுத்துருச்சு. 

ச‌ன்ன‌மா சொல்லுறா,'பாரு. எங்க‌ளுக்கு ம‌ருவாத‌ இல்லாத ஒன் வாழ்க்கையுல இனி எங்க‌ளுக்கு எந்த‌ ப‌ங்குமில்ல‌.' பூத்து நெற‌ஞ்ச க‌‌ண நேர‌த்து ச‌ந்தோச‌ம், வெய்யில் க‌ண்ட‌ ப‌னியா காஞ்சு போச்சு.சோதியெழ‌ந்த‌ க‌ண்ணோட,ஒட்ட வச்ச சிரிப்போட, சின்னாளப் ப‌ட்டு மினுமினுக்க,அழ‌கே உருவான‌ அழ‌கி ம‌ணப்ப‌ந்த‌லுக்குப் போறா.

ப‌ந்த‌ல்ல‌ மாப்புள‌, பொத‌ய‌ல் கெடைச்ச பூரிப்புல. அவன் நெற‌ஞ்ச‌ பார்வையில‌ தெளிவா புரியுது இவ‌ளுக்கு, அம்புட்டு ச‌ந்தோச‌ம். 'இனி எல்லாமே அவ‌ன் தான்'னு தெக்க‌த்து சாமியெல்லாம் ம‌னசார‌ வேண்டிக்கிட்டு த‌ல‌ குனிஞ்சு தாலி வாங்கிறா [எதிர்கால‌த்துல‌ தான் நிமிர‌வே போற‌தில்லைன்னு சொல்லுற‌‌ மாதிரி] மண்ணு செறக்க வாழ்ந்து நிக்கும் மகிழம்பூ மனசுக்காரி...

<======== அழ‌கி புராண‌ம் ========>

Wednesday, September 9, 2009

அப்பத்தா! - ப‌ட‌ல‌ம் 1


பல தலைமுறைகள் தழைக்க சில ஆணிவேர்கள் அடித்தளமாய் புதைபடுவது வழக்கம்.பெரும்பாலும் அவர்கள் பெண்களாயிருப்பதும்,அதனாலே அவர்கள், கால மாற்றத்தில் மறக்கப்படுவதும் வழக்கம்.எத்த‌னை வீட்டில் இன்றைக்கும் முன்னோர் வ‌ழிபாடு சாத்திய‌ம்? சில‌ ப‌கிர்த‌ல்,சில‌ நினைவு கூற‌ல் என‌ இந்த 'சில' விச‌ய‌ங்க‌ள் குடும்ப அங்கத்தினருக்கிடையே விரிசலில்லாத உறவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கதை கேட்க ஆரம்பித்த நாட்களில்,கறிகாய் நறுக்கியபடியோ,பூ தொடுத்தபடியோ,சோறு ஊட்டியபடியோ இருக்கும் அப்பத்தாவின் அருகாமையோடு,அவளின் பொக்கை வாய் அசைப்புக்கு அடிமையாயிருந்த காலங்கள், அவள் கதைய அவள் சொல்லிக் கேட்டு மெய்மறந்த நாட்கள், எத்தனை தவம் கிடந்தாலும் இனி கிடைக்கப் போவது இல்லை.சிலரின் பாதிப்பு நமக்கு தெரியாமலே நமக்குள் நம்மோடு கலந்து விடுவது தவிர்க்க முடியாதது. அதை நினைவு கூறுதல் அவர்களோடு சில கணங்கள் வாழச் செய்கிற முயற்சி. அப்படியாக இதுவும்......

"அப்பத்தா!"

அப்பவோட அம்மாவ நாங்க இப்படித் தான் கூப்பிடுவோம்.

வாழ‌க் க‌த்துக் கொடுத்து,தன‌க்கே தெரியாம‌, என‌க்கு வாய்மை,நேர்மை,உழைப்பு, அது த‌ரும் வலிமையென‌(!)[சரி,சரி .....] பெரிய பெரிய விசய‌ங்க‌ளை எல்லாம் சாதார‌ண‌ விள‌க்கத்துட‌னே, அடித்த‌ள‌மிட்டு போன‌ அப்பாத்தா தான் இப்ப‌வும் எப்ப‌வும் என‌க்கு பிடிச்ச‌ க‌தாநாயகி.
ச‌ரி வாங்க‌. ந‌ம்ம‌ கதாநாய‌கிய‌ ப‌த்தி தெரிஞ்சுக்க‌லாம்.
சின்ன‌ வ‌ய‌சுலேயே அம்மா அப்பா இல்லாம‌ அம்மான்(தாய்மாம‌ன்) த‌ய‌வுல‌ உசுர‌ காப்பாத்திக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். அம்மானோட‌ ஆறு பொண்ணுக‌ளோட‌ ஏழாவ‌து பொண்ணா,க‌டைசிப் பொண்ணா வ‌ள‌ர்ந்த‌ அப்ப‌த்தா சோத்துக்கு கையேந்துனாலும் சீமைக்கு ம‌காராணி க‌ண‌க்கா. அப்ப‌டி ஒரு அழ‌கு. அழ‌குக்கு த‌குந்த‌ மாதிரி தான் பேரும். ஆமா அவ பேரு,"பொன்ன‌ழ‌கி".

அஞ்சு பொண்ணு பெத்தா அர‌ச‌னும் ஆண்டி. ஆனா, இவுங்க‌ வீட்டுல‌யோ ஏழு பொண்ணு.க‌ஷ்ட‌ ஜீவ‌ன‌த்துல‌ எப்ப‌டி க‌ரையேத்த‌ போறோம்னு க‌வ‌ல‌ கொண்ட‌ப்போ,சின்ன‌வ‌ பொன்ன‌ழ‌கி,'ஏன் க‌லங்குறே? நான் இருக்கேன்னு. என்னக்கும் ஆம்ப‌ள‌ப்புள்ள‌ இல்லாத இந்த‌ வீட்டுக்கு நான் தான் எல்லாமுன்னு சொல்ல,பூரிச்சு போன அவ‌ளோட‌ அம்மான் சாகுற‌ வ‌ரைக்கும் 'அழ‌கா.அழ‌கா.' ன்னு தான் கூப்பிடுவாராம்.

வெறும் வாய்பந்தல் கட்டி பந்தி போடுற ரகமில்ல நம்ம அழகி.சிதறாம திங்கிற சோத்துலயும்,அதிராம பேசுற வார்த்தையிலயும் பெண்ணோட பண்பாடு தெரியுமுன்னு சொல்லுவாங்க.அதுலயும் நிதானிச்சு சொல்லுற கனிவான வார்த்த,எப்படிப்பட்டவங்களயும் கிட்ட சேத்துடும். நம்ம அழகியும் அப்படிப்பட்ட அதிசய தெறமக்காரி.அரைக்காணி நிலத்துல அக்கா தங்கச்சிங்க ஏழு பேரும் அப்பனுக்கு துணையா விவசாயம் பாக்குறாங்க. சுத்து பத்து எட்டு ஊரிலேயும் இவ‌ங்க‌ வெள்ளாம‌ காய்க‌றி தானாம் எல்லார் வீட்டு சமையலுக்கும்.அதுல வர்ற வருமானம் தான் குமரிங்களுக்கு 'சிறுவாடு'. இவ கட்டுட்சிட்டால பட்டி, தொழுவுன்னு அம்மான் வீடு பல்கிப் பெருகுது.

அவ சிந்துன வேர்வைக்கு பலனா, போதும் போதுமுங்குற அளவுக்கு தந்தா பூமாதேவி. தான் ஆறு ம‌க்க‌ளையும் ம‌க‌ளா பாக்குற‌ அம்மான், இவ‌ள‌ ம‌ட்டும் தான் ம‌க‌னா பாப்பாராம்.துரு துருன்னு வார்த்தைக்கு வார்த்த‌ தைரிய‌ம் சொல்லிக்கிட்டு திரியுற‌ இவ‌ள‌ பாக்குற‌வுக‌,அப்பிடியே அச‌ந்து போவாக‌. ம‌ன‌சுல‌ இருக்க‌ வைராக்கிய‌ம், க‌ண்ணுல‌ தெரிஞ்சாலும், பெண்மைக்கான‌ அத்த‌ன‌ அம்ச‌மும் அமைஞ்ச‌ பேர‌ழ‌கி. வார்த்தையில‌ இருக்குற‌ மென்மையும், பூமி நோகாம‌ ந‌ட‌க்குற ப‌த‌விசும், க‌ண்ட‌வ‌ங்க‌ அத்த‌னை பேரையும் ம‌ய‌க்கிப்புடும்.

ஏழு பேரு அழ‌குக்கும், குண‌த்துக்கும் ஒழ‌ச்சு பொழ‌க்கிற‌ த‌ன்மான‌த்துக்கும் ஆச‌ப் ப‌ட்டு சீரு கொடுத்து க‌ட்டிக் கிட்டு போனாங்க‌ளாம்(!). அந்தா இந்தான்னு ஆச்சு. அஞ்சு பொண்ண‌ க‌ரையேத்தின‌ கையோட‌ அவ‌ளோட‌ அயித்த‌ காரியும் காட்டோட‌ போயிட்டாளாம்.அம்மா முக‌மே தெரியாத‌வ‌ளுக்கு எல்லாமா இருந்த‌வ‌ போன‌தும், நிலைகுழைஞ்சு போனா அழகி.

மீத‌ ரெண்டு பேரையும் என்ன‌ செய்யிற‌துண்ணு தெரிய‌ல‌ அம்மானுக்கு. வீட்டுல‌ ஒருத்தி இருந்து காவாந்து ப‌ண்ணுற‌ சாம‌ர்த்திய‌ம் ஆம்ப‌ளைக்கு வ‌ருமா? என்ன பண்ண போறோமுன்னு மலைச்சு போயி நிக்கிறாரு. அப்பவும் 'வெசனப்படாத. நான் பாத்துகிறேன்னு' ன்னு ஆறுதல் சொல்லுறா அழகி.

வாற‌ வைகாசிக்குள்ள‌ ரெண்டு பேரையும் த‌ள்ளி விட்டுற‌துன்னு முடிவு ப‌ண்ணி, மும்முர‌மா வேல‌ ந‌ட‌க்குது. தானும் போயிட்டா அம்மானுக்கு யாரு பொங்கிப் போடுவான்னு த‌வியா த‌விக்கிறா அழ‌கி.ஆச்சு,முன்ன‌ இருக்க‌வ‌ளுக்கு ப‌ட்ட‌ம‌ங்க‌ல‌த்துல‌ ந‌ல்ல‌ப‌டியா அமைஞ்சு போச்சு. இப்போ தான் அம்மானுக்கு பொறி த‌ட்டுது. ஆயி அப்ப‌னில்லாத‌ புள்ள‌, யாரோ மொரட‌னுக்கிட்ட‌ குடுத்துட்டு நாம க‌ண்ண மூடிட்டா,அனாத‌ புள்ள‌ வாழ்க்கைய‌ கெடுத்த‌ பாவ‌ம் சேருமேன்னு, தான் ம‌க்க‌ள காட்டிலும் ந‌ல்ல‌ மாப்பிள்ளைக்கு வ‌லை வீசி தேடுறாரு. ஒரு வ‌ருச‌ம் க‌ழிச்சு,'ஒரு மாப்பிள்ள‌ வ‌ந்திருக்கு. வ‌ந்து முடிச்சு குடுத்துருங்க‌ன்னு தன் மகள்க‌ளுக்கு த‌க‌வ‌ல் அனுப்புறாரு.எல்லாரும் சபை நிறக்க வந்து நிக்கிறாங்க.அழ‌கி 'கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்'னு அட‌ம்புடிக்கிறா.இவ பேச்ச யாரும் செவிட்டுலேயே போட்டுக்க‌ல.

எல்லாரும் வ‌ந்துட்டாங்க‌. மாப்பிள்ளையும் வாறாரு.அக்கா த‌ங்க‌ச்சி அத்த‌ன‌ பேருக்கும் அட‌ங்காத‌ கோவ‌ம் அவ‌ர‌ பாத்த‌வுட‌னே. 'த‌ங்கச்செல‌ க‌ண‌க்கா த‌ங்க‌ச்சிக்கு நெய்வேலி க‌ரி க‌ண‌க்கா மாப்பிள்ள‌யா? இவ‌னையா வ‌லை போட்டு தேடீனீரு?'ன்னு ஒரே பிடி பிடிக்குறாளுக‌ அப்பார‌. அது ம‌ட்டுமா? மூத்த‌வ‌ளோட‌ புருஷ‌ன் சொன்ன‌து கேட்டு அத்த‌ன‌ பேரும் செலையா நிக்கிறாளுக‌.

ச‌ங்க‌தி இது தான் அழ‌கி,அந்த‌ மாப்பிள்ளைக்கு ரெண்டாந்தார‌ம்.மொத‌ தார‌ம் நோவால‌ மாண்டு போன‌துல‌ ம‌ன‌சொடிஞ்சு சீமைக்கு போன‌ ம‌க‌ன் திரும்பி வ‌ர‌வும்,கண்ணாலம் கட்டி வச்சு,இங்கயே த‌ங்க‌ வ‌க்க‌ ஆத்தாகாரி ஆச‌ப்ப‌டுறா. எல்லாம் நியாய‌ந்தான். ஆனா அழ‌கிக்கு இது அநியாய‌ந்தானே.

‍‍‍‍‍<=====அழ‌கி புராண‌ம் தொட‌ரும்====>
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!