Showing posts with label நினைவுகள். Show all posts

Friday, October 11, 2013
அவர்கள் தோற்றுப் போன தெய்வங்கள்
தோற்றுப் போனவர்களை குடும்பமும் மறந்து போகிறது...
அடக்கம்::::
நினைவுகள்,
புலம்பல்கள்
Saturday, September 28, 2013
அவளாகி நானும்....
இன்னும்
அந்தக் குழந்தைக்கு தலை நிற்கவில்லை. எல்லா விரல்களும் வாயினுள் விட்டு
சப்புக் கொட்டிக் கொண்டிருந்தது.கிட்ட நெருக்கிய கணம், மற்றொரு கையால் என்
தலை முடியைப் பிடித்துக் கொண்டது. மெதுவாய் விடுவித்துக் கொண்ட அதே நேரம்
அந்தக் குழந்தையின் அம்மா என்னை நோக்கித் திரும்பினாள். புன்னகைத்தபடி
“கொஞ்சம் பிடிச்சக்கறீங்களா? இதோ வந்துடறேன்”
சென்னையில் இது போலும் நான் பார்த்ததில்லை.அத்தனை எளிதில் குழந்தையைப் பிறரிடம் தரும் தாய்மார்களைப் பார்த்ததில்லை. சுடிதார்ல குழந்தை பாத்ரூம் போனா என்னாகும் இங்கிருந்து வங்கிக்கு வேற போகனுமே.. அப்பாடா! வெள்ளை கவுன் பாதுகாப்பு அம்சங்கள் சகிதம் என் கைக்கு வந்தது அந்தக் குட்டி தேவதை. கழிப்பறை நோக்கிப் போனவள் முப்பது நிமிடம் ஆகியும் திரும்பி வரவில்லை. எந்த லக்கேஜூம் இல்லை. குழந்தையைத் தூக்கிக் கொண்டு பொதுவிடத்து வருகிறவள் போல் தெரியவில்லை. அவளும் ஏதோ குழப்பத்தில் இருப்பது போலவும்.... அய்யோ! சடாரென குழந்தை திருட்டு சம்பந்தமான எல்லா திரைப்படங்களும் செய்திகளும் வந்து போயின..
கண்சிகிச்சைப் பிரிவின் தளம் இது. இது போல நிறைய தளங்கள் உண்டு. ஒவ்வொரு வகை மருத்துவத்திற்கும் ஒவ்வொரு தளம். நான் வேறு இத்தனை நேரமாக குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தேனே தவிர அவள் என்னவானாள் என்கிற கேள்வி என்னுள் கேட்டுக்கொள்ளாமல் இருந்தேனே! என்னை நானே நொந்து கொண்டு அவளைத் தேடத் துவங்கினேன். பயம் வேறு. இதற்கிடையில் கொஞ்சமும் அழாமல் தோளில் சாய்ந்தபடி கன்னம் காது என எச்சிலபிஷேகம் நடந்தபடியிருந்தது. முதல் தளம் இரண்டாம் தளமென்று தேடியும் கண்ணில் தட்டுப்படவில்லை. அலைபேசிய தோழி வேறு போலீஸ் கம்ளைண்ட் ரேஞ்சுக்கு பேச ஆரம்பித்தாள். போட்டோ எடுத்தியா? அந்தப் பொண்ணு எப்டி இருப்பான்னெல்லாம்... மிரண்டு போய்ட்டேன். இதென்னடா சனிக்கிழமையும் அதுவுமா இப்படி ?
கீழே ரிஷ்ப்சன் வரை இறங்கிப் போய் CCTV ரிக்கார்டிங் பார் என தோழியின் சமயோஜிதம் ஆறுதல் தந்தது.
என் அப்பாயின்மெண்ட் வந்து விட்டது. குழந்தையோடு உள்ளே நுழைந்தேன். கண் பரிசோதனையின் போது குழந்தை கையில் இருக்கக் கூடாதென்றார்கள். நர்சிடம் போவதற்கு அத்தனை கத்தியது குழந்தை. அதிசயமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. மொத்தக் கதையையும் சொல்லிவிட்டு இவங்கம்மா வந்தா நான் இங்க இருக்கேன்னு சொல்லுங்க என்றேன் நர்சிடம். இருபது நிமிட பரிசோதனைக்குப் பின் குழந்தையோடு வெளியில் வந்தேன். முழுதாய் ஒரு மணி நேரம் என்ன செய்கிறாள் கழிப்பறையில்? செம கடுப்பாக வந்தது. என்னோடு இன்னும் இரண்டு நர்சுகளும் தேடிக் கொண்டிருந்தார்கள்.எங்கு தேடியும் அவளைக் காணவில்லை. வேறு தளத்திற்கு சென்று விட்டாளோ? சமர்த்தாக தோளில் சாய்ந்தபடி இருந்தது அந்தப் பஞ்சுக் குட்டி. அத்தனை அழகான குழந்தை. பேசாமல் ஆரம்பத்தில் இருந்த இடத்துக்கே வந்து உட்கார்ந்தேன். இன்னும் ஒரு 40 நிமிடம் கடந்து ஒரு வயதான பாட்டியுடன் மெதுவாய் வந்தாள்.
”கஷ்டப்படுத்திட்டாளா குழந்தை?”
“அதில்ல. எங்க போனீங்க?ஒரு மணி நேரமா தேடிட்டு இருக்கேன். என்னங்க நீங்க”
“இல்ல பாட்டிக்கு லேப் டெஸ்ட் எடுக்கக் கொடுத்திருந்தேன். கூட்டி வர லேட்டாயிடுச்சு. அதான்”
“சொல்லி இருக்கலாம்ல? பயந்தே போயிட்டேன்”
“என்ன பயம்?” சிரித்தபடி கேட்டாள். ஒன்றும் சொல்ல முடியவில்லை. குழந்தையை வாங்கிக் கொண்டாள். வாயிலிருந்து கையை எடுத்ததும் முன்போல் கத்த ஆரம்பித்தது.இதானா காரணம். நான் கூட முன் ஜென்ம பந்தம் ஒட்டுதல் ரேஞ்சுக்கு பீல் பண்ணிட்டேனே! நல்ல அம்மா நல்ல குழந்தை. நல்லா வருவீக!
விடைபெறும் போது சொன்னாள்,
“முகத்தைப் பார்த்தா தெரியாதாங்க. நம்பிக்கையானவங்களா இல்லையான்னு?”
அது சரி! இளிச்சவாய்ன்னு பார்த்தாவே தெரியும் போல. சனிக்கிழமை வேறு. வங்கி சம்பந்தமான முன்று வேலைகள் முடிக்கமுடியாமல் போனது.இனி செவ்வாய் கிழமை தான்.
ஆனாலும் அந்தச் செல்லக்குட்டி.க்யூட். கண்ணுக்குள்ளேயே நிக்குது.

நினைவுகள்
Saturday, September 21, 2013
தெத்துப்பல் அழகி
அரைமணி நேர உடற்பயிற்சியும் வேக நடையும் வெந்நீர் குளியலும் கடந்தும் அரற்றும் மனது ஒரே கேள்வியைத் தான் கேட்கிறது....
“உடல், உன் உயிரை விட பெரிதா ? அம்மணமென்ன அத்தனை பெரிதா?”
இந்த கவரிமான்,கற்பு பிதற்றலெல்லாம் எரிச்சலின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறது. உன்னுடம்பை ஆடையின்றி எவராவது பார்த்துவிட்டால் அவனோடே வாழ்ந்து செத்துப்போ எனவும் தூக்கில் தொங்கிவிடு என்றுமா நீ படித்த படிப்பு சொல்லி வளர்க்கிறது? எவர் வழி இவ்வழி தேர்ந்தாய்?
தெத்துப்பல்லிருக்கும். மாநிறம் தானென்றாலும் கண்களும் சேர்ந்து சிரிக்கும் அழகி. சின்ன வயதில் பார்த்தது. தோழியின் தங்கை. அத்தனைப் பரிச்சயமில்லையெனினும் பார்த்திருக்கிறேன்.
மரண ஓலமின்றி நடந்த அவளின் இறுதி ஊர்வலத்தில் கலந்துவிட்டு வந்தேன். இப்போதெல்லாம் மனம் மரத்துவிட்டது. அழுகை வருவதில்லை அத்தனை சீக்கிரம். என்னை விடுங்கள். அங்கே பெரிதாய் எவருமே அரற்றவில்லை. சீக்கிரம் சீக்கிரமென்கிற குரல்கள் தான் கேட்டபடி இருந்தன. வந்ததிருந்த உறவினர்கள் யார் நீங்களென்று விசாரித்து உள்ளே விட்டார்கள்.
இன்னும் சிலமணி நேரத்தில் சிதைக்குப் போகும் மகளென்ற போதும் அவள் மரணத்தை விடவும் அதன் காரணத்தை மறைக்கும் தவிப்பிலிருக்கும் தகப்பன் எத்தனை பெரிய மனச்சிதைவுக்கு ஆளாகியிருக்கிறான்? விசும்பாமல் வெறித்தபடியிருக்கும் அந்தக் குடும்பத்தின் அத்தனை முகத்திலும் பேரதிர்ச்சி.
’வயித்துவலி சார்’ அப்பட்டமாய் பொய் சொன்னார். எத்தனை வாதாடியும் ‘வேணாம்மா. போலீசு கீலீசு கோர்ட் பத்திரிக்கை இதெல்லாம் வேணாம்மா. விட்டுடுங்க ப்ளீஸ். இன்னும் ரெண்டு பொட்டப்பிள்ளைங்க...’ அமைதியாய் கலைந்தார்கள்.
எங்கிருந்தென்று புரியவில்லை.ஆனால் சரிசெய்ய வேண்டும். பாலியல் கொலைகளும் பலாத்காரங்களுக்கும் குற்றங்களுக்கும் காரணிகளாய் பிறர் இருந்தால் தண்டணை வாங்கித் தர முடியும். உள்ளுக்குள்ளே உடைந்து சிதறி தற்கொலையில் மாய்ந்து போகும் இவளைப் போன்றவர்கள் தான் சார்ந்த குடும்பத்துக்கு மனநோயை பரிசாய் தந்துவிடுகிறார்கள்.
அந்தம்மாவின் முகம் பார்க்கவே முடியவில்லை. சே! நினைவுகளைத் தூரப் போடும் வரமொன்று தாருங்களேன். இம்சித்தபடியிருக்கிறது வேதனையாய் தூங்கிய அந்த முகம்.

Wednesday, July 17, 2013
இசையாய் ஒரு நட்பு
என்ன பேசுவது
எல்லாம் தீர்ந்துவிட்டது
மௌனப் புரிதல் சாத்தியப்பட்டபின் சுயவிளக்கங்கள் விலகி நிற்கின்றன.
வசமாகி வசப்பட்டு மீண்டெழும் நிமிடங்களில் கோலோச்சிப் போகிறதொரு வனப் பறவை. ஒவ்வொரு மீட்சியிலும் நுகரும் பிம்பங்களிலெல்லாம் அதன் அன்பின் மொழியே....
கையில் வேலோடு கூர்மையாய் பார்த்தபடியிருக்கிறான் வேடனொருவன். கண்ணிமைக்கும் நொடியில் மரணம். சூழல் புரியாது பாடித் திரிகிறதொரு வெளிச்சக் கெண்டை. சடுதியில் அவன் பார்வை திசைமாற்றி தப்புவிக்கிறது அவ்வனப்பறவை.
உயிர் பிழைத்து தூரத்து நதியுள் அமிழ்ந்தெழும்பும் சின்னஞ் சிறு கெண்டையின் பரவச நீந்தலில் தன்னிலை மறந்து சிறகடிக்கிறது வனப்பறவை. பிறர் சுகத்தில் தான் மகிழும் மகிழ் பறவை.
வனத்துள் அமலோற்சவங்கள் வாடிக்கையென்பதால் உந்திப் பறக்கும் அதன் சிறகுகளில் கர்வமேயில்லை.
அங்கயற் கூடலுள் மெலிதாய் கிசுகிசுக்க இப்போதெல்லாம் பறவையின் பாசமே காரணமாயிருக்கிறது.
நன்றிப் பெருக்கிலும் நட்பின் பாசத்திலும் இணங்கிக் கிடக்கின்றன அற்புத ஜீவிகள்.
பாருங்களேன்... பறவையின் சிறகடித்தலுக்கு மௌனமாய் யாழிசைக்கிறது நன்னீர்க் கெண்டை.
இசையின் தேன்மொழியில் காலம் எழுதிக் கொண்டிருக்கிறது பறவைக்கும் கயலுக்குமான மகோன்னத நட்பினை...

Saturday, June 22, 2013
பலவீனம்
ஒரு
கோடை விடுமுறைக் காலம்.பேத்தியைப் பார்க்க மகள் வீட்டுக்கு
வந்திருக்கிறார் அந்த கிராமத்து முதியவர். ’எப்ப பார்த்தாலும் ஏன் தாத்தா
வாழைப்பழமே வாங்கி வர்றீங்க. சுத்த போர்’ என்றபடி ஓடிவிட்டாள் குட்டிப்
பேத்தி. கழட்டி மாட்டியிருந்த கதர்ச் சட்டையில் பயணச் செலவுக்கு ஒரேயொரு
ஐம்பது ரூபாய் மட்டும். கூடவே கத்தையாய் ஏதேதோ ரசீதுகள். தலை வாழை உணவு
உபசரிப்பில் தூக்கம் வந்துவிட்டது. பயணக் களைப்போடு நன்றாய் தூங்கி
விட்டார். ஐஸ் வண்டிகாரனின் அவரசரத்தில் வீட்டிலிருந்த குட்டிப் பெண்
அவரிடம் கேட்காமலே சட்டையிலிருந்த பணத்தை எடுத்து விட, இது எதுவும்
அறியாமல் விடைபெற்று கிளம்பி விட்டார். பேரூந்து ஏறிய பின் தான்
தெரிந்திருக்கிறது. பாதி வழியில் இறக்கிவிடப்பட்டு பெரம்பூரிலிருந்து
சூளைமேடு வரை நடந்தே வந்திருக்கிறார். பசியும் களைப்புமாய் சோர்ந்து
வந்தவரிடம் கோபமாய்,
‘இவ்ளோ தூரம் நடக்கறாதுக்கு, திரும்பி அங்கேயே போய் கொஞ்சம் பணம் வாங்கி வருவது தானே?’
தயக்கமாய் பதில் சொல்கிறார்,
‘தன்மானம் இடம் கொடுக்கல. நடந்தே வரலாம்னு நடக்க ஆரம்பிச்சிட்டேன். கொஞ்சம் தண்ணி கொடும்மா.’ தளர்வாய் உட்காரும் அவரை காண்பது மிகவும் கஷ்டமாயிருந்தது.
மகன் வீட்டுக்குப் போக வேண்டும். திருவெற்றியூரில் இருக்கிறது.
‘ஏன் பெரியப்பா இப்டி வயசான காலத்துல இங்கயும் அங்கயும் அல்லாடிக்கிட்டு. ஊரில போய் நிம்மதியா இருக்கலாம்ல?’
‘அந்தத் தனிமையும் முதியோர் இல்லம் மாதிரி தானே. வேலைக்கு போகிற மகனுக்கும் மருமகளுக்கும் ஒத்தாசையா இருக்கலாமேன்னு தான். அத விடு, அம்மா டேய்! பூண்டுக் குழம்பும் உருளைக்கிழங்கும் செஞ்சி தாடா’
உரிமையாய் கேட்டதும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பெரியம்மா இருந்த வரையிலும் அவர் இத்தனை தளர்ந்து பசிக் களைப்போடு நான் பார்த்ததேயில்லை. எல்லா சொத்துக்களையும் விற்று கல்யாணமான மகனுக்கும் மருமகளுக்கும் தந்துவிட்டு இப்படி அலைகிறார். பென்சன் பணமும் கை விட்டுப் போகிறது. மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணமென்று. தன்னுடன் இருக்கும் அப்பாவிடம் பணமென்று வாங்குவதில்லை கட்டணங்களை தலையில் கட்டி விடுகிறான் அண்ணன். தனக்கென ஏதும் வைத்திராமல் இப்படி இருக்கும் அவரைப் பார்த்தால் கோபமாகவும் அதே சமயம் பாவமாகவும்.ஒரு வார்த்தை அண்ணாவையோ அண்ணியையோ குறைவாக பேசமாட்டார். அத்தானையும் அக்காவையும் கூட.
நன்றாய் படித்து அரசு வேலையில் மிடுக்காய் இருந்தவர். காலை எழுவதே வேலைக்குச் செல்வதற்கென்று வாழ்ந்து பழகியவர். சம்பாதிக்கும் பணமத்தனையும் பெரியம்மாவின் நிர்வாகத்தில் தான். அத்தனை ஒற்றுமையான தம்பதிகள். எப்படியிருந்த மனுசன் என்கிற வார்த்தை ஏனோ அவரை நினைவுக்குள் இழுத்துவருகிறது.
அவரறியாமல் ஐந்து நூறு ரூபாய் தாள்களை சட்டைப்பையில் வைத்துவிட்டேன். கிளம்பும் போது பார்த்து விட்டார் போலும்.
’எதுக்குடா இவ்ளோ எனக்கு, இந்தா’ நான்கு தாள்களைத் திருப்பித் தந்தார். அழுதுகொண்டே முறைத்ததில், ‘சரி சரி அழாதே!’ நெற்றியில் முத்தமிட்டு விடைபெறும் அவரை நான் என்னுடனே வைத்துக் கொள்ள நான் அவருக்கு மகனாய் பிறந்திருக்க வேண்டும்.பணம் என்கிற வஸ்துவின் தேவை குறையும் போது அண்ணாவுக்கும் இவர் கண்ணுக்குத் தெரியலாம்.
அப்போது வரை பெரியப்பா இப்படியே தான் அல்லாடக் கூடும். தப்புவிக்க என்னிடம் மனமிருந்தாலும் உரிமை இல்லை. ஒரு முறை அண்ணியிடம் ‘அவர் என்னுடனே இருக்கட்டும் ‘ எனக் கேட்டு ஏகத்துக்கும் வாங்கிக் கட்டிக்கொண்டேன். அண்ணாவை விடவும் அக்காவை விடவும் எனக்கு அவரிடம் உரிமையில்லை... ஆனால் பாசம் அதிகம்.
முதியோர் இல்லங்களைப் புறக்கணிக்காதீர்கள் நண்பர்களே! பாசமற்று பெயருக்கு சேர்ந்து வாழ்தலை விடவும் தன் வயதொத்த நண்பர்களுடன் வாழ்ந்து முடிதல் சுகம். பெரியப்பா போல சுமைதாங்கி இயந்திரங்கள் ஓய்வு காலத்தில் விரும்பியபடி வாழ்தல் எங்கு சாத்தியமோ அங்கேயே இருக்கட்டும்.
ஆனால் அவருக்கு பாசமென்பதே பலவீனம்....

Thursday, June 20, 2013
சண்முகம் F/O கயல்விழி
அப்பாவுக்கு எம்.ஜி.ஆர் தான் பிடிக்கும். வெறிப்பிடித்த ரசிகர்.
அப்பாவென்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி கலர் டீவி வந்த பின்னாடியும்
அடிக்கடி கருப்பு வெள்ளைப் படத்தை பார்க்க வைப்பார். அன்பே வா போன்ற
படங்கள் ஆறுதல். வீட்டிலிருக்கும் நேரம் குறைவென்றாலும் இருக்கும் நேரம்
முழுதும் எம்.ஜி.ஆர் மட்டும் தான். படுதீவிரமான அதிமுக காரர்.அ.தி.மு.க
ஆரம்பித்த நாளிலிருந்து இன்னும் எந்தக் கட்சிக்கும் மாறாமல்(தாவாமல்),
எந்தப் பெரிய பதவியும் தரப்படாமல், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டும்
விசுவாசத்தினால் கட்சியில் இருக்கும் ஏமாளிகளைக் கணக்கெடுத்தால் பதிலாய்
கிடைக்கும் அடிமட்டத் தொண்டர்களில் என் அப்பா நிச்சயம் இருப்பார். அம்மா
புகழ்பாடும் விசிலடிச்சான்களுக்கு மத்தியில் இவரின் தமிழ் புலமை பாவம் என்ன
செய்யும். தவிர சபை நாகரிகம் வேறு பார்ப்பார். அவர் தமிழுக்கும் அரசியல்
வாழ்வுக்கும் உந்துதலாய் இருந்த பெருமக்கள் அப்படியான பெருமைக்குரியவர்கள்.
திராவிடக் கட்சியான அதிமுகவில் இருக்கும் பெரியார்
கொள்கையாளர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவர். காலில் விழாதவர்கள்
கவனிக்கப்படமாட்டார்கள்.காரணம்,கட்சித் தலைமைக்குப் பிடிக்கிறதோ இல்லையோ
அடிபொடிகள் வகுத்த கட்சியின் நியதி. மாறுதலுக்கு ஆட்படுமா எதிர்காலம்.
கேள்வி மட்டும் பதில் என்னிடமும் இல்லை.
அரசியல் நிலைப்பாடும்
இலக்கிய ஆர்வமும் அவருக்கு வெவ்வேறு துருவங்கள். கலைஞரின் தமிழ் மிகவும்
பிடிக்கும். நல்ல இலக்கிய ரசனை உள்ளவர். குறிஞ்சிப்பா பாடுவார். புறநானூற்றுப் பாடல்களத்தனையும் எளிதாய் சொல்லுவார். சிலப்பதிகாரம் அசை
பிரித்து பொருள் விளக்குவார். இலக்கியவாதியான அப்பாவை எனக்கு மிகவும்
பிடிக்கும். எப்போதேனும் எட்டிப் பார்க்கும் அந்த முகம். அவரின் சில
நண்பர்கள். முக்கியமாக காரையூர் தமிழ் வாத்தியார். இருவரிடையே நிகழும்
இலக்கிய விவாதங்களை கேட்க பார்க்க மிகவும் பிடிக்கும்.
’சண்முகம்
பொண்ணா நீ? உச்சரிப்பே சரியில்ல’ இந்திரா டீச்சர் அழுந்தக் கொட்டியது
இன்னும் நினைவிலிருக்கிறது. அவரின் கல்லூரித் தோழி. அப்பாவின்
சொற்பொழிவுகள் பற்றிய பெரிய பிரசங்கம் அவர் நிகழ்த்தக் கேட்டிருக்கிறேன்.
அரசியலுக்கு வந்தபின் இலக்கியத்தை மறந்துவிட்டார் அப்பா. மீட்டு வர,
வேண்டுமென்றே தப்புத்தப்பாய் சங்கத் தமிழ் வாசித்தால் போதும். அடங்காக்
கோபத்துடன் வெளிப்படும் அந்த முகம். இழுத்து வைத்து அசை பிரித்து பொருள்
விளக்கி என் காதும் சிவந்து....
பத்ரகாளி படத்துல வர்ற ‘கண்ணனொரு
கைக் குழந்தை’ பாட்டு மிகவும் பிடிக்கும் அவருக்கு. இளையராஜாவை
நாங்களெல்லாம் பெரிதாய் கொண்டாடும் போது பாவலரை பெருமையாய் நினைவுகூர்வார்.
இசையை விடவும் வரிகளை அதிகம் ரசிக்கும் அப்பாவுக்கு இன்றைய இசைவடிவம்
எரிச்சலூட்டும் விடயம்.சமீபத்தில் அவருக்கு பிடித்த பாடல்கள், ‘அய்யங்காரு
வீட்டு அழகே..’ ,’அனல் மேலே பனித்துளி’. :) தமிழ் காரணமா இருக்குமென்றே
நம்புகிறேன்.
திரைபாடலுக்கென கண்ணதாசனையும், நா.காமராசனையும், மருதகாசியையும்,கலைவாணரையும் கொண்டாடுவார். வரிகளின் அமைப்பைக் கேட்ட
மாத்திரத்தில் யார் எழுதியது என்று சொல்லிவிடுவார். வைரமுத்துவை அதிகம்
விமர்ச்சித்தாலும் அவரின் புத்தகங்களில் எல்லாமும் வாங்கி வைத்திருப்பார்.
அதற்கு அவர் சொல்லும் காரணம், ‘யாரையும் படிக்காம விமர்ச்சிக்கக் கூடாது’.
ஜெயக்காந்தனை மிகவும் பிடிக்கும். அவரின் மிடுக்கான பேச்சை அதிகம்
சிலாகிப்பார். அது போலவே நாகூர் ஹனிபாவின் குரலும். சிங்கத்தின் கர்ஜனை
என்பார்.அவருக்குப் பிடித்த பேச்சாளர்கள் நிறையப் பேர் உண்டு. அதில்
எப்போதும் ம.பொ.சி தான் அவருக்கு சட்டென நினைவில் வரும் பெயர்.குன்றக்குடி
அடிகளாரின் பிரியத்துக்குரியவராகவும் இருந்திருக்கிறார். அதே சமயம்
பெரியாரின் எல்லா அரசியல் நிகழ்வுகளும் விரல் நுனியிலிருக்கும். இப்போது
அவருக்கு வழக்கில் உள்ள பெயர் பெரியார் சூட்டியது. நான் அதை
உபயோகிப்பதில்லை. அவர் அப்பா அவருக்கு வைத்த பெயர் தான் எங்களின் எல்லா
சான்றிதழ்களிலும் இருக்கும். நானும் அதைத் தான் பயன்படுத்துகிறேன்.
வீட்டிலிருக்கும் நேரங்களில் தோளில் துண்டோடும் கையில் கரண்டியோடும்
ஏதோவொரு அசைவ சமையலில் அமர்க்களப்படுத்துமவர் அம்மாவை விடவும் அருமையாய்
சமைப்பார். எப்போதும் சமைக்கும் அம்மாவை மறந்து அப்பாவுக்கு ஜால்ரா
அடிப்போம். அசைவமாச்சே... பூஜை, நேரம்,காலம் எதுவும் கிடையாது.பார்க்கும்
வரை-சாப்பிடாத வரைக்கும் விரதமென்பார். மிகச் சரியாய் கடைபிடிக்கிறேன். :)
பழகுவதற்கு மிகவும் இலகுவான மனிதராய், நகைச்சுவையும் குறும்புமாய் இருந்த
இளமைக்கால அப்பாவை அவருள் தேடிப் பார்க்கிறேன். காணக்கிடைக்கவேயில்லை.
அப்பாவின் குணநலன்களில் மாற்றம் எப்போது வந்தது? பெரிய தம்பியின்
மறைவுக்குப் பின்னால், சின்னச் சின்ன விசயத்துக்கும் பதறிப் போகும்
மனிதராய், விரக்தியோடு பற்றில்லாது, கடமைக்கென வாழும் மனிதராய் மாறிப்
போனார். காயம் பட்ட சிங்கத்தைச் சீண்டி தன் வீரத்தை நிரூபித்துக் கொள்ளும்
முயற்சியில் உறவென்னும் ஊண் தின்னி காகங்கள். சிதைந்து போகும்
அபாயத்திலிருக்கும் கூட்டுக் குடும்பத்தை ஒட்ட வைக்கும் முயற்சியில்
நிம்மதியிழந்த வீட்டுப் பெரியவர்கள் வரிசையில் இப்போது அப்பாவும். போதாக்
குறைக்கு, எனக்கு அப்பாவென்கிற கூடுதல் பொறுப்பும். மகள்கள் எப்போதும்
இளமையில் மகிழ்வாகவும் முதுமையில் சுமையாகவும் இருக்கிறார்கள். வாழ்க்கையை
நகர்த்தும் காரணமாகவும்....
இத்தனைக்கு மத்தியிலும், அரசியல்
கூட்டங்களுக்கு செல்வதும் பேரூரை ஆற்றுவதும் பொன்னாடைகளையும் மாலைகளையும்
சொத்தாய்(!) சேர்ப்பதுவும் நிகழ்ந்தபடிதானிருக்கிறது. அவரின் தன்முகவரியுடை
கடிதத்தாளில்(letter pad) ஒரு வாசகம் அச்சடிக்கப்பட்டிருக்கும்,
“வீரன் தோற்றதுண்டு விசுவாசி தோற்றதில்லை”
அடக்கம்::::
நினைவுகள்
Tuesday, June 11, 2013
அந்த சாயந்திர நேரங்கள் மிகவும் ரம்மியமானவை.

வீட்டுப் பெண்களெல்லாம் தலைக்குத் தேய்க்கும் வெட்டிவேரும் வெந்தயமும் சேர்ந்தூறிய தேங்காய் எண்ணெயின் மணத்தால் முற்றம் நிரம்பியிருக்கும். முகம் கழுவி,தலைவாரிப் பின்னலிட்டு பவுடரும் சாந்தும் மணக்கும் இந்நேரம்.
நானும் லதாவும் கொடிமல்லிப் பூப்பறிப்போம். ஆச்சி வெள்ளரளி பறித்து ஒவ்வொரு படமாய் வைத்துக் கொண்டிருப்பார். மலருமுன்னே கொய்யப்பட்ட மொட்டுக்களை வாகாய் கட்டித் ஒவ்வொரு தலைக்கும் சிறு இனுக்கு குடியேறும்.
இஞ்சி தட்டிப் போட்ட தேநீர், பெரிய குவளை நிறைய வந்திறங்கும். இஞ்சியும் சேர்த்துக் கொண்டு மணக்கும் முற்றம்.
தேநீரோடு திண்பண்டமோ அவித்த பயறொ கிடைக்கப் பெற்றால் அத்தனை சுகம். அதுவும் சேர்ந்து மணக்கும்.
வாசல் தெளித்து கோலமிட்டு படியில் குங்குமமிட்டு நிமிர்கையில் நனைந்த சாணித் தரையும் ஒரு வித வாடையை முற்றத்துக்கு தந்துவிடும்.
மின் விளக்கேற்றுமுன், சாமி விளக்கேற்றி சாம்பிராணி போட முற்றம் வரை எட்டும் புகையும் சேர்ந்து கமழும்.
நானோ ஏதோவொரு கதைப் புத்தகத்தின் எழுத்துக்களை கூட்டிக் கூட்டி வாசித்துக் கொண்டிருப்பேன்.
இழுத்துப் பின்னலிட்ட சுருள் குழல் மேவிய முல்லையின் வாசனையை நுகர்ந்தபடி ஆகாசவாணியின் செய்திகளை சரோஜ் நாராயண சாமி வாசித்துக் கொண்டிருப்பார்.
வைகை அணையின் நீர்மட்டம் கேட்கப்பெற்றதும் ஆச்சிக்கு செய்தியில் சுவராஸியம் போய் இலங்கை வானொலிக்கு மாற்றுவார்.
அம்மம்மா,அப்பப்பா,தங்கை ,அண்ணன் இப்படி யார்யாரோ விரும்பிக் கேட்டது நமக்கும் விருப்பமாகிப் போகும். இடையிடையே போர் குறித்த நிகழ்வுகளும். அச்சச்சோ, அடப்பாவமே என்றபடி அரசியல் பற்றிப் பேசுவார்கள். புரியாமல் ஆனால் வார்த்தையின் வீச்சை ரசித்துக் கொண்டிருப்பேன்.
மின் விளக்கேற்றிய நேரத்துக்கெல்லாம் புத்தகப் பை பிரித்து சத்தமாய் படிப்பாள் பக்கத்து வீட்டு வாசுகி. காமாட்சிப் பாட்டி முதல் ஐந்தாறு பெரியவர்கள் கூட்டமாய் வந்து ஊர் நிலவரம் பேசிப் போவர். கிண்டலாய்,கேலியாய் நகரும் அப்பொழுதுகள்.
ஆம்.

இதோ கண்ணாடித் திரைக்குப் பின்னால் நின்று நகரும் நகரத்தைப் பார்க்கிறேன். கோப்பைத் தேநீருண்டு. பருக ஆவலுமுண்டு. பேசிக் களிக்க நண்பரும் உண்டு. பேசுவதற்கு தான் மேற்சொன்ன அற்ப விசயங்கள் இல்லை. அறிவுஜீவியாய் காண்பித்துக் கொள்ள முகடெல்லாம் தொட்டுப் பிடிக்கிறேன். மனம் நாடுமந்த முற்றத்து வாசனையை என்னைப் போல் மறக்காத எவரேனும் இப்போதும் நினைக்கக் கூடும்.

Friday, May 31, 2013
துவரஞ் செடியும் அவரைப் பூவும்
மிளகாய்,உப்பு,வெந்தயம்,கடுகு,பெருங்காயம்
இன்னபிற சேர்மானங்கள் சேர்த்து இடித்து, ஊறவைத்த மாங்காயுடன் சேர்த்துக்
குலுக்கி, பெரிய ஊறுகாய் ஜாடியில் போட்டு, வேடுகட்டி, வெய்யிலில் எடுத்து
வைத்து பதனமாய் தயார் செய்வாள் அப்பத்தா. நார் அதிகம் உள்ள வரகாம் புஞ்சை
மாமரத்து மாங்காய் தான் எனக்கு வேண்டுமென்று சொல்லிவிடுவேன். அந்த
மாங்காய் ஊறுகாயின் ருசிக்கு என் பள்ளித் தோழிகள் அத்தனை
பேரும் ரசிகைகள். எனக்கென தனியே இடித்துச் சேர்ப்பாள். அத்தனை அக்கறைக்கும்,
மெனக்கெடலுக்கும் பெயர் பாசம் என்று தெரிந்ததேயில்லை. உணர முடிகிறது
இப்போது.
சித்திரைக் கடைசியிலெல்லாம் கடாகம் நிறைய மாங்காயும் வெண்டை வத்தலும், சீனி அவரங்காயும் மொட்டை மாடியில் காய்ந்தபடி இருக்கும் வருடம் முழுவதற்கும்....உப்புக் கண்டங்களும் சில வகை வற்றல்களும்...வெளியூரில் இருக்கும் மகள்களுக்கும் மகன்களுக்குமெனவும், என்னைப் போல வெளியூரில் தங்கிப் படிக்கும் வாண்டுகளுக்கெனவும் அத்தனை மெனக்கெடுவாள். சின்னச்சின்ன மூட்டைகளாய் அவலும் சத்துமாவும் புறப்படுமுன் வந்து சேரும். பாசிப்பயரு உருண்டை, எள் கலந்த இட்லிப் பொடியென ஒரு கிராமத்துப் பாட்டியின் கைவண்ணம் என் பை நிறைக்கும். அப்போதெல்லாம் தெரிந்ததேயில்லை அவள் பாசம்.
அம்மா மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆற்றுப் பாசனம் வாய்த்ததால் அங்கே வயல்களில் பயிர்செய்வார்கள். நாங்கள் சிவகங்கை மாவட்டத்தின் வறட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.வானம் பார்த்த பூமிக்கு புஞ்சை,தோட்டப் பயிர்கள் தான் விளையும். அதற்கும் கடும் உழைப்பும் முனைப்பும் தேவை. துவரை தான் எங்கள் குடும்பத்தின் முக்கிய விவசாயப் பயிர். அய்யா காலத்தில் எல்லாம் அதில் மகசூல் அதிகம் பெற்ற காரணத்தால் குடும்பத்துக்கும் அதே பெயர் வந்தததாம். ’ஏ ! யாருத்தா அது! துவரயன் வீட்டுக்குட்டியா?’ இப்போதும் இப்படியான விளிப்பு என் ஊரில் எனக்குக் கிடைக்கும்.
பாசிப்பயறு,தட்டைப்பயறு,வேர் கடலை போன்றவையும் விதைத்து சாதனை புரிந்திருக்கிறார்களாம்.திணை,கேழ்வரகு போன்றவையும் அப்பத்தா விவசாயம் செய்து பார்த்திருக்கிறேன். பொழுது புலர்ந்ததும் களைக்கொட்டும் கையுமாய் அவளை எப்போதும் புஞ்சையிலோ தோட்டத்திலோ பார்க்கலாம். மழைவரத்தைப் பொறுத்து தான் வயலில் விவசாயம். அதிலும் நெல்லைத் தவிர ஏதும் விளைவித்ததேயில்லை. அதும் வீட்டுத் தேவைக்கு மட்டுமே சரியாய் போகும். மாடுகளும் புஞ்சையும் தான் அத்தனை பெரிய குடும்பத்துக்கு முதுகெலும்பு. எப்படி விவசாயத்தை வைத்து இத்தனை பேரை வளர்த்து ஆளாக்கினாள்? யோசித்துப் பார்க்கையில் அழகியின் அயராத உழைப்பு அகக்கண்ணுக்குத் தெரிகிறது.
அப்பத்தா கடும் உழைப்பாளி.
தோட்டத்திலும் அவள் வியர்வை விளைந்தபடியிருக்கும். சிறுவாடு என்கிற சொல்லைக் கேட்டிருக்கிறீர்களா? யாருக்கும் தெரியாமல் வீட்டுப் பெண்கள் தனக்கென சேமிப்பது. வீட்டுக்கென காய்கறிகளில் எல்லாமும் விளைவிப்பாள்.ஆரம்பத்தில் கை இறவையில் தான் பாசனம். எங்கள் வீட்டுக் கத்திரிக்காய்க்கு ஏக மவுசு இருக்குமாம் அப்போதைய சந்தைகளில். எனக்கு விவரம் தெரிந்து விளையும் காய்கறிகள் வீட்டுக்குத் தானே தவிர வெளியில் விற்றுப் பார்த்ததில்லை.தனியாய் காய்கறி விற்று காசு சேர்க்கிறாள். கணக்கில் வருவதில்லையென்று அய்யாவும் அம்மா,சித்திகளும் கிசுகிசுத்துக் கேட்டிருக்கிறேன். அத்தோடு ஒரு சின்ன பம்புசெட் மோட்டார் அப்பத்தாவுக்கென பெரியப்பாவின் கொடையாக தரப்பட்டதில் அத்தனை மகிழ்ச்சி. அவள் பொழுது எப்போதும் தோட்டத்தில் தான் கழிந்தது. நானும் அவளிடம் தான் கற்றுக் கொண்டேன் காய்கறித் தோட்டமிடுவதை. சின்ன தோட்டத்தில் என்னவெல்லாம் இருந்தது. என்னவெல்லாம் கிடைத்தது! முள்வேலி தான். ஆத்தி மரத்தட்டி தான் கதவு. ஆனால் களவே போனதில்லை. அடுத்தவர் உழைப்பைச் சுரண்டாத நிஜ உழைப்பாளிகளை அனேகம் கிராமங்களில் பார்க்கலாம்.வாருங்கள் காண்பிக்கிறேன்.
மிகச் சிறந்த திட்ட மேலாண்மையுடன் பாத்தி பிரித்திருப்பாள். பூச்சி வெட்டு அதிகமாகச் சாத்தியமுள்ள காய்கறிகளை ஓரத்திலும், மீதமுள்ளவற்றை தோட்டத்தின் மத்தியிலும் பயிரிடுவாள். பெரும்பாலும் விதைக்கும் பருவத்தில் உடனிருக்கும் நான் காய்க்கும் பருவத்தில் தான் வீட்டிலிருப்பேன். அத்தனை சந்தோசமாய் இருக்கும் சின்னச்சின்னதாய் கறிகாய் முளைப்பதைப் பார்க்க. இரண்டு கிண்றுகள் உண்டு. அதில் ஒன்று தூர்ந்து போனபின் மோட்டாரின் தேவை அதிகரித்துவிட்டது. புதிதாய் வாங்கித் தந்தார் பெரியப்பா. இதை எல்லாச் செடிகளிடமும் சொல்லிச் சொல்லி வளர்த்தாள்.மலர்வாக அவளைப் பார்க்க அத்தனை பிடிக்கும் எனக்கு.
வீட்டுக்கு வரும் உறவினர்களில் எங்கள் தோட்டத்துக் காய்கறி ருசியறியாதவர் எவரும் இருக்க முடியாது. மோர் உபசரிப்பும் நெய்யிட்ட பருப்புக் குழம்பும் எல்லோருக்கும் எப்போதும் கிடைக்கும் பஞ்சம் தலைவிரித்தாடிய நாட்களிலும். ஒவ்வொரு செடியிடமும் ஒவ்வொரு கதை சொல்லி உச்சி நெருங்குகையில் பார்த்தால் அவளோடே பாதி நிலம் களையெடுத்திருப்போம். சாம்பலும் வேப்பம் புண்ணாக்கும் எருக்களும் தான் உரம். இரசாயன உரம் உபயோகித்து நான் பார்த்ததேயில்லை. இப்போது அடிக்கோடிடப்படும் இயற்கை விவசாயம் அதை இன்னதென்று அறியாமலே அமுலாக்கியிருக்கிறாள்.
நாட்டு வெண்டைக்காய்(வெள்ளை நிறத்தில் இருக்கும்), தோட்டத்து கத்திரிக்காய்(செட்டிநாட்டு உணவுகளில் இது பிரபலம்,பச்சை நிறத்திலிருக்கும்),பச்சை மிளகாய், சீனிமிளகாய்,தக்காளி,கருணை,முள்ளங்கி,பயித்தங்காய்,வெள்ளைப்பூசணி,குமுட்டிக் காய்,சர்கரைப்பூசணி,பீர்க்கை,புடலை என எல்லாமும் விளைவித்திருக்கிறோம். அவரைப்பூ போல அழகான பூ எதுவுமே இல்லை என் ரசனையின்படி.முளைக் கீரைகளுக்கென தனியாய் வலை பின்னி, சுற்றிலும் வேலி அமைத்து அழகாய் பராமரிப்பாள். எல்லாப் பயிரிலும் ஈசானிய மூலையில் நடப்பட்டது விதைக்கு. மாறிக் கொண்டேயிருக்கும் தோட்டப்பயிர்களில் ஏதேனும் தனித்துத் தெரிந்தால் அது விதைக்கு விடப்பட்டது எனத் தெளியலாம். எனக்கும் இதெல்லாம் பரிச்சயமே.
முருங்கை மரங்களில் எல்லா வகையும் இருந்தது. சித்தப்பாவின் ஆசையில் தென்னைமரங்களும் ஒன்றிரண்டு கொய்யா மரங்களும் தோட்டம் நிறைத்தன. விவசாயக் கூலியாய் இருந்தவளுக்கு தம் மக்கள் சம்பாதித்துத் தந்த அந்தத் தோட்டமே சொர்க்கம். பொன்னாங்கனி கீரையும் உண்டு. சீமைப் பொன்னாங்கனி,நாட்டுப் பொன்னாங்கனி என்று இரண்டு வகை இருக்கும். ஒரு மண்டலம் நாட்டுப் பொன்னாங்கனி கீரையை பருப்போடு சேர்த்து உண்டுவர ‘பொன்னால் ஆன கனி’ போல ஆகும் உடல் என்று வலம்புரி ஜான் சொன்னதைக் கேட்டு அப்பத்தாவை கிள்ளிக் கேட்டேன்,
’தங்கமாவா இருக்க அப்பத்தா?’
’வியாதியில்லாத உடம்பு தங்கம் தானடி’ சடாலென பதில் வந்தது.
ஆம். 92 வயது வரை வாழ்ந்தவளுக்கு வைத்தியமென்று பெரிதாய் எதுவும் செய்தோமா? நினைவேயில்லை.
பெரியமனுசியான ஒரு தினத்தில் அம்மாவின் வேலைப்பளு காரணமாக அப்பத்தாக்களின் பராமரிப்பில், கிராமத்தில் விடப்பட்டேன். சித்தி சித்தப்பாக்கள்,அண்ணியும் அண்ணன்களும் இருந்தாலும் அப்பத்தாக்களின் பங்களிப்பு எத்தனை எத்தனை? சிறுவாடு காசு மொத்தமும் எனக்கெனவே செலவு செய்தாள் அப்பத்தா. சில ஆயிரங்கள் தானென்றாலும் அதைச் சேர்க்க எத்தனை நாள் ஆகியிருக்கும்.உளுந்தங்களியும் தினமொரு பலகாரமும் நல்லெண்ணெய் முட்டையென ஒன்றரை மாதம் ராஜவாழ்க்கை வாழச்செய்தாள். பிறருக்கு மருந்துக்கும் செலவு செய்யாதவள் எனக்கென அத்தனை செய்ததின் பிண்ணனி சேர்த்து வைத்தப் பாசமென்று தெளிவாய் புரிந்தது. சிறுவாட்டுக் காசத்தனையும் எனக்கென செலவு செய்வதில் அத்தனை பெருமிதப்படும் அப்பத்தா படுக்கையில் இருக்கும் போது சொல்லிப் போனாள்,
‘படிப்பும் சம்பாத்தியமும் முக்கியமாத்தா! என்ன மாதிரி காட்டுலயும் மேட்டுலயும் கஷ்டப்படாத! பொம்பளன்னா ஒரு கவுரதை வேணும். ஆருக்கிட்டயும் கையேந்தி நிக்காத கவுரத. நெனவுல வச்சிப் பொழச்சிக்க கண்ணு!’
அவளில்லாத புஞ்சையும் காட்டுச் செடி படர்ந்த தோட்டமும் பார்த்தேன் போனமுறை ஊருக்கு போனபோது. மண்டியிட்டு அழுதுவிட்டு வந்தேன். பிறகு என்ன தான் செய்ய முடியும் ஆளில்லாத அவ்வூரில்?

அழகி புராணம்,
நினைவுகள்
Tuesday, April 2, 2013
கோடை விடுமுறை
பள்ளி நாட்களில் எனக்கு மிகவும் பிடித்த நாட்கள்.சுட்டெறிக்கும் இந்தப் பங்குனி வெயிலும் வரவிருக்கும் அக்கினி நட்சத்திரமும் தீயாய் எரித்தாலும் உள்ளுக்குள் குளிர்விக்கிற ஈரமான நினைவுகள் இந்த கோடை விடுமுறைக்குண்டு.அம்மாச்சி, தாத்தாவுடனான அற்புதத் தருணங்கள். விடுமுறைக்கெனக் காத்திருக்கும் கொடிய பள்ளி நாட்கள்.இரண்டு மாத விடுமுறை.அதிலும் பரீட்சைகளின் தலைவலியிலிருந்து விடுபட்ட அந்தத் தருணத்தில் அயர்வைக் களையும் புத்துணர்வு. விடுமுறை எத்தனை தினங்கள் என்பதைக்காட்டிலும் ஆச்சி தாத்தாவை எப்போது பார்ப்போமென்றிருக்கும் அந்தப் பரபரப்பு.அவர்களும் எங்கள் பள்ளி விடுமுறைக்காகவே காத்துக் கிடப்பார்கள். அத்தனை பாசம், ஏக்கம், தனிமை. அதைப் போக்க அவர்கள் எங்கள் வரவை எதிர்பார்த்திருப்பார்கள். இவர்களைப் போல் ஒரு தாத்தாவோ, அம்மாச்சியோ,அப்பத்தாவோ,அய்யாவோ நிச்சயம் எல்லா கிராமத்திலும் இப்படி வயதான ஜீவன்கள் கோடைக்காய் காத்துக்கிடக்கும். பேரன் பேத்திகளின் பாசமழையில் நனைவதற்கு. எத்தனை பேரின் காத்திருத்தல் நிறைவேறுகிறது?
சுற்றிலும் வயல்கள். நடுவில் மிகப் பெரியதொரு வட்டக்கிணறு.கிணற்று மேட்டில் போடப்பட்டிருக்கும் குடிசை வீட்டில் தங்கி இளநீர்,நுங்கு,ஆற்று மீன் குழம்பு,தட்டைப்பயறு அவியல், தும்பைப்பூவோடு பச்சைகடலை சேர்த்தவித்து கருப்பட்டிக் காப்பியோடு மாலைப் போதுகளென அந்தச் சூழலை அந்த வாழ்வை அப்படியே அச்சுப் பிசகாமல் மனதுக்குள் பொதிந்து வைத்திருக்கிறேன்.பம்பு செட் மூலம் விவசாயம். அத்தனை பெரிய கிணறு, எனக்கு எப்போதும் அது அதிசயம் தான்.பருத்தி,நெல்,தென்னை,எள் போன்றவை முக்கியமாகப் பயிரிடப்படும். உபபயிர்களாக உளுந்து போன்றவற்றைச் சுழற்சி முறையிலும் விவசாயம் செய்வார் அம்மாச்சி. பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த தாத்தாவுக்கு வயல் என்றால் உயிர். தனது ஓய்வுக்குப் பின் சொந்த ஊரில் நிலம் வாங்கி, அதன் பிடிமானத்தில் தன் வயோதிகத்தைக் கழித்திட நினைக்கும் பெரும்பான்மை அரசு ஊழியர்களில் அவர் கனவு ஒரளவேனும் நிறைவேறியதெனலாம். மூத்தவளாக பிறந்த காரணத்தால் பெரும்பாலும் நான் மட்டும் தான் அவர்கள் அன்பில் முழுதுமாய் ஊறித் திளைத்திருக்கிறேன். அழும் போது கூட அம்மாவுக்குப் பதில் ஆச்சி என்று அரற்றுவேனாம். அத்தனை பிடிக்கும் ஆச்சி தாத்தா,அய்யா, அப்பத்தா என்று என் கண் முன்னே வாழ்ந்த/வாழும் தெய்வங்களை.
அம்மாச்சி தவிர யாரும் உயிருடன் இப்போது இல்லை. அவரும் குடும்ப அரசியலில் என்னிடமிருந்து பிரிக்கப்பட்டார் என்பது வருத்தம் கலந்த சேதி. இருந்துவிட்டுப் போகட்டும் இதோ பாசம் கசியும் என் நினைவுகளை என்ன செய்ய முடியும் அவர்களால்? தன்மானத்தை விடாத குற்றத்துக்குப் பதிலாய் பாசமிகு உறவுகளிடமிருந்து வலுவில் பிரிக்கப்பட்டேன். காழ்ப்பில் தனிமைப்படுத்தினாலென்ன என் நினைவுகள் உயிர்வாழும். வன்மம் மிதக்கும் ஆணாதிக்கவாதிகளும் பொய்மை பரப்பித்திரியும் சில குயுக்தி மனப்பான்மையுள்ளோரும் நடத்தும் குடும்ப அரசியலில் ஒண்டிப் பிழைப்பதில்லையாதலால் நினைவுகளில் மட்டும் ஆராதித்துக் கொள்கிறேன் தாத்தாவின் மறைவுக்குப் பின் தனித்து வாழும் அம்மாச்சியையும். .இதோ இந்தத் திருவிழாவுக்கும் அந்த ஜீவன் என்னை எதிர்பார்த்து எவருமறியாமல் கண்ணீர் சிந்தியிருக்கும்.மாநகரத்தின் கான்கிரீட் காட்டுக்குள், மரம் வளர்க்கும் ஆசையில் போன்சாய் வளர்க்கும் நான் அதே கிராமத்து மனுசி தான். ஈரத்துக்குக் குறைவில்லை ஆனாலும் பாறையென பிதற்றித் திரிகிறேன். எழுத்துக்களை மனதுக்கு நெருக்கமாய் வைப்பதனால் எதையும் மறைத்து விட முடிவதில்லை.போலியாய் எழுதி, அதைச் சிலாகித்துப் பேசி, எழுதுவதில் கிடைக்கும் மன நிறைவை இழக்க விரும்பவில்லையாதலால் எப்போதும் போல் இப்போதும்...கவனிக்க நான் யாரையும் குறிப்பிடவில்லை.
விடுமுறை தினங்களென்றாலே நினைவுக்கு வருபவள், வாசுகி, என் வயதுத் தோழி. பல்லாங்குழி, தாயம்,கிளித்தட்டு இதோடு நில்லாமல் நீச்சலும் கற்றுத் தந்தவள்.
’ஏட்டி உனக்கு நீச்சத் தெரியுமா?’பேசிக்கொண்டே கிணற்றைச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். கூடவே என்னோடு நடந்து வந்தவள் திடுமெனக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டாள். 12-15 அடி மேலிருந்து கிணற்றுக்குள் விழுந்தேன். திகிலோடு பயமும் சேரவே அலற ஆரம்பித்தேன். வயலில் நிறையப் பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். செத்துவிடமாட்டேன் என்கிற நம்பிக்கை இருந்தது. என் சத்தம் கேட்கணுமே.முடிந்தவரை சத்தமாய் கத்தினேன். ஒரு முகம் கூட எட்டிப் பார்க்கவில்லை. முழுதாய் தரைதொட்டு மேலெழும்பினேன். வட்டக்கிணற்றில் படிக்கல்லுக்கு மறுகோடியிலிருந்தேன். அதிலிருந்து சரியாய் பத்து எட்டில் படிகள் இருந்தன. தெளியுமுன், இரண்டாம் முறை நீருக்குள் மூழ்கினேன். தரை தொட இன்னும் சில அடிகள் என்றிருக்கையில் கையால் துழாவி நீரை விலக்க ஆரம்பித்தேன். வசப்பட்டது நீச்சல்.படிகளைத் தொடும் நேரத்தில் மேல்ச்சட்டையில் முடிந்து வைத்திருந்த பச்சைக்கடலைகளை மென்றவாறு, ‘தட்சணை குடுக்கணும்ட்டி’ என்று சொல்லிச் சிரித்தாள் தெத்துப் பல்லழகி. பாதிப் படிக்கட்டு ஏறி வந்ததும் கையைக் கோர்த்துக் கொண்டு கிணற்றில் குதித்தோம். பயத்தைக் களைந்திருந்தேன். தாத்தாவும் ஆச்சியும் தான் பதறிப் போய்விட்டார்கள்.
‘தெரியாதுப்பா’
‘எனக்கு எல்லா நீச்சலும் தெரியும்டி’
‘நெசமாலுமா?’
‘வீரகாளி சத்தியமா! கத்துக்கணுமா?’
‘ஓ! ஆனா பயமாயிருக்கு’
’தனியா தண்ணில வுழுந்தா நீச்சலடிச்சு கரையேறிடுவேல்லட்டி?’மூன்று நாள் பயிற்சிக்குப்பின் அவள் கேட்ட கேள்விக்கு, இப்போது வாழ்க்கையில் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீந்துகின்ற இடம் தான் கிணத்துக்குப் பதில் கடலாய் இருக்கிறது.
அந்த விடுமுறையில் பதிமூன்று நாட்கள் வயலில் இருந்தோம். இரவில் தாத்தாவிடம் கேள்விகள் கேட்டபடி பதிலுக்குக் காத்திராமல் தூங்கிப் போவேன். காலையில் அவர் முந்தின நாள் கேள்வியையும் பதிலையும் தயாராய் வைத்திருப்பார். அவரிடம் இருந்ததெல்லாம் அனுபவக் கதைகள் தாம். தான் பட்ட வடுக்கள்,அவமானங்கள்,வெற்றிகள்,சாதனை மனிதர்கள் இப்படி சொல்லிக்கொண்டே போவார். புரிந்ததா அந்த வயதில் தெரியவில்லை இருந்தும் என்னிடம் சொல்லித் தீர நிறைய கதைகள் இருந்தன அவரிடம்.பதியவைத்துச் செல்லவேண்டுமென்ற தாகமாய் இருக்கலாம். தலைகோதியபடி கதைசொல்லி தூங்க வைக்கும் ஆச்சியும் அப்படியே. ஏழு கழுதை வயசுக்கும் நான் அவளின் குழந்தையாகவே பாவிக்கப்படுவேன். கிட்டத் தட்ட பத்தாம் வகுப்புக்கு முன் எல்லா கோடைவிடுமுறையும் ஆச்சி வீட்டில் கழித்திருக்கிறேன்.
இரண்டாம் வருடம் கல்லூரி படிக்கும் போது வாசுகி இறந்து போனாள். கால் தடுக்கி கிணற்றில் விழுந்ததாய் சொன்னார்கள். தற்கொலை என்றார்கள் சிலர். கொலை செய்து கிணற்றில் போடப்பட்டாள் என்றனர் சிலர். அவளே இல்லை என்கிற போது அவள் இறப்பினை ஆராய வலிக்கிறது. உயிரோடிருந்து கிணற்றில் விழுந்திருதால் நிச்சயம் அவள் நீந்தி வந்திருப்பாள் என்று அவள் நினைவு வரும் போது சொல்லிக் கொள்வேன். அப்பா இல்லாமல் மேல்சாதி கனவான்களின் வீட்டின் மாட்டுக் கொட்டிலில் வேலை செய்யும் சாவித்திரியக்காவும்(அவள் அம்மா) அவள் இறப்புக்கு நியாயம் கேட்டு வழக்கேதும் தொடுக்கவில்லை. புதைந்து போனது ஒரு ஏழையின் மரணம். உண்மை உறகாதென்பவர்களைச் செவிட்டில் அறைவேன். உறங்கும் உண்மைக்கும் உலவும் பொய்மைக்கும் காவல் புரிபவர்கள் பணமும் சாதியும் வைத்துக் கொண்டு கொளுத்துத் தான் திரிகிறார்கள். இதை இங்கேயே
விட்டு விடுவோம். இல்லையெனில் திசைமாறிப் பயணிக்கத் துவங்குவேன்.
பள்ளிக்குச் செல்ல இப்போதும் ஆசையாய் தான் இருக்கிறது இந்த விடுமுறைக்காகவேணும். கிறங்கடிக்கும் வெயிலில் கிளித்தட்டு சுற்றவும், கல்லாங்காய் ஆடவும், கிணற்றுக் கயிறெடுத்து புது ஊஞ்சல் கட்டவும் இந்தக் கோடை விடுமுறை முழுதும் ஆச்சியோடிருக்கவும், பஞ்சதந்திரக் கதை கேட்கவும், சங்கே முழங்கென பாடியாடவும்...
கனவுக்கென்ன எல்லைகளற்று விரிகிறது.
சடுதியில் மீண்டெழும் என் ஆறாம் அறிவு உறங்கிப் போகட்டும் நான் ஓரறிவோடே காலத்தின் அந்தப் பக்கத்திலேயே மரமாய் நின்று போக ஆசைப்படுகிறேன். எப்போதும் பதில் சொல்லாது சிலையாய்/படமாய் சிரிக்கின்ற கடவுளை நானும் சிரித்தபடிக் கடக்கிறேன். என்னைப் போல் சாத்தான்களுக்கு கடவுள் பதில் சொல்வதில்லையாம். நேர்மையானவர்களுக்கு அவர் எப்போதும் பதில் சொல்வதில்லை பதிலாய் இந்தப் பெயரோடு உலவும் தைரியத்தைப் பரிசளிக்கிறார்.
அடக்கம்::::
நினைவுகள்
Monday, November 12, 2012
தளும்பும் நினைவுகளும் தீபாவளி வாழ்த்துகளும்
தீபாவளி நேரம்.
ஏனோ தளும்பிக் கொண்டிருக்கிறது நினைவுகள்...
நேசமித்திரனின் Google Plus-ல் பகிரப்பட்டிருந்தப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் உடைப்பெடுத்தது கண்ணீர்.காரணம் இந்த வரிகள்,
மெல்ல மெல்லச் சுழன்றது நினைவுகள் இந்த வரிகளின் வழியாக....
ஒரு பெரிய வாயகன்ற மண் பாத்திரம். மண்பானைக்கும் மீன்குழம்புச் சட்டிக்கும் இடைப்பட்ட வடிவிலிருக்குமது. இப்போது அது போல் கிடைப்பதில்லை. மூன்று படிப் பால் பிடிக்கும்.அது போல் இரண்டு பெரிய பாத்திரங்கள்.வீட்டுத் தேவைகள் போக மீதிப்பாலைச் சுண்டக் காய்ச்சி, ஆறவிட்டு, வேடு கட்டி, உறைக் குத்தி,சாமியறைக்குள் வைக்கும் வரை அப்பத்தாவின் முந்தானையோடு நானும் தொடர்ந்தபடியிருப்பேன். அந்த நேரங்களில் கருமமே கண்ணாய் அவள் சுழல்வதும் , மண்பாத்திரங்களைப் பதவிசாய் அவள் கையாளும் விதமும், ஊடாகச் சொல்லிக் கொண்டே போகும் நல்லதங்காள் கதையும்.. இதோ இப்போதும் நீர்க்கட்டுகிறது கண்ணில்.
“உம்பேரச் சொல்ல நானாச்சும் இருகேம்மா!” கெஞ்சும் கடைசிப் பிள்ளையை ஆரத்தழுவிக் கிணற்றில் குப்புறத் தள்ளும் நல்லதங்காள் என்னை விசும்பச் செய்வாள்.
“ஆத்தி! இப்டியாடி இருக்கது நெஞ்சொரமில்லாம? அழப்படாது! நீதியென்னா, கெட்டாலும் தமையன் வீடு செல்லப்படாது. அதத்தேன் மனசுல வாங்கிக்கனும். கோழயாட்டமா அழுவாக?” சேலைத் தலைப்பில் முகம் துடைத்துத் தூங்குவதற்கு அனுப்பி வைப்பாள்.
குசேலனும், கட்டபொம்முவும் அப்பத்தாவின் சொல்வழி அறிந்தவர் தாம். பின்பொருநாள் குசேலர் - சுதாமா எனவும் கட்டபொம்மு - சிவாஜியெனவும் பகுத்தறிந்து(!) அதில் நடித்தவர்களைப் பழைய கதையில் நிரப்பிக் கொண்டேன்.
வருடத்தில் எல்லா நாளும் ஏதாவது இரண்டு மாட்டின் சீம்பால் கிடைத்துக் கொண்டே இருக்கும்.நான்கு இல்லை மூன்று பசு மாடுகள் கன்று ஈன்று, பால் தந்தபடியிருக்கும்.கறவைக்கென வளர்க்கப்பட்ட கலப்பினப் பசுக்கள் எம்மிடம் இருந்ததாய் நினைவில் இல்லை.வெளியில் பால் விற்பதில்லை. எங்கள் மொத்தக் குடும்பத்திறகானத் தேவைக்கு மட்டுமே. அந்தப் பெரிய தொழுவத்தில் அடைக்க இடம் போதாது வைக்கோல் படல் சுற்றிலும் கல்தூண்களோடு ஆவினங்கள் பிணைக்கப்பட்டிருக்கும்.அட! எத்தனை அற்புதமானது அந்த வாழ்க்கை.
காலை விடிந்ததும், முற்றத்துத் தூணில் சாய்ந்தபடி,சிரத்தையாய் மோர்க் கடைவாள். மத்தோடு தயிரும் தண்ணீரும் கலந்து கைகளால் முன்னுக்குப் பின் சிலுப்பித் தயிருக்கு ’மோர்’ என்னும் மற்றோர் வடிவம் தருவாள்.திரண்டு வரும் வெண்ணெய்(’மிதப்பு’ என்பது அப்பத்தாவின் சொலவடை) தண்ணீரில் போடப்பட்டு, பின்பு மற்றோர் மண்சாடியில் சேமிக்கப்படும். எனக்கு நினைவு தெரிந்த நாள் வரை, மதிய நேரங்களில் யார் வீட்டுக்கு வந்தாலும் மோர் தந்து உபசரிப்பது எங்கள் வழக்கமாயிருந்தது. வீட்டுக்குப் போக மீதி களத்து மேட்டுக்குப் போகும்.அவள் புழக்கம் அவள் சார்ந்த மிக நுட்பமான வேலைகள் எல்லாமும் மண் பாத்திரங்களின் ஆளுமையில் இருந்தது.
அப்பத்தா இல்லாத வீடும் துப்புறவாய் ஒழிக்கப்பட்ட மண் பாத்திரங்களும்,ஏதோ எனக்கு வலிக்கத் தான் செய்கிறது. நானும் குழந்தையல்ல... குமரிப்பருவம் தாண்டி விட்டேன். ஆனாலும் ஆனாலும்.... குழந்தையென ஆவதற்கு எத்தனிக்கும் எல்லா நேரங்களிலும் அந்தக் கைகளின் வாஞ்சையோடு முகம் துடைக்கும் முந்தானையும் வேண்டுமெனக்கு... பாசத்துக்கு ஏங்கித் தான் போகிறேன்.
பீங்கான் தட்டுகளோடும்,தம்ளர்களோடும் புழங்கினாலும் உடைந்து போவது மண்பாத்திர மட்டுமென்பதை நினைவில் கொண்டு இழிவாய் பார்க்கும் நாகரிகம் அம்மாவுக்கும் சித்திக்கும் இருந்தது. ஆகவே, புரட்சி செய்யப்பட்ட சமையலறைக்குள் பால் காய்ச்சுவது தவிர வேறெதற்கும் அப்பத்தா பங்கெடுப்பதேயில்லை.
ஒரு வாரம் சேர்த்து வைத்த மிதப்பெல்லாம்,சனிக்கிழமையில் நெய்யாகக் காய்ச்சி விடுவாள். வரமிளகாய்,முருங்கைகீரை,உப்புக்கல், கைப்பிடி கறிவேப்பிலை எனச் சேர்த்து காய்ச்சும் அந்த நெய்யின் மணம் அலாதியானது. மீந்து கிடக்கும் மொரு மொரு முருங்கைக்கீரைக்கு அத்தனை கிராக்கியிருக்கும்.
”இப்ப முடிஞ்சிருமா? எவ்ளோ நேராகும்? சீக்ரம் அப்பத்தா. எனக்குத் தான் முதல்ல“ வாயூறப் பரபரக்கும் அந்தச் சிறுமியும்,
“உனக்குத் தாண்டி! சித்த பொறு,நெய்சாதம் உருட்டித் தாரேன் “ அடக்கி வைக்கும் அழகியிடமும் பொக்கிசமாய் எத்தனையோ இருந்தது.
இதோ இப்போது நான் அவளின் வழிகாட்டுதலினூடே தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உருகிவரும் நெய்யில் ஏதோ குறைகிறது.
முன்னெல்லாம் வீட்டு நெய்யில் தீபாவளிப் பலகாரம் செய்வது வழக்கமிருந்தது. பின்பு அதும் அரிதாகிப் போனது. அம்மாவின் Diet Conscious காரணமாயிருக்கலாம்.
பண்டிகைக்கு முதல் நாள்,முற்றத்தில் அடுப்பு மூட்டி எல்லாப் பேரன் பேத்திகளும் புடைசூழ முறுக்குச் சுடுவதில் ஆரம்பிக்கும் தீபாவளி. முறுக்குத் தனி, தேன்குழல் தனி. தேன்குழலில் தேங்க்காய்பால் சேர்ப்பாங்கன்னு நெனைக்கிறேன். சீப்புச் சீடைக்கும் இதே பக்குவம் தானென்று நினைவு. மரத்தாலான முறுக்கு பிழியும் உரல். நான் செய்றேன் நான் செய்றேன் என்றென் குரல் பெரும்பாலும் அம்மாவின் ஒரு சாத்தில் அடங்கிப் போகும். பச்சை முறுக்கு சாமிக்கு வச்சி கும்பிட்டுட்டு,
‘கயலெங்க...?’ என்று அப்பத்தா கேட்கும் போது அடியெல்லாம் மறந்து அவள் காலைக் கட்டிக் கொண்டிருப்பேன்.
மணவோளம்(இந்த எழுத்துக் கோர்வை சரியா தெரில ஆனா இப்டித் தான் எனக்கு எழுத வருது. எல்லாம் செவிவழிக் கல்வி. உண்மையான வடிவம் கிடைக்கப் பெறல.தெரிஞ்சவங்க தவறிருந்தா திருத்துக்கப்பா)
அப்பத்தாவின் ஆளுமை ஜொலிக்கும் இதில். நாள்ப்பட வைத்து சாப்பிடலாம்.தேங்காய்ப் பல்லும் பொட்டுக்கடலையும் வெல்லப்பாகில் ஊறிய முறுக்குமாக... செமயா இருக்கும். இப்பல்லாம் அம்மா கடையில வாங்கிடறாங்க எனக்குப் பிடிக்குமென்பதற்காக மறக்கப்படாமலிருப்பது சிறப்பு.
வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம்,அதிரசம்,வடை(ஆமவடை,உளுந்தவடை இரண்டும்), பால் பணியாரம்,மசாலா சுய்யம்(சுழியன் என்பது வேர்ச் சொல் என்றே நினைவு), இனிப்புச் சுய்யம் - இது தான் எல்லாத் தீபாவளிக்கும் எங்கள் வீட்டுப் பட்டியல். ஒற்றைப்படையில் பலகாரக் கணக்கு வரவேண்டும் என்பதற்காக இதில் ஒன்று குறைத்தோ, பஜ்ஜியை சேர்த்தோ நேர் செய்வாள் அப்பத்தா. நீளும் வேலைகளுக்கு அம்மாவிடமும் சித்தியிடமும் முணுமுணுப்பு. பார்க்க நல்லாயிருக்கும். சச்சரவில்லாத குடும்பம் என்னங்க குடும்பம்.அப்புறமென்ன ஒன்றுகூடல்?
எங்கள் வீட்டில் சாமிப்படங்கள் இருக்காது. முன்னோர்கள் வழிபாடே பிரதானம். அப்பாவுக்கும் இதே ஏற்பு.பெட்டகத்தில் சேலையும் இன்ன பிறவும் இருக்கும். தீபாவளி அன்னிக்கு காசு போடுவோம் அந்த ஓலைப் பெட்டிக்குள்.எண்ணெய் தேய்த்து குளித்து அய்யா அப்பத்தா காலில் விழுந்து விபூதி வாங்கி, புத்தாடையுடுத்தி ஸ்ரீதர் மாமாவின் கேமராவுக்குப் போஸ் குடுத்து, வளையலும் பாசிமணியும் நிறத்திற்குச் சரிபார்த்து... பசிக்கும் நேரத்தில் கால்கள்
தடதடவெனச் சாமியறைப் பக்கம் போகும்.பெரிய இலையில் வகைவகையாய்ப் பரப்பப்பட்ட பலகாரங்களுடன்,சாம்பிராணிப் புகையோடும் நெய்விளக்கோடும், எங்கள் வீட்டுச் சாமி அருள்பாலித்துக் கொண்டிருக்கும்.
பலகாரத்தின் சுவையை விடவும் பட்டாசே கவனத்தை ஈர்க்கும்.சில பல ஆணாதிக்கவாதிகள் உள்ள குடும்பத்தில், பொட்டு வெடியும் பாம்பு மாத்திரையும் என் பங்குக்கு வரும். அழுது அடம்பிடித்தாலும் சீனி வெடி(ஊசிப்பட்டாசு) தவிரப் பெரியவெடி எதுவும் கிடைக்காது.உண்ட பலகாரம் செரிக்கப் பனைவெல்லம் தருவார் அய்யா.
மதியம் உறவினர் வருகையோடும் அசைவ உணவோடும் தீபாவளிக்காசு என்பதாகப் பை நிறையும்.அத்தைகள்,மாமாக்கள்,அண்ணன்கள்,புதுமணத்தம்பதிகள்,அப்பாவின் நண்பர்களென வீடு கலகலக்கும்.ஒன்றுகூடல் இனிமையாய்ப் போகும்.
சந்தனமும் வெற்றிலைத் தாம்பூலமும் கையிலேந்திப் புத்தாடை மினுக்க,ஓட்டைப் பல்லோடும்,உச்சிக் குடுமியோடும் அதோ அந்தப் பெரிய வீட்டில் அழகியின் கண்டாங்கிச் சேலைத் தலைப்பை பற்றியபடி கைக்குள்ளும் காலுக்குள்ளும் ஓடித் திரியும் சிறுமியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அழகியின் பாமரத்தனமிகுந்த அன்பும் அவள் நேசம் படர்ந்த அந்தச் சிறுமியும் பழைய நிழற்படம் போல் அப்படியே இருக்கட்டும்.ரசமிழந்த கண்ணாடிக்குள் அசையும் பிம்பமென என் பால்ய நாட்கள், நான் இளவரசியாயிருந்த என் சிற்றரசின் மேதகு பெருமைகள்... முழுக்க முழுக்க அன்பாலனவை.
பெரியவர்கள் இல்லாத இந்தப் பண்டிகைகள் எனக்கு அத்தனை சுவை தருவதேயில்லை.இயல்பில் நானும் அப்பத்தாவைப் போலத் தான் வாழ ஆசைப்படுகிறேன். எல்லாருக்கும் உகந்தவளாய் - பாந்தமும் பாசமும் ஒருங்கே சேர்ந்து- எவர் குறையும் காணாது நிறையோடே அளவளாவி, அன்போடு அரவணைத்து,குழைவாய்,நெகிழ்வாய்... வசப்பட எனக்கும் வயதாகவேணுமோ? :)
தளும்பும் நினைவுகளை முத்தாய்க் கோர்க்கும் எல்லா நிமிடங்களிலும் கண்களைக் குளமாக்குகிற ஏதோவொன்று இருக்கத்தான் செய்கிறது. நம்மொடு கூடவே வாழ்ந்து சிறப்பித்துச் சென்ற முன்னோர் அனைவருக்கும் நம் வணக்கங்களைக் காணிக்கையாக்குவோமாக!
தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பர்காள்! வாழ்க வளமுடன்!

”இதோ
இப்படி நீளும்
ஒரு தெருவின் இரண்டாம்
திருப்பத்தில் மூன்றாம் வீடு என்னுடையது.....”

Saturday, April 21, 2012
முத்தக்கா
மதிய நேரங்களில் புழக்கடை திண்ணையில் சீட்டி கலந்த சினிமாப்பாட்டு வாசனையோடு, உளுந்தும் அரிசியும் வாயில் பாதியும் ஆட்டுக்கல்லில் மீதியுமாய் அரைபட்டுக் கொண்டிருக்கும்.
இன்னாருக்கு இன்ன வேலை. தப்பாது நேர்த்தியாக செய்து முடிக்க வேணும். அப்பத்தாவின் வீட்டு நிர்வாகத்தின் எழுதப்படாத சட்டம்.ஆட்டுக்கல் சாம்ராஜ்யம் பெரும்பாலும் முத்தக்காவினுடையது.
”ஒரே நாள் உனை நான்..ம்ம்ம்ஹீம்ஹீம்”
”பார்த்த ஞாபகம் இல்லையோ...ம்ம்ம்ம்ம்...பருவ நாடகம் ...”
சுருதி சேராமல் ஆனா பாட்டு வரி பிசகாமல் ஒரு சங்கீதக் கச்சேரி. முத்தக்கா அதில் மகா கெட்டிக்காரி. இழுத்துச் சொருகிய பாவாடையும் அவள் தலை முடி போட்டிருக்கும் விதத்திலும் தெரியும் அவள் எத்தனை உழைப்பாளி என்று. ஒரு பெரிய ஆட்டுக்கல். மரப்பிடி கொண்ட குழவிக்கல். அசைக்க முடியாது நம்மால். அதைக் அப்படியே காற்றில் கை துழாவுவது போல் அசாதாரணமாய் சுற்றிக் கொண்டிருப்பாள்.
பாட்டுக் கட்டினால் அது ஒரு வேகம். ஊர்ப் புரணி பேசினால் அது ஒரு வேகம். அம்மாவோ சித்தியோ திட்டி விட்டால் இன்னொரு வேகம். ஒளியும் ஒலியும் பார்க்க போக வேணி வந்தால் அது ஒரு வேகம். இட்லிக்கு உளுந்து தனி, அரிசி தனி ஆட்ட வேண்டும். தோசைக்கு இரண்டும் சேர்ந்து. இடைப்பலகாரத்துக்கு தனியொரு பக்குவம்.எல்லாம்
அத்துப்படி. எனக்கு அவளைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். முத்தக்கா எத்தனை பலசாலி.அப்படியே பரபரவென ஒரு பம்பரத்துக்கு கால் முளைத்தாற் போல.அத்தனை சுறுசுறுப்பு. ஏதோ ஒரு பாட்டை எப்போதும் முனுமுனுத்துக்கொண்டிருப்பாள். சிரித்த முகமும் சீதேவியும். பார்த்ததுமே நமக்கும் அவள் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். முகமோ நிறமோ எடுப்பில்லை என்றாலும் வனப்பின் மிகுதிக்கு குறைவே இருக்காது. செதுக்கி வைத்த கருஞ்சிலை போல் இருப்பாள்.
வீட்டு வேலை தொடங்கி தொழுவம் வரைக்கும் அவளின் பங்களிப்பு இருக்கும். சமையலறைக்குள்ளும் அப்படியே... அவள் கைப்பக்குவம் எவருக்கும் வராது.
”ஏ முத்து..”
“அடியே முத்து...”
“முத்தூ...”
இப்படியான ஏதோ ஒரு தொனியில் முத்தக்கா எப்போதும் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருப்பாள்.
“இங்க வா.இந்த லெட்டரை முத்தப்பண்ணனங்கிட்ட குடுத்துட்டு ஓடியாந்துரு. நடுவில ஆருக்கிட்டயும் கொடுத்துறப்டாது. சரியா?”
இப்படி ஆரம்பித்த தகவல் பரிமாற்றத்தில் அன்றைக்கொரு சிக்கல். சித்தப்பாவின் கைகளில் அகப்பட்டுக் கொண்டது கடிதம். ஆறாம் வகுப்பு வரை அவள் கற்ற கல்வி அன்பே ஆருயிரே அத்தான் என்றெல்லாம் புலம்புவதற்கு போதுமானதாக இருந்தது.ஆனால் அவள் தலையெழுத்துத் தான் சரியேயில்லை.முத்தக்காவுக்கு அப்பா இல்லை. அவள் அண்ணாவும் தங்கையும் சேர்த்து நான்கு பேர் கொண்ட குடும்பம் எங்கள் வீட்டினை அடைக்கலமாக கொண்டிருந்தது.அவள் அம்மாவோ அத்தனை சுதாரிப்பில்லை. அண்ணாவும் தங்கையும் படிக்க தன்னை உருக்கிக்
கொண்டிருந்தாள். அவள் எனக்கு அத்தைமகள் உறவு.அந்த செக்கு மாட்டின் மேலும் யாரோ காதலெனும் கல்லெறிந்தார்கள்.
அப்பா,அய்யா,பெரியப்பா இப்படி யாருமே ஊரில் இல்லை.கல்லூரியில் படிக்கும் சித்தப்பாவும் என் அண்ணன்மார்களும் இந்த வழக்குக்கு நீதிபதிகளாயினர்.பெல்டும் பிரம்புகளும் அவளுடலை நன்றாய் பதம் பார்த்தன. பூட்டப்பட்டிருந்த பந்திக்கட்டு கீழறையில் ”அய்யோ அம்மா” என்ற கொடூரமான சத்தம் காதுகளின் வழி இதயத்தை கிழித்துக் கொண்டிருந்தது.வீட்டுப் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாய் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தார்கள். செய்வதறியாது அழுது கொண்டிருந்தோம் நடக்கும் விபரீதத்தின் வீரியம் தெரியாமல்.
”தம்பி விட்டிருங்க! பாவம் செத்துறப் போவுது” இது அம்மா.
“வேணாம்பா பாவம் பொம்பளப்புள்ள” இது சித்தி.
“வயசு வந்த புள்ளடா!கை நீட்டப்படாது” இது அப்பத்தா.
“கொல்லு மாணிக்கம். கொன்னு போடு! நமக்கு வேண்டாம் அந்தப் பயபுள்ள” இது முத்தக்காவோட அம்மா.
“கொன்னுருங்க மாமா!” இது முத்தக்காவோட அண்ணன்.
பிரம்பு ஒடிஞ்சதோ, கை ஓய்ந்ததோ ... கதவு மெதுவாய் திறந்தது.
வேர்த்து விறுவிறுக்க, கைகளை உதறியபடி சித்தப்பாவும் அண்ணன்களும் ஏதோ சாதித்த பூரிப்பில்... காது கூசுமளவுக்கு வசவுகளை சிந்தியபடி நகர்ந்தார்கள்.
அடுத்து பெண்கள் கூட்டம். நைந்து போன அவளை இன்னும் நோகடித்துக் கொண்டிருந்தது வார்த்தைகளால்...
அப்பா வரும் வரை கிழிந்த நாராய் கிடந்தாள் அந்த காற்றோட்டமில்லாத அறைக்குள். அன்று தொடங்கி நாலு நாட்கள் முத்தக்கா கண்ணில் படவேயில்லை. ”முத்தக்கா எங்கம்மா?”
வாயில் சோற்றோடு மெதுவாய் கேட்டேன். பதிலாய் சப்பென அறை விழுந்தது.
அப்பா வந்தார். சத்தமாய் பேசினார். அய்யாவும் பெரியப்பாவும் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தார்கள். அண்ணகளும் சித்தப்பாவும் ஆக்ரோசமாய் கத்தினார்கள்.
முத்தக்காவின் அம்மா அய்யாவின் காலில் விழுந்து அழுது கொண்டிருந்தார்.
முத்தக்கா முற்றத்து தூணோரம் ஒடிந்து நின்றிருந்தாள்.அழுது வீங்கிய கண்களும் உதடு கிழுந்து வீங்கிய முகமுமாய் பார்த்ததும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.நான் அவளின் ரசிகை. அவள் சுறுசுறுப்பின் - அவள் வழி நுகர்ந்த சினிமா பாடல்கள்-பால் கறக்கும் இலட்சுமி பசு -முற்றத்து மாக்கோலம்- மொட்டை மாடி வற்றலென எனக்கு அவள் செய்கைகள் மீதான பிரமிப்பும் ஈர்ப்பும் அலாதி. என் பசிக்கு சோறூட்டிய கை. தலை பின்னி பூ முடித்த கை. கைகளுக்குள் கை கோர்த்து ராட்டினம் போல சுற்றிக்காட்டுவாள். எனக்கு
தலை கிறுகிறுக்கும் ஆனால் அவள் அசையாம்ல் அப்படியே நிற்பாள். ஆச்சரியமாய் இருக்கும்.இப்போதோ சோர்ந்து போய்க் கிடந்தாள்.
இரவு முழுக்க ஒரே இரைச்சல்.அத்தைகளும் வந்திருந்தார்கள்.தூங்கிப் போனேன்.
மறுநாள் வீடு முழுக்க தேடியும் முத்தக்கா கண்ணில் படவேயில்லை. வெள்ளிக் கிழமை அப்பத்தாவுடன் கோவிலுக்கு போகும் போது பார்த்தேன். முத்தக்கா முத்தப்பண்ணன் வீட்டில் பாத்திரம் தேய்ப்பதை. மூணரை வயதுக்கு சாதியும் காதலும் பெரிதாய் தெரியவில்லை எனக்கு.
”முத்தக்காஆஆ!”
என் பெயரைச் சொல்லியபடி ஓடிவந்தவள் அப்பத்தாவின் சுட்டெரிக்கும் பார்வையில் அப்படியே நின்றுவிட்டாள். கோயில் வந்து விட்டது. முத்தக்கா சின்னதொரு புள்ளியாகிப் போனாள்.
“ம்ம்ம்! கையில அரைக்கிற மாதிரி வருமா மிசினில அரைக்கிறது? கல்லுமாதிரிக் கெடக்கு இட்டிலி... “ அங்கலாய்த்த அப்பத்தா மருந்துக்கும் ’முத்து இருந்தா..’ என்று
சொல்லவில்லை. வம்படியாக மறக்கப்பட்டாள் அவள் காதலின் பெயரால்...
ஈரம் படாமல் எவர் கையும் படாமல் வெறிச்செனக் கிடந்தது ஆட்டுக்கல்.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!