Wednesday, January 16, 2013

வாழ்க்கைச் சக்கரத்தில் நினைவென்னும் உயவுப் பொருள்


மஞ்சு விரட்டு மாடுகள் வளர்ப்பது கிராமத்தின் முக்கியாம்சங்களில் ஒன்று. சிலர் இதை அரசியலாக்கி லாபம் காண்பதும் உண்டு. ’ஏறுதழுவல்’ வீரத்தமிழர் பண்பாடு.விழுப்புண் பெற்ற இளங்காளையர்க்கு மாலைசூட்டுதல் அவர்தம்
வழக்கம்.இலக்கிய காட்சிகள் அழகாக விவரித்துச் சொல்லும்.இதெல்லாம் இருக்கட்டும் இன்று காணும் பொங்கல். எங்க ஊர்ல - மஞ்சு விரட்டுக் களைகட்டும். கிராமத்து வாழ்க்கையைப் போலவே, இது போலான அரிய நிகழ்ச்சிகளையும் ரொம்பவே இழக்கிறேன்.

மஞ்சுவிரட்டுக் குறித்த விசயங்களில் எனக்கும் கொஞ்சம் பரிச்சயமுண்டு. அதற்கான ஆயத்தங்கள் பற்றியும் கொஞ்சம் அறிவுண்டு. பொங்கலுக்கு ஒரு மாதமுன்பே மாட்டின் வலுவிற்கான தயாரிப்புகள் ஆரம்பித்துவிடும் உணவுரீதியாக. மஞ்சுவிரட்டு மாட்டோட மூக்கணாங்கயிற முதல் நாள் தான்  பிரிச்சி எடுப்பாங்க. அப்பத் தான் அதுக்கு அதிக வெறி வரும்ன்னு.
சிவப்புக் கயிறும் சலங்கையும் நெத்திச் சுட்டியும் சந்தனப் பொட்டு மாலை என இன்னிக்கு மட்டும் எல்லா முரட்டுக் காளைகளும் மணக்கோலத்துல... மஞ்சு விரட்டில் மாடுகள் கட்டுமிடம்,தொழுவம் இதெல்லாம் வர்க்க ரீதியானதென்றாலும் நின்று விளையாடும் மாடுகளுக்கு எந்த வர்க்கபேதமும் இல்லை. கட்டவிழ்த்தால் எதிர்போரைத் தாக்கித் தனியிடமேகுவதே குறிக்கோளாயிருக்கும். மேல் பாய்ச்சல், கீழ்பாய்ச்சலென்று பழக்கிய வித்தைகளையெல்லாம் எதோவொரு வீரனிடம் காண்பித்துவிட்டு ரத்தம் வழியும் கொம்புகளோடு மண்மேட்டைக் குத்திக் கிளரும் அடங்காத மாடுகளைப் பார்த்திருக்கிறேன்.
எத்தனை பேர் குடல் சரிய இறந்து போனார்கள்? எத்தனை பேரின் நிலைக் கவலைக்கிடம் இதெல்லாம் காதில் போட்டுக் கொண்டே விருந்தோம்பல் கொஞ்சமும் குறைவின்றி நடந்தபடியிருக்கும்.

கட்டு அவிழப் பெற்ற மாடுகளைத் திருப்பியும் வீடு வந்து சேர்ப்பது தான் பெரிய வேலை.திருப்பியும் அதைக்  கட்டிப்போட பிடி கயிற்றோட இன்னிக்கு முச்சூடும் ஆட்களை எங்கள் பிராந்தியத்தில் பார்க்கலாம்.
எங்கள் வீட்டில் வேலை ரொம்ப மிச்சம், வெல்லம்-தேங்காய்-பச்சரிசி இத வச்சிக்கிட்டுச் சமர்த்தா வந்திருன்னு சொன்னாக் கேட்குமளவுக்கு ஒரு மாடு வளர்த்தேன்.அதை மெல்ல ஏமாற்றிக் கொம்புகளில், முடிச்சிட்ட கயிற்றை மாட்டி விட வேண்டும். பிறகனைத்தும் மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.மிகக் கூராகச் செதுக்கப்பட்டிருக்குமதன் கொம்புகளின் பிரயோகம் எனக்கெதிராய்த் திரும்பினால் மரணம் நிச்சயம்.என்னை விடவும் ’அது’  என்குறித்து மிகக்கவனத்தோடிருக்கும்.யாருக்கும் அடங்காத அந்த முரட்டு உருவத்துக்கு என் அன்பாலேயே வசியம் செய்திருந்தேன்.



மூக்கணாங்கயிறு அழுந்திய ரணம் ரத்தமாய் வடிந்தாலும் என் கட்டளைக்குக்  கீழ்ப்படியும்.வாலையும் துமிலையும் தொடுவது மிகவும் ஆபத்தானது அந்த நேரத்தில்.. அத்தனை ஆக்ரோசமாயிருக்கும். ஆனாலும் என்னை அதன் கழுத்தை நீவி விட அனுமதிக்கும். அப்பாவுக்கு என் தைரியம் பெருமையாயிருக்குமென்பதாலே இந்த விசப்பரீட்சையில் நான் இறங்குவது வழக்கம். மிகவும் கம்பீரமான மாடு.அலங்காரங்கள் செய்தபின் அதன் துள்ளலும் துடிப்பும் பார்ப்பவரை மிரளவைக்கும்.மஞ்சுவிரட்டுக்குத் தோதான காளைப்பருவமதற்கு. அதற்கு மட்டும் பகுத்தறிவிருந்தால் அதன் சக்திக்கு முன் என்னையெல்லாம் மதிக்கவே செய்யாது.நல்லவேளையாக, அது என்னை எஜமானியாகவும் அதை நான் வளர்ப்புப் பிராணியாகவும் மனதார சுவீகரித்திருந்தோம்.
முக்கியமானதொரு விசயம் அதற்குச் சிவப்பென்றாலும் கறுப்பென்றாலும் ஆகாது. அந்தக் காலகட்டத்தில், அவ்விரு நிறங்களிலான ஆடைகளைத் தவிர்க்க எங்களுக்குள்ளான புரிதல் தாண்டிய பாசமொரு காரணம்.எங்களுள் நிலவியது நல்லதொரு நேயமென்றே கொள்ளவேண்டும். என் பெயரைக் கேட்டாலோ என் குரல் கேட்டாலோ அதனிடத்தில் ஒரு மெல்லிய பரபரப்பு தொற்றிக் கொள்வதைக்  கவனித்திருக்கிறேன்.
கல்லூரி முடித்து வீடு வந்தவுடன் அதனோடு பேசா விட்டால் தலை வெடித்துவிடும். என் வளர்ப்பு பிராணிகளில் நாய்கள்,மைனா,கிளி,பூனை,கோழி என எல்லாமும் இருந்திருக்கிறது, ஆனாலும் நான் அதிகம் நேசித்த ஒரு  ஜீவன் அதுவாகத் தானிருக்கும்.
மூன்று வருடங்கள் ’அது’ என்னோடிருந்தது.
வேலைக்கென ஊரை விட்டுச் சென்னை வந்த அடுத்த வருடம், யார் பராமரிப்பதென்ற குடும்ப அரசியலில் அதுவும் இல்லாமல் போனது மாட்டை மிகவும் நேசிக்கும் பெரியப்பாவைப் போல....

‘அது’வும் பெரியப்பாவும் எல்லாப் பொங்கலுக்கும் தவறாமல் நினைவுக்கு வந்து விடுகிறார்கள். ஏனென்று தெரியவில்லை வெற்றிடமொன்று பரவி வலியோடான கனம் பரவுகிறது.

 சொல்ல மறந்து விட்டேன் அதன் பேர் ‘ராமு’.

Saturday, January 12, 2013

நிறப்பிரிகை

எல்லா நட்பும் வெண்ணொளிக்கற்றை
என்னில் பட்டுப் பிரிகிறது 
எழுவகை நிறமாய்...
தன்னந்தனித் தடங்களில் மிளிர்ந்தாலும் 
வேசங்களற்ற மிழற்றலில் மகிழ்ந்தாலும் 
ஆளுமை ஆதரவு அலட்சியமென்று 
அதன் கரங்கள் 
அவ்வப்போது நீண்டு சிறுத்தாலும்
ஏனோ...
நம்பிக்கையுடன் தேடிக் கொண்டிருக்கிறேன்
எந்த வீச்சிலேனும் 
முன்னிருந்த வெள்ளந்தி நிறமதனை...
வளர்ந்தபின் பால்யம் சாத்தியமா 
செவி நிறைக்கும் கேலிகள்! 
ஆம்! தாயெனும் பிச்சி நான்
ஒன்றை பலவாக்கும் வித்தக நோக்கில் 
முதிர்வுக்குத் தள்ளப்பட்ட பால்யம்
குற்றவுணர்ச்சியோடு 
சுயபிரஞ்ஞையற்ற பச்சாதாபம் மனவறை நிறைக்கிறது 
இப்போதெல்லாம் 
முற்றத்தில் 
முப்பட்டகங்களில்லை 
வந்தவை தன்னியல்பு பிறழாமல் இருக்கட்டும்
தோட்டத்தில் அணிவகுக்கும் 
போன்சாய் மரங்களைப் போல்... 
வேர்கள் தொட்டிக்குள் முடங்கினாலும் 
அன்பின் மழை நிதமும் உமை நனைக்கும்!

Friday, January 11, 2013

முன்பொருநாள் இங்கொரு குளமிருந்தது

கோடைப் பொழுதுகளில் 
தாகம் தீர வேண்டி 
பறவைகள் படையுடன் 
வந்து செல்லும்

மக்கிய எச்சங்களில் முளைத்ததொரு  
பெருமரம் நீர்ச்சத்தின் அடையாளமாய்...
பாதைகள் கூட 
உரசாமல் ஒதுங்கிச் சென்றன
குளமிருந்தயிடத்தில்
குடியிருப்புகள்
ஆனாலும் மரத்துக்குண்டான
மரியாதை மட்டும் அப்படியே

விருந்தினர் வருவதும்
கூடமைப்பதும்
குஞ்சுகள் பொரிப்பதுமென
மரத்துக்குண்டான வாழ்வை
அம்மரம் வாழ்ந்து கொண்டிருந்தது

பாதை நெடுஞ்சாலையாவதில்
ஆட்டம் கண்டது ஆயுட்காலம்

பறவைகளுக்காக 

கண்ணீர் வடிக்காதீர்கள்!
இங்கில்லையெனில்
இன்னொரு மரக்கிளையில் 

அமைந்துவிடுமதற்கொரு கூடு..
மரத்துக்கென மன்றாடுங்கள்
வெட்டிச் சாய்க்கப்படும்
இப்பெருமரத்தின் அடிவேரில் தான்
குளத்தின் கடைசித்துளி
பதுங்கியிருக்கிறதென்று 

வெட்டுவதற்கு முன்
யாரேனும் சொல்லுங்கள்!

Monday, January 7, 2013

பொங்கலு வந்திருச்சா?

மாட்டுத் தொழுவத்துக்கு
முன்னால
அடுப்ப மூட்டி 
கோலமிட்ட பானையில் 
புதுநெல்லரிசி பொங்கலிட 

புளிய மர நெழலில் 
ஓலப் பாய் விரிச்சி 
கூடியிருக்கும் சொந்தமெல்லாம் 
வருசத்துப் பேச்சத்தனையும் 
அன்னிக்கே பேசித் தீர்க்கும்

எல்லாருஞ் சேர்ந்து பொங்க வச்சு 
வாழயெலமேல படையலிட்டு 
மம்பட்டி செதுக்கிவிட்ட ’திடீர்’ கம்மாயிக்கு 
கொடத்து தண்ணியூத்தி கரையுடைக்க 
’மறுகா’ போகுதுண்ணு 
கிழக்க விழுந்து கும்புடுவோம் 
பகுத்தறிய அதுவா நேரம்? 

பொங்கலோ பொங்கலுன்னு 
பட்டி சுத்தி வாரயில 
பித்தள வட்டி தட்டி வார 
அய்யாவுக்கும் 
’நாடு செழிக்க நல்ல மழ பெய்ய’வுன்னு 
ஒரத்துச் சொல்லுற பெரியப்பாவுக்கும் 
ஒரே பேரு! 

காதறுத்து திட்டி கழிச்சப்றம் 
துள்ளியாடும் கிடேரிக்கண்ணு 
கரும்பால மால கட்டி 
கதம்பமதுஞ் சுத்தி 
பட்டி தெறக்கயில 
பயந்து மருகிப் போகும்!
வாலத் திருகிவிட்டு 
வெரஞ்சோட பழக்குவாக 
ஆமா! 
எங்க தொழுவுலல்லாம் 
கிடேரிக்கும் காளைக்கும் 
பொதுவிதிதேன் 
நாளுங் கெழமைக்கெல்லாம் 
மொடங்கிக் கெடக்கப்படாது! 

கருத்த கன்னத்துல
மஞ்சத் தடவிப் போற 
மொறமாமன் வீரத்த 
ஓரக்கண்ணால ரசிச்சி 
மொகஞ் செவக்கும் 
அழகி யாரிருக்கா இப்பவல்லாம்?

கூடிக் களிச்சிருந்த 
நாளெல்லாம் கனவாப் போச்சுதுங்க 
பங்காளி சண்டையில 
ஊரே ஒடஞ்சுதுங்க 
பாசத்தால பேசிச் சரிகட்ட 
அங்க கிராமமேயில்லயிங்க 
நகரப் பேய் புகுந்து 
தடயமெல்லாம் அழிஞ்சுதுங்க 

பொங்கலு வந்திருச்சா?
பொங்கலு வந்திருச்சா? 

என்னத்த நாஞ் சொல்ல 
வாழ்ந்து கெட்ட எம்வூட்டுக்கதய 
இந்தா, பாட்டா எறக்கிபுட்டேன் 
புரிஞ்சவுக படிச்சிங்குங்க
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!