Monday, September 30, 2013

ஐயம்

நூற்றாண்டு மரத்திலிருந்து
உதிர்ந்த சருகுகளும்
உரிந்த பட்டைகளும்
மரத்தின் திசுக்களில்
தன்னிருப்பை எழுதி வந்திருக்குமோ
என்னவோ!
வெட்டப்பட்டக் கிளையின் வேதனையில்
பக்கக் கிளை வளருமே தவிர
அப்பாகம் துளிர்ப்பதில்லை காண்!
உடைபட்டக் கிளை பதித்து
அங்கோர் மரம் வளர்ந்ததுவும் காண்!
ஒளிர்வும் பொலிவும்
உற்றுநோக்கலும்
கற்றுத் தேர்தலும் வேர்பிடித்தலில் இருக்கிறது
தசை பெருக்கும்
தாவர சுழற்சியுள்
வெயில் மழை காற்று
என்பனவாகிய காலத்தின் கூறுகள்
பற்றுதலிலின்றி பரிணமிப்பதில்லை
தென்றலின் வருடலில்
உடல் கூசிப் பெருமூச்செறியும்
அவயங்களுடன் கதை பேச வந்திருக்கிறேன்
செவ்விக்குடன்படுமா அப்பெருமரம்?!

Sunday, September 29, 2013

விலங்கு பூண்டிருக்கும் விலங்கு

வாதைகளோடு பிணைந்து கிடக்கிறது
வலிக்கும் நிதர்ச்சனங்கள்
சொற்களற்ற கையறு நிலையில்
என் கவிதையை
எனக்காக நானே எழுதமுடிவதில்லை
எனைக் கடக்குமெவரேனும்
பிரதிபலன் பாராது
கைவிலங்கை உடைத்துவிடுங்கள்
வாய்க்கட்டையும் பிய்த்தெறியுங்கள்
ஒடுக்கப்பட்ட வாழ்வியலை
பேசவேண்டியது
வரலாற்று அவசியமாகிறது

Saturday, September 28, 2013

அவளாகி நானும்....

இன்னும் அந்தக் குழந்தைக்கு தலை நிற்கவில்லை. எல்லா விரல்களும் வாயினுள் விட்டு சப்புக் கொட்டிக் கொண்டிருந்தது.கிட்ட நெருக்கிய கணம், மற்றொரு கையால் என் தலை முடியைப் பிடித்துக் கொண்டது. மெதுவாய் விடுவித்துக் கொண்ட அதே நேரம் அந்தக் குழந்தையின் அம்மா என்னை நோக்கித் திரும்பினாள். புன்னகைத்தபடி
“கொஞ்சம் பிடிச்சக்கறீங்களா? இதோ வந்துடறேன்”

சென்னையில் இது போலும் நான் பார்த்ததில்லை.அத்தனை எளிதில் குழந்தையைப் பிறரிடம் தரும் தாய்மார்களைப் பார்த்ததில்லை. சுடிதார்ல குழந்தை பாத்ரூம் போனா என்னாகும் இங்கிருந்து வங்கிக்கு வேற போகனுமே.. அப்பாடா! வெள்ளை கவுன் பாதுகாப்பு அம்சங்கள் சகிதம் என் கைக்கு வந்தது அந்தக் குட்டி தேவதை. கழிப்பறை நோக்கிப் போனவள் முப்பது நிமிடம் ஆகியும் திரும்பி வரவில்லை. எந்த லக்கேஜூம் இல்லை. குழந்தையைத் தூக்கிக் கொண்டு பொதுவிடத்து வருகிறவள் போல் தெரியவில்லை. அவளும் ஏதோ குழப்பத்தில் இருப்பது போலவும்.... அய்யோ! சடாரென குழந்தை திருட்டு சம்பந்தமான எல்லா திரைப்படங்களும் செய்திகளும் வந்து போயின..

கண்சிகிச்சைப் பிரிவின் தளம் இது. இது போல நிறைய தளங்கள் உண்டு. ஒவ்வொரு வகை மருத்துவத்திற்கும் ஒவ்வொரு தளம். நான் வேறு இத்தனை நேரமாக குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தேனே தவிர அவள் என்னவானாள் என்கிற கேள்வி என்னுள் கேட்டுக்கொள்ளாமல் இருந்தேனே! என்னை நானே நொந்து கொண்டு அவளைத் தேடத் துவங்கினேன். பயம் வேறு. இதற்கிடையில் கொஞ்சமும் அழாமல் தோளில் சாய்ந்தபடி கன்னம் காது என எச்சிலபிஷேகம் நடந்தபடியிருந்தது. முதல் தளம் இரண்டாம் தளமென்று தேடியும் கண்ணில் தட்டுப்படவில்லை. அலைபேசிய தோழி வேறு போலீஸ் கம்ளைண்ட் ரேஞ்சுக்கு பேச ஆரம்பித்தாள். போட்டோ எடுத்தியா? அந்தப் பொண்ணு எப்டி இருப்பான்னெல்லாம்... மிரண்டு போய்ட்டேன். இதென்னடா சனிக்கிழமையும் அதுவுமா இப்படி ?
கீழே ரிஷ்ப்சன் வரை இறங்கிப் போய் CCTV ரிக்கார்டிங் பார் என தோழியின் சமயோஜிதம் ஆறுதல் தந்தது.

என் அப்பாயின்மெண்ட் வந்து விட்டது. குழந்தையோடு உள்ளே நுழைந்தேன். கண் பரிசோதனையின் போது குழந்தை கையில் இருக்கக் கூடாதென்றார்கள். நர்சிடம் போவதற்கு அத்தனை கத்தியது குழந்தை. அதிசயமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. மொத்தக் கதையையும் சொல்லிவிட்டு இவங்கம்மா வந்தா நான் இங்க இருக்கேன்னு சொல்லுங்க என்றேன் நர்சிடம். இருபது நிமிட பரிசோதனைக்குப் பின் குழந்தையோடு வெளியில் வந்தேன். முழுதாய் ஒரு மணி நேரம் என்ன செய்கிறாள் கழிப்பறையில்? செம கடுப்பாக வந்தது. என்னோடு இன்னும் இரண்டு நர்சுகளும் தேடிக் கொண்டிருந்தார்கள்.எங்கு தேடியும் அவளைக் காணவில்லை. வேறு தளத்திற்கு சென்று விட்டாளோ? சமர்த்தாக தோளில் சாய்ந்தபடி இருந்தது அந்தப் பஞ்சுக் குட்டி. அத்தனை அழகான குழந்தை. பேசாமல் ஆரம்பத்தில் இருந்த இடத்துக்கே வந்து உட்கார்ந்தேன். இன்னும் ஒரு 40 நிமிடம் கடந்து ஒரு வயதான பாட்டியுடன் மெதுவாய் வந்தாள்.

”கஷ்டப்படுத்திட்டாளா குழந்தை?”
“அதில்ல. எங்க போனீங்க?ஒரு மணி நேரமா தேடிட்டு இருக்கேன். என்னங்க நீங்க”
“இல்ல பாட்டிக்கு லேப் டெஸ்ட் எடுக்கக் கொடுத்திருந்தேன். கூட்டி வர லேட்டாயிடுச்சு. அதான்”
“சொல்லி இருக்கலாம்ல? பயந்தே போயிட்டேன்”
“என்ன பயம்?” சிரித்தபடி கேட்டாள். ஒன்றும் சொல்ல முடியவில்லை. குழந்தையை வாங்கிக் கொண்டாள். வாயிலிருந்து கையை எடுத்ததும் முன்போல் கத்த ஆரம்பித்தது.இதானா காரணம். நான் கூட முன் ஜென்ம பந்தம் ஒட்டுதல் ரேஞ்சுக்கு பீல் பண்ணிட்டேனே! நல்ல அம்மா நல்ல குழந்தை. நல்லா வருவீக!

விடைபெறும் போது சொன்னாள்,

“முகத்தைப் பார்த்தா தெரியாதாங்க. நம்பிக்கையானவங்களா இல்லையான்னு?”

அது சரி! இளிச்சவாய்ன்னு பார்த்தாவே தெரியும் போல. சனிக்கிழமை வேறு. வங்கி சம்பந்தமான முன்று வேலைகள் முடிக்கமுடியாமல் போனது.இனி செவ்வாய் கிழமை தான்.

ஆனாலும் அந்தச் செல்லக்குட்டி.க்யூட். கண்ணுக்குள்ளேயே நிக்குது.

Thursday, September 26, 2013

நந்தியும் சிவதரிசனமும்

ஒவ்வொரு சிவாலய தரிசனத்தின் போதும் அந்தப் பெரும் நந்தியின் காதில் சொல்லி வர நிறைய விசயங்கள் இருந்திருக்கின்றன. கரும்பாறை சிலையதன் உடல் சிலிர்க்க எத்தனை முறை பேசியிருப்பேன் நினைவில்லை. வெளிப் பிரகாரம் சுற்றிக் கொடிமரம் தொழுது இன்னுமொரு முறை சிவனைப் பார்க்க ஒரு அடி தள்ளித் தான் அமர்ந்திருக்கிறது நந்தி. மருளும் பார்வையென்றால் என்னவென்று கன்றின் கண்களைப் பார்த்தால் புரிந்துவிடும். ஏனோ மனதுக்கு இணக்கமான சிலை தான் நந்தி. வேண்டுதலென்று ஏதுமில்லாமல் அதன் காதில் இன்று வாழ்க வளமுடன் சொல்லி வந்தேன். பலநூறு வருடப் பழக்கத்தில் அதற்கு வாழ்த்துச் சொன்னவள் நானாக இருந்திருப்பேனென்று சிறுபூனையின் மனனிலையில் பெருமிதப்பட்டுக் கொண்டேன். பெருந்தன்மையாய் நந்தியும் மன்னித்திருக்கும்.

ஊரிலென்றால் சாயந்திரம் கோவிலுக்குள் நுழையும் போதே வாத்திய ஓசை கேட்கும். அம்மன் கோவிலில் தான் கூட்டம் நிரம்பி வழியும். சிவன் கோவிலிலோ ஒரு வயதான ஓதுவார் தேவாரப் பதிகத்தைத் தினமும் ஆர்மோனியப் பெட்டியுடன் வாசித்துக் கொண்டிருப்பார். காது கேளாத அவர், கூட்டம் இருக்கிறதா என்பதையும் பார்க்காமல் பாடிக் கொண்டிருப்பார். ஆனால் அந்தக் குரலில் ஏதோ உயிர்ப்பிருக்கும். ஆங்காங்கே ஒன்றிரண்டு ஆட்களும் நிறைய மணிப்புறாக்களும் அணிகளும் கோமாடத்துப் பசுக்களும் அழகாய் இருக்கும். மனம் நிறைந்தும் இருக்கும். அத்தனை அமைதியும் திருப்தியும் சென்னையிலுள்ள பழம்பெரும் சிவன் கோவில்களிலும் கிடைக்கிறது தான். ஆனாலும் இங்கே ஏதோ பக்தியில் நகரத்துவம் புகுந்தாற்போல..

இன்று ஒரு சிவாலய தரிசனம். பிரதோஷ நாட்களில் மட்டுமே ஆலய தரிசனம் என்கிற கணக்கெல்லாம் இல்லையென்றாலும் உபவாசமென்கிற எண்ணம் தோன்றும் போதெல்லாம் கோவிலுக்குப் போவதென்கிற வழக்கம் வைத்திருக்கிறேன். நிம்மதிக்கென என்கிற போதும் வெளிப்பிரகாரத்தில் அமர்ந்தபடி மூலவர் கோபுர தரிசனமும் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் யாளியின் வடிவத்தில் பற்களை எண்ணுவதுமாய் கழியும் அந்த நாழிகைகள் அற்புதமானவை தான். கூடவே சிவபுராணமும் படிக்கக் கேட்க சரிவிகிதமாய் மனம் நிறைவு பெறும். கடவுளை தியானத்தின் மூலம் அடையமுடியுமென்றால் அந்த தியானத்திற்கான ஓர்மையுள் உறையும் பொழுதுகள் தான் ஆலய தரிசனங்கள். என் வரையில் பக்தியென்பது இப்படியாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது நண்பர்காள்! சிவனோ அரியோ அம்மனோ இயேசுவோ பள்ளிவாசலோ மனம் எங்கு அமைதியுறுகிறதோ அங்கே தான் பக்தியும் மனதின் சுதந்திரமும் பிரவாகமெடுக்கிறது. இன்று உடல் மனம் ஒருமித்த மகிழ்வான தருணமதை உணர்ந்தேன்.
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!