Tuesday, March 30, 2010

உணர்வுச் சங்கிலி

கார்முகிலொன்று
கனத்த இதயத்தோடு
கண்ணீர் உதிர்க்க‌ நேரம் பார்த்து
காற்றின் போக்கில்
கவலை சுமந்தபடி
ஆகாயமார்க்கத்தின் விதிகளை மீறி
விபத்தினை எதிர்பார்த்து....

தீஞ்சுவடு பட்டு தகதகக்கும்
தணலின் வெம்மையோடு
சூரியன் தீண்டிய தேகத்திற்கு
பன்னீர் ஒத்தடம் தேடும்
பருவப் பெண்ணாய்
பூமாதேவி
அண்ணாந்து பார்த்துப் பார்த்து
அவன்முகம் காணாமல்...

இலைதழையோடு காய்த்த மரமொன்று
பருவ மாற்றத்தில் பழுத்த நேரமது!
காவலாளி அயரும் தருணமெது?
கல்லெறிய சமயம் பார்த்து
கவனெல்லாம் கண்ணாகி காத்திருக்க....
கனிந்ததன் பலனாய்
சாவோடு பிரிவையும் சேர்த்து
பயத்தோடு எதிர்நோக்கி...

’இன்னார்க்கு இன்னது ஏற்புடைத்து’
சீராய் ஆராய்ந்து செயலாற்றும்
காலமெனும் கடவுளவன்
கண்ணுற்றான் இத்தனையும்...

கைம்பெண் நிலையில் களைப்புற்ற
கார்முகிலது அரற்றியழ
நெடுதுயர்ந்த மாமலை நோக்கி
காற்றின் திசையை மெல்ல முடுக்கினான்!

திடமுடன் திண்ணமும் கொண்டவன்
வன்தோள் பற்றி கடந்ததின் கதையை
கண்ணீர் மலக நவிலலானாள்
கார்முகில் பெண்ணாள்!

மேகமகள் கண்ணீர் நிறைந்து
மழையெனப் பொழிய
நிலமகள் தானும்
வேட்கையோடு வெட்கமும்
தணிய தன்வசமானாள்!

உற்றவினையாவும் நினைத்தபடி
நிறைவேற உயவுப் பொருளான
காற்றெனும் விதியினது
கருணை கடைசியில் - அந்த
பழுத்த மரத்தின்பால்!

கல்லடிக்கும் கண்ணடிக்கும்
கலங்கிப் போய்
முதிர்ச்சியின் பயனை
ருசிக்கும் உணர்வற்று..
ஏதேதோ மந்திரங்கள்
ஏதேதோ கடவுளுக்காய்
நித்தமும் ஓதியபடி
பருவம் சுமந்த பழுத்த மரம்!

உரிய வலுக்கொண்டு சுழற்றியடித்த
காற்றின் தினவில்
கல்லடியின்றி கனியுதிர்த்தது
நேற்று காய்த்து இன்று பழுத்த மரம்!

ஒன்றின் துயரது
மற்றதின் இன்பம்!
எல்லாம் அவன் செயல்...

இனியேனும் உகுக்கும் கண்ணீரை
இசைவுடன் சொரிக!
சிலரின் களர்நிலமேனும்
பயிர்பெறட்டும்
உன் கண்ணீரின் உரத்தில்!

Saturday, March 13, 2010

ஓர‌றிவே!


















சின்னஞ் சிறு நீர்ப்பரப்பு
காற்று முக்குளித்து
மீண்டுவரும் நீர்க்குமிழி
தாக‌ம் தீர்ந்த‌ பெரும‌கிழ்வில்
இசைந்தாடும் கோரைப்புற்கள்!

வெக்கைக்கு நீர்தெளித்து
சிற‌குலர்த்தும் சிறுமைனா
நாரையும் கெழுத்தியும்
நாலாதிசையும் கபடியாட
குற்ற‌லை ச‌கித‌ம்
குளித்துச் செல்கிறது தென்ற‌ல்!

ஆல‌ம‌ர‌ நிழ‌லில் இளைப்பாறி
பழ‌த்தோடு பாச‌த்தையும் ப‌ரிமாறி
குல‌விக் க‌ளித்த‌து அணிலிர‌ண்டு!
அள்ளித் தெளித்த மஞ்சளாய்
அங்கங்கே நெருஞ்சி
மிதிக்காதே குத்திடுவேன்
மிர‌ட்டாலாய்ச் சிரித்த‌து!

எங்கோ ஒரு ம‌ர‌ங்கொத்தி
ஊத‌ப்ப‌னை யொன்றை
உக்கிர‌மாய் கொத்திய‌து
மாசி ம‌க‌த்து மாரிய‌ம்ம‌ன்
முர‌சாட்ட‌ம் ஏதொவொரு தாள‌ம்
இன்ன‌தென்று விள‌ங‌கவில்லை!

காத்துல‌ ச‌ர‌ச‌ர‌க்கும்
காய்ந்த‌ ப‌னை ஓலை
இன்ன‌மொரு ச‌ங்க‌தியை
சினேகிதிக்குச் சொல்லுவ‌தாய்....

சந்தடியில்லா மத்தியான வேளைகளில்
நகரத்து நெருக்கடி மறந்து களைப்பாறி
உள்ளொடு கவிதை பரிமாறி
கற்றாழைப் பழத்தோடு
ஈச்சங்காய் கொறித்து
இதுவல்லோ வாழ்க்கையென
இன்புற்று நானிருந்தேன்!

அகலப்ப‌டர்ந்திருக்கும் ஆலம‌ர‌த்த‌டியில்
அதிச‌ய‌மாய் முளைவிட்ட‌
புளிய‌ஞ் செடியொன்னு
குறைமாச‌ புள்ள‌ போல
ஊட்டமாய் உணவின்றி
குறுகிச் சிறுத்திருக்க
நெஞ்சம் பதைபதைத்து
பலவாறு புலம்பிற்று!
அப்போது தவறவிட்ட‌ சேதி
இப்போது புத்திக்கு புரிஞ்சிருச்சு!

த‌ன் குடும்ப‌ம் த‌ன் சாதி
த‌ன் இனம் தன் மதமென்னும்
சுயநலம் கொழுத்த‌ மனிதம்
தாவ‌ர‌ ச‌ன‌த்துக்கும்
த‌ன் விச‌த்தைப் ப‌ர‌ப்பிற்றோ?
எப்படிச் ச‌ரி செய்ய?
எதுவ‌ரைக்கும் எட்டிய‌தோ
ஆறறறிவின் க‌ய‌மையெல்லாம்
க‌ள்ளங் க‌ப‌ட‌மில்லா
ஓர‌றிவு உயிரிட‌த்து!

Tuesday, March 9, 2010

கரையான் அரித்த ஏடுகள்

கனவுத்தச்சன் ஒருவன்
கால‌ங்கால‌மாய் க‌ண்ணில்
கருவாக்கிய‌ காவிய‌ம‌து!

க‌ளைவெட்டி சுள்ளி சும‌ந்து
க‌ளைப்பில் க‌ண்ணயருமுன்
வ‌ரைந்து வைத்த‌ வர‌லாறு!

வரையறையில்லா நெடுநிலப் ப‌ர‌ப்பு
வ‌ர‌ம்புக‌ள் தாண்டி வ‌றுமையும் தாண்டி
கேள்வி ஞான‌ம் த‌ந்த‌ த‌மிழாலே ‍- அது
வைரம் பதித்த‌ காப்பிய‌க் க‌ல‌ச‌ம்!

ஆண்டான் அடிமையெனும்
ஆதிக்க‌வாத‌ ச‌முதாய‌த்தில்
அட‌க்கி வைத்தான் அத்த‌னையும்
அவனுக்குள்ளே பொக்கிஷமாய்...

பட்டினத்தார் பாட்டும் பாவைக் கூத்தும்
பலவகை கீதமும் ஒலிக்கையில்
பாடிவைப்பான் இவனும் பாவத்தோடு
கூச்சலினூடே தானும் கவிதை சொல்வான்!
புரியாத மொழிக்கும் பழகாத இசைக்கும்
கைத்தட்டும் மேதாவிக் கூட்டம்
பாம‌ர‌ன் ப‌க்க‌ம் பார்க்க‌வேயில்லை!

உழ‌வு ந‌ட‌ அரைக்காணியில்லை
உண்டுறங்க ஒழுகாத‌ குடிசையில்லை
அடுத்த‌ வேளை உண‌வுக்கு....

இப்ப‌டியே இப்ப‌டியே
போராட்ட‌க்க‌ளம் நித‌மொரு
க‌த்தியோடு ம‌ல்லுக்கு வர
'பார்த்திப‌ன்' க‌ன‌வாய் மாறிப் போயின
பாமரன் கனவுகளும் பதிக்கத் தவறிய‌
இல‌க்கிய‌ முத்திரைக‌ளும்!

பின்னொரு நாள்
அன்பன‌வ‌ன் அவா இனிதே
அர‌ங்கேறிய‌து!
க‌லைம‌களே வ‌ந்திவ‌னை
வாழ்த்திவிட்டு
அவ‌ச‌ர‌மாய் அக்காப்பிய‌ம் கேட்க‌
புதைத்து வைத்த புலமையெல்லாம்
அப்ப‌டியே ஒப்புவித்தான்
செல்ல‌ரித்த‌ சொற்க‌ள் போக‌
மிச்ச‌மாய் ஏதுமில்லை!

கால‌ம் கட‌ந்து வ‌ந்த‌ க‌ட‌வுளை
குறை சொல்ல‌ யாருமில்லை
கொடுப்பினை இவ‌னுக்கில்லை
குத்தலாய் கேலிக‌ள் பலவும்!
ந‌ர‌ம்பில்லா நாக்கின் வ‌ழி
எள்ளுவாரெல்லாம் அறிவாரோ
பாமர‌ன் த‌ன் நிக‌ரில்லா புலமைத‌னை!


Thursday, March 4, 2010

உள்ளொன்று வைத்து

உரையின் உட்கருத்து மெதுவாய் உள்வாங்க
கருத்தின் செறிவில் தாக்குண்ட நெஞ்சம்
கன்னக் கதுப்பில் செந்நீர் பிரவாகம்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்....
ந‌ட்பில் கூட‌வா ந‌ல்ல‌தும் தீய‌தும்?
எதிரியிட‌ம் எச்ச‌ரிக்கை அவ‌சிய‌ம்
தகைசால் ந‌ட்பிலும் ந‌ஞ்சு க‌ல‌க்குமா?
ப‌ல‌முறை ப‌ட்டாலும் புத்திக்கு வருவ‌தில்லை
ந‌ண்ப‌னெனும் பாத்திர‌த்தை யாரோவென்று பார்க்க‌‌.....



வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!