கல்யாணத்துக்கு வந்தவுக எல்லாரும் பெறந்த மக்க கண்கலங்கி அழுவுறத பாத்து சங்கட்டப்பட்டு,வந்து சமாதானப் படுத்துறாக. ஆனா எல்லாரும் ஒரு மனசா இந்த கலியாணத்த வேணாமுங்குறதுல வெறப்பா நிக்கிறாக.
கத்தலும் விசும்பலும் கலந்து வர,வெடுக்கென நிமிந்து பாக்குறா அழகி. என்ன ஆச்சு? திடுமென என்ன கொழப்பம்? வெரசா வந்து மணபந்தல பாக்குறா.
ஆளாக்கி வளத்தவரு கொலக்குத்தம் பண்ணுனவராட்டம் தல குனிஞ்சு தடுமாற நிக்க,அக்காமாரு அத்தன பேரும் இவ ஆத்தாவா மாறி அவரோட சண்டைக்கு நிக்க,அத்தன பேரு பாசமும் கண்ணீரா பொங்கி வழியுது.இதுவரைக்கும் கண்ணீரும் கம்மலையுமா இருந்த அழகிக்கோ, இந்த சடுதி மாத்தம் ஒரு நிதானத்த கொடுத்திருச்சு.
மெல்ல சுதாரிச்சு, சுத்தி முத்தி பாக்குறா. மல்லுக்கு நிக்குற அம்மாவ அடக்க முடியாம தெணறிக்கிட்டு,ஒடிசலா, ஒசரமா,கருப்பா ஒருத்தரு ... ஆமா அவராத்தான் இருக்கோணும். பட்டு வேட்டி எல்லாம் உடுத்தியிருக்காரே. மொத மொதலா அழகிக்கு கண்ணால பேசுற பாசை எல்லாம் நல்லா புரியுது.
'இத்தன பேரு மத்தியிலயும் என்ன அசிங்க படுத்திபுடாத.'
மறுக்கா பாக்குறா,
'என்ன வுட்டு போயிறாத புள்ள.....'
அந்த கண்ணுல கெஞ்சலும் கதறலுமுன்னா, ஒன்னோட ஒன்னா பாவிக் கெடக்கு.
சட்டுன்னு ,
அட! ஒரே பார்வையில கவுந்துட்டா போங்க.பொம்பள புள்ள மாட்டுறதே இந்த பரிதாப பார்வைக்குள்ள தாங்க.
'பாத்தாக்க பாவமா இருக்கு. எம்புட்டு நல்லவரா இருந்தா அம்மான் இத்தன போராடனும்?' மனசு அவர நோக்கி ஒடுதுன்னு புடி பட்டுருச்சு இவளுக்கு.
வெக்கம் ஒடம்பு பூரா பரவுது.முகம் ரோசாப்பு கணக்கா செவந்திருச்சு. எம்புட்டு பெரிய தகிரிய சாலியா இருந்தாலும் காதலுக்கும்,பாசத்துக்கும் அடங்கித் தானே ஆகனும். என்ன நாஞ் சொல்லுறது?
உள்ளுக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியாம, பரவசமாயி அழகி செலையா நிக்கயில,ஊருக்கு பெரியவரு சீலக்கட மாதவன்னு பேரு, வந்து எல்லாரயும் அடக்கிபுட்டு,
'தே.முடிவா என்ன சொல்லுறீக?'ன்னாரு.
அக்காமாரு அத்தன பேரும் ஒருமனசா வேணாமுன்னு சொல்ல,ஒரு மொரட்டு கொரலு ஊட பாயுது.
'பொண்ண கேட்டுச் சொல்லுங்க.'
திரும்பி பாக்குறா, மாப்பிள தான் பேசுனது. சன மொத்தமும் இப்போ இவள பாக்குது. ஆத்திரதுல அறிவிழந்தாலும் நிதானதுல இவ ஆயிரம் அறிவாளிக்குச் சமம்.
அல்லிப்பூ அதரம் அதிராம சொல்லுறா.
'எனக்கு அவியள கட்டிக்கச் சம்மதம்'. பரிதவிச்சு நின்ன அம்மான் ஓடியாந்து,
'இது போதுமுடா.இது போதும்ன்னு!'
கல்யாண பந்தல், நாதசுவரமுன்னு பதினாறு வயசு பாலகனாட்டம் ஓடி திரியுறாரு... சிந்துன மூக்கும் நொந்த மனசுமா அக்காமாரு இவளுக்கு அலங்காரம் பண்ணுறாக. அடுத்தவ பங்கிட்ட வாழ்க்க நம்ம தங்கச்சிக்கு கெடைக்குதேங்குற வருத்தம்.இவள இந்த கல்யாணத்துல இருந்து காப்பாத்த முடியலயேன்னு கோவம்.அப்பன மீற முடியலயேன்னு இயலாமை. எல்லாமும் சேந்து மூத்தவளுக்கு ஆங்காரத்த குடுத்துருச்சு.
சன்னமா சொல்லுறா,'பாரு. எங்களுக்கு மருவாத இல்லாத ஒன் வாழ்க்கையுல இனி எங்களுக்கு எந்த பங்குமில்ல.' பூத்து நெறஞ்ச கண நேரத்து சந்தோசம், வெய்யில் கண்ட பனியா காஞ்சு போச்சு.சோதியெழந்த கண்ணோட,ஒட்ட வச்ச சிரிப்போட, சின்னாளப் பட்டு மினுமினுக்க,அழகே உருவான அழகி மணப்பந்தலுக்குப் போறா.
பந்தல்ல மாப்புள, பொதயல் கெடைச்ச பூரிப்புல. அவன் நெறஞ்ச பார்வையில தெளிவா புரியுது இவளுக்கு, அம்புட்டு சந்தோசம். 'இனி எல்லாமே அவன் தான்'னு தெக்கத்து சாமியெல்லாம் மனசார வேண்டிக்கிட்டு தல குனிஞ்சு தாலி வாங்கிறா [எதிர்காலத்துல தான் நிமிரவே போறதில்லைன்னு சொல்லுற மாதிரி] மண்ணு செறக்க வாழ்ந்து நிக்கும் மகிழம்பூ மனசுக்காரி...
<======== அழகி புராணம் ========>
10 comments:
இவள இந்த கல்யாணத்துல இருந்து காப்பாத்த முடியலயேன்னு கோவம்!அப்பன மீற முடியலயேன்னு இயலாமை! எல்லாமும் சேந்து மூத்தவளுக்கு ஆங்காரத்த குடுத்துருச்சு! சன்னமா சொல்லுறா,'பாரு! எங்களுக்கு மருவாத இல்லாத ஒன் வாழ்க்கையுல இனி எங்களுக்கு எந்த பங்குமில்ல!'//
இந்த கொடிய நிலையிலிருந்து பெண்கள் வெளியே வரணுங்க!!
பெண்கள் தங்களையே விலங்கிட்டுக் கொண்டதை விளக்கியுள்ளது கதை!!
//தேவன் மாயம் said...
பெண்கள் தங்களையே விலங்கிட்டுக் கொண்டதை விளக்கியுள்ளது கதை!!
//
மருத்துவர் அய்யாவுக்கு ஒரு ஆமாம் போட்டுக்கடா பழமை!
கண்கள் பனிக்கின்றன. இதயம் கணக்கிறது
//
பெண்கள் தங்களையே விலங்கிட்டுக் கொண்டதை விளக்கியுள்ளது கதை!!
//
தலைமுறை மாற்றம் இது போன்ற விசயங்களை அறவே ஒழித்து விட்டதாய் எண்ணுகிறேன்! வருகைக்கு நன்றி!
//
SUREஷ் (பழனியிலிருந்து) said...
கண்கள் பனிக்கின்றன. இதயம் கணக்கிறது
//
நன்றி!
//
பழமைபேசி said...
//தேவன் மாயம் said...
பெண்கள் தங்களையே விலங்கிட்டுக் கொண்டதை விளக்கியுள்ளது கதை!!
//
மருத்துவர் அய்யாவுக்கு ஒரு ஆமாம் போட்டுக்கடா பழமை!
//
வருகைக்கு நன்றி!!
வைரமுத்து ஐயாவின் கதையைப் படித்தது போல் இருக்கிறது.. வாழ்த்துக்கள்..
//கலகலப்ரியா said...
வைரமுத்து ஐயாவின் கதையைப் படித்தது போல் இருக்கிறது.. வாழ்த்துக்கள்..
//
அட! பாருடா! நம்மள கூட பெரிசா நெனைகிறாங்கப்பா! தெற்கத்தி மக்கள் வாழ்க்கையை யாரு சொன்னாலும் வைரமுத்துவும் பாரதிராஜாவும் வந்துருவாங்க நினைவுக்கு!எங்கப்பத்தா தெக்கத்தி பொண்ணுங்கிறதால இப்படி! மற்றபடி வேறொன்றுமில்லை!! வருகைக்கு நன்றி!
தெளிவான ...மனதை நெகிழ்விக்கும் அருமையான பதிவு ..வாழ்த்துகள்..
கர்ப்பிணிப் பெண்ணின் நினைவு பற்றிய ஒரு கவிதையை பதிப்பித்துள்ளேன்.. கண்டு சொல்லுங்கள் உங்களது கருத்தை...http://semmozhi.wordpress.com
இது ஒரு புதிய பதிப்பு ...அதனால் தயவுகூர்ந்து உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும்
Post a Comment