சென்ற ஆண்டு நாட்குறிப்பில் எழுதியிருந்தேன் இந்த வரிகளை....
உங்களுக்கும் மரங்களுக்கும் இடையே ஆன உறவு முழுமையானதும், உடனடியானதும் ஆகும். அவையும் நீங்களும் நண்பர்கள். எனவே நீங்கள் பூமியிலிருக்கும் ஒவ்வொரு மரத்தின், புதரின், பூவின் நண்பன். நீங்கள் அங்கே அழிப்பதற்காக இல்லை எனவே அவற்றுக்கும் உங்களுக்கும் இடையே அங்கு சாந்தி இருந்தது.
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
இப்போது படிக்க நேர்ந்தது...என்ன மாதிரியான உணர்வென்று தெரியவில்லை. நாளை மலரவிருக்கும் செம்பருத்திக்கென இப்போதே குதூகலிக்கிறது மனது. கூடவே மூங்கில் தோப்பும் பாம்புகள் அடர்ந்திருந்த என் கிராமத்தின் நாவல் மரங்களும் மந்திகள் சூழ் ஆலமரங்களும் நினைவில் வந்து மீள்கின்றன.
நீண்ட ஒற்றையடிப்பாதை. நெருஞ்சி முள்ளும் கற்றாழைச் செடிகளும் கூடவே அனைத்து கொடிய ஜீவராசிகளும் வாழும் அந்த கண்மாய் கரையின் ஒரு புறம் நெல்வயல்களும் மாமரங்களும் புதர்களும், மறுபுறம் அகண்டு விரிந்திருக்கும் நீர்ப்பரப்பில் கோரைகளும் தாமரையும் கொட்டிக் கிழங்குகளும் இன்னபிற பசும்செடிகள் விரவி, துள்ளும் கெண்டைகள் அவற்றுக்கென வந்திறங்கிய கொக்குகள்,நாரைகள் ஒருசேர காலையில் கிழக்கிலுதிக்கும் சூரியனைப் பார்க்க அத்தனை பிடிக்கும். சோம்பல் முறித்தவாறே வேப்பங்குச்சிகள் சகிதம் கோவணப் பெரிசுகள் ஏர் கலப்பையோடும் மாடுகளோடும் வயலுக்குப் போவதைப் பார்க்க முடியும்.
கண்மாயின் ஒவ்வொரு படித்துறைக்கும் ஒரு பெயரிருக்கும். சின்னமடைக்கும் பெரிய மடைக்கும் இடைப்பட்ட கரை வளைவில் நாவல் மரமொன்று இருந்தது. பெரிய மரம். பொந்து விழுந்த மரம்.கிளைகளை வெட்டிய தடமிருக்கும். கணுக்களாய் ஆங்காங்கே உடைந்த தந்தமென தளிர்த்திருக்கும் ராட்சச கனிமரம். கண்மாயின் நீர் நிறைந்த நாட்களில் மரப்பொந்து பாதி மறைந்து ஒரு குகை போல இருக்கும். நூற்றாண்டு மரமது.. கிளைபரப்பி நிழல் நிறைந்து சகலருக்கும் தஞ்சமளிக்கும். பலநேரங்களில் குளித்துவிட்டு உடைமாற்றும் மறைவிடமாக பெண்களுக்கு அம்மரமிருந்தது.
ஏகத்துக்கும் கதைகள் உண்டு அந்த மரம் குறித்து.என்னைக் காட்டிலும் பெரிய அக்காக்கள் அப்பத்தா கதைகளை புறந்தள்ளினாலும் பொய்களால் இன்னும் மெருகேற்றி கேலிக்கதைகளாக்குவார்கள்.அப்படியொன்று இந்தக் கதை. பெருந்தனக்காரனொருவனின் திருட்டுச் சொத்து அங்குதானாம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. யட்சிணிகளை ஏவி கருநாகங்கள் காவலுக்கு வைத்துவிட்டார்களாம். பில்லிகாளி எனும் எங்களூர் சாமியாடியின் மந்திரக் கயிறைக் கட்டிக் கொண்டு தானாம் அம்மரத்தை வெட்ட முடியும். பெண்மக்கள் தூமையின் நாற்றம் பட்டால் பாம்புகள் ஊருக்குள் வந்திடுமாம். ஆகவே விலக்கு நாட்களில் அங்கெல்லாம் பெண்கள் குளிப்பது தடை செய்யப்பட்டிருந்தது.
நீர் நிறைந்திருக்கும் நாட்களில் அம்மரம் நன்கு செழித்து பெரும் அச்சத்தை தரும். அந்த மரப்பொந்தின் தோற்றம் மிகுந்த அச்சுறுத்தலைத் தரும். ஆனால் கொளுத்தும் கோடையில் நீர்வற்றி நிழலுக்கென அங்கு புகலிடமேகும் சகல ஜீவராசிகளில் அவ்வப்போது நானும் அடக்கம். மரகதமும் நானும் என் தம்பிகளும் அங்கெல்லாம் விளையாடியிருக்கிறோம். ஆடுமாடுகளோடு அங்கிருக்கும் சுள்ளிகள் பொறுக்கும் பெரியவர்களும் அந்த மரப்பொந்து பற்றி கதை கதையாய் சொல்வார்கள். கதைகளில் வரும் அரக்கனை உருவகப்படுத்த பெரும் இரைச்சலுடன் அந்த நாவல் மரம் அசைந்து நடப்பதாய் கற்பனை செய்து பயந்திருக்கிறேன். பின்னொரு காலத்தில் சாலை அமைக்கவென அந்த மரத்தை வெட்டிவிட்டார்கள். மரத்தை வெட்டும் போது அந்தப் பொந்துக்குள் என்ன கிடைத்தது என்று கேட்டேன் தம்பியிடம். வெறும் பாம்புக்குட்டிகளாய் இருந்ததாம். பாவம் தாய் நாகங்கள் இரை தேடப் போயிருக்கும். ஏனோ வெட்டுப்பட்ட மரம் கொஞ்ச நாட்கள் நினைவில் இடறிக் கொண்டேயிருந்தது. காடும் கழனியும் பிணைந்து கிடந்த அந்த கிராமத்தில் மரங்களும் எங்களுடனே வாழ்ந்தன.
காலை குளியலுக்குப் பின், ஆலமரமொன்றின் அடிவேரில் விபூதி தொட்டு வைத்து விழுந்து கும்பிடும் தினசரி வழக்கத்தை அய்யா வைத்திருந்தார். மரம் தான் அவரின் கடவுளாயிருந்தது. எனக்கும் தான். ஊருக்குள் செல்ல அப்போதெல்லாம் கண்மாய் கரைவழி நடப்பது குறுக்குப்பாதை. உச்சி வெயிலுக்குள் சுருண்டு, இளைப்பார நினைக்கையிலே நிழல் தந்து வாஞ்சையாய் குளிர்விக்கும் அந்த ஆலமரம் எப்போதும் அய்யாவை நினைவுறுத்தும். குரங்குளும் நாகப்பாம்புகளும் மைனாக்களும் செம்பூத்துக்களும் குயில்களும் வாசம் செய்யும் அவ்விடத்தில் ஆலமரங்கள் இருபுறமும் பிணைந்து கொண்டு நிழற்குடை போலிருக்கும். அச்சமும் பக்தியும் பாசமும் இது என்னிடமென்கிற பலமுமாய் அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு அலாதி சுகம்.
இந்த நிழலும் மரங்களும் என் பால்ய காலத்துக் கதை.இருபத்தைந்து வருடப் பழசு. ஆனாலென்ன மரங்களோடும் பசுமையோடும் கைகோர்த்து வாழும் இக்கலையை நான் அங்கிருந்தே கற்று வந்தேன்.
இப்போது நூற்றாண்டு கண்ட மரங்களுமில்லை. நிழலுக்கென ஒதுங்கும் ஜீவராசிகளுமில்லை. மூங்கில் புதர்களும் ஆலமர விழுதுகளும் கட்டி வைத்திருந்த நீர்ப்பரப்பின் ஊற்றுக்கண் அங்கே தானிருக்கும். ஏதோவொரு மரத்தின் வேருறிஞ்சி நிழல் தரட்டும்.

No comments:
Post a Comment