Thursday, July 7, 2016

முள்முடி

மீண்டு நீளுமொரு நிகழ்யுத்த சரித்திரத்தில்
நெருஞ்சிகள் உறிஞ்சிய ரத்தமென
அலட்சியப்படுத்தப்படுகின்றன
வாதைகள்
நேற்று முதல் அறியப்பட்ட குமுறல்களை
கதை சொல்லியாக
யாரோவொரு வழிப்போகனாய்
கடந்து செல்கிறார்கள்
கவனிக்கத் கடமைப்பட்டவர்கள்
புறக்கணித்தல்களை பதிவித்து
அதிலேயான் அல்லலுறுவது
உறுதி செய்தபின்னே தான்
நகர்கிறார்கள்
நேசத்தின் நிழலிருந்தவர்கள்
நீங்களும் நாங்களுமென்கிற
வரப்புத் தகராறில்
நடுவிலிருக்கும் பெண்
ஊமையாகிறாள்
மாற்றான் மனைவியோடுடன்
உடன்போன கணவனை விடுத்து
ஏழெட்டு குழந்தைகளும்
ஆட்டுரலுமாக
சுற்றித் தேய்ந்த மனுஷிகள்
தாலி குறித்து என்ன பேசினார்கள்?
கேட்டால்
கலாச்சார காவலர்கள் கத்தியெடுப்பார்கள்
தானே யாவுமான
அம்மாவுக்கு மகனும் மகளும்
எத்தனை நிறைவைத் தந்தார்கள்
முதியோர் இல்லங்களில்
கீதை வாசித்துச் சொல்லுகையில்
வாழ்வையும் வாசிக்கிறேன்
உண்மையில் முதுமையில் தான் பெண்
தனக்காக வாழ்கிறாள்
நினைவுகள் தப்பிய
மூதாட்டியின்
பொக்கை வாய் சிரிப்பில்
குழந்தமை இன்னுமிருந்தது
எல்லோரும் சுமக்கும் சிலுவை
என் முறை வரும்போது
முட்கிரிடங்களுக்கென
வருந்தாதிருப்பேனாக!

No comments:

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!