”லீவு விட்டா போதும். அங்க இங்கன்னு சுத்த வச்சி சாவடிக்கிற. அடிக்கிற வெய்யில்ல என்னத்துக்கு வெளிய வரணும்?”
”Carry Bag இங்கயே வாங்கினா என்ன? இப்படி கட்டைப்பை தூக்கிட்டு அலையணுமா?”
கடுகடுவென பொரிந்து கொண்டிருந்தார்.
”சரி சரி... ரெண்டு பவாண்டோ பாட்டில் வாங்கு”
ஏசில மூளை குளிர்ந்திருச்சு போல. மெல்ல கேசட் செக்ஷனுக்கு போயிட்டார். பொதுவா இந்த கடுகடுப்பும் சிடுசிடுப்பும் பர்ஸ் காலியாவுமென்கிற பயமோன்னு எனக்குத் தோணும். சொல்லிக்கிட்டதில்ல. smile emoticon
எல்லாம் வாங்கி பில் போட்டதும் கொண்டுபோன ரெண்டு கட்டைப்பையும் நிரம்பி நகர மறுக்குது. திரு திருன்னு முழிச்சிட்டே நின்னேன். பக்கத்துல இருக்க வீட்டுக்கு ஆட்டோ கேட்பது அபத்தம்.சரி நாமளே தூக்கிட்டு போகலாம்ணு நினைக்கும் போதே..
“விட்றி. உன்னால முடியாது நானே கொண்டுவர்றேன்.” என்றபடி
ஏதும் பேசாமல் இரண்டு சுமைகளையும் வீடுவரை சுமந்து வந்தார்.
ஏதும் பேசாமல் இரண்டு சுமைகளையும் வீடுவரை சுமந்து வந்தார்.
இன்றைக்கு மட்டுமல்ல இதுவரைக்கும் இப்படித்தான். என்றைக்குமே கடினமான வேலைகளை மலைப்பாய் பார்த்துக்கொண்டிருக்கும் போதே உதவிக்கரம் நீட்டுவார்.
கருத்து வேறுபாடுகளில்லாத ’ஆமாம்சாமி’ போடுகிற ஆளெல்லாமில்லை. அதீத கோபமும் அதீத பாசமும் சேர்ந்த அதிசய மனிதன். நாங்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட வாழ்க்கையில் அழுகை,ஆனந்தம்,ஆற்றாமை,ஏக்கங்கள்,பெருமிதங்கள், ஏமாற்றங்கள் எல்லாமும் உண்டு.பேரன்பின் நதியாயிருப்பதால் எல்லாவற்றையும் கரைத்து நகரப் பழகியாயிற்று. இப்போதெல்லாம் நான் பரவும் இடமெல்லாம் விரியும் பசுமை தான் கண்ணுக்குத் தெரிகிறது. திருமணத்துக்குப் பின்னான இந்த வாழ்க்கையில் நிறைவென்பது இதுதான்.
என் சுமைகளை பகிர்ந்து சுமக்க எனக்கென ஒரு மனிதன்.
ஊற்றுக்கண் புலப்படாத காதல் பெருஞ்சுனை என்றென்றும் எம்மை மகிழ்வில் நனைத்தபடிதானிருக்கும்.