Saturday, October 25, 2014

இலக்கின் பாதையில்....

இயல்பில் நதியாய் இருப்பதால் ஓடிக் கொண்டிருத்தல் பிடித்திருக்கிறது.
எவருக்கானது என் பயணங்கள்?
எவருக்கானது என் உழைப்பு?
எவருக்கானது என் பிரார்த்தனைகள்?
எவருக்கானது என் கனவுகள்?
எல்லாக் கேள்விக்கும் பதிலாய் என்னைத் தவிர எவரோ இருந்திருக்கிறார்கள்.
எதற்கென்றும் இதற்கெல்லாம் எத்தனை பலனென்றும் எப்போதும் சிந்தித்தேனில்லை.
குட்டையாய் தேங்கி, சுயநலம் நாற்றமெடுக்குமோவென்ற பயம்.
போலியான சிரிப்புகளில்,
முதுகில் குத்தும் நையாண்டிகளில்,
தார்மீக ஆதரவோ பாதுகாப்போ எதுவுமேயின்றி
விமர்ச்சிக்க மட்டும் வரிசை கட்டும் உறவுகள் எப்போதும் பெரும் சவால்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நண்பர்கள் மற்றோர் சவால்.
நதிக்கு போர்க்குணங்களின் பழக்கமிருந்தால் கொன்றமிழ்த்தி, அடித்துக் கரைத்து தன்வழி போய்க் கொண்டிருக்கும்.
காட்டாறு அல்லவே....
வாஞ்சையில் படர்ந்த ஈரம் காரணமாய் பிழைக்கத் தெரியாத பைத்தியமென்ற எள்ளலோடு எச்சில் வார்த்தைகள்.
விழுமியச் சிதறலை தன் பவித்திரத்தில் கரைத்தபடி சலசலக்கிறது அந்த வழித்தடங்கள்.
நிதானிக்க நேரமின்றி ஓடும் பயணத்தில் சிலருக்கு மீன்களும் கழிமுகங்களில் தேக்கி விட எண்ணற்ற ஏக்கங்களுமென கடலுள் கலக்கும் கனவுகளில் லயித்தபடி ஓடிக் கொண்டிருக்கிறது நதி.
மந்திரச் சொற்களின் மாயையுள் மனம் நிறையும் நிம்மதியோடு....
வாழ்க வளமுடன் நண்பர்காள்!

Monday, September 15, 2014



இழப்பதற்கேதுமில்லையென்று
இறுமாப்பிலிருந்தேன்
இறந்துவிடென்றவன்
இம்சிக்கும் வரை......

***

இன்றழுத மழை
நாளைக்குள் உலர்ந்துவிடும்
முளைக்கும் காளான்களை
என்ன செய்ய ?

***
நிழலாட்டம் பார்க்கிறேன் 
இரண்டு தென்னை ஓலைகள் 
வாள் வீசிக் கொள்கின்றன 
மெல்ல மெல்ல 
வேகம் குறையும் காற்றில்
ஊடல் கூடலாகி...
தனித்த கூட்டில் கூவும் குயிலோடு
விரகம் பூசி வடிகிறது
கண்ணீர் அருவி

***

வைரக்கல்லுக்குள் சிறைபட்ட குமிழி
செதுக்கும் வரை காத்திருந்து 
சிதற்றிப் பெறுகிறததன் 
விடுதலையை....

***

நான்கைந்து பல்லவிகள்
எத்தனையோ சரணங்கள்
எழுதிக் களைத்து
எதுவும் பொருந்தாது
தனி லயத்தில் பயணிக்கும்
தாளத்துக்கு மௌனத்தை
துணையாக்கினேன்
இதுவே இனிதென்று
இசைந்து இளகுகிறதுன் இசை

***

காகிதங்களால் 
கட்டமைக்கப்பட்டது தான் 
இந்த வாழ்க்கை...

***

பிரபஞ்ச மித்தை
இக்காதல்
L

L

Monday, August 4, 2014

விடியல் பொழுதுகள்

மௌனம் குடித்து விடியும் இரவுகளில்
சுவர்க்கோழியோ விட்டில் பூச்சியோ
சிறகிழந்த ஈசல் கூட்டமோ
இசை சேர்த்து
இருள் நகர்த்துகின்றன
பெருமழைக்குப் பின்னான
மின்வெட்டு இரவில்
ஜதியோடு சொட்டும்
இலையின் துளியும்
இன்னுமொரு வாத்தியம்
வார்த்தைகளற்ற வெளியில்
எழுதப்படும் கவிதைகள் யாவும்
மின்னல் வெட்டுப் போல்
மனம் வெட்டி மறைகின்றன
வளையிழந்த பெருச்சாளியின்
உலவுதல் வேட்டை
பூனையொன்றின் பதுங்கல் நாடகம்
நனைந்த உடலை உதறும் தெருநாய்
எல்லாமும் பிரளய நிசப்தத்தில்
மெல்ல எறிகின்றன
சத்தங்களை....
லயம் கெட்டோ
சுருதி பிசகியோ
வாசிக்கிறது காற்று
புரியாத மெட்டுக்கு
வலிந்து வரியெழுதுகிறது
கவி மனது
அபஸ்வரத்திலுமொரு சுகம்
யாரோ எதுவோ
என்னோடு விழித்திருக்கிறது
கொன்றை மலரின் தூவலுக்கும்
பன்னீர்ப் பூக்களின் பரவலுக்கும்
கொடிமல்லிப் பூக்களின் மலர்தலுக்கும்
விடியும் பொழுதுகள்
என்னவாகின?
சாம்பிராணி புகைமூட்டத்தில்
மஞ்சள் மணக்க
தாளிதமும் காப்பியும்
சேர்ந்து மணக்கும்
மழைக்கால விடியல்
எப்போது வாய்க்கும் ?
மௌனங்கள் அச்சமாகவும்
சல சலப்பைத் துணிவெனவும்
உருவேற்றி
துருப்பிடித்திருக்கிறது
நகர வாழ்க்கை

Tuesday, June 17, 2014

தற்கொலைக்குத் துணிந்தவளின் கடைசிக் கோரிக்கை
‘காப்பாற்றுங்கள்’ என்பதாகத்தானிருக்கும்.
சிலர் கணங்களை கடத்துவதான பாவனையில் எதிர்வரும் நிமிடங்களுக்கென பயப்படுவதைப் பார்த்திருக்கிறேன். கோழைகளின் ஆயுதம் தற்கொலை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். கோழைகளால் தற்கொலை பற்றி நினைத்திடவும் முடியாது. இது சில நிமிட துணிவு. கடந்தபின் கோழைத்தனம் சாமான்ய விசயங்களை ஒலிபரப்பித் துணிவை உறிஞ்சிவிடும். போலியான துணிவுக்கு அத்தனை தான் ஆயுள். கடப்பது தான் மனவலிமைக்கு சவால்.
பெண்களுக்கு உள்ளுள் குமைந்து மருகும் குணமுண்டு. இதே அத்தனை தூரத்துக்கு கொண்டு செல்கிறது.
பக்கத்து வீட்டுக் காரருடன் தொடர்புபடுத்தி பேசிய காரணத்துக்காக அமிலத்தைக் குடித்து மருத்துவமனைக்குப் போகும் வழியிலே உயிர்விட்ட ஒரு உறவுப் பெண்ணைப் பற்றின நினைவு வந்தது. வார்த்தை அத்தனை சுட்டிருக்குமோ ? சாக்பீஸ் தூவலுக்கும் சிவந்திடும் மென்மையான தேகம் அவளது. போகும் வழியிலே ஜீவன் பிரிந்ததென அழுதபடி சொன்ன அவளின் தோழியின் கேவல் ‘சீ... என்ன பெண் இவள். போராடி ஜெயிக்க வேண்டாமா?’ என்ற எரிச்சலும் கோவமுமென கடந்த அந்த ஈமக்கிரியை நாளின் பின்னிரவில் மூச்சுத் திணறி பெரும் போராட்டத்துக்குப் பின் சமனிலைக்கு வந்த குழந்தையொன்றின் பிரயாசை உயிரின் மகத்துவத்தை சொல்லிப் போனது.
தற்கொலை செய்யும் மனநிலையில் உள்ளவர்களை சரியான முறையில் ஆறுதல் சொல்லி ஆற்றுப்படுத்துங்கள். உறவினர்களின் அலட்சியமே பல உயிர்களின் இழப்பிற்கு காரணமாயிருக்கிறது. எவருடனும் பங்கிடமுடியாத/பகிரமுடியாத துயரங்களை வடித்துவிடும் பெரும் ஆற்றல் இசைக்கு உண்டு. அதிலும் ராஜாவின் மெல்லிசைக்கு உண்டு. பல புத்தகங்களுக்கும் உண்டு. ஆனாலும் கேட்ட மாத்திரத்தில் மனமாற்றி செயலாற்றும் அமுத சஞ்சீவி இசை.
நல்ல இசையை கேளுங்கள். நல்ல விசயங்களை படியுங்கள்.
’அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது ’ என்கிற ஔவையின் கூற்றுக்கிணங்க உயிரின் மகத்தும் போற்றுவோமாக!
வாழ்க வளமுடன் நண்பர்காள்