Wednesday, August 29, 2012

சமன் செய்

இருமனங்கள்
ஒன்றின்
உள்ளீடாய்
நட்பு
அதன்
வெளியீடாய்
மற்றதில்
குரோதம்.

சமன்பாட்டின்படி
நட்புக்கு பதிலாய்
நட்பே கிடைக்கவேண்டும்

நடுவழியில்
ஏதோ குளறுபடி

பிறழ்வுக்கு
ஏதேனும்
காரணமாயிருக்கலாம்
அப்படியேதும் இல்லையெனில்
நண்பனென நீ நினைத்தவன்
கபடனாய் இருக்கலாம்
ஆராய்ச்சியின் முடிவு
எப்படியிருந்தாலும்
உடனடியாக
அவனை நண்பனென
அழைப்பதை நிறுத்திவிடு!

பலன் எதிர்பாராதது
நட்பு
அது போலே
வெறுப்பையும்

யாரோ எறிந்த
சின்னஞ்சிறு கல் கூட
பேரலைகளை உண்டாக்குமெனில்
என் படகு பயணிக்க
வேறோர் ஆற்றுக்கு
கொடுப்பினையுண்டு

Tuesday, August 28, 2012

கனவு

பட்டாடைகள் மினுமினுக்க
குதிரையில் உலா வரும்
இளவரசனின் கதை கேட்டபடி
எச்சில் ஒழுக உறங்கிப்போகிறாள்
கந்தலாடைச் சிறுமி

கற்பனைக்கேற்றபடி
நிதமொரு அலங்காரம்
இவள் கனவில்
அவனுக்கு

பாட்டியின் சாமர்த்தியம்
பட்டாடைகள்
ராஜாக்கள் உடையென
நம்ப வைத்ததில்...

உலகம் புரியும் வரை
இதே தொனியில் தான்
அத்தனை கதையும்

உலகம் புரிந்தபின்
வயிற்றின் இரைச்சலில்
கனவுகள் வருமோ எவரறிவார்?

வேண்டுதல்

உள்ளுணர்வுகள் ஊமையாக்கப்பட்ட
பறவை நான்
எதிர்வரும் இன்னல்கள்
எம் புலன்கள்
முன்னறிந்து சொல்லாது

கண்டம் விட்டு கண்டம்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்
இந்தக் கடல் தாண்டும் வரை
பெரும் மழையோ கடும் புயலோ
என் சிறகுகளை
நனைக்காதிருக்கட்டும்...

அங்கொரு கூடுகட்டி
கூரை வேய்ந்ததும்
சொல்லியனுப்புகிறேன்
இயற்கையே!
தருவியும் மழையை
அப்போது.

Tuesday, August 14, 2012

மழைக் கதை

ஒளிவீசும் இறக்கைகளின் சிறகடிப்பில்
வண்ணங்கள் தூவும் தேவதையொருத்தி
கருமுகிலொன்றை நிறமாற்றயெண்ணி
பெருஞ்சித்திரக் கனவுகளோடு
ஆர்வமாய் துரத்தலானாள்

சூல்கொண்ட மழைத்துளிகள்
தள்ளாடும் தாய்மை
பிரசவிக்க தருணம் பார்த்து
கார்முகிலோ வலியோடு
மிதந்தபடியிருந்தது

அம்முகில் கூட்டம் அயர்ந்த நேரம்
இமைகளின் சிமிட்டலில்
பொய்வலை பின்னி நைச்சியமாய்
வட்டமிட்டாள் நிறங்களின் காரிகை

பனிச்சிப்பங்களை ஏடுகளாக்கி
விரல்களை தூரிகைகளாக்கி
பேரரசுகளின் வரலாற்றை
வண்ணங்களால் வடிவங்களாக்கினாள்

உயிர்கொண்டெழுந்த சித்திரங்கள்
விண்ணில் நகர்ந்தபடியிருந்தது
அலங்கரிக்கப்பட்ட தேராக...

கதை சொல்லி நிறுத்தினேன்
புரிந்தும் புரியாமலும்
எனை மொய்த்தன கண்கள்
“பிறகென்னவாயிற்று?”
வார்ததைகளாகவும் பார்வைகளாகவும்
கேள்விகள்
எம்மிடம் நிறைத்தன

ம்ம்...

பிறகு...

மலை முகடொன்றின் மோதலில் 
நீர்குடமுடைந்து மழை பிறந்தது

மண்ணோடு புதைந்தன
நிறுவிய கதாபத்திரங்கள்
கரைந்த ஓவியங்கள்
பூக்களாகவும் புற்களாகவும்
பூமியில் மாற்றுரு கொண்டன

சிதைந்து போன சித்திரக்கனவுகள்
சீர்படும் பொருட்டு
பட்டாம் பூச்சிகளின் இறக்கைகளில்
சிற்றரசுகளை நிறுவலானாள்
நிறங்களின் தேவதை

இன்றும் உலவியபடியிருக்கிறது
தேவதையவளின் உயிரோவியங்கள்
வண்ணத்துப் பூச்சிகளாக!