மறையாத நினைவுகள்
நிமிடங்களை கடக்க
நிகழ் காலத்தையும்
கடந்த காலத்தையும்
துணைக்கழைக்கிறேன்!
இமைகளை இணைத்து
நகங்களை இரையாக்குகிறேன்!
பதிவுகள் எல்லாம் அழிக்கப்பட்டதாய்
கோரிக்கைகளை மறுத்தனுப்புகிறது
என் ஞாபகக் குறிப்பேடு!
துரோகியாவதற்கு முன்
தோழியாய் இருந்தவளின்
பாதப்பதிவுகளை பரிசோதிக்கிறேன்!
பாதகம் எதுவும் தென்படவில்லை!
இடையினில் எப்படி?
இரவின் நடுநிசியில்
புறக்கண் மூடி
அகக்கண் விழிக்கும்
தருணத்தில்
விம்முதலோடு
விழிகடக்கிறது
இருதுளி கண்ணீர்!
நட்பின் துரோகமாய்
சுயத்தின் இழித்துரைப்பாய்
நற்பண்பின் புறக்கணிப்பாய்.....
இப்படி எல்லாமும்
செய்திருப்பினும்
"கடைசியாய் பார்க்கணும்"
மந்திரச் சொல்லாய்
மனதை பிசைந்தது!
பெயர் கேட்ட மாத்திரத்தில்
கொந்தளித்த உணர்வுகள்
அடுத்த வார்த்தையில்
அப்படியே அடங்கின!
'அய்யோ! என்னவாயிற்று!'
கால்கள் தானே அவ்விடம் நாடின!
எப்போது அவளை
கடைசியாய் பார்த்தது?
நினைவில் இல்லை - ஆனால்
நிச்சயமாய் அவள் இப்படியில்லை!
வானாளின் இறுதியை
தொடப் போகும் அவசரத்திலும்
அவள் முகம் மட்டும் அதே
பவுர்ணமி பொலிவில்!
உடலோ வேதனைகள்
வாட்டியது போக
வறுமை தீண்டியது போக
மீதியாய் ஏதுமில்லை!
'வயதுக் கோளாரில் வந்தவினை'
என் வயோதிக மனது
விரக்தியாய் சொன்னது!
கணவன் கைகுழந்தை
இன்னும் சிலபேர்
சூழயிருந்தும்
நட்பாய் நான் மட்டும்!
"வந்துட்டியா?வரமாட்டியோன்னு..."
"என்னடி நீ!வராம இருப்பேனா?"
"நான் இன்னமும் அப்படியே
தானா உனக்குள்ளே?"
"சரி!தூங்கு!சரியாயிடும்"
ஆதரவாய் தலை தடவினேன்
"சரியாகுமா?"
சலிப்பாய் உதட்டை பிதுக்கினாள்
நடுங்கும் குரலில் சன்னமாய்
"குழந்தை தான் பாவம்!"
இன்னும் சில நிமிடங்களில் .....
செவிலிப் பெண்
சைகையில் சொல்லிப் போனாள்!
எமனை எதிர்க்கும் ஆவேசம்
வந்ததெனக்கு!
கண்ணுக்கு தெரிந்தால் தானே!
விழிவழி பிரிந்தது உயிர்!
நாகரீகம் கருதி இதுவரை
அடக்கிய கண்ணீர்
கதறலாய் வந்தது!
எல்லார் கை மாறியும்
எதிர்பார்த்த அணைப்பு கிட்டாமல்
அலறிய குழந்தையை
அனிச்சையாய் தூக்கினேன்
"அம்மாட்ட போகனும்!"
மழலை இருமுறை சொன்னதும்
என்னுள் செவியுணர்
கருவிகளனைத்தும் செத்துப்போயின!
மரணமடைவதை பார்ப்பது
மரணத்தை விடவும்....
6 comments:
fantastic kayal.. :((..
உணர்வுப்பூர்வமா எழுதியிருக்கீங்க.
நிஜம்தான்...மரணத்தைப் பார்ப்பது மிகவும் கொடுமைதான்.
நட்பின் காட்சிகள் கண்முன்னால் விரிகிறது.
நல்ல கவிதை...
//
கலகலப்ரியா said...
fantastic kayal.. :((..
//
நன்றி பிரியா!
//
உணர்வுப்பூர்வமா எழுதியிருக்கீங்க.
நிஜம்தான்...மரணத்தைப் பார்ப்பது மிகவும் கொடுமைதான்.
நட்பின் காட்சிகள் கண்முன்னால் விரிகிறது.
//
நன்றிங்க! அடிக்கடி வாங்க!
//
Sangkavi said...
நல்ல கவிதை...
//
நன்றிங்க! அடிக்கடி வாங்க!
Post a Comment
வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!