Monday, March 30, 2009

நெருப்பாய் பிறப்பெடுத்தேன்

நெருப்பெனச் சொன்னாய் என்னை கர்வத்தில்
நெஞ்சினை நிமிர்த்திக் கொண்டேன் -நீ
பெண்மையை மதிப்பதாய் எனக்குள் ஒருமுறை
பெருமையாய் எழுதிக் கொண்டேன்

இரும்பாய் இருந்த‌ என்னை அன்பில்
இள‌க்கியே இய‌ந்திர‌ம் செய்தாய்- உன்னால்
இய‌ந்திர‌மான‌ பின்னே இத‌ய‌த்தின் செல்லிலெல்லாம்
இய‌க்கியாய் உனையே இறுக்கி இணைத்துக்கொண்டேன்!

உலகமே நீதானென்று உனக்குள்ளே சுருங்கிப் போனேன்
உனையின்றி யாருமில்லை உள்ளத்துக்கு கட்டளையிட்டேன்!
உறவுகள் வேண்டாமென்றும் எதிர்காலம் நீதானென்றும்
உறுதியாய் நிற்பதை உன‌க்குச் சாதகமாக்கிக் கொண்டாய்!

தனிமையில் பேசிப் பேசி - எந்த‌ன்
தவிப்பிற்கு மருந்து போட்டாய்! - உண்மையில்
அன்பின் அர‌வ‌ணைப்பு அதுதானென்று உன‌க்குள்
ஆசையாய் அட‌ங்கிப் போனேன்!

நிலையின்றி அலைந்த‌ மனம் அது
நிலைகொள்ளும் புள்ளி நீயென, உன்னை
கருத்தினில் புகுத்திக் கொண்டேன் -பதிலாய்
கனவுகள் பரிசாய் பெற்றேன்

நிலவரம்
புரிந்த பின்னே எனக்குள் நீ
நீசனாய் மாறிப் போனாய் - காதலின்
காரணம் தெரிந்த பின்னே எனக்குள் நீ
புயலாய் மையம் கொண்டாய்

பகைவனின் பெண் நான் என்றாய்
பழிவாங்க வந்ததாய் சொன்னாய் - உன்
பாசத்திற்கு ஏங்கி நானோ காதல்
படுகுழியில் விழுந்து விட்டேன்

காரணம் நிறையச் சொன்னாய் என்மீது
காதலேயில்லை காமமே உச்சமென்று
கர்வமாய் கத்திச் சொன்னாய்

நிம்மதி கொல்லும் நெருப்பெனச் சொன்னாய்
இம்முறை முற்றிலும் நீர்த்துப் போனேன்.
நியமத்தின் பேரில் வந்து என்னை
நிலையின்றி செய்து போனாய்

யாரிடம் கேள்வி கேட்பேன்
என்னுள் எதற்கு நீ நுழைந்தாய் என
யாரிடம் கேள்வி கேட்பேன்?

ஒருதுளி கண்ணீரில்லை மீதம்
ஓய்வின்றி அழுத மனது
ஒப்புக்கு சிரித்து பழக ...
உள்ளுக்குள் நானோ உணர்ச்சிகளற்று
பாறையாய் மாறிப்போனேன்....

ஏமாற்றம் எஞ்சி நின்று என்னை
இளப்பமாய் பார்த்த வேளை ‍- உன்னை
மனதினில் நிறைத்துக் கொண்டேன் - செந்தணலாய்
மறுபடியும் பிறவி எடுத்தேன்

சாம்பலாய் அழிவேனென்று சத்தமாய் சபதமிட்டாய்
சாம்பலாய் முடியமாட்டேன் சரித்திரம் படைப்பேனென்று
சன்னமாய் சொல்லிக் கொண்டேன் சித்தத்தில்
சாதனை மட்டும் கொண்டு

என்னை நான் எனக்குள் காண
எதிரி நீ துணையாய் நின்றாய்

ஆசையாய் மைய‌ம் கொண்டு
ஆர்வ‌மாய் க‌ல‌ந்து பேசி
அடிக்க‌டி ஆழ‌ம் பார்த்து
அச‌ந்த நேர‌ம் பார்த்து
ஆல‌கால‌ விச‌மாய் மாறி
அவ‌ச‌ர‌மாய் க‌ரையைக் க‌ட‌ந்தாய்....

இழப்புகள்
அதிகமெனினும் அதை
நான் இன்பமாய் கணக்கெடுத்தேன்
சேமித்து வைக்க‌ அல்ல
செப்பனிட்டுக் கொள்ள .....

இலக்கணம்
பிழையே இல்லை என்னுள்
இலக்கணம் பிற‌ழ‌வே இல்லை - நீயென்
இலக்காய் ஆனதே பிழையென‌க் கண்டேன்....

மீண்டும் நெருப்பாய் பிறப்பெடுத்தேன்.....

குறிப்பு :-
மக்கா டமீல் படக் கதையானு கேள்வி கேக்க‌ப் ப‌டாது!! ஆமா சொல்லிட்டேன்.... சும்மா ஒரு முய‌ற்சி ... அவ்வளவுதேன் சொல்லிப்புட்டேன்! !!

Saturday, March 28, 2009

அரசியல்

சாலையோர‌ நிதி திர‌ட்ட‌ல்கள்
க‌ட்சியின் கொள்கையோடு
த‌லைவ‌ரையும் தேட‌!

தத்துவம்-1

ந‌ட்பும் காத‌லும் இணைகோடுக‌ள்
காத‌ல் ந‌ட்பாய் மாறிய‌தென்றால்
காத‌லில் வாய்மையில்லை!
ந‌ட்பு காத‌லாய் மாறிய‌தென்றால்
நட்பில் தூய்மையில்லை!

"எப்போது?"

எங்கள்
க‌ண்ணீர் க‌தையை
வார்த்தையாய் சுருக்கினேன்
வ‌லியின் சுமை
வார்த்தையில்...
புர‌ட்சிக்க‌வி என்றார்க‌ள்
இளமை தீருமட்டும்
சிறைவாச‌ம்
இன்று விடுத‌லை என‌க்கு மட்டும்,
எப்போது என் நாட்டுக்கு?

Friday, March 27, 2009

படித்த‌தில் பிடித்தது

விடிவது
நாளாவதற்கு
மட்டுமல்ல
உனக்கு
வயதாவதற்கும்
தான்!
---எங்கோ படித்தது

வரங்களே
சாபங்களானால்
இங்கே
தவங்கள்
எதற்காக?
---எங்கோ படித்தது

Wednesday, March 25, 2009

"பார்வைக‌ள்"

நினைவில் நெருக்க‌மாய்
நிஜ‌த்தில் தூர‌மாய்!
பார்வைக‌ளில் ம‌ட்டுமே
க‌லந்துரையாட‌ல்க‌ள்!

*********************

பார்வை விப‌த்துக்க‌ள்
‍நிக‌ழும் நிமிட‌ங்க‌ளில்
உணர்வுகள் மரித்துப் போகும்
உயிர் மட்டுமே மீதியாகும்!

*********************

ஒவ்வொரு நாளும் விடிவது
'அவன் தரிசனம் பெற' என்று மனம்
சொல்லிச் சொல்லி மாய்ந்து போகும்!
க‌டிகார‌ ச‌த்த‌ம் கூட‌
என் காத‌லின் எதிரியாகும்
ம‌ன‌தின் ரீங்கார‌த்தை முறிய‌டிப்ப‌தால்....

*********************


'இன்றாவ‌து இன்றாவ‌து சொல்லிவிடு'
என் ம‌ன‌ம் துவண்டு துவ‌ண்டு
துடித்து எழும் அவ‌ன்
அமைதி முக‌ம் காணும் வ‌ரை...

‌கண்ட‌தும் வார்த்தைக‌ள்
ஊமை விர‌த‌ம் ந‌ட‌த்தும் - என்
தாய் மொழியின் வார்த்தைக‌ள்
எண்ண‌த்துக்குள் சிறைப‌ட்டு போகும்...

************************

அந்த நிழல் கூட‌
எனக்கே சொந்த‌ம்
என் த‌மிழின வ‌ள்ள‌ல்க‌ள்
போற்றி வ‌ள‌ர்த்த‌
'ஈத‌ல்' என்ப‌து - இந்த‌
விச‌ய‌த்தில் மட்டும்
இல்லாம‌ல் போகும்!

************************

அந்த பார்வைக‌ள் சொல்வ‌து
மெய்யா ? பொய்யா?
ப‌குத்தறிவு என‌க்குள்
ப‌ட்டிம‌ன்ற‌ம் ந‌ட‌த்தும்...
என்னைக் க‌ண்ட‌தும் - அந்த‌ க‌ண்க‌ள்
ம‌ல‌ர்வ‌தாய் என‌க்குள்
ஒரு சுய‌பொறி க‌ருவி
மின்ன‌லாய் சொல்லிச் செல்லும்!

******************************

அங்கும் இங்கும்
அலைந்து அலைந்து
ஓய்ந்து போன‌ இருஜோடி விழிக‌ள்
மோதும் போது அங்கே
"உண‌ர்வின் பேர‌லை"
அந்த‌ ம‌ன‌தின் வ‌ருத்தங்க‌ள் - என்
ஆறுத‌ல் தேடி அலைவ‌தாய்
ம‌ன‌ அக‌ராதியில்
'புதிய‌ விள‌க்க‌ம்' பதிவாகும்!
க‌ண்க‌ளென்னும் க‌ருவிக‌ள் ம‌ட்டுமே
கொண்டு இத‌ய‌ தொழிற்சாலை
இய‌ங்கி கொண்டிருக்கும் !!!

***************************

உண‌ர்வுக‌ள் அத்த‌னையும்
ப‌ட்டினிப் போராட்ட‌ம் செய்யும்!
உள்ளுண‌ர்வு இது ச‌ரியா? பிழையா?
த‌ராசு முள்ளாய்
தடுமாறிக் கொண்டிருக்கும்!!

***************************

வார்த்தைக‌ள் புதிய
சிக்க‌ன‌ சித்தாந்த‌ம்
எழுதிக் கொண்டிருக்கும்!
உண‌ர்வுக‌ள், உற‌வுக‌ள் - என‌
பாழாய் போன‌ ம‌ன‌து
ப‌ழ‌ங்க‌தைகளை
பதிவு செய்து ஒளிப‌ர‌ப்பும்!!

************************

என்னைத் த‌விர‌ உல‌க‌ம்
முழுதும் ம‌கிழ்வ‌தாய்...
ஒரு வ‌ருத்த‌ப் போர்வை
மன‌தில் சட்டென‌ ப‌ட‌ரும்!!

************************

பெண்மையின் த‌வ‌ம்
ம‌ன‌ம் விரும்பும் ஆணின் நேச‌ம்...
எதிர்பார்ப்புக‌ள் எல்லைப் பிர‌ச்ச‌னை
செய்யும் எதுவ‌ரை முடிவ‌தென்று?
அவ‌னின் வார்த்தைக‌ள் கூட‌
வரலாறாகும் இவ‌ளின் அதிகார‌த்தில்...
தியாக‌ங்க‌ள் நித்த‌ம்
ஒரு யாக‌மாய் அர‌ங்கேறும்..

*******************************

ஒவ்வொரு நாளும் விடிவ‌து
'ஒரு யுக‌ம்'
க‌ன‌வு நூற்றாண்டுக‌ளை
விழிக‌ள் க‌ட‌ந்து வ‌ருவ‌தால்....

****************************

மன‌மெனும் குர‌ங்கு
தோல்வியையும் வெற்றியையும்
த‌ராசுத்த‌ட்டில்
மாற்றி மாற்றி
நிறுத்துப் பார்க்கும்!
எதிர்கால‌ம் எப்ப‌டியோ?
எதிர்பார்ப்புக‌ளோடு
ஒவ்வொரு முறையும்
பார்வை விப‌த்துக‌ள் நிக‌ழ்ந்து
கொண்டுதானிருக்கும்!

விபத்தின் பலனாய்
இத‌ய‌க் க‌ட்ட‌ட‌ம்
ஆடிக்கொண்டிருக்கும்
பலவீனத்தால் ......

************ <<முற்றும் >>*************


லஞ்சம்


ல‌ஞ்ச‌ ஒழிப்பு வாரிய‌ம்
மேல‌திகாரியை சந்திக்க‌
"ஐம்பது" ரூபாய் லஞ்சம்

அலுவ‌ல‌க‌ நேர‌ம் போலும்
அவ‌ச‌ர‌ க‌தியில்
மேக‌க் கூட்ட‌ம்!

"ஏணிப்படிகள்"

உச்சிக்கு போகும் வரை மதிக்கப்பட்டு
உயரத்தை அடைந்ததும் மிதிக்கப்படும்
ஏணிப்படிகளுக்கு ஒப்பாய் நல்லாசிரியர்கள்!
எனினும்,
ஒருபோதும் ‍‍ஏணிகள் அழுததில்லை‍
மாறாக,
ஏற்றிவிட்ட பெருமிதத்தில்....

Monday, March 23, 2009

"பயணக்குறிப்பு -1 "

தொடக்கமாய் சின்னஞ்சிறு
மழைத்துளி போதும்
ஒரு பேராழியின் உயிர்ப்புக்கு!
ஓங்கி நெடுதுயர்ந்த பசுங்காடு
பற்றியெரிய ஒற்றைத்
தீக்குச்சி போதும்

ந‌ம்பிக்கை கொண்ட‌
வாழ்க்கைப் ப‌யண‌ம்
த‌டைக‌ளைக் க‌ண்டு
அஞ்சுவ‌தில்லை...
ஆர‌ம்ப‌ம் எப்போதும்
அவசியமில்லை!
வெற்றி முடிவுகள் ம‌ட்டுமே
பொறிக்க‌ப்ப‌டும்
கால‌க் க‌ல்வெட்டில்...

"கதிரவன்"

உழைத்துக் களைத்த
கதிரவன்
சோம்பல் முறித்தான்
சிதறிய வியர்வைத் துளிகள்
விண்மீன்க‌ளாய்....

[வான்வெளிக் கவிதைகள் [3] ]

"முதிர் கன்னிகள்"

விடியாத இரவுகள்
அணையாத தாபங்கள்
மீளாத ஆசைகள்
புரியாத எதிர்காலம்
வாழ்க்கை முழுதும்
முற்று பெறாத
ஏக்க பெயரெச்சங்கள் .....
ஆயினும்
உறவுகளுக்காய்
மரத்துப் போன மனதுடன்
வாழ்க்கைப் பேரூந்தில்
"முதிர் கன்னிகள்"
சாத‌னைப் பெண்க‌ளாய்....

"இரண்டாம் உயிர்"

துப்பாக்கி முனையில்
என் குடும்ப‌ம் ....
ம‌ர‌ண‌ம் பெரிதா?
மான‌ம் பெரிதா?
த‌ன்னை த‌ந்து - எம்மை
காத்தாள் என் ச‌கோதரி!!
அந்நிய‌ன் தீண்டிய‌ தேக‌ம்
துற‌ந்து ஆவியானாள்‍-அந்த‌
தன்மான‌ த‌மிழ‌ச்சி !!
எங்க‌ள் தேச‌த்தில்
எதுவும் நிலையில்லை
சுவாச‌ம் உட்ப‌ட‌....
சூறையாட‌ப்ப‌டுவ‌து
உட‌மைக‌ள் ம‌ட்டும‌ல்ல‌
எங்க‌ள் பெண்டுக‌ளும் தான்...
ஒவ்வொரு முறையும்
கண்ணீர் ம‌ட்டுமே
சாத்திய‌மாகிற‌து ‍‍
என் சித‌றிய‌ குடும்ப‌த்தை
நினைக்கை‌யில்....
இன்றா? நாளையா?
என் மக்கள்
வாழும் நாள் யாவும்
மரண பயத்தில் ...
அந்நிய‌ தேச‌த்தில் அக‌தியாய்
இனமானம் காக்க
‍அவ‌ள் த‌ந்த 'இர‌ண்டாம் உயிர்' ....

Saturday, March 21, 2009

நீ- நான் -அவர்

எத்தனை முறை
முயன்றாலும் முடியவில்லை
நானும் நீயும்
பழகிய நாட்களை
நினைவு படுத்தும்
வடுக்களின் ஸ்பரிசத்தை....

அது போலவே....

எத்தனை முயன்றும்
முடியவில்லை
என் தந்தையின்
வேண்டுகோளை
மறுத்துரைக்க...

நீ- நான் என்பது
சுகமே - ஆனாலும்
நான் அவருக்கு சுவாசம் 

தனித்துவம் அணிகலன் ஆணுக்கு
மறுக்கவில்லை நான் - ஆனால் நீ
எடுத்ததெற்கெல்லாம் முரணாய் ...
எல்லாவற்றிலும் சமூகத்தோடு
இணைகோடாய்
இணைய மறுக்கிறாய்!

தலைமுறை இடைவெளி
இடையில் நான்
இரு தலைக்கொல்லி எறும்பாய்.....


நீயா? அவரா?
மனம் கேட்கும்
கேள்விக்கு பதில்
தேடித் தேடி
விடிகிறது என் இரவுகள்
உறக்கமின்றி....

Wednesday, March 18, 2009

"திருமணம் ஒரு சிறுகுறிப்பு "

இருமனம் இணைவதல்ல
திருமணம் !
திருமண சந்தையில்......
தட்சணையாய்
சில லகரங்கள் !
புன்னகைக்கு பதில்
பொன்னகை !
ஒவ்வொரு மாதமும்
முதல் தேதி வரும்படி
சமர்ப்பிப்பு - என
எல்லா ஒப்பந்தமும்
ஈடேறி நிச்சயித்த
ஒருவனுடன்
திருமணம் (!)
பாமரராய்
பெண்ணின் பெற்றோர் !!

பணம் வாழும்
போதும் வாழ்க்கைக்கு
பிறகும் -என்னும்
எதிர்கால் நோக்கத்தொடு.....

சாதித்த தெளிவோடு
மணமகன் வீட்டார் !!

ஆனால் படித்திருந்தும்
சமுதாய கோட்பாடுகளுக்கிடையில்
பலியாடாய் மணமகள் .....

சொர்க்கத்தில் அல்ல
திருமணங்கள் ரொக்கத்தில்
நிச்சயிக்கபடுகின்றன!!!
உலக மயமாக்கல் ,
சந்தை சீரழிவு,
பன்னாட்டு சந்தை சரிவு - என
எல்லாமும் புரிகிறது உனக்கு !
ஏன் புரியவில்லை
என் குடும்பம்
நீ கேட்கும்
தட்சணையால்
நசிந்து
போகும் என்பதை ?

" புதுக்கவிதை "

எதுகையும் மோனையும்
இடறி விழ
சந்தம்
சிதறி விழ
நிரல் நிரை
என எதுவும் விளங்காமல்
கருத்தை மட்டும்
மனதில் வைத்து
பிரசவிப்பது
" புதுக்கவிதை "

Monday, March 16, 2009

வான‌வீதியில்
கம்யூனிச சித்தாந்தங்கள்!
சுவரொட்டிகளாய்...
சித‌றி தெறித்த
துண்டுச் சீட்டுக‌ளாய்..
ரத்த சிவப்பாய்
அடிவானம்!
[வான்வெளி கவிதைகள் [2]]

Sunday, March 15, 2009

நெடிய‌தொரு ப‌ய‌ண‌ம்

வ‌ர‌வாய் ப‌ல உற‌வுக‌ள்!
செல‌வாய் சில‌ பிரிவுகள்!
ஈர‌மான‌ சில‌ நிக‌ழ்வுக‌ள்!
த‌னியாய்
வ‌லி சும‌ந்த‌ வ‌டுக்க‌ள்!

வானிலை மாற்ற‌ங்க‌ள்
போல்
வாழ்க்கை மாற்ற‌ங்க‌ள்!

இருப்பினும்...
நெஞ்சில் பார‌மாய்
இன்னும் இன்னும்....

வார்த்தையில்
தெளிவிக்க‌ முடியாத‌
ப‌திவுக‌ள்...

வ‌ண்ண‌த்துப் பூச்சி வ‌ருடிய‌ நிமிடத்தில்
என்னுள் வரைந்த‌ மவுன‌ ஓவிய‌மாய்
துளிர்த்து ம‌டிந்த‌
நம் காத‌ல்...

உன்னாலான‌ காய‌ங்க‌ள் வ‌லியெனினும் .....
அந்த ஒற்றை வழி பாதையில் - நீ
கூட‌ வ‌ந்த‌ சில‌ நாள்
ஞாப‌க‌ம்.....
அதுபோதும்
என் ப‌யண‌ம்
மேலும் தொடர ...

ஆயினும், நீ
என் கால ச‌க்க‌ர‌த்தின்
க‌ழ‌ன்ற‌ அச்சாணி!!
உனக்கு நான்
கிழித்து எறிந்த
நேற்றைய‌
நாட்குறிப்பு!!

ஏக்கம்

குறைந்த
நெருப்பில்
கொதிக்கும்
பால்!!!

தேர்வு

நிழல் சுகம்
நிஜம் வலி
எதை
நான் தேர்வது?

நீ

நீ
ஒரு சொல்!
எனக்குள்
இணைந்தாய்....
வாழ்வின்
அனைத்து
அத்தியாய‌ங்க‌ளுக்கும்
பொருளாய்...

விதிவிலக்கு

வண்ணத்து பூச்சி !
கூட்டுப் புழுவின்
பொறுமை.....
பரிணமிக்கும் வரை
எல்லா உயிருக்கும்
காத்திருத்தல்
சாத்தியம்
இயற்கையில் ....

ஆனால் மானுடம்
மட்டும்
விதிவிலக்காய்!!!

தூசு படுமுன்
இமை காக்கிறது
கண்மணியை ...

அனிச்சையாய்
எழும்பும்
தற்காப்பு கூட
ஏன்
எழுவதில்லை
இதயம் களவு போகயில்...





தனிமை

சன்னலோர முல்லைச்செடி
சலசலக்கும் தென்னங்கீற்று!

இரவு நேர தென்றல்
இளகிய வெண் பாகாய்
தண்ணிலவு!
நடுநிசியில்
கடிகார மணியோசை!

வ‌ண்டுக‌ளின் ரீங்காரம்
இர‌வ‌ல் ம‌டியாய்...
உன்னைக் காட்டும்
த‌லையணை!

இத்த‌னையும்
நேற்று வரை
உண்டென்றாலும்...

நீயின்றி
என்னுள்
எல்லாமும்
அந்நியமாய்....

Saturday, March 14, 2009

பௌர்ணமி இரவுகள்

மாதம் ஒரு முறை

மணமகள் ஊர்வலம்!

நட்சத்திர தோழிகள்

புடைசூழ

மணப்பெண்ணாய்

நிலாமகள்!

"பௌர்ணமி இரவுகள் "

[வான்வெளி கவிதைகள் .... ]

தோல்வி தருணங்களில்.......

க‌லங்கி தெளிதல்
இந்த
நதியின் வாடிக்கை
எனினும்
க‌லங்குதல் என்பது
எப்போதும்
என‌க்கு
ஒரு
ம‌ர‌ண‌ ஒத்திகை
ஆம்!
வெற்றியடையும்
வரை
எனக்கது
தற்காலிக மரணம்!!

Friday, March 13, 2009

முரண்

அரசியல் பிரமுகரின்
இறுதி ஊர்வலம்
கிராமத்து சாலைகள்
உயிர் பெறுகின்றன !!!

Sunday, March 8, 2009

சங்கமம்

சாதி கலவரம்
ரத்த பாட்டில்கள்
சாதி மாறுகின்றன

எனது பதிவுகள்

மரங்களின் மரணம் விறகாய்
இலைக‌ளின் ம‌ர‌ண‌ம் ச‌ருகாய்
மலர்களின் மரணம்
வாசனை திரவியமாய்

இயற்கையில்
மரணத்திற்குப் பின்
முழுதும் அழிவ‌தில்லை
தொட‌ரும் ப‌ய‌ண‌ம்
பிற‌ர்க்கு ப‌ய‌னாய்

வாழும் நாளில்
சில நிமிடமேனும்
பிறர்க்கு பயனாய்
வாழும் முயற்சியில்....

எனது பதிவுகள்

"உணர்வின் ஆகுதி"

தூக்கம் விழித்து
தலையணை நனைத்த
காதல்
சம்பிரதாய வார்த்தைகள் கூட
சரித்திரமாய் மாற்றிச்
சிலிர்த்த‌ காத‌ல்
அம்மா த‌ந்த‌ அன்பு
அப்பாவின் ம‌ரியாதை
உடன்பிறந்தோர் பாசமென‌
எல்லாமும் துச்ச‌மாய்
செய்த‌ காத‌ல்

எதிர்த்த‌ வீட்டு பெண்
என்ன‌வ‌ருட‌ன் நெருக்க‌மாய் பேசிய‌
நிமிட‌த்தில்
சாம்பலாய் .....
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!